ஒரு கதைசொல்லியின் கதை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
ஒரு கதைசொல்லியின் கதை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 மார்
2017
00:00

வீரண்ணன் கோவில் திருவிழாவுக்காக, முகூர்த்தக்கால் ஊன்றி, கொடியேற்றம் செய்த நாள்தொட்டு, ஊரில் கலகலப்பு பற்றிக் கொண்டது.
வடகரையிலிருந்து அம்மா போன் செய்த போதே, 'திருவிழா விஷயம் தான்...' என்று யூகித்தேன்.
'பரணி... இந்த முறை கண்டிப்பா நீ ஊருக்கு வந்துரணும். வருஷம் முழுக்க வேலை செய்றதே வேலையாகிப் போனா, சாமியையும், சனங்களயும் எப்பய்யா பாக்கிறது... நீ வர்ற... அம்புட்டுத்தான்...' என்றாள் கண்டிப்புடன் அம்மா.
எனக்கும் மறுத்து பேச மனமில்லை. விலகிப் போக, எந்த காரணமும் இல்லை. ஆனால், நெருங்கி வருவதற்கோ மனம் ஓராயிரம் காரணங்களுக்கு காத்திருக்கிறது.
எங்கள் ஊரோடு சேர்த்து, எட்டு ஊர்களுக்கு குலசாமி, வீரண்ணன். அவருடைய வரலாறும், அதையொட்டிய சிலிர்க்க வைக்கும் கதைகளும், திருவிழா காலத்தில் சொல்லப்படும். ஒவ்வொரு முறையும், அக்கதைகளை, புதுசு போல தான் கேட்போம்.
ராட்டினம், ஊஞ்சலாட்டம், குடை ராட்டினம், சைக்கிள் ரேஸ் என்று ஊரே அதகளப்படும்.
'மால்'களில் கிடைக்காத பொருட்கள் கூட, எங்கள் திருவிழா சந்தையில், மலிவு விலையில் கிடைப்பதாய் தோன்றும்.
திருவிழா கொடியேற்றியதும், உறவினர்கள் ஒவ்வொருவராய் வீட்டிற்கு வரத் துவங்குவர். அத்தை, மாமா, சித்தப்பா, பெரியப்பா, பெரியாச்சி என்று உறவுக்கூட்டத்தின், பேச்சும், சிரிப்பும் அந்த பத்து நாளும், நண்டு புகுந்த ஓட்டை சட்டியாய், கலகலப்பில் திளைத்திருக்கும் வீடு.
வீரண்ணன் கோவிலை ஒட்டிய அரச மரத்தடியில், ஷாமியானா கட்டி, ஜமுக்காளம் விரித்து இருப்பர். மாலை நேரத்தில், அங்கு சின்னஞ்சிறுசுகளின் விளையாட்டும், கேளிக்கையுமாய் இருக்கும். இரவில் தர்மகர்த்தா உபயத்தில், அங்கே மின் விளக்குகள் மின்னும். ஏழு மணிக்கெல்லாம், கதை சொல்லி வந்து விடுவார்.
வீரண்ணன் பிறப்பையும், தோற்றத்தையும், அவர் வர்ணிக்கிற அழகை கேட்கவே, ஆண்டுக்கு இரண்டு முறை திருவிழா வராதா என்று, மனசு ஏங்கும்.
திருவிழா நடக்கும் பத்து நாளும், அசைவம் சாப்பிட மாட்டார், கதை சொல்லி. மூன்று வேளையும், தர்மகர்த்தா வீட்டிலிருந்து, சைவ சாப்பாடு வரும். கடைசி நாளில், கதை சொல்லி ஊர் திரும்பும் போது, அவருக்கு கறி விருந்து போட்டு, தேங்காய், பழம் தாம்பூலத்தோடு ஐயாயிரமோ, பத்தாயிரமோ கொடுத்தனுப்புவர்.
நான், சிறுவனாய் இருந்த காலந்தொட்டே, கதைசொல்லி மீது அலாதி ஈர்ப்பு இருந்தது. அவருடைய குரலும், ஓங்குதாங்கான உயரமும், கதை சொல்லும் போதே, கதைக்குள் பயணப்படும் தீரமும், என்னை வியப்பில் ஆழ்த்தும்.
