தாய் மனம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2017
00:00

அம்மாவை பார்க்க, கிராமத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்த கணவன் சிவாவிடம், ''எப்ப திரும்பி வருவீங்க...'' என்று கேட்டாள், அனு.
''நைட் வந்துடுவேன்.''
''பேங்கில் பணம் எடுத்துட்டு வந்தீங்களா?''
''ம்.''
''எவ்வளவு?''
''ஒரு லட்சம்.''
''என்னது ஒரு லட்சமா...'' வாய் பிளந்தவள், ''என்ன ஆச்சு உங்களுக்கு... போகும் போதெல்லாம் பணத்தை பத்தி பேசுறாங்கங்கிறதுக்காக, இவ்வளவு பணத்தையா கொடுக்கிறது... பத்தாயிரம் ரூபா தந்தா போதாதா... அவங்களுக்கு எதுக்கு இவ்வளவு பணம்...''
''வச்சுட்டு போகட்டும்; இனி, என்கிட்ட பணத்தை பத்தி பேசாதீங்கன்னு சொல்லிட்டு வந்துடுறேன்,'' என்றான், எரிச்சலுடன்!
''இருந்தாலும், இது ரொம்பவே அதிகம்ங்க,'' ஆற்றாமையுடன் புலம்பினாள், அனு.
ஸ்கூல் டீச்சராக இருந்து, ரிடையர்டு ஆனவள், தேவகி. ஒரே மகன் சிவா. சீராட்டி, பாராட்டி வளர்த்த பிள்ளை. கம்ப்யூட்டர் இன்ஜினியர் வேலை கிடைத்தவுடன் திருமணமும் செய்து வைத்தாள். கணவனின் மரணத்திற்கு பின், கிராமத்திலேயே தங்கி விட்டாள்.
சிவாவின் இல்லற வாழ்க்கை எவ்வித தலையீடும் இல்லாமல், சந்தோஷமாக நகர்ந்தது. எப்போதுமே, மாமியாரிடமிருந்து ஒரு அடி விலகியே நிற்பாள், அனு. அதற்கேற்ப, சிவாவும், அம்மா தன் ஊருக்கு வந்து, அவருக்கும், தன் மனைவிக்கும் தேவையில்லாத பிரச்னை வந்து விடக் கூடாது என்பதற்காக, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை, அம்மாவை பார்க்க சென்று விடுவான்.
முதலில், அவனுடன் வந்த அனு, கொஞ்சம் கொஞ்சமாக போவதை குறைக்க, இப்போது சிவா மட்டும் போகிறான். இதையே தேவையில்லாத செலவு என்று புலம்புவாள், அனு.
ஆனால், ஊருக்கு போகும் போதெல்லாம், 'எனக்கு எந்த சிரமமும் இல்ல சிவா... வர்ற பென்ஷன் பணத்தில், வாடகை, என் செலவுகளை சமாளிச்சுக்குறேன். இருந்தாலும், பிள்ளை சம்பாதித்து, பணம் கொடுக்குறான்னு திருப்தியில்ல; உன் கையால, இந்த அம்மாவுக்கு பணம் கொடுப்பா...' என, ஒரே பல்லவியை பாடுவாள், தேவகி.
'பென்ஷன் பணமே அவள் செலவுக்கு ஏதேஷ்டம்; இன்னும் பணத்தை எதிர்பார்க்கிறாளே...' என்று சிவாவுக்கு எரிச்சல் வரும்.
போன முறை போயிருந்த போது, அம்மா, வழக்கமான பல்லவியை பாட, அம்மாவை பார்க்க வந்திருந்த தூரத்து உறவான சித்தப்பா, 'அம்மா தான் வாய் விட்டு கேக்குறாங்களே; அடுத்த முறை வரும் போது, கையில் கிடைச்சதை கொண்டு வந்து கொடுப்பா...' என்று, வக்காலத்து வாங்க, அவன் கோபப்பட்டதின் விளைவு தான், ஒரு லட்ச ரூபாய்!
மகனுக்கு பிடிக்கும் என்று, விரால் மீன் குழம்பு வைத்து, சாப்பாடு பரிமாறினாள், தேவகி.
''அடுத்த முறை வரும் போது, அனுவையும் கூட்டிட்டு வாப்பா, பாத்து நாளாச்சு. உடம்பு முன்ன மாதிரி இல்ல; அடிக்கடி தொந்தரவு செய்யுது.''
