பசும் மலைமேடுகளும், உள்ளம் ஈர்க்கும் பள்ளத்தாக்குகளும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் நிறைந்த இடம்தான், வயநாடு. இயற்கை எத்தகைய அற்புதமிக்கது என்பதை உணர விரும்புவோர், வயநாட்டுக்குப் போய்வர வேண்டும். கேரள மாநிலத்தைச் சேர்ந்த வயநாடு மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில், ஊட்டி மற்றும் மைசூரின் நடுவே, கம்பீரமாய் வீற்றிருக்கிறது. மற்ற தென்னிந்திய சுற்றுலா தலங்களைப் போலல்லாமல், தனது தனித்துவத்தையும், புராதன பேரழகையும் தக்கவைத்துள்ளது வயநாடு. இங்குள்ள எடக்கல் குகைகள், குருவா தீவு, மீன்முட்டி அருவி, பூக்கோட் ஏரி, சூச்சிப்பாறை நீர்வீழ்ச்சி, செம்பரா சிகரம் என்று ஒவ்வொன்றுமே, நம் உள்ளத்தை குதூகலிக்கச் செய்பவை. ஊட்டியில் இருந்து 100 கி.மீ. தூரத்தில், வயநாட்டில் அமைந்துள்ள, சுல்தான் பத்தேரி நகர், சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு ஏற்ற இடம். அங்கிருந்து ஜீப் அல்லது பேருந்துகள் மூலம் மற்ற இடங்களுக்குச் செல்லலாம்.
செம்பரா உச்சி
வயநாடு மாவட்டத்தில் உள்ள சிகரங்களிலேயே பெரிய சிகரம் இதுதான். கடல் மட்டத்திலிருந்து 2,100 மீட்டர் உயரத்தில் உள்ள இச்சிகரம், சாகசப் பிரியர்களுக்கு விருப்பமான இடம். இங்கு, மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில், பயணிகளின் மலையேற்றுத்துக்குத் தேவையான குடில்கள், காலணிகள் மற்றும் டிரெக்கிங் உபகரணங்களை வழங்குகிறது. செம்பரா சிகரத்தைப் பார்ப்பவர்கள், தம் இதயங்களை பறிகொடுப்பர் என்பதை உணர்த்தும் விதமாகவோ என்னவோ, செம்பரா உச்சிப்பகுதியில், இதய வடிவ ஏரி ஒன்று உள்ளது.
எடக்கல் குகைகள்
சுல்தான் பத்தேரி நகரிலிருந்து, 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய எடக்கல் குகைகள், கற்காலத்தை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துபவை. குகைகள், மூன்று தொகுதிகளாக அமைந்துள்ளன. குகைச் சுவர்களில் காட்சியளிக்கும் கல்வெட்டுகளும், விலங்கு மற்றும் மனித உருவங்களும், ஆயுத வடிவங்களும், குறியீடுகளும் நம்மில் வரலாற்று ஆவலை தோற்றுவிப்பவை. சிறந்த அனுபவத்தைத் தரும்.
மீன்முட்டி அருவி
கல்பெட்டா நகரிலிருந்து, 29 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது மீன்முட்டி அருவி. 300 அடி உயரத்திலிருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் இந்த அருவி, கேரளாவின் இரண்டாவது பெரிய அருவி. இந்த தண்ணீர் பகுதியில் மீன்கள் நீந்த முடியாத அமைப்பு உள்ளதால், மீன்முட்டி அருவி என்று பெயர் பெற்றது. தன் பேரழகால் பார்ப்பவர் இதயத்தைக் கொள்ளை கொள்ளும் இந்த அருவி, நம்மை கண்சிமிட்ட விடாமல் ரசிக்க வைக்கும்.
சூச்சிப்பாறை நீர்வீழ்ச்சி
கல்பெட்டா நகரிலிருந்து, 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மெப்பாடி நகருக்கு அருகே, சூச்சிப்பாறை அருவி அமைந்திருக்கிறது. இது காவலாளி பாறை என்றும் கூறப்படுகிறது. 2 கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள பசுமையான தேயிலை தோட்டங்களையும், காடுகளையும் நடைப்பயணமாகக் கடந்து, சூச்சிப்பாறை அருவியை அடையும் அனுபவமே தனிதான். இங்கு, மரங்களின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள குடில்களில் இருந்து சூச்சிப்பாறை பகுதியின் எழிலை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ரசிக்கலாம்.
குருவா தீவு
கபினி ஆற்றில் அமைந்துள்ள குருவா ஆற்றுத் தீவுத்திட்டு, பசும் மரங்கள் நிறைந்த அடர்சோலை. பல அரியவகைப் பறவைகளின் வசிப்பிடமான இப்பகுதியில், இயற்கையின் செழிப்பைக் காணலாம். மூங்கில் மிதவைப் படகுகள் மூலமே, இந்தத் தீவுத்திட்டுக்கு பயணிகள் செல்ல முடியும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக ஆண்டின் சில பருவங்களில் மட்டுமே, சுற்றுலா பயணிகள் இந்தத் தீவுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
பேகர் வனவிலங்கு சரணாலயம்
மானந்தவாடி என்ற இடத்தில் இருந்து, சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது பேகர் வனவிலங்கு சரணாலயம். இங்கு பலவகையான அரிய விலங்குகளைப் பார்க்கலாம். இதே போல, மானந்தவாடியில் இருந்து, சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள நாகர்ஹோல் வனவிலங்கு சரணாலயப் பகுதியிலும், பலவகை விலங்குகளின் நடமாட்டத்தைக் காண முடியும்.
பனாசுரா அணை
இந்தியாவின் மிகப்பெரிய அணைகளுள் ஒன்றான பனாசுரா சாகர் அணை, வயநாடு மாவட்டத்தின் தென்பகுதியில் காரலாடு ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கங்களால் சூழப்பட்ட தீவுக்காட்சி, நம்மை வியப்பில் ஆழ்த்தும். இங்கு விரைவு படகு சவாரி வசதி உள்ளதால், அந்தத் தீவு பகுதிகளுக்குச் சென்றுவர முடியும்.
இவைதவிர, ஃபாண்டம் ராக், நீலிமலா, வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்ட இன்னும் சில சுற்றுலா தலங்களும், அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள். வயநாட்டின் அழகை முழுவதுமாக தரிசிக்க, குறைந்தது மூன்று நாட்களேனும் தேவை.