கதைக்குள் பயணப்படும் அவர், வீரண்ணனாக, அவர் மனைவி குசேலையாக, வீரண்ணனை அழிக்க வாள் ஏந்தும் பூசாரியாக என்று அத்தனையுமாகி தெரிவார்.
இரவில் கண்மூடி படுத்தால், கனவில் வந்து, அத்தனை வேடமும் தரித்து, அந்த இரவை தாலாட்டுவார், கதைசொல்லி.
'பெரியவன் ஆனதும் நானும், கதை சொல்லியாவேன். ஊரே வாய் பிளந்து உட்கார்ந்திருக்க, என் ஒற்றைக்குரல் மட்டும் ஓங்குதாங்காய் ஒலிக்கணும்...' எனற என் கனவை அம்மாவிடம் கூறிய போது, விழுந்து விழுந்து சிரித்தாள்.
கதை சொல்லி, என் வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து, எனக்கு, நித்தமும் கதை சொல்ல மாட்டாரா என்று ஏக்கமாய் இருக்கும். என்னுடைய இந்த ஏக்கத்தை தீர்த்து வைத்தது, சீனா பாட்டி தான். அப்பாவுடைய சித்தி. மாதத்தில், ஓரிரு முறை எங்கள் வீட்டிற்கு வந்து தங்கி போவாள்.
'ராமாயணத்தில சீதை பட்ட கஷ்டத்துக்கு நிகரான கஷ்டத்தை, இந்த உலகத்துல எந்த பொம்பளையும் பட்டதில்ல... அய்யா பரணி... நீ பெரியவன் ஆனதும் உனக்கு கல்யாணம் ஆகுமில்ல... உன் பொஞ்சாதி கவுரதைய, யார் முன்னாலயும் விட்டு தந்துரக்கூடாது. குடி வந்த மவ அழுதா, குலமே நாசமா போயிடும்.
'பொம்பள தண்ணி மாதிரி... ஊத்தி வைக்கிற ஏனத்துக்கு ஏத்த மாதிரி தன்னை மாத்திக்குவா. ஆனா, ஆம்பளை ஏனம் மாதிரி; பன்னீரையே ஊத்தி வச்சாலும், அவன் வடிவத்தை மாத்திக்கிட மாட்டான்...' என்று கம்பராமாயணத்தோடு, தன் சொந்த ராமாயணத்தையும் சேர்த்து சொல்லி அங்கலாய்க்கும்.
ஒருநாள், திடீரென பாட்டி செத்துப் போனாள். என் வாழ்க்கையில், கதை கேட்பது அஸ்தமித்தது போல, அழுகை வந்தது.
அதன்பின், கதையை ருசியாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் சொல்கிற கலையை, கற்றுத்தந்தது தமிழய்யா மகாலிங்கம் தான்!
வாரத்தில் ஒருநாள், நீதிபோதனை வகுப்பு நடக்கும். இரண்டு, மூன்று வகுப்பு மாணவர்களை ஒன்றாக அமர வைத்து, தன்னுடைய கதைகளால் கட்டிப் போடுவார்.
'குத்துயுரும், குலை உயிருமா கிடக்கிறான் கர்ணன்... இந்தப்பக்கம் அவன வீழ்த்துன பெருமிதத்தில் நிற்கிறான், அர்ஜுனன். தகவலறிஞ்ச குந்தி, தன் கர்ப்பகுலையே அறுந்து போக, 'கர்ணா...'ன்னு கத்திட்டு ஓடி வர்றா... நம்ம தாய், எதிரியோட மரணத்துக்கு, எதுக்கு இப்படி அழறா'ன்னு, அண்ணன் - தம்பிகளுக்கு புரியல!
'என்ன நடக்கப் போகுது இனி... கர்ணன் தன் அண்ணன்னு தெரிஞ்ச பின், பாண்டவர்கள் என்ன செய்யப் போறாங்க... இந்த உண்மை தெரிஞ்சதும், துரியோதனன் என்ன செய்யப் போறான். இதெல்லாம் அடுத்த வகுப்புல பார்ப்பமா...' என்பார் தமிழய்யா மகாலிங்கம்.