சாப்பிட்டு கை கழுவியவன், பையை திறந்து, பணத்தை எடுத்து, அவள் கையில் திணித்தான்.
''என்னப்பா இது...'' அவ்வளவு பணத்தை ஒரு சேர பார்த்து, ஆச்சரியப்பட்டவளாக கேட்டாள்.
''அதில ஒரு லட்ச ரூபாய் இருக்கு... இனி, பணம் பணம்ன்னு ஆலா பறக்க மாட்டியே... நல்லா வச்சு தாராளமா செலவு செய். என்னமோ பணத்துக்கு கஷ்டப்படுற மாதிரி, வரும்போதெல்லாம், இதே பேச்சு... அதான், மொத்தமா கொண்டு வந்து கொடுத்திருக்கேன். வச்சுக்க.''
பதில் சொல்லாமல், பணத்துடன் உள்ளே போகும் அம்மாவை, எரிச்சலுடன்
பார்த்தான்.
''என்னங்க... உங்க அம்மாவை போய் பாத்து ஆறு மாசமாச்சு, போகலயா...''
''எதுக்கு போகணும்... அவங்களுக்கு தேவை பணம்; அதை தான் கொடுத்துட்டு வந்துட்டேனே, அப்புறம் என்ன...'' என்றான், சிவா.
திடீரென்று ஒருநாள், 'உங்கம்மா தவறிட்டாங்க; உடனே புறப்பட்டு வா...' என, கிராமத்திலிருந்து தகவல் வர, பதைபதைப்போடு மனைவியோடு புறப்பட்டான்.
''ரெண்டு நாளாவே உடம்புக்கு முடியலப்பா. நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னாங்க. ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டப்ப, சரியாயிடும்ன்னு சொல்லி, டாக்டர்கிட்ட வர மறுத்துட்டாங்க. நிமிஷமாய் போய் சேர்ந்தாச்சு; அவங்க வரைக்கும் நல்ல சாவு தான்,'' என்று சொன்னார், பக்கத்து வீlட்டு பெண்மணி.
அம்மாவை தகனம் செய்து, ஈர உடையுடன் வந்தான், சிவா.
பெட்டி சாவியை அவனிடம் தந்த அனு, ''உங்கம்மாவோட கட்டில்ல இருந்துச்சு; திறந்து பாருங்க,'' என்றாள்.
திறந்தான்; அதில், அவன் தந்த ஒரு லட்ச ரூபாய் கட்டு, பிரிக்கப்படாமலும், கூடவே, கடிதம் ஒன்றும் இருந்தது.
''என்னங்க இது... பணத்தை அப்படியே வச்சிருக்காங்க; இதுக்காகவா அவ்வளவு பாடு படுத்தினாங்க...''
அனு ஆச்சரியப்பட, கடிதத்தை பிரித்து படித்தான்...
அன்புள்ள சிவாவுக்கு... இதை படிக்கும் நேரம், என் கதை முடிந்திருக்கும். எனக்கு பெரிசா எந்த செலவும் இல்லை. அதனால, நீ கொடுத்த பணம், பத்திரமா பெட்டியில் இருக்கு; எடுத்துக்க. அம்மாவை பத்தி, உன் மனசில் தப்பான அபிப்ராயம் இருக்கு. அதை தெளிவுபடுத்த தான் இக்கடிதத்தை எழுதி, பணத்துடன் வைக்கிறேன். என்னைக்கு இருந்தாலும், என் உயிர் போன பின், இது, உன் வசம் வரும்ன்னு தெரியும். நீ வரும்போதெல்லாம் உன்கிட்ட பணம் கேட்டேன்; அதை மறுக்கல. பிள்ளையை பெத்த ஒவ்வொரு தாய்க்கும் ஏற்படும் நியாயமான ஆசை தான் அது.
கோடீஸ்வரியா இருந்தாலும், பெத்த பிள்ளை சம்பாதித்த காசில், பத்து ரூபாயை அவள் கையில் கொடுத்து, 'வச்சுக்கம்மா'ன்னு சொன்னா, மனம் குளிர்ந்து போவாள். அது தாய்மைக்கே உரிய எதிர்பார்ப்பு; அதைத் தான், நானும் எதிர்பார்த்தேன். அந்த கடவுள், என் சம்பாத்தியத்திலேயே, என்னை நல்லபடியா வாழ வச்சுட்டாரு. இருந்தாலும், என் பிள்ளை, எனக்கு பணம் தர்றான்கிற திருப்தி கிடைக்கணும்ங்கிற ஆசையை தான், உன்கிட்ட வெளிப்படுத்தினேன்.
