கை விளக்கு ஏந்திய காரிகை!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2017
00:00

“கை விளக்கு ஏந்திய காரிகை என்பது யாரைக் குறிக்கும்?” என்று, பாலு எனக்கு நடத்திய க்விஸ் போட்டியில் கேட்டான். “ரொம்ப சுலபம். 'லேடி வித் தி லாம்ப்' என்பதைத்தான் அப்படி தமிழில் சொல்கிறோம். ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேலைத்தான் அப்படி வர்ணிக்கிறார்கள்” என்றேன்.
“ஏன் ஃப்ளாரன்ஸுக்கு அந்தப் பெயர் வந்தது தெரியுமா?” என்று கேட்டார் ஞாநி மாமா. “இரவு படுக்கப் போவதற்கு முன்னால், மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகள் ஒவ்வொருவரும் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்க ஃபிளாரன்ஸ் செல்வார். அப்போது, கையில் ஒரு விளக்கை எடுத்துச் செல்வார். அதனால் அந்தப் பெயர் வந்தது.” என்றேன்.
“ஏன் கை விளக்கு எடுத்துச் செல்லவேண்டும்?” என்றான் பாலு. “ஃபிளாரன்ஸ் காலத்தில் மின்சாரம் கிடையாது. அப்புறம்தான் வந்தது. அதனால்தான் கை விளக்கு” என்றது வாலு.
“ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் இந்தியாவுக்கு வந்தது இல்லை. ஆனால், இந்தியா அவருக்குக் கடன்பட்டிருக்கிறது. ஏன் தெரியுமா?” என்று கேட்டார் மாமா. ஏன் என்றேன்.
இந்தியாவில் பொது சுகாதார நடவடிக்கைகள் வருவதற்கே ஃபிளாரன்ஸ்தான் முக்கிய பங்காற்றியிருக்கிறார். மருத்துவமனையில் நோயாளிகள் இறப்பதற்கு முக்கியக் காரணம், அவர்களுடைய நோய்கூட அல்ல. அங்கே கழிப்பறை, சாக்கடை வசதி, பொது சுகாதாரம் எல்லாம் மோசமாக இருப்பதுதான் என்று, ஃபிளாரன்ஸ் கண்டறிந்து சொல்லியிருக்கிறார். கிரீமிய யுத்தத்தின்போது (1854) இஸ்தான்புல் ராணுவ மருத்துவமனையில் சேவை செய்யச் சென்ற ஃபிளாரன்ஸ், அங்கே சுகாதாரமே இல்லை என்பதைப் பார்த்தார். அதை சரி செய்ய நடவடிக்கைகள் எடுத்தார். கையைக் கழுவிவிட்டுத்தான், அடுத்த வேலையைச் செய்யவேண்டும் என்பதையே, அவர் தான் அங்கே அறிமுகப்படுத்தினார். ஃபிளாரன்ஸ் வந்தபோது, அங்கே சிகிச்சை பெற்று வந்த சிப்பாய்களில் 42 சதவிகிதம் பேர் செத்துப் போவது வழக்கமாக இருந்தது. ஃபிளாரன்ஸ் சுகாதாரத்தை மேம்படுத்தியபின் இது 2 சதவிகிதமாகக் குறைந்தது.
“இந்தியா மீது ஃபிளாரன்ஸ் எப்படி கவனம் செலுத்த வேண்டி வந்தது” என்று மாமாவைக் கேட்டேன். “1857ல் நடந்த கிளர்ச்சிக்குப் பிறகு, இந்தியாவில் இருந்த ஆங்கிலேயப்படையின் நிலை மோசமாக இருந்தது. ஆயிரம் சிப்பாய்களில்
69 பேர், நோயால் இறந்துவிடுவார்கள். யுத்தத்துக்குப் போகாமலே இப்படி நிறையப் பேர் இறக்கும் நிலை இருந்தது. இதை சரி செய்ய, ஒரு விசாரணைக் குழு அமைத்தார்கள். அந்தக் குழு சார்பில், ஃபிளாரன்ஸ் இந்தியா முழுவதும் இருக்கும் ராணுவ முகாம்கள், ராணுவ மருத்துவமனைகளின் நிலைபற்றி தகவல்களை திரட்டினார். அந்த தகவல்கள் அதிர்ச்சியாக இருந்தன” என்றார் மாமா.
முகாம்களில் நல்ல குடி நீர் கிடையாதாம். சாக்கடை, கழிவறைகள் கிடையாது. ஒவ்வொரு ராணுவ முகாமும் நோய்க் கிடங்காக இருந்தது என்றால், அதை அடுத்திருந்த நகரத்தில், பொது மக்களின் நிலை இன்னும் மோசமாக இருந்தது. அங்கேயும் குடி நீர், சாக்கடை கழிவறைகள் இல்லை.
இதையெல்லாம் ஆராய்ந்த ஃபிளாரன்ஸ், பொது சுகாதாரத்தை சரிப்படுத்தினால்தான், தொற்று நோய்களைக் குறைக்க முடியும் என்று சொன்னார். அவருடைய பல யோசனைகள் ஏற்கப்பட்டன. அடுத்தடுத்து, ஆறு வைஸ்ராய்களுடன் தொடர்ந்து ஃபிளாரன்ஸ் தொடர்பில் இருந்தார். பொது சுகாதாரத்தை மேம்படுத்த, யோசனைகள் சொல்லிக் கொண்டே இருந்தார். அப்போதே அவருக்கு 70 வயதாகிவிட்டது.
