அன்புமொழி கேட்டுவிட்டால்.... | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அன்புமொழி கேட்டுவிட்டால்....
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 மார்
2017
00:00

ராதிகாவுக்கு பறப்பதை போலிருந்தது. வைஸ் பிரசிடென்ட் அலுவலகத்திலிருந்து வந்த மெயில், அவளுக்கு சிறகுகளை கொடுத்து விட்டது.
மூன்று நாட்கள் ஐதராபாத்தில், 'ஆன் லொகேஷன்' பயிற்சி; அதுவும் நான்கு பேருக்கு மட்டும் தான். அது முடிந்ததும், எக்சிட் வேல்யுவேஷன். அதன்பின், அவள், அக்கம்பெனியின் தென் மண்டலத்தின் ராணி. எத்தனை நாள் கனவு; எப்போது, அவள் சீனியர் புராஜெக்ட் மேனேஜர் ஆனாளோ, அன்றிலிருந்து அவளுக்குள் ஜோதியாய் சுடர் விடும் கனவு!
''கிரேட் ராதிகா... எனக்கு தெரியும்; உனக்கு கிடைக்கும்ன்னு,'' தோளை தட்டி, சிரித்தாள், அலுவலக தோழி.
''ராதிகா... கலக்கு,'' என்றார், மேனேஜர்.
''ராதிகா மேடம்... உங்களுக்கு 30 வயசு கூட முடியல; அதுக்குள்ள, 'டாப்' பொசிஷன். ரொம்ப சந்தோஷமா இருக்கு,'' என்று, மலர்ச்சியாக தோளை குலுக்கினார், மற்றொருவர்.
புன்னகையையும், நன்றியையும் பதிலாக கொடுத்து, இருக்கைக்கு வந்தாள்.
'திவாகர் என்ன சொல்வான்... கூப்பிட்டு சொல்லிடலாமா இல்ல வீட்டுக்கு போனதும், நேரம் பாத்து சொல்லலாமா...' என யோசிக்கும் போதே, மொபைல்போன் அழைத்தது; எடுத்தாள்.
''அதிதியோட அம்மா ராதிகா தானே...''
''ஆமாம், நீங்க?''
''நான், வேன் ஹெல்பர், சுமதி பேசறேன்; டிரஸ்ட் மெம்பர் காலமாயிட்டாரு; அதனால, ஸ்கூல் லீவு விடுறாங்க... அதிதியை கூப்பிட்டுட்டு போறீங்களா...''
''ஏன்... எப்பவும் அவள கிரச்ல தானே, 'டிராப்' செய்வீங்க...''
''இல்லம்மா... கிரச்சு லீவு; அவங்க, டிரஸ்ட் மெம்பரோட சொந்தக்காரங்க,'' என்றாள்.
''மை காட்... என்ன சுமதி இப்படி சொல்றீங்க... திடீர்ன்னு எப்படி ஆபிஸ் நேரத்துல வர முடியும்... கிரச் லேடிகிட்ட போன் செய்துட்டு சொல்றேன், இருங்க,'' என்றாள்.
''அது வேஸ்ட்டும்மா; அவங்க வீடு பூட்டியிருக்கு. நாலாவது வீடு தானே; நான் போய் பாத்துட்டு வந்து தான் சொல்றேன்,'' என்றாள்.
ராதிகாவுக்கு தலை சுற்றியது. 8 கி.மீ., தூரம்; போய் வர, இரண்டு மணி நேரம் ஆகும். குழந்தையை அலுவலகம் அழைத்து வரவும் முடியாது; வீட்டில் தனியாக விடவும் முடியாது.
''சுமதி... கொஞ்சம், 'வெயிட்' செய்யுங்க; என் கணவர்கிட்ட பேசிட்டு சொல்றேன்.''
''சரிம்மா... சீக்கிரமா சொல்லுங்க; மத்த குழந்தைங்களும் இருக்கு,'' என்றாள்.
திவாகரை அழைத்தாள்; அழைப்பு போய்க் கொண்டே இருந்தது. அவன் எடுக்கவில்லை. குறுஞ்செய்தி அனுப்பியும் பதில் இல்லை.
அதற்குள், சுமதியிடமிருந்து இரண்டு அழைப்புகள் வந்து விடவே, வேறு வழியில்லாமல், அரை நாள் லீவு கேட்டு, வாடகை காரில் கிளம்பினாள்.
மனது உலைக்களன் போல் கொதித்தது.
இரவு, 9:00 மணிக்கு தான் வந்தான், திவாகர்.
குளித்து முடித்து, தலையை துவட்டியபடி, தூங்கும் அதிதி கன்னத்தில் முத்தமிட்டான்.
