மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
செயற்கைப் பல் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
யாஷ்னி, 3ம் வகுப்பு, ஊ.ஒ.து பள்ளி, பூலுவப்பட்டி, திருப்பூர்.
பல்வேறு காரணங்களால், பற்களை இழந்தோருக்கு செயற்கைப் பல் கட்டப்படுகிறது. ஒரு காலத்தில் தங்கப் பல் பிரபலமாக இருந்தது. தங்கமுலாம் பூசப்பட்ட உலோகத்தை வைத்து, செயற்கைப் பல் தயாரித்து வந்தனர். பின்னர், வெண் களிமண் எனப்படும் பீங்கான் அல்லது சுட்டாங்கல்லில் செய்து வந்தனர். நவீன காலத்தில் அக்ரலிக் பிசின் எனப்படும் ஒருவகை பிளாஸ்டிக் பொருளால் பற்கள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது, சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம்,'டென்டாஃபார்ம்' (DentaFarm) என்ற இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. இந்த இயந்திரம் பற்களை மிகத் துல்லியமாக முப்பரிமாண தொழில்நுட்பத்தில் உருவாக்கித் தருகிறது.
ஃப்ளாஸ்க்கில் ஊற்றி வைக்கும் வெந்நீர் எப்படி நீண்டநேரம் சூடாக இருக்கிறது?
எஸ்.தீபக், 7ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றியப் பள்ளி, குண்டல்நாயக்கன்பட்டி, தேனி.
பாத்திரத்தில் இருக்கும் வெந்நீர் எப்படி சற்றுநேரத்தில் குளிர்ந்து விடுகிறது? இதைப் புரிந்துகொண்டால் ஃப்ளாஸ்க்கில் ஊற்றி வைக்கும் வெந்நீர், எப்படி நீண்டநேரம் சூடாக இருக்கிறது என்பது விளங்கும். பாத்திரத்தில் வைக்கும் வெந்நீரின் வெப்பம், முதலில் வெப்பக் கதிர்வீச்சின் வழியாக வெளிக் காற்றை வெப்பமாக்கும். அதன்வழி நீரின் வெப்பம் குறையும். மேலும் வெப்பக் கடத்தலால், நீரின் வெப்பம் பாத்திரத்தில் படிந்து, பாத்திரத்தில் படியும் வெப்பம் காற்றில் படிந்து, மேலும் கூடுதல் வெப்பம் வெளியேறும். காற்று வீசுகிறது என்றால், சூடேறிய காற்று குவளையின் அருகே இருந்து அகன்று விடும். இதனால் மேலும் விரைவாக பாத்திர நீர் தனது வெப்பத்தை இழக்கும்.
வெப்பக் கதிர்வீச்சையும், வெப்பக் கடத்தலையும் தடுத்துவிட்டால்,வெந்நீர் சூடாகவே இருக்கும். அதைத்தான் ஃப்ளாஸ்க் செய்கிறது. ஃப்ளாஸ்க்கின் உள்ளே ஒரு குவளையும், வெளியே ஒரு குவளையும் உள்ளது. இரண்டும் கழுத்துப் பகுதியில் மட்டுமே சந்தித்துப் பிணைந்து இருக்கும். இரண்டு குவளைக்கும் இடையே உள்ள இடைவெளி வெற்றிடமாக இருக்கும். வெற்றிடம் வழியாக வெப்பக் கதிர்வீச்சு கடந்து செல்லாது. மேலும் கழுத்துப் பகுதியில் மட்டுமே உள் குவளை வெளிப்பகுதியை சந்திப்பதால், அதன்வழி ஏற்படும் வெப்பக் கடத்தல் அளவும் வெகுவாகக் குறைந்துவிடும். எனவே நீண்டநேரம் ஆனாலும், வெந்நீர், சூடு குறையாமலேயே இருக்கிறது.
டைனோசர் முட்டை கிடைத்தால், அதிலிருந்து மீண்டும் டைனோசரை உருவாக்க முடியுமா?
ஜே.ஜொஹானஸ், 2ம் வகுப்பு, சென் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, சென்னை.
