“ரெண்டு கோஷ்டி சண்டை போட்டுக்கிட்டா நாம என்ன செய்யணும்?” என்று கேட்டான் பாலு. “சண்டை போடாதீங்க. சமாதானமா பேசித் தீர்த்துக்குங்கன்னு சொல்லணும்” என்றேன்.
“அதெல்லாம் அவங்க கேக்கமாட்டாங்க. சண்டை போட்டுக்கிட்டேதான் இருப்பாங்கன்னா நாம என்ன செய்யறது?” என்றான் பாலு.
“ரெண்டு தரப்புலயும் சண்டைல அடிபடறவங்களுக்கெல்லாம் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யலாம்.” என்றார் ஞாநி மாமா. “இது விசித்திரமான யோசனையா இருக்கே?” என்றேன். “விசித்திரம்லாம் ஒண்ணும் இல்ல. ஒரு யுத்தம் நடக்கறப்ப, செஞ்சிலுவைச் சங்கம் அதைத்தானே செய்யுது” என்றார் மாமா.
“ஆமா ! யாருக்கு இந்த யோசனை முதல்ல தோணிச்சு?” என்றேன்.
“ஸ்விட்சர்லாந்துல, ஹென்ரி டூனண்ட்டுன்னு ஒரு தொழிலதிபர் இருந்தார். அவர் வியாபார விஷயமா இத்தாலிக்குப் போனபோது, அங்கே பிரெஞ்ச் ராணுவமும், ஆஸ்திரிய ராணுவமும் சண்டை போட்டுக்கிட்டிருந்தாங்க. சண்டை நடந்த சொல்ஃபரினோங்கற ஊரை, ஹென்ரி சுத்திப் பார்த்தார். அவருக்கு ஒரே அதிர்ச்சியா இருந்தது. இரு தரப்புலயும் சுமார் 40 ஆயிரம் சிப்பாய்கள் அடிபட்டு சிகிச்சை இல்லாம கெடந்தாங்க. ஹென்ரி உள்ளூர் மக்களைத் திரட்டி அவங்களுக்குச் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். தன்னோட அனுபவத்தை, ஒரு புத்தகமா எழுதினார். அந்தப் புத்தகத்தை, உலக நாடுகளுடைய பல தலைவர்கள், ராணுவத் தளபதிகளுக்கெல்லாம் அனுப்பினார்.”
“அவங்க அதைப் படிச்சுட்டு என்ன செஞ்சாங்க?” என்றான் பாலு.
“ஜெனீவால, பொது நலனுக்கான சங்கம்னு ஓர் அமைப்பு இருந்தது. அவங்க ஹென்ரியோட யோசனைகளைச் செயல்படுத்த ஒரு கமிட்டி அமைச்சாங்க. அதுல ஹென்ரியும் பங்கேற்றார்.”
“ஹென்ரியோட யோசனை என்ன?”
“யுத்தம் நடக்கறப்பா பாதிக்கப்படற சிப்பாய்கள், பொதுமக்கள் எல்லாருக்கும் உதவியும் சிகிச்சையும் கொடுக்க, ஒரு நடுநிலையான அமைப்பு இருக்கணும்கறதுதான் அவரோட யோசனை. அதுதவிர யுத்தத்துல இரு தரப்பும் என்னென்ன ஒழுங்குகளை, தர்மத்தைக் கடைப்பிடிக்கணும்னு சில விஷயங்களை அவர் சொல்லியிருந்தார்.” என்று மாமா சொன்னதும், “யுத்தமே தர்மம் இல்லையே. யுத்தத்துல என்ன தர்மம்?” என்று சிரித்தேன்.
“யுத்தம் இல்லாத உலகம்தான், நம்ம எல்லாருக்கும் ஆசை. ஆனால் பேச்சுவார்த்தையில தீர்க்கவே முடியாதபோது, யுத்தம் வரத்தானே செய்யும்? மகாபாரதத்துல பாண்டவர்களும் கௌரவர்களும் பேசித் தீர்க்க முடியாதபோதுதானே, யுத்தம் வருது, இல்லையா?” என்றார் மாமா.
