தேர்வை எதிர் கொள்ளலாம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
தேர்வை எதிர் கொள்ளலாம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 மார்
2017
00:00

நல்ல அழகான கையெழுத்து வர வேண்டு மானால், தொடர்ந்து எழுதி பழக வேண்டும். சித்திரமும் கைப்பழக்கம் என்பதற்கேற்ப, தினமும் சிறிது நேரம், எழுத்து பயிற்சி செய்து வந்தால், அழகான கையெழுத்து, உங்கள் வசமாகும்.
இவை தவிர, ஓய்வு நேரத்தில் மறு வாசிப்புக்கு உட்படுத்த வேண்டியிருக்கும் கேள்விகளையும், அதற்குரிய விடைகளையும், டேப் ரிக்கார்டர் அல்லது ஒலியை பதிவு செய்யும் கருவியில் பதிவு செய்து வைக்கலாம். தேர்வுக்கு முந்தைய நாட்களில் இவைகளை போட்டு கேட்பதன் மூலம் நினைவுபடுத்தி பார்க்க உதவும்.
தேர்வுக்கு முந்தைய நாள், பேனா, பென்சில், ரப்பர், கலர் பேனா, தண்ணீர் பாட்டில், கடிகாரம், படங்கள் வரைவற்குரிய பொருட்கள் ஆகியவைகளை எடுத்து வைத்து விட வேண்டும். முக்கியமாக 'ஹால் டிக்கெட்'டை மறந்து விட கூடாது. பேனாவை பொறுத்த வரை கூடுதலாக ஒன்றிரண்டை வைத்துக் கொள்வது நல்லது.
குறைந்தது, எட்டு மணி நேர தூக்கம் அவசியம். அப்போது தான், மறுநாள் சோர்வின்றி தேர்வை எழுத முடியும்.
தேர்வுக்கு முந்தைய நாள் இரவில், 'டிவி' பார்ப்பதையோ, கதைகள் மற்றும் பொழுதுபோக்கு புத்தகங்கள் படிப்பதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
.
தேர்வுக்கு முந்தைய நாளை விட, தேர்வு நாளன்று, இனம் புரியாத பயம் மற்றும் பதற்றம் தொற்றிக் கொள்ளும். அப்போது செய்யும் சிறு தவறுகள் தரும் விளைவுகள், நம் எதிர்காலத்தையே மாற்றி விடும்.
ஆண்டு முழுவதும் படித்தவைகளை, தேர்வில் சிறப்பாக வெளிப்படுத்தி, மதிப்பெண்களாக மாற்ற வேண்டுமானால், தேர்வுக்கு முந்தைய நாளில் துவங்கி, தேர்வை எழுதி முடிக்கும் கடைசி நிமிடம் வரை, பதற்றமின்றி செயல்பட வேண்டும். அப்போதுதான், தேர்வை இயல்பாக எதிர்கொள்ள முடியும்.
பல் துலக்கி, நன்றாக குளித்து, வீட்டில் சமைத்த சாப்பாட்டை தேவையான அளவில் சாப்பிட்ட பின், புத்துணர்வோடு தேர்வறைக்கு செல்லுங்கள். அளவுக்கு மிஞ்சிய சாப்பாடு, தூக்கத்தை வரவழைத்து விடும். அதற்காக எதுவும் சாப்பிடாமல் காலி வயிற்றுடனும் செல்லக் கூடாது.
தேர்வு நடைபெறும் இடத்தில், குறைந்தது, அரை மணி நேரத்திற்கு முன் இருக்கும்படியாக செல்வது, நல்லது.
தேர்வு அறைக்குள் நுழைவதற்கான கடைசி மணி அடிக்கும் வரை, புத்தகத்தை புரட்டிக் கொண்டிருக்காமல், தேர்வு அறை திறந்து விடப்பட்டவுடன், உள்ளே சென்று அமர்ந்து விடுங்கள். அதன்பின், எவரிடமும் எதைப்பற்றியும் பேசாமல், தேர்வை எதிர்கொள்ள தயாராகுங்கள்.
தேர்வறைக்குள் வந்து அமர்ந்ததும், மேஜையில் ஏதாவது எழுதப்பட்டுள்ளதா, வேறு பேப்பர்கள் அல்லது துண்டு சீட்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். அப்படி ஏதாவது இருந்தால், தேர்வறை மேற்பார்வையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இல்லையெனில் யாரோ செய்த தவறுக்கு, நீங்கள் பலியாக வேண்டியிருக்கும்.
தேர்வுக்காக கொண்டு சென்றிருக்கும் பொருட்களை, மேஜையின் மீது ஒழுங்குபடுத்தி வைத்த பின் இறுக்கமின்றி, தளர்வான நிலையில் அமர்ந்து, மூளையை தூண்டுவதற்காக முன்பு செய்த சுவாசப் பயிற்சியை இரண்டொரு முறை செய்யலாம்; இதனால், மூளை விழிப்பு நிலைக்கு வந்து விடும்.
