சிவகாசியிலுள்ள பள்ளியில், 10ம் வகுப்பு படித்த போது, நடந்த நிகழ்வு... என் வகுப்பிலுள்ள அனைவருமே, இந்து மாணவியர்; நான் மட்டும் முஸ்லீம். வகுப்பில் அனைவருக்கும் என்னை பிடிக்கும்; நானும் அவர்களுடன் அன்பாக பழகுவேன்.
ஆனால், ஆரம்பத்திலிருந்து, அறிவியல் ஆசிரியர் பாண்டியனுக்கு, என்னை கொஞ்சம் கூட பிடிக்காது. வெறுப்பை காட்டுவார். 10ம் வகுப்பு இறுதியில், செய்முறை தேர்வில், மதிப்பெண் வழங்க, வேறொரு பள்ளி ஆசிரியையான, கவுசல்யா தேவி வந்தார்.
'உன் பெயர் என்ன...' என்று கேட்டார். 'அஜிதா பானு' என்றேன். 'நீ முஸ்லீமா... உங்க முஸ்லீம் கூட்டத்தால தான் தீவிரவாதமே வளருது; முதல்ல உங்கள ஒழிக்கணும்' என்றார். அவர் சொன்னதுமே நான் அழுதுவிட்டேன்.
வகுப்பில் நன்றாக படிப்பேன். ஆனால், அந்த டீச்சர், என்னுடைய எதிர்காலத்தை கூட நினைக்காமல், மிகவும் குறைவான மதிப்பெண்ணை வழங்கினார்.
இன்று, விருதுநகர் மாவட்டத்தில், ஹாஜி சிக்கந்தர் ஹவ்வாபீவி நடுநிலைப் பள்ளியில், ஆசிரியையாக பணியாற்றுகிறேன். மாணவர்களிடம், 'ஜாதி, மதம், பாகுபாடு இன்றி, இந்தியராகிய நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்' என்று ஒவ்வொரு வகுப்பிலும், பாடம் துவங்கும் முன் கூறிவிட்டு தான் பாடத்தை கற்பிப்பேன்.
- ஜா.அஜிதாபானு, விருதுநகர்