ஸ்மார்ட்போன், இன்று அவசியமான ஒன்றாகிவிட்டது. ஆனால், அது பள்ளி செல்லும் மாணவர்களுக்கு அவசியமானதா? கவனச் சிதறலா?
மதுராந்தகம், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மாணவர்கள் விவாதிக்கிறார்கள்.
கோமல்: செல்போனோட முக்கிய அம்சமே கம்யூனிகேஷன்தான். நாம, எங்கே இருந்தாலும், எந்த நேரத்திலேயும் வேண்டியவர்களோடு தொடர்புகொள்ள முடியும். தவிர, கேமரா இருக்கு. படம் பிடிக்கலாம். காலண்டர் இருக்கு, பிறந்தநாள் வாழ்த்து சொல்லலாம். இப்படி இதன் பயன்பாடு அதிகம். மாணவர்களும் பயன்படுத்தலாம்.
பிரியதர்ஷினி: நீங்க சொல்றது சரிதான். ஆனால் ஸ்டூடண்டுக்கு எதுக்குப் போன்? காலையில ஸ்கூலுக்கு வந்தால், மாலையில வீட்டுக்குப் போகப்போறாங்க. இதுல போன் என்னதுக்குத் தேவை?
அமுதன்: ஏன் வச்சுக்கக்கூடாது? ஸ்கூலில் திடீர்னு சாயங்காலம் வேனோ, பஸ்ஸோ இல்லை. அப்போ, வீட்டுக்கு கால் செஞ்சு பேசலாமே! அதுவும் இல்லை. வீட்டுல வேறு ஏதோ எமர்ஜென்சின்னு வையுங்க. ஸ்கூலுக்குக் கூப்பிட்டு சொல்லி, அவங்க நம்ம க்ளாஸ் ரூமுக்கு தேடி வந்து தகவல் சொல்ற டைம் வேஸ்ட்தானே.. அதுக்குப் பெற்றோர் டைரக்டா நமக்கே பேசிடலாமே. எவ்வளவு ஈசியா இருக்கும்.
சௌமியா: வேன் லேட்டு, பஸ் இல்லை என்பதெல்லாம், நாம ஏன் வீட்டுக்குச் சொல்லணும்? ஸ்கூலில் இருந்தே கூப்பிட்டுச் சொல்லிட மாட்டாங்களா? இன்னிக்கு எல்லாத்துக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்புறவங்க, இதை அனுப்ப மாட்டாங்களா? உங்களுக்கு ஜாலியா மொபைல்போன் வச்சுக்கிட்டு, பந்தாவா வலம் வரணும். அதுக்குத்தானே போன் கேக்கறீங்க? நிறையப் பசங்க வீடியோ பார்க்கவும், கேம்ஸ் விளையாடவும்தானே போன் கேட்கறாங்க?
கோமல்: அன்னப்பறவை கேள்விப்பட்டிருப்பீங்கதானே... அது, தண்ணீரை ஒதுக்கிவிட்டு, பாலை மட்டும் சாப்பிடுமாம். அது மாதிரி, போன் மூலம் ஏற்படும் நன்மையை மட்டும் பாருங்க. அதைப் பயன்படுத்துங்கன்னு சொல்றோம். ஸ்கூலில் கொடுக்கற ஃப்ராஜெட் மாதிரியான விஷயங்களைத் தெரிஞ்சுக்க, போன்ல இருக்கற இணையத்துல தேடலாம். பாடம் சம்பந்தமாகவே தேடவும், கற்றுக் கொள்ளவும் போன் ரொம்ப உபயோகமாக இருக்கும்.
பிரியதர்ஷினி: முன்னாடி காலத்துல, பசங்க வெளியில போய் விளையாடுவாங்க. அம்மாக்கள் வீட்டுக்கு கூப்பிட்டா, யாரும் சீக்கிரம் வரவும் மாட்டாங்க. ஆனா இன்னிக்கு பசங்க மொபைலே கதியாக இருக்காங்க. இன்னிக்கு பெற்றோர் 'வெளியில போய் விளையாடு'ன்னு சொல்ற நிலைதான் இருக்கு. நாலுபேரோட கலந்துபழகி விளையாடுவது, விட்டுக்கொடுத்துப் போவது எல்லாம், மத்தவங்களோடு சேர்ந்து விளையாடும்போதுதான் கிடைக்கும். இதெல்லாம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. அதுமாதிரி, ஃப்ராஜெட் விஷயங்களை, சக மாணவர்களுடன் கலந்துபேசி, உங்க கற்பனையையும் கலந்து செய்யுங்க. யாரோ செஞ்சுவச்சிருக்கறதை அப்படியே காப்பி அடிச்சு செஞ்சுக்கிட்டு இருந்தால்... உங்களோட சுய சிந்தனை என்ன ஆகும்? தனிமையில மொபைலில் விளையாடுவது வாழ்க்கைக்கு எவ்விதத்திலும் உதவாது.
