நான், தனியார் பள்ளியில், ஆசிரியையாக பணிபுரிந்தேன். தினமும், மதிய உணவின் போது, மாணவ, மாணவியர் ஒழுங்காக சாப்பிடுகின்றனரா என கவனித்து விட்டு, அதன் பின் தான், சாப்பிடுவேன். அப்போது, ஒரு மாணவன் மட்டும், சாப்பிடாமல், தனியாக உட்கார்ந்திருந்தான்.
'ஏன் சாப்பிடாமல், உட்கார்ந்திருக்கிறாய்...' என்று கேட்டேன். 'அவன் எப்போதும், தேங்காய் சாதம் தான் எடுத்து வருவான்' என்று சகமாணவர்களில் ஒருவன் கூறினான். இதை கேட்டதும் அனைவரும் சிரித்தனர். அவனோ, வெட்கி தலை குனிந்தான்.
உடனே, என் சாப்பாட்டை அந்த மாணவனுக்கு கொடுத்து, சாப்பிட கூறினேன்; மகிழ்ச்சியாக சாப்பிட்டான். அடுத்த நாள், பாடம் நடத்தி கொண்டிருக்கும் போது, அதே மாணவன் வகுப்பிற்கு தாமதமாக வந்தான்.
உடனே ஒருவன், 'தேங்காய் சாதம் வந்துட்டான் டா' என்று கூறினான். அனைவரும், 'கொல்' என்று சிரித்துவிட்டனர்; அவன் முகம் மாறியது.
'ஒருவரை நாம் கிண்டலடித்தால், அது, அவர்கள் மனதை மிகவும் பாதிக்கும். அதுமட்டுமல்ல, தேங்காய் சாதம் வயிற்று புண்னை ஆற்றக்கூடியது; உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது...' என்று, அதன் நன்மைகளை பற்றி விளக்கமாக கூறி, கிண்டலடித்த மாணவனை கண்டித்தேன்.
அதன் பின், மாணவர்கள் அனைவரும், 'இனி அப்படி கூற மாட்டோம்' என்றனர்.
- ஐ.புனிதா, கடலூர்.