மணல் ஒட்டாத கடற்கரை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2017
00:00

சுற்றுலா தலங்களில், மலைகளுக்கும் ஆறுகளுக்கும் சிறப்பான இடம் தரப்படுவதைப்போன்றே, கடலுக்கும் கடற்கரைக்கும் தரப்படுவதுண்டு. எல்லா நில மக்களும் கடலைப் பார்த்திருக்க மாட்டார்கள். கடற்கரையோரத்தில் வாழ்கின்றவர்களுக்குக் கடல் என்பது அன்றாடம் காணும் காட்சிதான். அவர்களுக்குக் கடற்கரை என்பது அடிக்கடி சென்று பார்க்கின்ற இடம்தான். ஆனால், உள்மாவட்டப் பகுதிகளில் இருப்பவர்களுக்கு, கடலும் கடற்கரையும் காட்சிப் பொருள்தான். கடலோர மாவட்டத்தில் இருப்பவர்களைப்போல அடிக்கடி கடலைக்காணும் வாய்ப்பு பிறருக்கு வாய்க்காது.

அப்படிப்பட்டவர்கள் தமது விடுமுறைச் சுற்றுலாவை, ஒரு கடலோரப் பகுதிக்குச் செல்லுமாறு அமைத்துக்கொள்ளலாம். தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளை எடுத்துக்கொண்டால், சென்னையின் மெரீனா கடற்கரைதான் உலகப்புகழ்பெற்றது. அமெரிக்காவின் மியாமி கடற்கரைக்கு நிகரான பொன்மணல் குவிந்த நீள்நெடுங்கடற்கரை மெரீனா.
மெரீனாவிலிருந்து, மாமல்லபுரம், புதுச்சேரி, திருச்செந்தூர் வழியாக, கன்னியாகுமரி வரை நமக்குக் கடற்கரைகள் உள்ளன. ஆனால், மெரீனா பெற்ற உலகப் புகழை, தமிழகத்தின் இதர கடற்கரைகள் பெறவில்லை. தமிழகத்துக்கு வெளியே உள்ள கடற்கரைகளில் கோவாதான் புகழ்பெற்றது. நான்கைந்து நாள் பயணத்திட்டத்தோடுதான், கோவா செல்ல முடியும். இவற்றைத் தவிர்த்து வேறு அழகிய கடற்கரைகளே இல்லையா என்று தேடினால், இருக்கிறது.
கேரளத்தில் உள்ள இரண்டு கடற்கரைகளில் ஒன்று, திருவனந்தபுரத்தில் உள்ள கோவளம் கடற்கரை. இதனை எல்லாரும் அறிந்திருப்போம். இன்னொன்று கண்ணனூர் மாவட்டத்தில் உள்ள முழப்பிளங்காடு கடற்கரை (Muzhappilangad Beach).
உலகப் புகழ்பெற்ற இந்தக் கடற்கரை, இயற்கை எழில்சூழ்ந்த கேரளத்தின் வடக்குப் பகுதியில் இருக்கிறது. உலகெங்கிலுமிருந்து இக்கடற்கரையைக் காண, சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். ஆனால், இந்தியாவுக்குள் இக்கடற்கரையை நாம் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை.
முழப்பிளங்காடு செல்வதற்கு, தமிழகத்தின் மேற்கு மாநகரான கோயம்புத்தூர் வந்து, பாலக்காடு வழியாக கோழிக்கோடு செல்ல வேண்டும். கேரள நகரங்களில் பெருவளர்ச்சி பெற்றுள்ள மாநகரங்களில் ஒன்று கோழிக்கோடு. கோழிக்கோட்டில்தான், ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடித்த வாஸ்கோடகாமா தம் முதல் காலடியை வைத்தார். கோழிக்கோட்டிலும் சிறிய கடற்கரை ஒன்றுண்டு. வேறு சில வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்களும் உள்ளன.
கோயம்புத்தூரிலிருந்து முழப்பிளங்காட்டுக்கு 255 கிலோமீட்டர்கள். கோயம்புத்தூரிலிருந்து பாலக்காடு சென்று, அங்கிருந்து பெரிந்தல்மன்னா, மலப்புரம் வழியாக கோழிக்கோடு செல்ல வேண்டும். கோழிக்கோட்டிலிருந்து கண்ணனூர் செல்லும் நெடுஞ்சாலையில், தலைச்சேரிக்கு அருகே முழப்பிளங்காடு இருக்கிறது.
