அன்பு....
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2017
00:00

பவளபுரி என்னும் நாட்டை, மனோரஞ்சன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவரிடம் மதிநுட்பம் நிறைந்த, பலேந்திரா என்பவர் மந்திரியாக இருந்தார். அவர் தன் அறிவுதிறனால், மன்னரை விட, தான் கெட்டிக்காரர் என்பதை, சிக்கலான சில வழக்குகளை தீர்த்து வைத்ததன் மூலம், நிரூபித்து காட்டினார்.
அதனால், 'தனக்கு கீழ் உள்ளவன், தன்னை விட மேதாவியாக இருக்கிறானே' என்று மனதினுள், மன்னருக்கு பொறாமை வந்தது. அதனால், மந்திரியை தன் பகையாளியாக கருதி வந்தார்.
இந்த சமயத்தில், பக்கத்து நாட்டோடு எல்லை பிரச்னையால், போர் வரும் சூழ்நிலை உருவானது.
ஒருநாள்- -
மக்களின் நிலையையும், அவர்களின் எண்ணத்தையும் அறிய வேண்டி, மாறுவேட மிட்டு, வீதி உலா வந்தார் மன்னர்.
அப்போது, குடியானவர் இருவர், வீதியில் நின்று பேசுவதை கேட்டார்.
''ராமசாமி அண்ணே... நம்ம மன்னரை விட, மந்திரி தான் கெட்டிக்காரரு... அரச சபையில், பலேந்திரா சில முறை நிரூபித்திருக்கிறார்...'' என்று அவன் கூறிய போது, யாரோ மன்னரை சவுக்கால் அடிப்பது போலிருந்தது.
''சின்னராசு... நம்ம நாட்டுல இப்போ எல்லை பிரச்னை வேற திடீர்னு வந்திடுச்சு... அங்கே அடிக்கடி சண்டை வந்து, பல சிப்பாயிங்க உயிரை விட்டுட்டு இருக்காங்க... ஆனா மன்னரோ, தளபதிகிட்ட பொறுப்பை ஒப்படைச்சிட்டு, கடமையை மறந்திட்டு, பொறுப்பில்லாம அந்தப்புரமே கதியாக கிடக்கிறாரு,'' என்று ராமசாமி கூறியதை கேட்டதும், மன்னரின் மண்டையை யாரோ சம்மட்டியால் அடிப்பது போலிருந்தது.
''ராமசாமி அண்ணே... எல்லையில் இப்போ சின்ன சின்ன சண்டையா நடக்கிறது. பெரிய போரா மாறிடுச்சின்னா... என்ன நடக்கும்?'' என்றார்.
''என்ன நடக்கும்... போர் புரிய சிப்பாய்ங்க இல்லாம, வீட்டுக்கொரு ஆளை, சண்டை போட கூப்பிடுவாங்க. செல்வந்தர்கள் கிட்ட போர் நிதின்னு சொல்லி பிடுங்குவாங்க. சண்டை பயிற்சி எடுக்காதவங்களெல்லாம் அங்கே போய், காது, கையை இழப்பாங்க. இவங்களோட குடும்பமெல்லாம் சீரழிந்து போகும். ஆனா, நம்ம மன்னருக்கு, குடிமக்களை பற்றியெல்லாம் கவலை இருக்காது. நாட்டோட வெற்றி மட்டுமே குறிக்கோளாக இருக்கும்!''
''அப்போ, போர் வராம தடுக்க வழியிருக்கா அண்ணே!''
''நமக்கு அந்த வழியெல்லாம் தெரியாது சின்னராசு! ஆனா, மதிநுட்பம் நிறைந்த, மந்திரி பலேந்திராவுக்கு வேணும்னா ஒருவேளை தெரியலாம். நம்ம மன்னரோ, அவரை பக்கத்துல இருக்கிற பகையாளியா நினைக்கறாரு. தன்னை விட மந்திரி புத்திசாலியா இருக்கிறதால, அவரை பழிவாங்க துடிக்கிறாரு!''
''ஆனாலும், இதுவரை நடக்கலை யேண்ணே. மன்னருக்கு, மந்திரியை பிடிக்காம போனதுக்கு காரணம் என்னவோ?''
''தன்னை விட திறமைசாலி களை பக்கத்துல வச்சுக்கிட்டா, எதிலுமே வெற்றி பெற முடியும். அவங்களை பகைச்சுகிட்டா, துன்பம் தான் வந்து சேரும். மன்னர், மந்திரியை மதிச்சு யோசனை கேட்டார் என்றால், இதுக்கு ஒரு நல்லவழி பிறக்கும். இல்லையென்றால், எல்லை பிரச்னை பல உயிர்களை பலி கேட்கும்...''
''நாம இதை பத்தி பேசி என்னவாக போகிறது... மன்னர் சிந்திச்சு பார்த்தால், ஆபத்தை தடுக்க முடியும். நீயும், நானும் சிந்திச்சு ஒண்ணுமே ஆகப்போறதில்லை; வா வீட்டிற்குப் போகலாம்,'' என்று சொல்லி, இருவரும் புறப்பட்டனர்.
இதை பற்றி சிந்தித்தபடியே, அரண்மனை நோக்கி நடந்தார் மன்னர்.
'ம்... இந்த ரெண்டு பேரோட வெட்டி பேச்சில் கூட, நாட்டுப்பற்று இருக்கிறது; என்னோட தப்பையும் சுட்டிக்காட்டுறாங்க. அவங்க பேச்சில் நியாயம் இருக்கு. அதை விட, நாட்டு மக்களோடு நலமும் இருக்கு. மந்திரியை அழைத்து ஆலோசனை கேட்க வேண்டியது தான்' என நினைத்து, அதற்கும் ஏற்பாடு செய்தார்.