'இந்தாம்மா வச்சுக்க'ன்னு ஒரு நூறு ரூபாய் கொடுத்திருந்தால் கூட, சந்தோஷப்பட்டு, அதில், பழமாவது வாங்கி சாப்பிட்டிருப்பேன்; பெத்த வயிறு நிறைஞ்சிருக்கும். ஆனா, நீ, உன்கிட்ட பணம் கேட்டது, ஏதோ தகாத குற்றம் போல, எரிச்சலுடன் கையில் ஒரு லட்ச ரூபாயை திணிச்ச... வேண்டாம்பா... இந்த பணத்துல ஒரு ரூபாயை எடுக்க கூட, எனக்கு மனசு வரல. பத்திரமா வச்சிருக்கேன்; எடுத்துக்க.
அன்புடன்,
உன் தாய் தேவகி.
கடிதத்தை படித்து, மனம் உடைய அழும் கணவனை, சமாதானப்படுத்த முடியாமல், கண் கலங்க நின்றாள், அனு.

பரிமளா ராஜேந்திரன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
12-ஜூலை-201708:14:16 IST Report Abuse
Manian பதினெட்டு வயது சிந்தனையும் 50 வயதான பிறகு, வயதுக்கு தகுந்த மாதிரி மாறிவிடுவதாக ஒரு புதிய ஆராய்ச்சி சொல்கிறது. விஞ்ஞானம் ஒருதாயின் மகன் மேல் உள்ள தீராத அன்பை இந்த மாதிரி சொல்கிறது: ஒரு பெண் ஆண் குழந்தைக்கு தாயாகும் போது, ஆண் குழந்தையின் ஒய் குரொமோசம் தாயின் டிஎன்ஏ க்கு புகுந்து, முதலில் ஒவ்வாமை ஏற்படுகிறது. அதனால் பல பெண்களுக்கு பயங்கர வாந்தி போன்ற மசக்கை வரும். பின்னால் குழந்தை பிறந்ததும் தன் உடலொடு இருப்பதாக உணா்கிறாள். இதை தகப்பன், மகன் புரிந்து கொள்ளவேண்டும். மருமகள் ஆண் பிள்ளை பெற்றால் அவளுக்கும் அது கண்டிப்பாக 95% ஏற்படும். திருமணத்திற்கு முன் பெண்ணின் தாய் சொல்ல வேண்டிய செய்தி இது. அனுவும், சிவாவும் காகித படிப்பு கந்தல் சாமிகள். சிவா அன்பாக தாயிடம் கேட்டிருந்தால், "ஈன்ற பொழுதில் பெரிது உவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்" என்று வெளியோர் சொல்லாவிட்டாலும்,அந்த தாய் எவ்வளவு மகிழ்ச்சி யோடு, சிவா காசுக்கு பஞ்சமில்லை, ஆனா நீ வரதும், 10தோ, 20 வதோ தரும்போது "என் பிள்ளை இருக்கிறான்னு ஒரு தெம்பு, உற்சாகம் வருது", நான் தனிமையை உணருவதில்லை. உன் குழந்தை நாள் தினங்களை நினைத்து என் இளமை நாளுக்கே போரேம்பா என்று உருகி இருப்பாளே(இதை ஆராய்ச்சிகள் உண்மை என்று கண்டுள்ளார்கள். பழய மாணவர்கள் திரும்ப கூடும் போது இந்த சுகம் தெரியும்). வெறும் உடல் வளர்ச்சி உள்ள அனு, மனமுதிர்ச்சி அடையும் போதுதான் தேவகியின் மனநிலை புரியும். காலம் கடந்த பச்சாதாபமே மிஞ்சும். சிவா தன் தகப்பனார் மரபணு பெற்ற முட்டாள் -கற்றதும், பெற்றதும், வாழ்வில் இணைத்ததும்
Rate this:
Share this comment
Cancel
ARUL - chennai,இந்தியா
11-ஜூலை-201714:07:46 IST Report Abuse
ARUL உங்க அம்மாவை கணவனின் தாயாரை "அத்தை" என்று சொல்ல வாய் வராத, மனம் வராத இப்படிப்பட்ட பெண்கள் சூடு, சுரணை, உள்ளவர்களாய் இருந்தால் மாமியார் விட்டு விட்டுப் போன நகைகளை உபயோகப்படுத்தக் கூடாது.
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
09-ஜூலை-201706:57:05 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே அணுவை உதைக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X