முழப்பிளங்காடு கடற்கரை, சுமார் ஐந்தரைக் கிலோமீட்டர் நீளத்திற்கு வடக்கு தெற்காக நீண்டிருக்கிறது. கடற்கரை மொத்தத்திற்கும் கற்களைக்கொட்டிக் வேலி அமைத்திருக்கிறார்கள். மேற்கே கடல், கிழக்கே தென்னந்தோப்பு, நடுவில் சாம்பல் மணற்பரப்பு என்று அந்த இடமே பேரழகாக இருக்கும்.
உள்நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் ஒரே வழிதான். வண்டிக்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்கிறார்கள். பிற கடற்கரைகளில் கடல்மணலில் கால் வைத்தால் சற்றே மணல் நெகிழ்ந்து புதையுமில்லையா, முழப்பிளங்காட்டுக் கடற்கரையில் மணல் புதையாது. வெல்வெட் விரிப்பில் கால் வைத்ததுபோல் இருக்கும். காலில் மணலும் ஒட்டாது. கடற்கரை மொத்தமும் கழுவிவிட்டதுபோன்ற ஈரத்தன்மையோடு இருக்கும்.
முழப்பிளங்காடு கடற்கரையின் உலகப் புகழ்பெற்ற தன்மை என்ன தெரியுமா? வண்டியோட்டு கடற்கரை (Drive-in Beach) என்று உலகில் சிற்சிலவே இருக்கின்றன. இந்தியாவின் மிகச்சிறந்த வண்டியோட்டு கடற்கரை, முழப்பிளங்காடு கடற்கரைதான். “உலகின் மிகச்சிறந்த வண்டியோட்டு கடற்கரைகள்” என்று, பிபிசி ஒரு பட்டியல் வெளியிட்டிருக்கிறது. அதில் முழப்பிளங்காடு கடற்கரை ஐந்தாமிடம் பெற்றிருக்கிறது.
அதென்ன வண்டியோட்டு கடற்கரை? நம்மூர்க் கடற்கரைகளில் நாம் நடந்து மட்டும்தான் செல்ல முடியும். வண்டியை சாலையோரத்திலேயே நிறுத்திக் கொள்ளவேண்டும். ஆனால், முழப்பிளங்காடு கடற்கரையில் வண்டியை ஓட்டலாம். ஏனென்றால் வண்டிச் சக்கரங்கள் அங்கே மணலில் புதைவதில்லை. கடல் அலைகள் நம் வண்டியின்மீது வந்து மோதும். ஐந்தரைக் கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையில், கடலைத் தீண்டியபடி வண்டியோட்டுவது சிலிர்ப்பான இன்பம். வண்டியோட்டிப் பழகுபவர்களுக்கு அந்தக் கடற்கரை சொர்க்கபூமி. அதற்குக் காரணம் முழப்பிளங்காடு பகுதியில் கடல் ஆழம் குறைவானது. கடலுக்குள் வெகுதூரம் நடந்து சென்றாலும் முழங்கால் அளவுக்குத்தான் தண்ணீர்
இருக்கும். கடலுக்குள்ளேயே வண்டியை விட்டும் திருப்பலாம். நினைக்கும்போதே இனிக்கிறதா?
ஆழமில்லாத கடல் என்பதால், குழந்தைகள் முதல் யார் வேண்டுமானாலும், அக்கடலில் அச்சமின்றிக் குளிக்கலாம். அலைவீச்சு கடுமையாக இருக்காது. அலை இழுத்துக்கொள்ளுமோ என்ற பயம் வேண்டியதில்லை. குளக்கரைபோல் கடலலை இருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். கடலுக்குள் கண்ணுக்கெட்டிய தூரம்வரை நடந்து செல்லலாம்.
முழப்பிளங்காட்டுக் கடற்கரையின் தெற்கே, கடலுக்குள் பச்சைத்தீவு என்று ஒன்று இருக்கிறது. அலையில்லாத ஆழமான கடல் என்பதால், அந்தத் தீவுக்கு நடந்தே செல்லலாம். ஏராளமான நீர்ப்பறவைகள் அந்தத் தீவில் அமர்ந்திருக்கின்றன. மிகச்சிறிய தீவுதான். தீவைச் சுற்றிப்பார்த்துவிட்டுத் திரும்புவது தனி இன்பம்.
அந்தி நேரத்தில், முழப்பிளங்காட்டுக் கடற்கரையின் அரபிக் கடலில், சூரியன் மறைவதைக் (Sunset) காண்பது, கண்கொள்ளாக் காட்சி. ஒட்டுமொத்தக் கடற்பரப்பும் கடற்கரையும் செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
மாகி, தலைச்சேரி ஆகிய ஊர்களிலுள்ள விடுதிகளில் தங்கிக்கொள்ளலாம். இரண்டு நாட்கள் திட்டமிட்டுச் செல்லவேண்டும்.
- மகுடேசுவரன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X