அமுதன்: பொதுவா அப்படிச் சொல்லிட முடியாது. மொபைலில் எத்தனையோ மைண்ட் கேம்ஸ் இருக்கே? அது நம்மோட அறிவு வளர்ச்சிக்கு உதவியாகத்தானே இருக்கு? அப்புறம் பாடம் படிச்சா, டக்குன்னு மனசுல பதியும்.
சௌமியா: பசங்களுக்குப் போன் கொடுக்கலாம். பெற்றோர் கண்காணிப்புல கொடுக்கிறது தப்பு இல்லன்னு நினைக்கிறேன்.
பிரியதர்ஷினி: அது சரி, ஆனா இன்னிக்கு குழந்தைகளுக்கே போன் கொடுத்துத்தான் சோறு ஊட்டுறாங்க. ஃப்ரிகேஜி, எல்கேஜியில குழந்தைகளைச் சேர்க்கும்போது பாருங்க. குழந்தைங்க திக்கித் திக்கித்தான் பேசறாங்க. காரணம் எப்பவும் மொபைல் வச்சு விளையாடறதுதான் காரணம். வளர்ந்த பசங்களோ, தேவையில்லாததைப் பார்க்கிறதுக்கும் வாய்ப்புகள் அதிகம். அதிகமா மொபைல் பயன்படுத்துவதால, கண்ணுல பாதிப்புகள் எல்லாம் வருது. எல்லா நேரத்திலேயும் பெற்றோர் பிள்ளைங்களைக் கண்காணிச்சுக்கிட்டே இருக்க முடியுமா? அதனாலதான் சொல்றோம். போனே கொடுக்கவேணாம்னு!
அமுதன்: போன் கொடுக்கற எந்தப் பெற்றோராவது, கெட்டவிஷயங்களைத் தம் பிள்ளைகள் கத்துகிடட்டும்னு நினைப்பாங்களா? யாரோ சிலர் செய்யற, அந்த மாதிரி காரியங்களால், எப்படி எல்லாப் பசங்களுக்கும் போன் கொடுக்கவேணாம்னு சொல்றீங்க?
கோமல்: இப்ப இருக்கிற குழந்தைகள் ஸ்கூலில் சேர்க்கும் முன்பே, ரைம்ஸ், ஏ.பி.சி.டி. எல்லாம் சொல்றாங்க, எப்படி? பல பெற்றோர் டவுன்லோடு செஞ்சுவச்சு போட்டுப் போட்டு காட்டுறாங்க. பிள்ளைங்க கத்துக்கிடறாங்க. நாம அதை எப்படிப் பயன்படுத்துறோம்னுதான் பார்க்கணுமே தவிர, அதுவேணவே வேணாம்னு சொல்றது சரியான தீர்வாக இருக்காது.
பிரியதர்ஷினி: நாங்க என்ன சொல்றோம்னா... இப்பக் கல்லூரி படிக்கிறவங்களுக்கு மொபைல் தேவையாக இருக்கலாம். ஆனா, 10ம் வகுப்புக்கு கீழ இருக்கிறவங்களுக்குக் கண்டிப்பாக மொபைல் தேவையே இல்லை. அதுக்கு மேல இருக்கிறவங்களுக்கு அவசரத் தேவைக்குப் பேசறமாதிரி, சாதாரணப் பட்டன் வச்ச போன் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கலாம். ஸ்மார்ட் போன் எல்லாம் காலேஜ் போனபிறகு போதும். அதுவரை பேசிக்கொள்ளும் வசதி உடைய சாதாரணப் போன் போதும். இங்கே ஏற்கனவே, ஸ்மார்ட் போன் குடும்பங்களில் உள்ளவங்களைத் தனித்தீவு மாதிரி ஆக்கிவச்சிருக்கு. இதுல பசங்களும் போன்கூடவே இருந்துட்டா, எப்படி மற்றவர்களோடு கலந்து பழக நேரம் கிடைக்கும்? எல்லார்கூடயும் பேசிப்பழகி வளர்வதுதான் இன்னிக்கு தேவை. அதனால பசங்களுக்கு ஸ்மார்ட்போன் தேவையில்லை என்பதுதான் எங்கள் வாதம்.
பிரியதர்ஷினியின் வாதத்தில் இருந்த கடைசிப் பஞ்ச், எதிரணியினரையும் மௌனமாக்கி, கை தட்ட வைத்தது.