முன்னொரு காலத்தில், மர்மபுரி என்ற நாட்டை, ஜெயந்திரா என்ற அரசர், நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தார். அவருக்கு, விக்ரமா என்ற மகன் இருந்தான். அவன் பொறுப்பில்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தான்.
அரசரும், அவனை திருத்த பலவழிகளில் முயற்சி செய்து பார்த்தார்; ஆனால் அவன் திருந்தவில்லை.
'நமக்கோ வயதாகி விட்டது. இனி, விக்ரமாவிடம் எப்படி நாட்டை ஒப்படைப்பது!' என்ற கவலை, அரசரை வாட்டி வதைத்து கொண்டிருந்தது.
ஒருநாள்-
அரண்மனை தோட்டத்தில், மிகவும் கவலையோடு இருந்தார் அரசர் ஜெயந்திரா.
அரசரின் அருகே ஆறுதலாக வந்து நின்ற மந்திரி மதிவாணர், ''அரசே வணக்கம்! இளவரசரை நினைத்து தாங்கள் தினமும் கவலைப்படுகிறீர்கள். விக்ரமாவை திருத்தி, ஆட்சி பொறுப்பில் அமர்த்த, என்னிடம் அருமையான திட்டம் ஒன்று இருக்கிறது...'' என்று கூறினார்.
''மதிவாணரே! எத்தனை திட்டங்களையோ போட்டு பார்த்து விட்டேன்; ஆனால், அவன் திருந்தவில்லை...'' என்று கவலையோடு கூறினார்.
''அரசே! இந்த திட்டம் என்னவென்று கேளுங்கள்... அதன் பின், இதன் மீது உங்களுக்கு நம்பிக்கை வரும்...'' என்று கூறினார் மதிவாணர்.
''நம்பிக்கை வரும்படியாக அப்படி என்ன திட்டத்தை, நீர் வைத்திருக்கிறீர்...'' என்றார் அரசர் ஜெயந்திரா.
''அரசே! தலைநகரில், நிகில் என்ற இளைஞன் இருக்கிறான்; அவன் மிகவும் அறிவாளி. எந்த தீயவரையும் நல்லவராக்கி விடுவான். அவனிடம் நம் இளவரசரை திருத்தும் பொறுப்பை கொடுத்தால், ஒரே நாளில் திருத்தி விடுவான். இளவரசரின் தீயப் பழக்கங்களையும் மாற்றி விடுவான்...'' என்றார் மதிவாணர்.
''அப்படியானால், அந்த இளைஞனை நாளைக்கே அரண்மனைக்கு வர சொல்லுங்கள். அவன், இளவரசரை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள்...'' என்றார் அரசர்.
''அப்படியே செய்கிறேன் அரசே! நாளை முதல், இளவரசரின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுவதை, நீங்களே பார்க்க தான் போகிறீர்கள்,'' என்றார்.
''மதிவாணரே! அந்த இளைஞனின் முயற்சியால், விக்ரமா திருந்தினால், அதை விட பெரும் பாக்கியம் எனக்கு வேறொன்றுமில்லை...'' என்றார்.
''அரசே! உங்களின் எண்ணம் போன்று எல்லாமே இனிதாக நடக்கும்; கவலையை விடுங்கள்...'' என்று கூறிய மந்திரி, அரண்மனை காவலர்கள் இருவரை அனுப்பி, தலைநகரில் வசித்து வந்த நிகிலை அழைத்து வர ஏற்பாடு செய்தார்.
அரண்மனைக்கு வந்த நிகிலை, தன் அறைக்கு அழைத்து சென்று, இளவரசரை பற்றி விளக்கமாக கூறினார் மந்திரி மதிவாணர்.
''இளவரசர் விக்ரமாவை திருத்தி, ஆட்சிப் பொறுப்பில் அமர வைப்பது என் கடமை. இனிமேல், எல்லாவற்றையும் நானே பார்த்து கொள்கிறேன். நீங்கள் கவலை பட வேண்டாம்...'' என்றான் நிகில்.
இதை கேட்ட மதிவாணர், மகிழ்ந்து, இளவரசரின் அறைக்கு, நிகிலை அழைத்து சென்றார்.
''வாருங்கள் மந்திரியாரே! உங்களோடு வந்திருக்கும் இவர் யார்?'' என்று கேட்டான் விக்ரமா.
