இளவரசன் ப்ருத்திவி! (8)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2017
00:00

சென்றவாரம்-: வஜ்ரவேலுவின் உதவியாளர்களுடன் தன் ஊருக்கு திரும்பினான் இம்புலி. இனி -

அதே சமயம் இடி சத்தம் காதை பிளந்தது; மின்னல் கண்களை கூச, திடீரென பேரிரைச்சலுடன் பெரிய மரங்கள் முறிந்து விழ, மைத்ரேயிக்கு, உள்ளூற பயமெடுத்தது.
'அரண்மனையை கடந்து சிறிது நேரம் சென்றால், இடது புறம் ஒரு பாதை வரும். அங்கே திரும்பி, மறுபடியும் சிறிது தூரம் நடந்தால், ஒரு சிறிய ஓடை மிக அழகாக மெலிதாக சலசலத்து ஓடும். அதை தாண்டி விட்டால், சமஷ்ட்டிப்பூர் என்ற எழுத்தை தாங்கி நிற்கும் ஒரு பெரிய கல் தூண் கண்முன்னே தெரியும்...' என்று திரும்ப திரும்ப கூறினாரே பிதாஜி.
'ஓடி வந்த வேகத்தில், இடது புறமா, வலது புறமான்னு தெரியலயே... பிதாஜி சொன்ன அடையாளங்களில் ஒன்று கூட தென்பட வில்லையே... என்ன செய்வேன்...' என்று உள்ளம் கூக்குரலிட, பாதங்களை மட்டுமே நனைத்த மழைநீர், மெதுவாய் உயர்ந்து இப்போது, மார்பளவிற்கு வந்துவிட்டது.
அழுத்தமாக எதிர்நீச்சல் போட்டு, மழைநீர் அடித்து செல்லும் திசையிலேயே நீந்தினாள். திடீரென்று, பெரிய அலை இவளை அப்படியே தூக்கி, அலாக்காக கரையில் எறிந்தது. தொப்பென்று மண்ணில் விழுந்த மைத்ரேயிக்கு, முதுகில் பலத்த அடி.
'இது எந்த இடம்; எந்த ஊரின் எல்லை பகுதி... தெய்வமே! என்னை காப்பாற்று...' என வேண்டினாள்.
சிறிது நேரத்துக்குப் பின், 'மினு மினு' என்ற சின்னதாய் ஒரு ஒளி. அந்த ஒளி, இவளை நோக்கி வந்து கொண்டிருந்தது. தன்னையும் மீறி, 'அய்யோ!' என்று அலறினாள் மைத்ரேயி.
'மகாராஜா... பிதாஜி... உங்களின் மனமார்ந்த ஆசியுடன் தான் நான் புறப்பட்டேன். உங்கள் ஆசியின் பலன் இதுதானா... நான் என்ன செய்வேன்!'
அந்த ஒளி, இப்படியும் அப்படியும் அசைந்து ஆடியபடி, இவளை நோக்கி வந்தது.
''என்னை ஒன்றும் செய்து விடாதே; தயைகூர்ந்து என்னை காப்பாற்று...'' அப்படியே அதன் காலடியில் விழுந்த போது தான் கவனித்தாள், அதற்கு கால்கள் இருந்தன. அது மட்டுமல்ல, அதுவே வாயை திறந்து பேசிற்று!
''யாரும்மா நீ... இந்த நேரத்தில், கொட்டும் மழையில், மனித சஞ்சாரமே அற்ற அத்வானத்தில், யாரைத்தேடி இங்கு வந்தாய்... பயப்படாமல் என்னிடம் சொல்; உனக்கு என்ன உதவி வேண்டும்; தயங்காமல் கேள்... நான், இந்த பகுதியின் இரவு நேர காவல்காரன்!'' என்றான்.
'உண்மையை சொல்ல வேண்டாம்...' என்று அவளின் உள்ளுணர்வு எச்சரிக்க, ''ஐயா! என் துரதிர்ஷ்டத்தை என்ன சொல்ல... அப்பா, அம்மா கிடையாது; பரம ஏழை; கூலி வேலைக்கு போனால் கூட, கூலி கிடைக்காது. அப்படி ஒரு ராசி.
