அன்று அகோர வெப்பமாக இருந்ததால், எருமைகள் கூட்டமாக கால்வாயில் இறங்கி குளித்தன. எருமைகள் குளிப்பதை பார்த்து, பன்றிகளும் அதனுடன் சேர்ந்தன.
ஒரு எருமை, பன்றியை பார்த்து, ''பன்றியோட சேர்ந்த கன்றும் கெட்டுப் போகும், என ஒரு பழமொழி இருக்கே, உனக்கு தெரியுமா...'' என கேட்டது.
''நாங்கள் மலம் தின்பதால், எங்களோடு சேர்ந்தால் கன்றுக்கும் அந்தப் பழக்கம் ஏற்பட்டுவிடும் என பயம் காட்டுவதற்காக, அப்படிச் சொல்லி வைத்து இருக்கின்றனர். எந்த கன்றாவது, மலம் தின்பதை நீ பார்த்திருக்கிறாயா... நாங்கள் தான் மோசம் என்றால், கன்றுகள் எங்களை திருத்துவது தானே,'' என்று கேட்டது பன்றி.
''ஒருவரை எளிதில் கெடுத்து விடலாம். ஆனால், அவரை நல்லராக்குவது தான் கடினம். நாம் வேறு வேறு இனம். இருந்தாலும் எவ்வளவு ஒற்றுமையாக, வேற்றுமை மறந்து இங்கே குளிக்கிறோம். ஆனால், மனிதர்களை பார். அவர்களை உயர்ந்தவர்கள் என சொல்லிக் கொள்வர். ஆனால், அவர்களுக்குள் எவ்வளவு வேற்றுமை உள்ளன. என்ன மனிதர்களோ...'' என்று சலித்துக் கொண்டது எருமை.
''அப்படியானால் மனிதர்களை விட, மிருகங்கள் உயர்ந்தவை என்று சொல்,'' என்றது பன்றி.
''அதில் என்ன சந்தேகம். ஆறறிவு படைத்தவர்கள் தங்களுக்குள் வேற்றுமை பாராட்டும் போது , நாம், வேற்றுமை பாராட்டாமல் வாழ்வது பெருமைக்கு உரியது தானே!'' என்றது எருமை.
ஒரு எருமை குளித்து கரை ஏறியதும், அதை பார்த்த மற்ற எருமைகளும் கால்வாயை விட்டு வெளியேறின. பன்றிகளும் கால்வாயில் புரண்டு வெளியேறின.
மரத்தின் நிழலில், வேடன் ஒருவன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். எருமைகள் பக்கத்தில் இருந்த பாதை வழியாக போய் கொண்டிருந்தன.
பன்றிகள், வேடன் படுத்திருந்த பாதை வழியாக செல்ல ஆரம்பித்தன. அவை ஓடியதால் அவற்றின் மேல் ஒட்டி இருந்த சேறு, வேடன் மேல் தெறித்தது. வேடன் தூக்கத்திலிருந்து விழித்துப் பார்த்தான். அவன் கண்களுக்கு எருமைகள் தான் தெரிந்தன. பன்றிகள் புதருக்குள் நுழைந்ததால், வேடனால் அதை கவனிக்க முடியவில்லை.
தன் தூக்கத்தை எருமைகள் கெடுத்து விட்டன என ஆத்திரத்தில், அதன் மீது அம்பை எய்தான்.
ஒரு எருமை அலறியபடி கீழே விழுந்தது. வேடன் அதன் அருகில் போனான்.
''என் தூக்கத்தை கெடுத்ததால் தான், உனக்கு இந்த கதி,'' என்றான்.
''உன் தூக்கத்தை நான் எங்கே கெடுத்தேன். நீ படுத்திருந்த பாதை, இடறிய பாதை என்பதால், நாங்கள் வேறு பாதை வழியாக வந்தோம். எங்கோ குளித்த பன்றிகள் தான் உன் தூக்கத்தை கெடுத்து இருக்க வேணடும். ஆறறிவு படைத்தவர்கள் என்கிறீர்கள். ஆனால், நீங்கள் எதையும் ஆராய்ந்து பார்ப்பது இல்லை,'' என்றது எருமை.
''என்னை மன்னித்து விடு. உனக்கு மருந்து போட்டு, உன்னை காப்பாற்றுகிறேன்,'' என அந்த எருமைக்கு மருந்து போட்டு அதைக் காப்பாற்றினான் வேடன்.
''சிறிது நேரம் பன்றிகளுடன் சேர்ந்து குளித்துவிட்டு, இப்போது தான் திரும்பினோம். அதுவே எவ்வளவு விபரீதத்தை ஏற்படுத்தி விட்டது. சேருவாரோடு தான் சேர வேண்டும்,'' என இப்போது நான் புரிந்து கொண்டேன் என்றது எருமை.
''ஆத்திரம், சிந்திக்கும் புத்தியை கெடுத்து விடும், என இப்போது நானும் உணர்ந்து கொண்டேன்,'' என்றான் வேடன்.
குட்டீஸ்... அப்போ நீங்க என்ன உணர்ந்தீங்க!