நான், மூன்றாம் வகுப்பு படித்த போது, நடந்த நிகழ்வு... என் வகுப்பில், 30 மாணவர்கள் இருந்தனர். ஆறு மாணவர் வீதம், தனித்தனி, குழுவாக பிரித்தார் வகுப்பாசிரியை.
அதில், ஆறுமுகம் எனும் மாணவன், ஒவ்வொரு வகுப்பிலும், இரண்டு ஆண்டுகள் இருந்துவிட்டு, என் வகுப்பில் படித்ததுடன், என் குழுவில் இருந்தான். அவன் என்னை விட உயரமாக இருப்பதால், எப்போதுமே, 'குள்ளவாத்து... குள்ளவாத்து...' என கிண்டலடிப்பான்.
ஒவ்வொரு குழுவும், வார இறுதியில், 'ஆடல், பாடல், சிறுகதை, நாடகம், குறள் ஒப்பித்தல், வினாடி வினா' என, ஏதாவது ஒன்றை கண்டிப்பாக, செய்ய வேண்டும். சிறப்பாக செய்யும் குழுவிற்கு, பரிசு வழங்குவார் வகுப்பாசிரியை.
எங்கள் குழு, கதையை தேர்ந்தெடுத்தது. கதையில், நானும், ஆறுமுகமும் சண்டையிடாமல், தத்ரூபமாக நடித்தோம்; பரிசும் கிட்டியது.
அதன்பின், 'தங்கச்சி! என்னை மன்னிச்சிடு... எனக்கு தங்கச்சி இல்லை; உனக்கு அண்ணன் இல்லை. நாம சண்டை போடாம, அண்ணன் தங்கச்சியாகவே இருப்போம்... இனிமே நான், யாரையும் திட்டமாட்டேன்; அடிக்கமாட்டேன்... உன்னையும் கிண்டலடிக்க மாட்டேன்... நீ எனக்கு கணக்கு சொல்லிக்கொடு...' என்றான் ஆறுமுகம்.
அந்த உறவு இன்றும் நீடிக்கிறது. அவன், பெற்றோர் மட்டுமல்ல, மாமியார் வீட்டினரும், குடும்பத்தில் ஒருவராகவே என்னை வைத்திருக்கின்றனர். அதுமட்டுமல்ல, பொங்கல் மற்றும் தீபாவளி சீருக்கென பணமும் கொடுப்பான் ஆறுமுகம்.
- சு.நவீனாதாமு, திருவள்ளூர்.