''நேத்து காலையில எங்க ஊருக்கு ஒரு பெரிய மனிதர் வந்தாரு. என் கதையை கேட்டதும், 'ஏம்மா! இப்படி கஷ்டப்படறே... சமஷ்ட்டிப்பூருக்கு வந்துடு. அங்கே கூலி வேலைக்கெல்லாம் நல்ல கிராக்கி. அகிலேஷ், இம்புலி, ரன்வீர் இப்படீன்னு, நல்ல வசதியான விவசாயிகள் இருக்காங்க... நீ அவர்களைப் போய் பார்' என்றார்.
''எப்படியும் வேலை கிடைச்சிரும்; பசி தீர்ந்து விடும் என்ற நம்பிக்கையோடு வந்தேன். என் நம்பிக்கை இப்படியா பொய்த்துப்போகும். சரி ஐயா, நான் சமஷ்டிப்பூருக்கு போகணுமே... எப்படி போகணும்னு சொல்லுங்கள்,'' என்றாள் மைத்ரேயி.
''ஓ சமஷ்ட்டிப்பூரா... அது ரொம்ப தொலைவு. நீ அவ்வளவு தூரம் நடப்பியா?'' என்றான் காவல்காரன்.
''என்ன ஐயா! இப்படி கேட்டுட்டீங்க... நடப்பியாவா... நடந்தா தானே எங்கள் பிழைப்பு ஓடும்...'' என்றாள்.
''சரி வா... நான் கூட்டிட்டு போறேன்,'' என்று அவளை அழைத்து சென்றான்.
மைத்ரேயியின் உள்ளமெல்லாம், பரபரப்பும் ஆவலும் போட்டி போட்டு கொந்தளித்து கொண்டிருந்தது.
'அந்த இம்புலி சுருக்குப் பையை என்ன செய்தானோ... இவ்வளவு நேரம் ஆகி விட்டதே... தன்னிடமே வைத்திருக்கிறானோ, இல்லையெனில், அந்த மோதிரத்தின் மதிப்பு தெரியாமல் யாரிடமாவது விற்றுவிட்டானா... தெய்வமே... நீ தான் துணை!' என்று வேண்டிக் கொண்டாள்.
''ஏம்மா! எவ்வளவு நேரமா உன்னை கூப்பிடறேன். உனக்கு காது கேட்கலயா... இது தான் நீ சொன்ன சமஷ்ட்டிப்பூர். இந்த கல்வெட்டுல எழுதியிருக்கு பாத்தியா...'' என்று, கைவிளக்கை தூக்கி, கல்வெட்டில் காண்பித்தான் காவல்காரன்.
''அங்கே பார்... வலது கோடி மூலையில், ஒரு விளக்கு சின்னதாக எரிந்து கொண்டிருக்கிறது அல்லவா... இப்படியே இந்த வரப்பு மேல நடந்து போய், விளக்கு எரிந்து கொண்டிருக்கும் வீட்டில், நீ போகவேண்டிய முகவரியின் விபரத்தை கேட்டு தெரிந்துகொள்; கவலைப்படாதே... நீ போகும் காரியம் முற்றிலும் வெற்றி பெறும்; நான் புறப்படுகிறேன்,'' என்றான் காவல்காரன்.
அவருக்கு நன்றி கூறி விட்டு, கவலையும், பயமும் கலந்த உணர்வுகளுடன் அந்த வீட்டை நோக்கி வேகமாக சென்று, வீட்டுக்கதவை படபடவென்று தட்டினாள்.
''யார் அது?'' உள்ளிருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்டது.
''பயப்படாமல் கதவை திறங்கள்... பேயோ, பிசாசோ அல்ல... உங்களை போல ஒரு சாதாரண பெண். மிக அவசரமாக உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்!'' என்றாள் மைத்ரேயி.
''இந்த இரவு நேரத்தில் அப்படி என்ன அவசரம்...'' சொல்லியபடியே கதவை திறந்தாள். முற்றிலுமாக மழையில் நனைந்து, ஈர உடையுடன் நின்ற பெண்ணை பார்த்தாள்.
''இது விவசாயி இம்புலியின் வீடு தானே?'' என்று கேட்டாள் மைத்ரேயி.