ஏதோ புதுசா நடக்கப்போவது போல, மனசு கிடந்து அங்கலாய்க்கும்.
காலம் கடந்தாலும், தமிழாசிரியரின் கதை சொல்லும் நேர்த்தியை கடந்து வர இயலாமல் தத்தளித்தேன். படிப்பு, கிராமத்தில் இருந்து, நகரத்திற்கு பயணமானது. அதன்வழியே நினைவுகளும்!
கால ஓட்டத்தில், திருவிழாக்களின் தன்மையும் மாறியது. பத்து நாள் திருவிழா, வெறும் மூன்று நாட்களாக சுருங்கியது.
''பரணி... இப்ப இங்க யாருடா இருக்கா... வயசுப் பசங்க எல்லாம் பட்டணத்துக்கு பொழப்பு தேடிப் போயாச்சு. ஏதோ திருவிழான்னு உன்னாட்டம் லீவு போட்டுட்டு ஊருக்கு வர்றாங்க. அதுங்களால பத்து நாள்ல்லாம் இங்க தங்க முடியறதில்ல. மொதநாளு கொடியேத்தம், காப்பு கட்டு; ரெண்டாவது நாளு காவடி, தேவதை வழிபாடு; மூணாவது நாளு கும்பம் எடுத்து, கொடி மரத்தை புடுங்கிட்டா, திருவிழா முடிஞ்சது,'' என்றாள், அம்மா.
எனக்கு, 'சப்'பென்று ஆனது.
''அப்ப, கதை சொல்லி வரமாட்டாரா...'' என்றேன்.
''அட இவனே... இன்னும் நீ அவரை நினைப்புலயா வச்சிருக்க... அவருக்கு வயசாயிருச்சுடா... வருவாரு... பத்து நாளு சொன்ன கதையை சுருக்கி, மூணு நாளுல முடிச்சுக்குவாரு. அவருக்கும் அலுப்பா இருக்குமுல்லே...'' என்றாள் அம்மா.
அந்தக் கூற்றில், எனக்கு துளி கூட உடன்பாடில்லை. எத்தனை முறை சாப்பிட்டாலும், பசிக்கத் தானே செய்கிறது.
சின்ன ஊரில் வாழும் போது சவுகரியமும், அசவுகரியமும் கலந்து தான் இருக்கிறது. சவுகரியம் என்பது முதல் தெருவிலிருந்து, மூணாம் தெருவிற்கு போவதற்குள், அத்தனையும் பழக்கப்பட்ட முகங்கள், உறவுமுறைகள்!
'என்ன பரணி... மெட்ராஸ்ல வேலையில இருக்கியாமே... சொல்லவே இல்ல...'
'ஏன் பரணி... நாலுல இருந்து அஞ்சு மணி வரை பாட்டு போடுறது நீ தானா... சூப்பர்டா!'
'பட்டணத்துக்கு போய் கெட்டு கிட்டு போயிடாத. உங்க ஆத்தாளுக்கு நீ, ஒத்த புள்ள...' அக்கறைப்படும் மனிதர்களை தாண்டி வருவதே பெரிய விஷயம்.
எல்லாருக்கும் தெரிந்தவர்களாய் இருப்பது சவுகரியம் என்றால், அதுவே அசவுகரியம் கூட. பின்னே... முட்டுச்சந்தில் கூட நின்று, 'தம்மடிக்க' முடியவில்லையே!
டீக்கடை பெஞ்சில் அமர்ந்து, வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். அரை மணிக்கு ஒருமுறை வந்து போகிற மினி பஸ்சில், நிறைய பேர் சந்தைக்கு போவதும், திரும்புவதுமாய் இருந்தனர்.
அப்போது, என் பக்கத்தில் வந்து அமர்ந்தார் கதை சொல்லி. மேல்துண்டால் முகத்தை துடைத்தவரை திரும்பிப் பார்த்தேன். நன்றாய் சிவந்த முகம், சந்தன பொட்டிற்கு நடுவில், குங்குமம் வைத்திருந்தார். அவரை அருகில் பார்த்ததும் எனக்கு சந்தோஷமாக இருந்தது. நாம் வியந்து பார்த்த மனிதர்கள், நம்மை நெருங்கி வருகிற சுகம் அளப்பரியது.