''இளவரசே வணக்கம்! இந்த இளைஞனின் பெயர் நிகில். இவன் எனக்கு நெருங்கிய உறவு தான். தங்களை பார்க்க வேண்டும் என்று அடிக்கடி என்னிடம் கேட்பான். அதனால் தான் அழைத்து வந்தேன்...'' என்றார் மந்திரி.
விக்ரமா, பழரசம் பருகி கொண்டிருப்பதை கவனித்த நிகில், சற்று முன் வந்து நின்றான்.
''இளவரசே வணக்கம்! பழரசம் அருந்துபவர்கள், பல கோடி ஆண்டுகள் வாழ்வர் என்று, 'சபடநிசி' என்ற நுாலில் படித்தேன். தங்களுக்கு பழரசம் அருந்தும் பழக்கம் இருப்பதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன்...'' என்றான் நிகில்.
''சரியாக சொன்னாய் நிகில்! ஆனால், அரசருக்கும், மந்திரிக்கும் பழரசத்தை பற்றி எதுவும் தெரியவில்லை. அவர்கள் இதை குடிக்க வேண்டாம் என்று என்னை அடிக்கடி வற்புறுத்துகின்றனர். என் குணநலன்களை ஆதரிப்பவன் நீ தான்! உன்னை என் நண்பனாக ஏற்கிறேன்...'' என்றான் விக்ரமா.
அதையே எதிர்பார்த்த நிகிலும், மந்திரியும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
''சரி நிகில்! இளவரசரே, உன்னை, நண்பன் என்று அறிவித்து விட்டார். இனிமேல் எனக்கு, இங்கு எந்த வேலையும் இல்லை; நான் வருகிறேன்...'' என்று கூறி சென்றார் மந்திரி.
மறுநாள்-
விக்ரமாவும், நிகிலும் காட்டில் வேட்டையாட சென்றனர்.
''நிகில்! எனக்கு வேட்டையாடுவதில் அதிக விருப்பம் உண்டு. கண்ணில்பட்ட பறவைகள், விலங்குகள், எல்லாவற்றையும் அம்பெய்து கொல்வேன். காட்டிற்கு வந்தால், ஒருநாள் கூட வேட்டை யாடாமல் திரும்பியது இல்லை. என்னை கண்டால் பறவைகளும், விலங்குகளும் பயந்து ஓட்டமெடுத்து விடும்...'' என்றான் விக்ரமா.
நிகில் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.
''இளவரசே! நீண்ட தூர பயணத்திற்கு பின், காட்டிற்கு வந்திருக்கிறோம்! எனக்கு இது புது அனுபவம்; உடல் சோர்வாகயிருக்கிறது. அதோ, ஒரு பெரிய மரம் தெரிகிறது. நிழல் படர்ந்த அந்த மரத்தடியில், சற்று அமர்ந்து இளைப்பாறி விட்டு, அதன் பின் வேட்டையாடலாமே...'' என்றான் நிகில்.
''நல்லது நண்பனே! உன்னுடைய விருப்பம் அதுவானால், அப்படியே ஆகட்டும்...'' என்றான் விக்ரமா.
இருவரும் அந்த மரத்தடியில் அமர்ந்தனர். அந்த மரத்தின் நிழல், அவர்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த இடம் முழுக்க நல்ல காற்றோட்டமாகவும் இருந்தது.
''நண்பனே! இந்த இடத்தில் அமர்ந்த பின் தான், இதன் அருமை எனக்கு தெரிகிறது. நல்ல காற்றோட்டமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கிறது. அரண்மனையில் இருந்தால் கூட இப்படியொரு சுகம் கிடைத்திருக்காது...'' என்றான் விக்ரமா.
''இளவரசே! சகல நன்மைகளையும், காலம் காலமாக தரும் இயற்கையை, நாம் தான் சரியாக பயன்படுத்தாமல் இருக்கிறோம்...'' என்றான் நிகில்.
''உண்மை தான்! நான் கூட இந்த பகுதிக்கு எத்தனையோ முறை வேட்டைக்கு வந்திருக்கிறேன். ஒருநாள் கூட இந்த மரத்தடியில் அமர்ந்ததில்லை. இப்போது தான், இதை பற்றி உணர்கிறேன்,'' என்றான் விக்ரமா.
''இளவரசே! இந்த மரத்தை, மேலிருந்து கீழ் வரை நன்றாக உற்று பார்த்து, உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை என்னிடம் கூறுங்கள்,'' என்றான் நிகில்.
அந்த மரத்தை கூர்ந்து கவனித்தான் விக்ரமா.
- தொடரும்...