ஒரு சமயம், சாக்ரடீஸ் ஊருக்கு வெளியே ஒரு புல்வெளியில் அமர்ந்திருந்தார். வெளியூர் ஆசாமி ஒருவன், ''உங்கள் ஊருக்கு வந்து நான் நிரந்தரமாக குடியேற போகிறேன். இந்த ஊர் மக்கள் எப்படிப்பட்டவர்கள்,'' என்று கேட்டான்.
''நீ இப்போது வசிக்கும் ஊர் மக்களின் குணநலன்கள் எப்படி...'' என்று சாக்ரடீஸ் கேட்டார்.
''நல்லவர் எவரும் எங்கள் ஊரில் இல்லை. எல்லாரும் பொய்யர்கள்; திருடர்கள்; ஏமாற்றுப் பேர்வழிகள். அதனால் தான் நான் அங்கிருந்து வெளியேற நினைக்கிறேன்,'' என்றான்.
''இங்கேயும் அப்படித்தான். உன் நிலையில் நான் இருந்தால், வெளியேற மாட்டேன். இருந்த இடத்தில் இருந்தபடியே வேடிக்கை பார்ப்பேன்,'' என்றார் சாக்ரடீஸ்.
அதன் பின், இன்னொரு இளைஞன் சாக்ரடீசை சந்தித்து, ''உங்கள் ஏதென்ஸ் நகர மக்கள் எப்படிப்பட்டவர்கள்,'' என்று கேட்டான்.
அப்போது சாக்ரடீஸ், ''உன் நகர மக்கள் பற்றி முதலில் சொல்,'' என்றார்.
''எங்கள் ஊர் ஜனங்கள் மிகவும் நல்லவர்கள்; பிறருக்கு உதவுபவர்கள்; உண்மையானவர்கள்; கடும் உழைப்பாளர்கள். நான் உலகின் பிற பகுதிகளை பற்றி தெரிவதற்காக புறப்பட்டேன்,'' என்றார்.
''உன் ஊரார் போலவே இந்த ஊர் மக்களும் அன்பும், பண்பும் மிக்கவர்கள். நீ வந்து அவர்களோடு பழகலாம்,'' என்றார் சாக்ரடீஸ்.
அவரவர் மனநிலையை போல தான் வாழ்க்கையும் இருக்கும். நீ நல்லவனாக இருந்தால், எல்லாரையும் நல்லவர்களாகவே நினைப்பாய்; கெட்டவனாக இருந்தால், எல்லாரையும் கெட்டவர்களாக தான் நினைப்பாய் என்பது தான் சாக்ரடீஸ் சொல்ல வரும் தத்துவம்.