“பேச்சையே யுத்தம் மாதிரி நடத்தினா, அது யுத்தத்துலதான் முடியும். பேசற முறைதான் எல்லாத்தையும் தீர்மானிக்கும்” என்றேன். “உண்மைதான். அதனால்தான் ஒவ்வொரு நாட்டுலயும் வெளி விவகாரத்துறையில இருக்கற அதிகாரிகள், ராணுவத்தைவிட ரொம்ப முக்கியமானவங்க. அவங்க இன்னொரு நாட்டோட எப்பிடி பேசறாங்க, எந்த மாதிரி நட்பு வெச்சுக்கறாங்கங்கறதைப் பொறுத்து யுத்தத்தை உருவாக்கவும் செய்யலாம்; யுத்தம் வரவிடாம தடுக்கவும் முடியும். இந்தியாவுல உள்நாட்டு நிர்வாகத்துக்கு ஐ.ஏ.எஸ். எவ்வளவு முக்கியமோ அதேபோல வெளி உறவுக்கு, ஐ.எஃப்.எஸ். முக்கியம்” என்றார் மாமா.
“பாலு, நீ ஐ.எஃப்.எஸ்.தானே ஆகப் போறே?” என்று சிரித்தேன். “லிஸ்ட்டுல அதையும் சேர்த்துக்கலாம். என்னைவிட நீதான் அதுக்குச் சரி. எனக்கு அடிக்கடி கோபம் வரும். நீ கூலா இருப்பே.” என்றான் பாலு.
“சரி. ஹென்ரியோட யோசனை எப்படி செஞ்சிலுவைச் சங்கமா ஆச்சு?” என்றேன். “பொது நலன் சங்கம் அமைத்த கமிட்டியோட முதல் கூட்டம்தான் செஞ்சிலுவைச் சங்கத்தோட ஆரம்பம்.”
“ஏன் சிலுவையை அதுக்குத் தேர்ந்தெடுத்தாங்க?” என்றான் பாலு.
“அப்ப ஸ்விஸ் நாட்டுக் கொடி அதுதான். சிவப்புக் கொடில வெள்ளையில ப்ளஸ் மாதிரி சிலுவை சின்னம். புது சங்கத்துக்கு வெள்ளைக் கொடியில சிவப்பு ப்ளஸ்னு வெச்சுகிட்டாங்க. பின்னால் உலகம் முழுக்க செஞ்சிலுவைச் சங்கம் பெரிசா பரவினப்பறம், இஸ்லாமிய நாடுகள், சிலுவைக்குப் பதிலா பிறையை வெச்சு, அவங்க நாட்டுல சங்கம் பெயரை, 'ரெட் கிரசண்ட்டு'ன்னு ஆக்கிக்கிட்டாங்க.”
“அதெல்லாம் மத அடிப்படை இல்லியா? இப்ப மத அடிப்படை இல்லாத நம்ம நாட்டுல, தேசிய அடையாளத்தை வெச்சுக்கலாமே? நம்ம தேசிய மலர் தாமரைதானே. நம்ம 'செந்தாமரைச் சங்கம்'னு வெச்சுக்கலாமே.” என்றேன். உடனே வாலு, “தாமரை பாரதிய ஜனதா கட்சியோட சின்னம்” என்றது. “தேசியக் கொடியில இருக்கற மூவர்ணத்தை காங்கிரஸ் கட்சியும் வெச்சுக்கிட்டிருக்கு. தேசிய மலரை, பாரதிய ஜனதா வெச்சுக்கிட்டிருக்கு. எல்லாருக்கும் பொதுவானதைக் கட்சிகள் பயன்படுத்த, தேர்தல் ஆணையம் அனுமதிச்சதுதான் தப்பு. செந்தாமரைச் சங்கம் நல்ல ஐடியாதான்.” என்றார் மாமா.
“செஞ்சிலுவைச் சங்க ஐடியாவை ஹென்ரி சொன்னப்ப, அவருக்கு என்ன வயசு?” என்று கேட்டேன். “32 வயசுதான். ஆனால் அவருக்கும், பொது நலசங்கத் தலைவரா இருந்த மொய்னியர் என்பவருக்கும் கடும் கருத்து வேறுபாடு இருந்தது. அதனால அடுத்தடுத்து ஹென்ரியோட யோசனைகளை எல்லா நாடுகளும் ஏற்று செயல்படுத்தியும்கூட, ஹென்ரியை சங்கத்துல ஓரம் கட்டி வெச்சுட்டாங்க. அவரோட வியாபாரத்துலயும் நிறைய நஷ்டம். அவர் ஏழையாயிட்டாரு. வெவ்வேற ஊர்கள்ல போய் தங்கி, நண்பர்கள் உதவியிலதான் வாழ்க்கையை நடத்தினார். கடைசியா அவரோட 65வது வயசுலதான், அவருக்கான அங்கீகாரம் கெடைச்சுது.” என்றார் மாமா.