“ராணுவத்துக்குப் போனால் நல்ல சாப்பாடு கிடைக்கும். உடற்பயிற்சி செய்யவேண்டுமே தவிர, தினசரி பெரிதாக வேலை இருக்காது. யுத்தம் எப்போதாவதுதான் வரும். வசதியான வேலை என்றுதான் நினைத்தேன். வேலைக்கு வரும் சிப்பாய், யுத்தம் செய்யாமல் நோயிலேயே செத்துவிடுவான் என்றால் யார் வேலைக்கு வருவார்கள்?” என்று கேட்டான் பாலு.
“நீ சொல்வது போல ராணுவத்தில் வேலைச் சூழ்நிலை மேம்பட்டிருப்பது இப்போது. முதல், இரண்டாம் உலக யுத்த சமயங்களில் அப்படி இல்லை. குடிமக்களை பல நாடுகள் கட்டாய ராணுவ சேவைக்கு அனுப்பினார்கள். எழுபதுகளில் அமெரிக்கா, வியட்நாமில் யுத்தம் நடத்தியபோது கூட, ராணுவ சேவைக்கு இளைஞர்களைக் கட்டாயப்படுத்தித்தான் அனுப்பினார்கள். அதை எதிர்த்த இளைஞர்கள்தான், மிலிட்டரி கட் செய்ய மறுத்து, நீண்ட முடி வளர்த்து எதிர்ப்பைக் காட்டினார்கள்.” என்றார் மாமா.
“அரசாங்கம் ஒருத்தரை கட்டாயமாக ராணுவ சேவைக்கு வரவேண்டும் என்று சொன்னால், அதை மறுக்க முடியுமா?” என்று கேட்டேன்.
“மறுப்பதற்கான உரிமை குடி மக்களுக்கு இருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமை அமைப்பு சொல்லியிருக்கிறது. அதற்காக ஒவ்வோராண்டும் மே 15ஐ 'கான்சென்ஷியஸ் அப்ஜெக்டர் தினம்' அதாவது மனசாட்சியின் அடிப்படையில் எதிர்ப்பவர் தினமாக அனுசரிக்கிறது” என்றார் மாமா.
“இது நம்ம காந்தி சொன்னதுதானே. மனசாட்சிப்படி ஒரு விஷயத்துடன் உடன்பாடு இல்லையென்றால், ஒத்துழையாமை மூலம் எதிர்ப்பைக் காட்டலாம் என்று அவர்தானே சொன்னார்.” என்றேன்.
“அப்படி எதிர்ப்பைக் காட்டுபவர்களுக்கு, சட்டப்படி உரிய பாதுகாப்பும் தேவை. அந்தப் பாதுகாப்பு பல நாடுகளில் இல்லை”என்றார் மாமா. “எந்த எதிர்ப்பும் காட்டாமல், எல்லாருக்கும் சேவை செய்யும் நர்சுகளுக்கே இன்று உலகத்தில் எங்கேயும் பாதுகாப்பு இல்லை. யுத்தம் நடக்கும் இடத்தில் மருத்துவமனையில் சிக்கிக் கொண்ட மலையாளி நர்சுகளைப் பற்றி ஓர் அருமையான மலையாளப் படம் பார்த்தேன்.” என்றான் பாலு.
“ஆமாம். ஏன் பெரும்பாலான நர்சுகள் மலையாளிகளாகவே இருக்கிறார்கள்?” என்று கேட்டேன். “அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் காலத்திலிருந்து நர்சாக இருப்பது கடவுளுக்கு செய்யும் சேவை என்ற பார்வையை கிறித்துவ மதம் பின்பற்றியது ஒரு காரணம். கேரளாவில்தான், இந்தியாவிலேயே அதிகமாக வேலையில்லா பிரச்னை இருக்கிறது என்பது இன்னொரு காரணம். வேலையின்மை இந்திய சராசரி 2.3 சதவிகிதம். கேரளத்திலோ 7.4 சதவிகிதம். வேறு எந்தப் படிப்பு படித்தாலும், வேலை கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை. ஆனால், நர்சிங் படித்தால் வேலை நிச்சயம். இப்படிப் பல காரணங்கள் இருக்கின்றன.” என்றார் மாமா.
“நர்சிங் படிக்கப் போகிறாயா பாலு?” என்று சிரித்தேன். “அதையும் என் பட்டியலில் சேர்த்துக் கொள்கிறேன்.” என்றான் பாலு. எல்லாரும் சிரித்தோம்.

வாலுபீடியா 1: ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம்: மே 12. உலக நர்சுகள் தினம். நர்ஸ் வேலைக்கு வருவோர் இப்போதும் எடுக்கும் உறுதிமொழி ஃபிளாரன்ஸ் எழுதியதாகும்.

வாலுபீடியா 2: புள்ளி விபரங்களை விளக்குவதற்கு படம் வரைந்து, ஒரு வட்டத்துக்குள் எதற்கு எவ்வளவு சதவிகிதம் என்று பிரித்துக் காட்டி விளக்கும் முறையை, ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல்தான் அறிமுகப்படுத்தினார். இந்த முறை, ஆங்கிலத்தில் பை டிராயிங் (pie drawing) எனப்படுகிறது. ஃபிளாரன்ஸ் 200 புத்தகங்கள், சிறு நூல்கள், கையேடுகளை எழுதியிருக்கிறார்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X