தக்காளி திருவிழா ஆரவாரமான அன்பு பரிமாற்றம்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
தக்காளி திருவிழா ஆரவாரமான அன்பு பரிமாற்றம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2017
00:00

ஸ்பானிஷ் மொழியில், 'லா டொமாடினா' என்று அழைக்கப்படும், 'தக்காளி திருவிழா' ஸ்பெயின் நாட்டில் கொண்டாடப்படும் முக்கியமான திருவிழா!
மனித ஒருமைப்பாட்டை முன்னிறுத்தி, மக்கள் குஷியும், கும்மாளமுமாக தக்காளி பழங்களை ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து, விளையாட்டாக, 'சண்டை' போடும் திருவிழா.
விசித்திரமான இந்த விழா ஆரம்பித்த விதமும், விசித்திரமானதே!
ஆகஸ்ட் 29, 1945, புதன் கிழமையன்று, இளைஞர்கள் சிலர், புனோல் நகர சதுக்கத்தில் நடைபெற்ற அணிவகுப்பில் பங்கேற்றனர். அந்த சமயத்தில், அணிவகுப்பில் சென்ற ஒருவர், அலங்கார வண்டியிலிருந்து தவறி விழுந்தார். கோபம் அடைந்த அவர், அங்கு இருந்தவர்களுடன் சண்டை போட துவங்கினார்.
கையில் கிடைத்த பொருட்களை, அங்கிருந்தவர்கள் மீது வீசி எறிய ஆரம்பித்தார். பதிலுக்கு கூடியிருந்த மக்கள், அருகிலிருந்த கடைகளில் வைக்கப்பட்டிருந்த தக்காளி பழங்களை எடுத்து, வீச துவங்கினர். அதன் பின், காவல் துறை தலையிட்டு சண்டையை நிறுத்தியது.
அடுத்தடுத்த ஆண்டுகளில், ஆகஸ்ட் மாத கடைசி புதன்கிழமை, இளைஞர்கள் இந்த விளையாட்டு சண்டையை தொடர ஆரம்பித்தனர். விளையாட்டு, விபரீதமாகி போக, சிலர் கைது செய்யப்பட்டனர். இதனால், கொண்டாட்டமும் நிறுத்தப் பட்டது.
கடந்த, 1957ல், 'தக்காளி இறுதி சடங்கு' கூட நடைபெற்றது. பெரிய தக்காளி ஒன்று சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, வாத்திய இசையுடன், சவ ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில், மக்கள் தாங்களாகவே தக்காளி பழங்களை எடுத்து வந்து, விழாவை உற்சாகமாக நடத்த துவங்கினர். அன்றிலிருந்து, இது வருடாந்திர விழாவாக மாறியது.
கடந்த, 1975ல் புனோல் நகரத்தின் மேயரே, தக்காளி பழங்களை வரவழைத்து, விழாவை நடத்த துவங்கினார்.
தக்காளி திருவிழாவின் புகழ் பெருக பெருக, வெளிநாட்டு பயணியரும், உற்சாகத்துடன் பங்கெடுக்க துவங்கினர்.
தக்காளி திருவிழா, ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் மாதம் கடைசி புதன் கிழமை, புனோல் நகர சதுக்கத்தில் கொண்டாடப்படுகிறது. இதற்காக, பெருமளவு தக்காளி பழங்கள் அவ்விடத்தில் குவிக்கப்படுகின்றன. சுமார், ஒரு மணி நேரம் நடைபெறும், இந்த சண்டையில் பங்கு பெறுபவர்கள், உற்சாகத்துடன், ஒருவர் மீது ஒருவர் தக்காளி பழங்களை சரமாரியாக, விளையாட்டாக தூக்கி எறிந்து, கும்மாளமடிக்கின்றனர்.
விழாவில் பங்கேற்பவர்களின் உடல் மற்றும் உடைகள் மட்டுமல்ல, அந்த இடம் முழுவதுமே தக்காளி சாற்றால், மெழுகப்பட்டு, ரத்த சிவப்பாக காட்சி தருகிறது. கொண்டாட்டங்கள் முடிந்ததும், தீயணைப்பு பிரிவினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து, தக்காளி சாற்றை கழுவி, மக்களையும், சுற்றுப்புறத்தையும் சுத்தப்படுத்துகின்றனர்.
பாதுகாப்பை முன்னிட்டு, தக்காளியை தவிர, வேறு எந்த பொருளும், சண்டையில், உபயோகப்படுத்தப் படுவதில்லை.
ஸ்பெயின் நாட்டை தொடர்ந்து, அமெரிக்கா, சீனா, சிலி போன்ற நாடுகளின் சில நகரங்களில் கூட இது போன்ற கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்த விழாக்காட்சிகள், ஆங்கிலப் படங்களில் இடம் பெற்றுள்ளன. 'ஜிந்தகி ந மிலேகி துபாரா' என்ற இந்தி படத்திலும், இந்த விழாக்காட்சி வருகிறது.
களங்கமில்லாத நகைச்சுவையுடன் கூடிய அன்பை, ஒருவருக்கொருவர் பரிமாறி விளையாடி, ஒருமைப்பாட்டை, விளக்குவதே தக்காளி திருவிழாவின் தலையாய நோக்கம்.
- சாரதா விஸ்வநாதன்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X