''சாரி ராதிகா.. இன்னிக்கு பயங்கர பிசி; சாப்பிடக்கூட இல்ல; கொல பசி. சப்பாத்தியும், குருமாவும் செய்திருக்கியா... வாவ்...'' என்றபடி, சமையலறைக்கு வந்தான்.
''ஒரு நிமிஷம் திவாகர்,'' என்றவள், அடுப்பை அணைத்து, அவன் பக்கமாக திரும்பி, இறுக்கமாக பார்த்து, ''சாரின்னு ஒரு வார்த்தை சொன்னா போதுமா... என்ன நடந்தது, ஏன் அத்தனை தடவ போன் செய்த, என்ன விஷயம், ஸ்கூல்ல எப்படி சமாளிச்சே இது எதையும் கேட்க தோணலயில்லே...
''உங்களுக்கு மட்டுமில்ல; எனக்கும், இது முக்கியமான நாள் தான். 'ஆன் லொகேஷன்' பயிற்சி கொடுத்து, பிரமோஷன் கொடுக்கயிருக்கிறாங்க, என் கம்பெனியில. தென்மண்டலம் முழுக்க, என் கைக்கு வரப்போகுது. எனக்கு எவ்வளவு வேலை இருக்கும்... குழந்தைய பாத்துக்கிறது என் பொறுப்பு மட்டும் தானா...'' என்றாள், கோபத்துடன்!
''ஏன் கோபப்படுற ராதிகா... எனக்கு, 'நெட்ஒர்க்' இல்ல... அதான், உன் போனை, 'அட்டண்ட்' செய்ய முடியல.''
''அட்லீஸ்ட், வந்தவுடனே கேட்கலாம் இல்ல...''
''சரி... இனிமே கேட்கிறேன்.''
''இல்ல திவாகர்... இது முதல்முறை இல்ல; அதிதி பொறந்த, இந்த ஐந்து வருஷத்துல, அஞ்சாயிரம் முறை, இந்த பிரச்னைய பாத்தாச்சு; இன்னிக்கு தெளிவா பேசிடலாம்.''
''எனக்கு பசிக்குதுன்னு சொன்னேன்...''
''அரைமணி நேரம் தாங்கலாம்; அதுக்குள்ள உயிர் போயிடாது,'' என்றாள், சூடாக!
பொங்கி வந்த கோபத்தை கட்டுப்படுத்தி, ''சரி சொல்லு,'' என்றான்.
''நான் என்ன சொல்றது... நீங்க தான் சொல்லணும். வீடு, கிரச், ஆபிஸ், ஸ்கூல்ன்னு, வண்டிமாடு மாதிரி நான் ஓடியாச்சு. இனிமே, நீங்க தான், இதையெல்லாம் பாத்துக்கணும்... எனக்கு ஐதராபாத் அல்லது மைசூர்ல தான் வேலை இருக்கும். வாரக் கடைசியில வருவேன். அஞ்சு நாள் வேலை; ரெண்டு நாள் வீடு. அடுத்த ஐந்து வருஷத்துக்கு இதுதான் நம் வாழ்க்கை; இதுல எந்த மாற்றமும் இல்ல,'' என்றாள்.
திகைப்புடன் கண்களை உயர்த்தியவன், ''என்ன விளையாடுறியா... யாரை கேட்டு, முடிவெடுத்தே... என் கம்பெனியில எனக்கு என்ன, 'பொசிஷன்'னு உனக்கு தெரியாதா... நாலு மாநிலத்து தொழிலாளர்களோட சட்ட பிரச்னைகள், வெளிநாட்டு டெலிகசீஸ் தவிர, கியர் பாக்ஸ் சம்பந்தமான, அத்தனை தொழில் நுட்பங்களும் தெரிஞ்சிருக்கணும். நாலு மணி நேரம் கூட, நான் தூங்குறதில்லன்னு உனக்கு தெரியாதா... மனசாட்சி இல்லாம இப்படி பேசறே...'' என்றான்.
''அப்போ, நான் மட்டும் வீடு, ஆபிஸ், குழந்தைன்னு எல்லாத்தையும் முதுகுல கட்டிகிட்டு ஓடணுமா?''
''நீ ஏன் கஷ்டப்படணும்... யார் உன்னை கஷ்டப்பட சொன்னது... என் சம்பளம் போதாதா நமக்கு... வீட்டுல ராணி மாதிரி இருக்க வேண்டியது தானே...''