ஆலோசனை மண்டபத்தில், மன்னரும், மந்திரியும் ஆலோசனை நடத்தினர்.
''பலேந்திரா... நாட்டு நடப்பை பற்றி, நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டியதில்லை. நாட்டு எல்லையில் சிறு சிறு சண்டைகள் நடக்கின்றன. நம் நாட்டின் நலன் கருதி, இந்த சின்ன சண்டைகள், பெரிய போர் ஆகாமல் தடுக்க, உனக்கு தெரிந்த ஆலோசனையை சொல்!'' என்றார் மன்னர்.
''அரசே... நாடும், வீடும் நல்லபடியாக இருக்க வேண்டுமானால், முதலில் பொருளாதார தேவைகள் பூர்த்தியாக வேண்டும். அப்படி பூர்த்தியாகிவிட்டால், வீண் சண்டைகள் வரவே வராது. பொருளாதார பற்றாக்குறை உள்ளவர்கள் தான், பாதகமான செயல்களின் ஈடுபடுவர். அதனால், பல பேரின் அமைதி கெடும். அவர்களால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
''பக்கத்து நாடான மகேந்திரபுரிக்கும், இப்போது அந்த நிலை தான். மகேந்திரபுரி, பருவமழையால் செழித்து, சொர்க்க பூமியாக இருந்த நாடு. ஆனால், கடந்த, ஐந்தாண்டுகளாக பருவமழை இல்லாததால், வறட்சி ஏற்பட்டு பசியும், பட்டினியுமாகி நரகபுரியாக மாறிவிட்டது. அதனால், அங்கே மக்கள் நல்லபடியாக வாழ்வதற்கு வழியில்லாமல் போய்விட்டது. பசித்தவர்கள் பெருக ஆரம்பித்துவிட்டனர்.
''அதனால், உள்நாட்டில் நிர்வாகம் சரியாக செய்ய முடியாமல் போய்விட்டது. தன் நாட்டு தேவைகளை பூர்த்தி செய்ய முடியாததால், பக்கத்து நாடான நம்மோடு பகையை வளர்த்து, நமக்கு சொந்தமானதை பிடுங்க பார்க்கின்றனர்.
''இல்லாதவர்கள், எதற்கு வேண்டுமானாலும் துணிவர் அரசே! நம் எல்லை போருக்கு காரணம், அந்த நாட்டிற்கு வந்த வறுமை கொடுமை தான் காரணம்...'' என்றார் மந்திரி பலேந்திரா.
''அப்படியானால், இதற்கு நாம் என்ன செய்யலாம் பலேந்திரா...''
''அரசே தூரத்து பகையை விட, பக்கத்து பகையால் தான் சேதாரம் அதிகமாகும். பக்கத்து மாணவனை பகைத்தவன், கெட்டிக்காரனாக முடியாது; பக்கத்து வீட்டை பகைத்தவன், தக்க சமயத்தில் உதவியை பெற முடியாது; பக்கத்து உறவை பகைத்தவன், செருக்கோடு வாழ முடியாது.
-''பக்கத்து தெருவை பகைத்தவன், சண்டை போடாமல் இருக்க முடியாது; பக்கத்து ஊரை பகைத்தால், நிம்மதியாக யாரும் வாழ முடியாது; பக்கத்து நாட்டை பகைத்து கொண்டால், இரண்டு பக்கமும் சேதாரம் ஆகாமல் போகாது...''
''அப்படியானால், இதற்கு வழி தான் என்ன பலேந்திரா...''
''அரசே, மகேந்திரபுரி நாட்டின் வறுமை தான் பகைக்கு காரணம். அதனால், அந்நாட்டிற்கு நாம் இனாமாகவோ, கடனாகவோ பொருளுதவி செய்து, நம் அன்பை வெளிப்படுத்தினால், பகை போய், இணக்கம் ஏற்படும்.
''அதனால், இருபக்கமும் உயிர்ச்சேதம் ஏற்படாது. கொந்தளிப்பு ஏற்பட்ட நாட்டிலும் அமைதி ஏற்படும். நம்மிடம் உதவி பெற்றால், நம்மை அவர்கள் பெருமையாக பேசுவர். அவர்களை விட வல்லமை உள்ளவர்கள் நாம். ஆனால், அதை நிரூபிக்க, பல உயிர்களை பலியிட வேண்டுமா...
''அன்பு காட்டி உதவினால், பகை மறையும்; ஒற்றுமை ஏற்படும். அதனால், வீண் சண்டை தடுக்கப்படும். அன்பை விட, சக்தி படைத்த ஆயுதம் உலகில் வேறு எதுவுமே இல்லை. போரைத்தடுக்க, உயிர்களை காக்க எனக்கு தெரிந்த வழி இது தான் அரசே!'' என்றார் மந்திரி.
நல்ல யோசனை கூறிய பலேந்திராவை கட்டித் தழுவிய மன்னர், அதன்பின், அவரை பகையாளியாக நினைக்காமல், தன் நண்பனாக ஏற்றார்.
என்ன குட்டீஸ்... இந்த கதையில் மந்திரியே உங்களுக்கு நிறைய, 'அட்வைஸ்' கொடுத்துட்டார். அதை அப்படியே அவர் சொன்னபடியே செயல்படுங்க. ஓ.கே.!

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X