வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
எதற்கெடுத்தாலும் பிடுங்கமாட்டார்கள்!
பற்கள், இறுதிவரை உறுதியாக இருக்க வேண்டுமானால், நீங்கள் செய்ய வேண்டியவை:
* ஒரு நாளைக்கு, இரண்டு முறை, பல் துலக்க வேண்டும்
* பற்களுக்கிடையில் அழுக்கு, கறை சேராமல் பார்த்து கொள்ள வேண்டும்
* நான்கு அல்லது ஐந்து மாதத்திற்கு ஒருமுறை, பிரஷை மாற்றி விடுவது நல்லது
* ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின், வாயை நன்றாக கொப்பளிக்கவும். பலர், சாப்பிட்ட பின், வாயை வெளியே மட்டும் தண்ணீரால் துடைத்து விடுகின்றனர். அவர்களிடம், 'ஏன் வாயை கொப்பளிக்கவில்லை' என்று கேட்டால், 'வாய் கழுவும் தண்ணீர், உப்பாக இருக்கிறது அல்லது சாப்பிட்ட டேஸ்ட் போய் விடும்' என்பர். இந்த இரண்டு பதிலுமே தவறானது.
ஒவ்வொரு பல்லுக்கும் அடியில், அதாவது, வேர்ப் பகுதியில், ரத்தக் குழாயும், நரம்பும் இருக்கின்றன. ரத்தக் குழாயும், நரம்பும் கடுமையாக பாதிக்கப்பட்டால், பல் வலி, வீக்கம், பல் கூச்சம், ரத்தம் மற்றும் சீழ் வடிதல் போன்ற பிரச்சனைகள் பாதிக்கப்பட்ட பல்லுக்கு ஏற்படும்.
சிறிது காலத்திற்கு முன், தாங்க முடியாத வலியுடன், மிகவும் கெட்டுப் போன ஒரு பல்லுடன், மருத்துவரிடம் வந்தால், அந்த பல்லை பிடுங்குவதை தவிர, வேறு வழியில்லை என்றே கூறுவர். ஆனால், இப்போது அப்படியில்லை. 'ரூட் கேனால் தெரபி' என்று சொல்லக் கூடிய சிகிச்சை முறையில், பாதிக்கப்பட்ட அந்த பல்லை பிடுங்காமல், சிகிச்சை அளித்து காப்பாற்றி விடலாம்.
விபத்தால், பல் பாதிக்கப்பட்டாலோ, பல் உடைந்து போனாலோ, பல்லில் ஓட்டை விழுந்தாலோ, பல்லின் அடிப்பாகத்தில் சீழ் கட்டியிருந்தாலோ மேற்கூறிய சிகிச்சை கை கொடுக்கும். இந்த சிகிச்சை முறையில், பல்லுக்கு அடியிலுள்ள பாதிக்கப்பட்ட நரம்பையோ, சீழையோ பல்லுக்கு நடுவில் மெல்லிய ஊசியை நுழைத்து, உள்ளே போய் சுத்தம் செய்து எடுத்துவிட்டு, பல்லுக்குள் ஏற்பட்ட ஓட்டையை அடைத்து விடுவர். ஆனால், இது ஒரே ஒரு தடவையில் முடிகிற காரியமல்ல.
சுமார், மூன்று அல்லது நான்கு முறை பல் டாக்டரிடம் சென்று தான் ஆகவேண்டும்!
மீனுக்கும் நோவு உண்டு மாப்பு!
நாய்கள், பூனைகள் போன்ற பாலூட்டி உயிரினங்களுக்கு, வலியோ, காயங்களோ ஏற்படும் போது, வித்தியாசமாக ஒலியெழுப்பி வலியை வெளிப்படுத்துகின்றன; அப்போது அதிகமாக சுவாசிக்கின்றன.
ஆனால், மீன்கள், தங்களுக்கு துன்பமோ, வலியோ ஏற்படும்போது, வாலையும், துடுப்பையும் கடுமையாக அடித்து, துள்ளி வேதனையை வெளிப்படுத்துகின்றன. இதை மீன்கள் வலையில் சிக்கும்போது, நாம் நேரடியாக பார்க்க முடியும்.
'லின்னே ஸ்னீடன்' என்ற உடற்கூறுபியல் நிபுணர், 2005ல் வெளியிட்ட ஆராய்ச்சி முடிவில், 'மீன்களால் வலியை அறியவும், வெளிப்படுத்தவும் முடியும்' என குறிப்பிட்டுள்ளார்.
அவர் நன்னீர் மீன்களை ஆய்வுக்கு உட்படுத்தினார். 58 விதமான, வலி உணர் கருவிகளை, மீன்களின் உதடுகளில் பொருத்தி ஆய்வு செய்தார். அதற்கு தேனீ விஷத்தை செலுத்தி, வலியை மீன்கள் எப்படி உணர்கின்றன என சோதனை நடத்தினார்.
அப்போது மீன்கள், வழக்கத்திற்கு மாறாக வித்தியாசமான செய்கைகளை செய்தன. மூக்குப்பகுதியை சரளை கற்களில் தேய்த்தன. உடலை, முன்னும் பின்னும் உதறின. பின், வலி நிவாரணி மருந்தை செலுத்தியபோது, இந்த வினோத செயல்கள் நின்று விட்டன. இதன் மூலம், மீன்கள் வலியை நன்றாக உணர கூடியவை என்பது தெளிவானது.
மீன்களைப் போலவே, மற்ற விலங்குகளும் வலியை உணரக் கூடியவை தான்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.