திண்ணை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
திண்ணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 மார்
2017
00:00

கண்ணதாசன் எழுதிய, 'எனது வசந்த காலங்கள்' நூலிலிருந்து: கடந்த, 1961லிருந்து, 72 வரை நான் எழுதிய பாடல்கள் எல்லாம் மனநிம்மதி இல்லாமல் எழுதியவை. அதைத் தான் நீங்கள் நிம்மதியாக கேட்டு ரசிக்கிறீர்கள். ஒருவர் ஒரு படமெடுப்பதாக இருந்தது. அதில் ஒரு ஊமைப்பெண் கதாபாத்திரத்திற்கு ஒரு குழந்தை பிறக்கிறது. ஊமைப் பெண்ணின் தங்கை, அக்குழந்தைக்கு தாலாட்டு பாடுகிறாள்...
தாய் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
தாய் தூங்க தாலாட்டு
நீ பாட வேண்டும்
நீ பாடும் தாலாட்டை
தாய் கேட்க வேண்டும் - தன்
நிலை மாறி அவள் கூட
மொழி பேச வேண்டும்
- இப்படம் பாதியிலேயே நின்று விட்டது.
ஆனால், அப்படத்திற்காக எழுதிய இப்பாடல் தான், பாலும் பழமும் படத்தில், 'நான் பேச நினைப்பதெல்லாம்...' என்ற காதல் பாட்டாக வெளியானது.

'அதிசய செய்திகள்' என்ற நூலிலிருந்து: ஓவியக்கல்லூரி ஒன்றில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், விண்ணப்பத்துடன், மூன்று சித்திரங்கள் வரைந்து அனுப்ப வேண்டும் என்றும், ஒன்று, சைக்கிள்; இரண்டாவது, செருப்பு; மூன்றாவது, விண்ணப்பதாரர், தன் விருப்பம் போல் எது வேண்டுமானாலும் வரையலாம் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
ஒரு பெண்ணின் விண்ணப்பத்தை பிரித்த போது, சைக்கிளும், செருப்பும் மட்டுமே வரையப்பட்டிருந்தது; விருப்பப் படத்தை காணோம். எங்கே என்று தேடிய போது, சின்ன குறிப்பு இருந்தது. அதில், 'மூன்றாவது படத்தை, இங்கே தேட வேண்டாம். உறையின் மீதுள்ள, 'ஸ்டாம்ப்'பை பாருங்கள். நான் வரைந்த சித்திரம் தான் அது...' என்று எழுதப்பட்டிருந்தது.
'ஸ்டாம்ப்' போலவே தத்ரூபமாக இருந்த அச்சித்திரத்தின் மீது, தபால் நிலையத்தினர் முத்திரை குத்தியிருந்ததை கண்டு வியந்தனர்.
இது நடந்தது, இங்கிலாந்தில் உள்ள ஒரு ஊரில்!

'மயூரா' என்ற கன்னட இதழில் படித்தது: வாஜ்பாய் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது, சீனாவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார். அப்போது நடந்ததாக கூறப்படும், சுவையான சம்பவம்:
சீன பிரதமர் ஹுவா, வாஜ்பாயை அழைத்துச் சென்று, புகழ் பெற்ற சீனப் பெருஞ்சுவரை காண்பித்தார். உலக அதிசயங்களுள் ஒன்றான அதை, வியந்து பார்த்த வாஜ்பாயின் கண்களில், யாரோ சுற்றுலா பயணியால் சுவரில் வரையப்பட்டிருந்த புத்தரின் உருவம் தென்பட்டது.
உடனே, அந்த சித்திரத்தின் அருகில் சென்று மண்டியிட்டு, கரங்குவித்து, கண்களை மூடி, 'பகவானே... இந்திய - சீன நட்புறவு என்றும் நீடித்து நிற்க வேண்டும்...' என்றார், வாஜ்பாய்.
சீனப் பிரதமரும், வாஜ்பாயின் விளையாட்டில் கலந்து கொள்ள எண்ணி, சித்திரத்தின் அருகில் சென்று நின்று, 'அப்படியே ஆகட்டும்...' என்றார்.
தொடர்ந்து, 'பகவானே... இந்திய - சீன நாடுகளுக்கிடையே யுத்தம் வராமலிருக்கட்டும்...' என்றார், வாஜ்பாய்.
சிரித்தபடியே, 'அப்படியே ஆகட்டும்...' என்றார், ஹுவா.
அடுத்து, 'ஹே பகவானே... சீனா ஆக்கிரமித்துள்ள இந்திய பிரதேசங்களை திருப்பித் தரட்டும்...' என்றார், வாஜ்பாய். திடுக்கிட்ட ஹுவா, சமாளித்து, 'மிஸ்டர் வாஜ்பாய்... நீங்கள் சுவருடன் தான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்...' என்றார்.

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X