டியர் ஜெனி ஆன்டி...
நான், 10ம் வகுப்பு படிக்கும் மாணவி. எனக்கு அடிக்கடி, 'கொட்டாவி' வரும். இதனால், மிகவும் களைப்பாக இருக்கிறது; எந்த வேலையும் செய்ய முடியாமல், சோம்பேறித்தனமாகவே உள்ளது.
இந்த, 'கொட்டாவி'யால், ஆசிரியர்களிடம், 'தூங்கு மூஞ்சி, எப்படி கொட்டாய் விடுது பாரு... உன் மூஞ்சிய பார்த்தாலே, எங்களுக்கு தூக்கம் வந்துடும் போலிருக்கு...' என்று நல்லா திட்டு வாங்குகிறேன் ஆன்டி... இந்த பிரச்னைக்கு ஒரு வழி சொல்லுங்க ப்ளீஸ்...
அச்சச்சோ... மொதல்ல உன்னோட, 'ரெகுலர் ஆக்டிவிட்டீஸ்' என்னென்ன
என்பது தெரியணும்.
இரவில், அதிக நேரம் கண்விழித்து படிப்பியா; அல்லது, 'டிவி' பார்ப்பியா... சரியான நேரத்துக்கு சாப்பிடுவியா; காலை கடன்கள் கழிப்பதில் பிரச்னை உள்ளதா... போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தால், உன் பிரச்னைக்கு இன்னும் சிறப்பாக பதில் சொல்ல முடியும்.
முதல்ல, 'கொட்டாவி' ஏன் வருதுன்னு தெரிஞ்சிக்கோ... நம்மை அறியாமலேயே மூச்சு காற்று, வாய் வழியாகவும், மூக்கு வழியாகவும் உள்ளிழுக்கும் போது, செவிப்பறை விரிவடைந்து, நுரையீரலில் இருந்து பெருமூச்சாக, இந்த காற்று வாய் வழியாக வெளியே வருவது தான், 'கொட்டாவி' என்கிறோம்.
கொட்டாவியை, 'கூட்டாவி, கெட்டாவி' என்றும் அழைப்பர். ஏன் அப்படி கூறுகின்றனர் தெரியுமா...
ஒருவர் கொட்டாவி விட்டால், அதை பார்க்கும் நபருக்கும், கொட்டாவி வந்துவிடும். கொட்டாவி பரவும் தன்மையுடையது.
* மூளைக்கு தேவையான ஆக்ஸிஜன் இல்லாமல் இருப்பதால் தான் கொட்டாவி வரும்
* குறைவான தூக்கம், அதிகமான வேலைப் பளு இருந்தாலும், கொட்டாவி வரும்
* இதயம், நுரையீரல், சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருந்தாலும், கொட்டாவி வருவதற்கான வாய்ப்பு உண்டு. எதற்கும் மருத்துவரை சென்று பார்ப்பது நலம்.
கொட்டாவி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டுமென்றால்...
* மூச்சை நன்றாக உள் இழுத்து, வெளியே விட வேண்டும். இப்படி, ஐந்து நிமிடங்கள் செய்தால், மூளைக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைத்து விடும்
* இரவில் படுப்பதற்கு முன், செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் இவற்றை, 'சுவிட்ச் ஆப்' செய்து, அடுத்த அறையில் வைத்துவிட்டு, தூங்குவது நல்லது. அதன் கதிர் அலைகள் கூட நமக்கு பாதிப்பை தரும்
* இரவில் வெகுநேரம், கண்விழித்து படிக்காமல், அதிகாலையில் எழுந்து படி. இதனால், உடல் சுறுசுறுப்பு அடையும்
* பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது, நிமிர்ந்து உட்காரு. நிமிர்ந்து உட்கார்ந்தால் தான், மூளைக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும். குறுகி, வளைந்து உட்கார்ந்தால், உடலுக்கு தேவையான அளவு ஆக்ஸிஜன் கிடைக்கமால், கொட்டாவி வரும் வாய்ப்பு உள்ளது
* தினமும், தியானம், உடற்பயிற்சி செய்; வீட்டு வேலைகளில் பெற்றோருக்கு உதவு; தண்ணீர் அதிகமாக குடி; தண்ணீர் அதிகமாக குடித்தாலே, கொட்டாவி வராது.
இவற்றை நீ பின்பற்றினால், கொட்டாவி என்கிற, 'கெட்ட ஆவி' உன்னை விட்டு போயே போய் விடும். சரியா...
ஆ... வ்... நோ... நோ...
போ கெட்ட ஆவியே!
- என்றும் சுறுசுறுப்புடன்,
ஜெனிபர் பிரேம்.