மற்ற சமயங்களை விட, தேர்வு நாளன்று, தொடர்ச்சியாக எழுத வேண்டியிருக்கும். இதனால், விரல்களில் வலி, விரல்களை மடக்க முடியாமை போன்ற தொந்தரவுகள் வரலாம். இதை தவிர்க்க, சிறிது நேரம் மணிக்கட்டு பகுதிகளை சுழற்றியும், விரல்களை நீட்டியும், மடக்கியும் பயிற்சி செய்யலாம்.
விடைத்தாளில், மார்ஜினை மடித்தோ அல்லது பென்சிலால் கோடிட்டோ கொள்ளலாம். மார்ஜின் இல்லாத விடைத்தாளை, பெரும்பாலான ஆசிரியர்கள் விரும்புவது இல்லை.
விடைத்தாளில் உங்களுக்குரிய பதிவு எண்ணை தெளிவாகவும், தவறின்றியும் குறிக்க வேண்டும். இந்த ஆரம்ப செயல்பாடுகளை செய்து முடித்த பின், 'என்னால் முடியும்...' என்ற நம்பிக்கையுடன், மனதை லேசாக வைத்து, ஒரு நிமிடம் அமைதியுடன் இருங்கள்.
பின், கேள்வித்தாள் கைக்கு வந்தவுடன், உடனே எழுத ஆரம்பிக்காமல், முதலில் கேள்விகளை முழுமையாக படித்து பாருங்கள். பின், கேள்விகளை தேர்ந்தெடுத்து, எந்தெந்த கேள்விகளுக்கு எந்த வகையில் விடையளிப்பது, ஒவ்வொரு கேள்விக்கும் எவ்வளவு நேரம் ஒதுக்குவது என, முடிவு செய்யுங்கள்.
விடைகள் எழுதும் போது, கேள்வி எண்ணை தெளிவாக விடைத்தாளில் குறிப்பிடவும்.
கேட்கப்பட்டதற்கும் அதிகமான கேள்விகளுக்கு விடை எழுதுவதையும், ஒரே கேள்விக்கான விடையை, இரண்டு இடங்களில் எழுதுவதையும், ஒருபோதும் செய்யக்கூடாது. திருத்துபவர், இதை கண்டுபிடித்தால், அவரால் உங்களை அந்த தேர்வில் தோல்வியடையச் செய்து விட முடியும்.
சில கேள்விகளுக்கான விடைகளை எழுதும் போது, தொடர்ச்சியாக நினைவிற்கு வராவிட்டால், அந்த விடையை யோசித்துக் கொண்டிருப்பதிலேயே நேரத்தை செலவிடாமல், சிறிது இடைவெளிவிட்டு, அடுத்த கேள்விக்கு போய் விட வேண்டும்.
கேள்வித்தாளில் தவறுகள் இருக்க வாய்ப்பு உண்டு. அத்தகைய கேள்விகளுக்கு விடை எழுதாமல் விட்டு விடக்கூடாது. ஏனென்றால், தவறான அக்கேள்விக்கு என்ன பதில் எழுதியிருந்தாலும், முழு மதிப்பெண் கிடைத்து விடும்.
கூடுதல் விடைத்தாளை பயன்படுத்தும் போது, அதன் பக்க எண்ணை குறித்துக் கொண்டால், கடைசியில் வரிசைப் படுத்துவதற்கு வசதியாக இருக்கும்.
'இன்னும் பத்து நிமிடங்கள் மட்டுமே இருக்கிறது...' என, மேற்பார்வையாளர் சொல்லும் போதோ அல்லது அதற்கான மணி ஒலிக்கும் போதோ, அனைத்து கேள்விகளுக்கும் விடை எழுதி முடித்திருக்க வேண்டும். முதல் பத்து நிமிடங்கள் போல, கடைசி பத்து நிமிடங்களும் முக்கியமானவை. முதல் பத்து நிமிடங்கள், நம்பிக்கையை தருவதை போல், கடைசி பத்து நிமிட செயல் பாடுகள், தேர்வை சிறப்பாக எழுதி முடித்ததற்கான மனநிறைவை தரும்.
எனவே, கடைசி பத்து நிமிட நேரத்தை, எல்லா கேள்விகளுக்கும் விடையளித்திருக்கிறோமா. கேள்வி எண்ணை சரியாக எழுதியுள்ளோமா, விடைத்தாளில் பக்க எண்ணை சரியாக குறித்துள்ளோமா, விடை முடிந்ததற்கான அடையாள கோடுகளை, ஒவ்வொரு விடையின் இறுதியிலும் போட்டுள்ளோமா என்று கவனிக்க வேண்டும். தவறுகள் ஏதுமில்லை என, உறுதி செய்த பின், பக்க எண்ணின்படி விடைத்தாளை வரிசைப்படுத்தி, அதன் மேல்மூலையில் துளையிட்டு, நூலால் முடிச்சிட்டு கொடுத்த பின், அறையை விட்டு வெளியேறுங்கள்.
தேர்வறையை விட்டு வந்தவுடன் எழுதிய விடைகளை சரி பார்க்கவோ, நண்பர்களிடம் விவாதிக்கவோ வேண்டாம். தேர்வு முடிந்ததுமே, அப்பாடம் சார்ந்த எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து, அடுத்த தேர்விற்கான பாடங்களை கையில் எடுத்து, தயாராகுங்கள்.
தேர்வை சிறப்பாக எழுதி, வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகள்!

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X