''நான் வீட்டுல கிடக்கணுமா... இதுக்குத் தான், ஐ.ஐ.டியில, 'டாப்'பா வந்தேனா... நான் மட்டும் பெரிய வேலைய விட்டுட்டு, குழந்தைக்கு அணில், ஆடு சொல்லிக் கொடுத்துட்டு வீட்டுல கிடக்கணும்; என்னை விட, 'கிரேடு' கம்மியா வாங்கின நீங்க, ஆண் என்கிற ஒரே காரணத்துக்காக, கம்பெனியில தனிக்காட்டு ராஜாவா திரியணுமா... என்ன நியாயம் இது... அதிதியை பாத்துக்கறதுல ரெண்டு பேருக்கும் ஒரே பொறுப்பு தான்; தாய்மை, தாய்ப்பால் இப்படி சென்டிமென்ட் பேசிப் பேசி, எங்களை, வேலைக்காரியா ஆக்கி, அடிமையாக்கினது போதும். நான், 'டிரைனிங்' போறேன்; வீடு, அதிதி ரெண்டும் உங்க பாடு,'' என்றாள் முகம் சிவக்க!
வெறி ஏறிய காட்டுச் சிறுத்தை போல, மேஜை மீது இருந்த தண்ணீர் குடம், தட்டு, பழக்கூடைகளை தூக்கி எறிந்தான், திவாகர். நாற்காலிகளை கால்களால் உதைத்து, டம்ளர்களை வீசியெறிந்தான்; அவன் முகம், ரத்தம் போல் சிவந்தது; உதடுகள், குளிர்கால பூனைக்குட்டிகள் போல் நடுங்கின.
'தெரியும்... அவன் இப்படித்தான் வன்முறையில் இறங்குவான்; சொற்களின் நியாயத்தை மனம் உணர்ந்தாலும், காலம் காலமாக, உள்ளே உறைந்து கிடக்கிற ஆண் என்கிற பிம்பத்தை, அவனால் விட்டு கொடுக்க முடியாது. அதற்காக, பெண் என்ற அம்சம், அவளை முடக்குவதை ஏற்றுக் கொள்ள முடியுமா... படிப்பு, உழைப்பு, கனவு என, ஆண் பிள்ளைகளுடன் போட்டி போட்டு தானே முன்னேற வேண்டியிருந்தது. அதற்கும், சமத்துவம் என்றால் இதிலும் தான் சமத்துவம் வேண்டும்...' என்று மனதிற்குள் பொங்கினாள்.
''இங்க பார்... நீ, ரொம்ப புத்திசாலி தானே... யோசி... பெண்களுக்கு இயற்கையாகவே சில விஷயங்கள் தெரியும். பூமியை கீறி, விதை போட்டு, தண்ணி விட்டா, பயிர் வரும்ன்னு கண்டுபிடிச்சது, ஆதிப்பெண்; தாய் வழி சமுதாயமா இருந்தது தான் இந்த உலகம்ன்னு நீதான் சொன்னே... குழந்தை வளர்ப்பு, வீட்டு பராமரிப்புன்னு, பத்து வயது பெண் குழந்தைக்கு யாரும் சொல்லி கொடுக்காமலே, எப்படி தெரியுது சொல்... ஜீன்... புரிஞ்சுக்கோ ராதிகா... உன்னால, எங்கள பாத்துக்க முடிஞ்ச அளவுக்கு, என்னால நிச்சயமா முடியாது. அழகான வாழ்க்கை இது; அழிச்சுடாதே,'' என்றான்.
சிரித்தாள் அவள்.
''என்னடி சிரிப்பு... திமிரா...'' என்று கத்தினான்.
''கெஞ்சல், கொஞ்சல், வன்முறை, தர்க்கம், சயின்ஸ், வரலாறு ஆஹா... நான் இல்லே திவாகர்... நீங்க தான் புத்திசாலி; தந்திரமான புத்திசாலி. எப்படியாவது, என்னை வீட்டு சிறையில அடைக்க துடிக்கிற, கொடூரமான வில்லன். சரியான சுயநலவாதி; தான் சுகமா, சந்தோஷமா இருக்கறதுக்காக, மனைவியோட நியாயமான கனவை அழிக்கவும் தயங்காத, ராட்ஷசன்.''
''ஏய்... ரொம்ப பேசாதே...''
''சரி... பேசலே; சொன்னபடி என் டூர் புரோகிராம், பிரமோஷன், போஸ்டிங்ன்னு செய்றேன். இனிமே, நமக்குள்ளே பேச்சே வேணாம்; குட் நைட்.''
அறைக் கதவை டமாலென்று மூடி உள்ளே போனாள்; கதவை ஆத்திரத்துடன் எட்டி உதைத்தான், திவாகர்.