''ஆம் சகோதரி! இது இம்புலியின் வீடு தான்; நான் அவர் மனைவி சின்னி. முதலில் உள்ளே வந்து தலையை துவட்டி உடை மாற்றிக்கொள்ளுங்கள். அப்புறம் நிதானமாக பேசலாம்,'' என்றாள் சின்னி.
'என்ன தான், உபசரிப்புகள் மனதிற்கு இதமாக இருந்தாலும், அந்த சுருக்குபையையும் காணோம்; இம்புலியை காணோமே... அவன் எங்கு போயிருக்கிறான்... பையை என்ன செய்தான் என்று தெரியவேண்டும்!' என்ற எதிர்பார்ப்பு அரித்தது மைத்ரேயிக்கு.
''சகோதரி, மழையில் நனைந்து மிகவும் களைப்பாக இருக்கிறீர்கள். சூடாக இந்த பாலை சாப்பிடுங்கள்...'' என்றாள் சின்னி.
'சரியான வெகுளிப் பெண்!' என்று நினைத்தாள் மைத்ரேயி.
''நீங்க நகரத்திலிருந்து வர்ற மாதிரி தெரியுது. உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும், நான் மாமனுக்கு உணவு எடுத்துட்டு போனபோது, அங்கே இரண்டு வழிப்போக்கர்கள் உட்கார்ந்து மாமனிடம் பேசிக்கொண்டு இருந்தனர். அது என்னவோ எனக்கு அவங்களை பார்த்ததும் அப்படியே மனசெல்லாம் ஒரே நிறைவு; மகிழ்ச்சி...
''அவர்கள் சாதாரண வழிப்போக்கர்கள் அல்ல... அப்படியே தெய்வாம்சம் பொருத்தியவர்கள் என்று என் உள் மனசு எனக்கு செய்தி சொல்லிச்சு...''
சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்து, பேச்சை உன்னிப்பாக கேட்க ஆரம்பித்தாள் மைத்ரேயி.
ஒன்று விடாமல் நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறினாள் சின்னி.
''சின்னி... காலையில வந்த அந்த விருந்தாளியர் யார் தெரியுமா... நீ செய்த கூழை, ருசித்து சாப்பிட்டு, உன்னை தங்கச்சின்னு அடிமனசில இருந்து, அருமையாக கூப்பிட்டு, உன் புருஷன் வாயில இருந்து களவாணி பயலுகன்னு திட்டு வாங்கினவங்க தான், உன் துஷ்யந்த் மகாராஜாவும், அவரின் மந்திரியும்...'' என்றாள் மைத்ரேயி.
''என்னது, மகாராஜாவா... உடம்பெல்லாம் புல்லரிக்குது... ஆனாலும், உன் பேச்சை எப்படி நம்புறது... அவங்க ஏன் இப்படி வேஷம் கட்டிட்டு வந்தாக?'' என்றாள் சின்னி.
''நம்ம மகாராஜாவின் வழக்கமே அது தான்! இப்படி மாறுவேஷத்தில் வந்து, மக்களுடன் மக்களாக பழகினால் தான், அவர்களின் குறை என்ன... தேவை என்ன... என்பதெல்லாம் புரியும். அப்புறம் ஊருக்கு போய், அவர்களின் குறைக்களுக்கெல்லாம் நிவாரணம் அளித்துவிடுவார். நான் அரண்மனையில் இருந்து தான் வருகிறேன்... என் பெயர் மைத்ரேயி,'' என்றாள்.
''அக்கா! அவங்க தான் மகாராஜான்னு தெரியாம அவங்கள சரியா உபசரிக்க முடியல... என்னையப்பத்தி என்ன நினைப்பாக,'' என்று வருத்தப்பட்டாள் சின்னி.
''உன்னை தான், அன்பாக, தங்கச்சீன்னு கூப்பிட்டார்களே... அப்புறம் ஏன் தப்பாக நினைக்கப்போறாக...'' என்றாள் மைத்ரேயி.
அப்போது, வாயிற்கதவை, ஓங்கித்தட்டும் சத்தம் கேட்டது. ஓடிச் சென்று, கதவை திறந்தாள் சின்னி.
அங்கே சொட்ட சொட்ட மழையில் நனைந்து நின்ற இம்புலி, முகத்தில் எள்ளும், கொள்ளுமாக வெடித்தது.
- தொடரும்...

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X