வணக்கம் சொன்னேன். எழுந்து நின்று, பதில் வணக்கம் சொன்னார், கதை சொல்லி.
''ஐயா... நீங்க கதை சொல்லும் பாணிக்கு, நான் பெரிய ரசிகன்.''
எடுத்த எடுப்பில், நான் இப்படி சொல்லவும், அவர் முகத்தில் சந்தோஷம், வீசை வீசையாய் வழிந்தது.
''அப்படியா... ரொம்ப சந்தோஷம்.''
''சின்ன வயசில இருந்தே உங்க கதைகள தவறாம கேட்டுட்டு வர்றேன். உங்க வார்த்தை உச்சரிப்பும், கதை சொல்லும் திறமும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
''சின்னபுள்ளையில, புளிய மரத்தடியில நின்னுட்டு, உங்கள மாதிரியே பேசிப் பாப்பேன். அந்த ஆர்வம் தான், இப்போ, என்னை சென்னையில, 'ரேடியோ ஜாக்கி'யா ஆக்கியிருக்கு. நிகழ்ச்சிக்கு நடுநடுவே நான் சொல்ற கதைகளுக்கு, பெரிய ரசிகர் பட்டாளமே இருக்குன்னா, அந்த பாராட்டுக்கு சொந்தக்காரர் நீங்க தான்.''
நான் பேசப் பேச, அவர் உணர்ச்சி எல்லை மீற, துண்டால் வாயை பொத்தி, குலுங்கிக் குலுங்கி அழுதார்; எனக்கு தூக்கி வாரிப் போட்டது.
பதறிப் போய், ''என்னாச்சுங்கய்யா...'' என்றேன்.
அவர் தன்னை ஆசுவாசப்படுத்தி, துண்டால் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டார்.
''மன்னிச்சுக்குங்க தம்பி... கலைஞன் இல்லயா... அதான், உணர்ச்சி வசப்பட்டுட்டேன். இப்ப, எனக்கு, 60 வயசாகுது... 40 வருசமா கதை சொல்லியா இருக்கேன். ஒருநாள் கூட உன்னைப் போல யாரும் பாராட்டினதில்ல. எவ்வளவு பெரிய கலைஞனாக இருந்தாலும், அங்கீகாரம் இல்லாட்டி, அவன் ஆர்வம் என்னாகும் நீயே சொல்லு.
''எங்க அப்பா, அந்த காலத்துல கதை சொல்றதுல மன்னரா இருந்தவரு. நாங்க அண்ணன் - தம்பிங்க ஏழு பேரு. நான் தான் சாயல்லயும், குரல் வளத்துலயும் அப்பா போலவே இருந்தேன். அதனால, அப்பா, தனக்கு வாரிசா என்னை, கதை சொல்லியா ஆக்கினாரு.
''என் அண்ணன், தம்பிங்க எல்லாம் குமாஸ்தாவாகவும், டீச்சராகவும் வேலைக்குப் போய், இப்போ, 'ரிட்டயர்டு' ஆகி, பென்ஷன் வாங்கிட்டு இருக்காங்க. நான் அஞ்சாவதோட படிப்பை நிறுத்திட்டு, கதை சொல்லியா ஆகிட்டேன்... அசட்டுத்தனமா, காலம் அப்படியே போயிடும்ன்னு நம்பிட்டேன் தம்பி!
''சித்திரனார், திரவுபதி கதை, அழகர் வரலாறு, முருகன் திருவிளையாடல், கண்ணகி வரலாறுன்னு ஆயிரத்துக்கு மேலான கதைகளை, அட்சரம் பிசகாமல் ஒப்பிப்பேன்... ஆனா, என் கதையை கேட்டா, எப்படி சொல்றதுன்னு தெரியாம முழிப்பேன்.
''குடும்பம் மணப்பாறையில இருக்கு; ஆனா, மனசு பாறையாகி கெடக்கு எனக்கு,'' என்று அவர் கொட்டித் தீர்த்தார்; நான் உடைந்து போனேன்!