ஐதரா பாத்தில் பயிற்சி வகுப்புகள் முடிந்தன; அது தொடர்பாக வைத்த பரீட்சையிலும் முதல் இடத்தை பிடித்தாள் ராதிகா; எதிர்பாராமல் சென்னை மண்டலத்திலேயே, பணியாற்ற உத்தரவு கொடுக்க, சந்தோஷமாக வீட்டிற்கு வந்தாள்.
வீட்டு வாசலில் இறங்கிய ராதிகாவிற்கு, மனம் குறுகுறுத்தது. நான்கு நாட்களாக, அவளுக்கும், அந்த வீட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவன் அழைப்புகளை கூட எடுக்கவில்லை; பதில் குறுந்தகவல்களும் அனுப்பவில்லை.
ஒருக்களித்து திறந்திருந்தது, கதவு. அதிதியும், அவனும் கேரம் விளையாடிய காட்சி தெரிந்தது. சிரிப்பும், உற்சாகமும் கலந்த, அதிதியின் முகம், மிக எழிலாக ஜொலித்தது. உணவு மேஜை மீது சாதம், பழம், பருப்புப்பொடி, நெய், தயிர், ஊறுகாய் இருந்தன. குக்கரில், உருளைகிழங்கு வேகும் வாசம்.
''அய்... அம்மா அம்மா...'' என்று, கத்தியபடி ஓடி வந்து, காலை கட்டிக் கொண்டாள், அதிதி.
''இந்த அப்பாவுக்கு, ரோஸ் காயின் போட்டா, பாலோ காயின் போடணும்ன்னு மறந்து போச்சும்மா,'' என்று கூறி, விழுந்து விழுந்து சிரித்தாள்.
அவன் எழுந்து வந்து, ''வா ராதிகா... எப்படி போச்சு டிரைனிங்... குட் நியூஸ் ஏதாவது இருக்கா...'' என்றான் அவளை அணைத்தபடி!
அதிதி பரபரப்பாக, ''அம்மா... அப்பா, வேலைய விட்டுட்டார்; இனிமே, நானும், அப்பாவும் வீடு, ஸ்கூல், டிராயிங்ன்னு ஜாலியா இருக்கப் போறோம்,'' என்று கூறி, திவாகர் முதுகில், ஏறிக் கொண்டாள்.
அதிர்ச்சியுடன், ''என்ன...'' என்றவளுக்கு தொண்டை வழுக்கியது.
''ஆமாம் ராதிகா; நமக்குள்ள எதுக்கு போட்டி... யார் சம்பாதிச்சா என்ன, யார் வீட்டுல இருந்தா என்னன்னு தோணிச்சு. அன்னிக்கு, நாம சண்டை போட்டோமே, அதுக்கு அடுத்த நாள், உன் ஆபிசுக்கு கோபமாத் தான் வந்தேன். அப்போ, ரெண்டு விஷயங்களைப் பாத்தேன்...
''கேன்டீன் பையன் சோகமா இருந்தான். நீ, அவன் கிட்ட காரணம் கேட்டே. 'அம்மாவுக்கு உடம்பு சரியில்ல; லீவு கேட்டா, மேனேஜர் தர மாட்டேங்கிறாரு'ன்னு சொன்னான். அவன் கிட்ட, 'மேனேஜரிடம் சொந்த வேலையா அனுப்பினேன்னு சொல்லிடறேன்; நீ கவலைப்படாம போ'ன்னு சொன்னே!
''அடுத்தது, உனக்காக காத்திருந்த ஒருத்தரிடம் முதியோர் இல்லத்துக்கு, 'டொனேஷன்' கொடுத்தே... அப்படியே திரும்பி வந்துட்டேன். ஒரு மனிதனோட பெருமையும், சிறுமையும் அவன் எண்ணங்கள்ல தான் இருக்குன்னு தோணிச்சு.
''உன் நல்ல மனசை பாத்தேன்... என்கிட்ட சண்டை போட்டதும், அதே மனசு தானே... நல்ல மனசு நொந்து போனதால தான், சண்டை போட்டிருக்குன்னு புரிஞ்சது. ராத்திரி தூக்கம் வரல; சம்பளம் இல்லாத லீவு போட்டு, அஞ்சு வருஷத்துக்கு வீட்டையும், அதிதியையும், உன்னையும் பாத்துக் கலாம்ன்னு முடிவு செய்தேன்; அப்புறம் தான் தூக்கம் வந்தது.
''சாரி ராதிகா... உன்கிட்ட, 'கன்சல்ட்' செய்யாம, நானா முடிவெடுத்ததுக்கு,'' என்றதும், கண்களில் நீர்ப்படலத்துடன், நெகிழ்ச்சியாய் நின்றாள், ராதிகா.

வானதி

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X