“என்ன அங்கீகாரம்?”
“அமைதிக்கான முதல் நோபல் பரிசு ஹென்ரிக்குத்தான் தரப்பட்டது. அவரை ஓரங்கட்டிய மொய்னியருக்கும் நோபல் கொடுக்கணும்னு நான்கு முறை பரிந்துரைச்சாங்க. ஆனா, அவருக்குத் தரப்படவே இல்லை. யுத்தத்தின்போது, இரு தரப்பும் பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் பற்றிய முதல் ஜெனேவா ஒப்பந்தம், ஹென்ரியோட கருத்துகளின் அடிப்படையில்தான் உருவானது. பரிசெல்லாம் கிடைத்தும், ஹென்ரி ஏழையாகத்தான் இறந்தார். கடன்காரர்களுக்குக் கொடுத்தது போக எஞ்சிய தொகையை, ஏழை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை தருவதற்காக, தான் தங்கியிருந்த மருத்துவமனைக்குக் கொடுத்தார்.” என்றார் மாமா.
“யுத்தம்கறது ஒரு நாட்டு வீரர்கள், அவங்க நாட்டு நன்மைக்காக இன்னொரு நாட்டோடு நடத்துவது. அல்லது ஒரு குழு தனக்கு நடந்த அநீதியை எதிர்த்து, இன்னொரு குழுவோடு நடத்துவது. அவங்களுக்குள்ள பகை உணர்ச்சிதானே இருக்கும்? ரெண்டு தரப்புலயும் பாதிக்கப்படுவோருக்கு உதவி செய்யணும்கறது என்ன அடிப்படையிலருந்து வருது? அது எனக்குப் புரியல.” என்றான் பாலு.
“ஒரே அடிப்படைதான். முதன்முதல்ல சொல்ஃபரினோ நகரத்துல பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவி செய்தபோது, யார் எந்த நாட்டு சிப்பாய்னெல்லாம் பார்க்கக்கூடாது. 'எல்லாரும் சகோதரர்கள்' என்ற அடிப்படையிலதான் பார்க்கணும்னு, உதவி செய்ய வந்த பெண்கள் சொன்னாங்க. அதுதான் ஹென்ரியோட அடிப்படையும்.” என்ற மாமா, யுத்தத்துலயும், பேரழிவுகள்லயும் சேவை செய்யப் போறவங்க பின்பற்ற வேண்டிய நான்கு விதிகளை ஹென்ரி உருவாக்கியதாகச் சொன்னார். விதி 1. எங்கே மனித துயரத்தைக் கண்டாலும், அதைப் போக்க உதவவேண்டும். விதி 2: சண்டையிடும் இரு தரப்பில், எந்தத் தரப்பின் பக்கமும் சார்புநிலை எடுக்கக் கூடாது. விதி 3: இனம், வர்க்கம், பால், எந்த வேறுபாடும் பார்க்காமல், யாருக்கு எந்த உதவி தேவைப்படுகிறதோ அதை அளிக்க வேண்டும். விதி 4: உதவி பெறுபவர்கள், நன்கொடை அளிப்பவர்கள் ஆகியோருக்காக, எந்த பாரபட்சமும் பார்க்காமல் சுதந்திரமாக செயல்படவேண்டும்.
“இந்த அணுகுமுறை, எல்லாருக்கும் எல்லா விஷயங்களிலும் வந்தால், யுத்தம் தேவைப்படாமலே போய்விடும்” என்றது வாலு. நாங்கள் எல்லாரும் ஆமோதித்தோம்.
வாலுபீடியா 1: உலக செஞ்சிலுவை தினம் ஹென்ரி டூனண்ட்டின் பிறந்த நாளில் கொண்டாடப்படுகிறது -- மே 8. (1828)
வாலுபீடியா 2: ஒவ்வொரு நாடும், ஆயுதக் குறைப்புக்காக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், நாடுகளிடையே ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க, உலக நீதிமன்றம் அமைக்க வேண்டும், உலகப் பொது நூலகம் உருவாக்க வேண்டும் என்பவையெல்லாம், ஹென்ரி முன்வைத்த யோசனைகள்.