கதை சொல்லியின் பின்னே, மிகப் பெரிய கண்ணீர் வரலாறு இருப்பது எனக்கு புரிந்தது.
அதற்குள் எங்கள் எப்.எம்., நிர்வாகியிடமிருந்து அழைப்பு வந்தது. அவரிடம் அனுமதி பெற்று, அங்கிருந்து விலகி நின்று பேசினேன். திரும்பி வந்தபோது, அவர் அனுமன் கதை புத்தகம் படித்தபடி, அங்கேயே அமர்ந்திருந்தார்.
எனக்கும், அவருக்கும் சேர்த்து, இரண்டு டீ சொல்லி, மீண்டும் அவர் அருகில் வந்து அமர்ந்தேன்.
''அப்போ உங்களுக்கு கதைசொல்லியா ஆனதுல, வருத்தம் அப்படித் தானே...'' என்றேன்.
''யார் சொன்னா அப்படி... விரும்பி ஏத்துக்கிட்டா, குறையே இருந்தாலும் வலிக்காது; அதுதான் வாழ்க்கை. இஷ்டப்பட்டா கஷ்டப் படலாம்ன்னு நீங்க கேள்விப் பட்டதில்லயா... எல்லாரைப் போலவும் எனக்கும் வாழ்க்கையில சலிப்பு இருக்கு. ஆனா, அது, வாய்ப்புகள் குறையக் குறைய, இனி எப்படி வாழப்போறோம்ங்கிற பயத்தினால வர்ற சலிப்பு. மத்தபடி, கதை சொல்ல ஆரம்பிச்சா, ராமனாவும், முருகனாகவும் மாறி என்னை மறந்து போயிடுவேன். அந்த மகிழ்ச்சி, எங்க கிடைக்கும் சொல்லு!''
அவர் முகத்தையே, புன்முறுவலோடு பார்த்தபடி இருந்தேன்.
''இந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குற மாதிரி, இந்த வயசில உங்களுக்கு வேலை கிடைச்சா செய்வீங்களா?''
அவர் குழப்பமாய் பார்த்தார்.
''இப்போ, என் சேனல் நிர்வாகி தான் என்கிட்ட பேசினார். உங்களப் பத்தியும், உங்களுக்குள்ள இருக்கிற கதை சொல்லும் திறமை பத்தியும் அவர்கிட்ட சொன்னேன். அவர் ரொம்ப, 'இம்ப்ரஸ்' ஆயிட்டார். நீங்க மணப்பாறையில இருக்கிறதாலே, வாய்ஸ் டெஸ்ட்டுக்கு எங்க திருச்சி எப்.எம்., கிளைக்கு வரச் சொன்னார்.
''தினம் காலையில, 'புராண நேரம்'ன்னு அரை மணி நேரம் நிகழ்ச்சி நடத்தறோம். அந்த நிகழ்ச்சிக்கு நீங்க கதை சொல்லப் போறீங்க. தினமும் வரணும்கிற தேவையில்ல; பத்து நாளைக்கு ஒருமுறை வந்து, மொத்தமா பேசித் தந்துட்டு போனா போதும். நீங்க எதிர்பார்க்காத அளவுக்கு சம்பளம் தருவாங்க,'' என்றேன்.
நான் பேசப் பேச, அவர் என் கைகளைப் பிடித்து, குலுங்கி அழ அரம்பித்தார்.
''ஐயா, எதுக்கு உணர்ச்சி வசப்படறீங்க... நீங்க எந்த வேலைக்குப் போனாலும் சரி, வீரண்ணன் திருவிழாவில கதை சொல்ற பணியை மட்டும் விட்டுடக் கூடாது,'' என, குறும்பாய் கேட்கவும், அவர், ஆனந்தத்தில் என்னை இறுக கட்டிக் கொண்டார்.
எனக்கும் இனம் புரியாத நிம்மதி ஏற்பட்டது.
என் மானசீக குருவுக்கு, நான் மறைமுகமாய் கற்ற வித்தைக்கான தட்சணையை, ஏதோ ஒரு வகையில் செலுத்திவிட்ட ஆத்மார்த்தத்தில் வெளிப்பட்ட நிம்மதி அது!

எஸ்.பர்வின் பானு

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X