இதுவரை பல டைனோசர் முட்டைகளை, ஆங்காங்கே தொல்லுயிர் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் கூட அரியலூர் அருகே உள்ள கிராமத்தில், நூற்றுக்கணக்கான டைனோசர் முட்டைகள் 2009ம் ஆண்டில் கிடைத்தன. இவை 65 மில்லியன் ஆண்டுகள் பழமையானவையாக இருக்கக்கூடும். அங்கு கிடைத்த முட்டைகள் கால்பந்து அளவில் இருந்தன. அவை, 'சொரோபோட்ஸ்' எனப்படும், கழுத்து நீண்ட தாவர உண்ணி டைனோசர் வகையைச் சேர்ந்தவை.
இப்படிக் கிடைக்கும் முட்டைகள் எதுவும் உயிர்ப்புடன் இருக்காது. ஒருவேளை எங்காவது பனிப்பிரதேசத்தில் சேதமடையாத டைனோசர் முட்டை கிடைத்தால், அதிலிருந்து டைனோசரை உருவாக்கலாம். எனினும் அம்முயற்சி மிகக் கடினமான ஒன்று. இதேபோல, பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய தாவரத்தின், நல்ல விதைகளை எடுத்து வளர்த்துப் பார்த்த சோதனை முயற்சி வெற்றி பெறவில்லை. அதிலிருந்து தாவரம் வளர்ந்தது; ஆனால் அடுத்த தலைமுறை விதைகளை அந்தத் தாவரத்தால் உருவாக்க முடியவில்லை. இது போன்ற முயற்சிகளில், தாவரத்தைவிட விலங்குகளை மீள் உருவாக்கம் செய்வதில், சவால்கள் அதிகம் இருக்கின்றன.
முகத்தில் பருக்கள் தோன்றக் காரணம், பருவ வயதா, வெப்பநிலையா, தோலில் இருக்கும் எண்ணெய்ச் சுரப்பிகளா?
சி.முத்தீஸ்வரன், 10ம் வகுப்பு, டட்லி மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்.
பொதுவாக, 13 வயதில் முகப்பரு வரத் தொடங்கும். நம் அம்மா, அப்பாவுக்குப் பரு இருந்திருந்தால், நமக்கும் வர அதிக வாய்ப்புண்டு. நம் தோலின் இரண்டாம் அடுக்கில் எண்ணெய்ச் சுரப்பிகள் (Sebaceous glands) ஏராளமாக உள்ளன. இவை ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் தூண்டுதலால், 'சீபம்'(Sebum) எனும் எண்ணெய்ப் பொருளைச் சுரக்கிறது. இந்த எண்ணெய்ப் பொருள்தான், முகத்துக்குப் பொலிவு தருகிறது. பருவ வயது அடைவது அல்லது வேறு சில காரணிகளால், சீபம் உற்பத்தி அதிகரிக்கும். அப்போது மயிர்ப்பை மட்டுமல்லாது, மேல் தோலுக்குக் கீழும் சீபம் நிரம்பும்.
எண்ணெய்ப் பசையில், தூசும் அழுக்கும் சுலபமாக ஒட்டிக்கொள்ளும் அல்லவா? எனவே மயிர்ப்பையின் வாய்ப்பகுதி தூசால் மூடப்பட்டு, தோலுக்கு அடியில் சுரக்கும் சீபம் வெளியே வர முடியாமல் சிறைப்படும். அந்த சீபம் எண்ணெயைச் சாப்பிடுவதற்காக, அங்கு நுண்ணுயிரிகள் குடிபுகுந்து சில ரசாயனங்களை வெளிப்படுத்தும். இதன் காரணமாக சிவப்பான, எரிச்சலுடன் கூடிய முகப்பருக்கள் சீழ் பிடிக்கின்றன.
முகப்பரு உள்ளவர்கள், கொழுப்பு உணவைக் குறைத்து, நார்ச்சத்து நிறைந்த உணவை அதிகம் உண்ண வேண்டும். பருக்களைக் கிள்ளக் கூடாது. தண்ணீர் அதிகம் குடிக்கவேண்டும்.