முட்டுக்கட்டை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2017
00:00

'தன்னன்னே... தன்னன்னே...' கண்களை இடுக்கி, இடது காதை பொத்தி, முகத்தில் சேஷ்டை செய்து, பாடியபடி இருந்தார், ராஜரத்தினம்.
ஹாலில், அவர் பாடினாலும் வீணாவால், அடுக்களையில் சமைக்க முடியவில்லை; அவர் பாடுவது இம்சையாய் இருந்தது.
''ஏய் சுசித்ரா, சூர்யா... இங்க வாங்க...'' என்று குழந்தைகளை அழைத்து, ''ரெண்டு பேரும், உங்க தாத்தாகிட்ட போய், 'நாங்க படிக்கணும்; பாடாதீங்க'ன்னு சொல்லுங்க, போங்க...'' என்று காதைக் கடித்தாள்.
தன் முன் ஓடி வந்து நின்ற பேரப்பிள்ளைகளை பார்த்து, உற்சாகமாய் கை அசைத்தபடி, பாட்டை தொடர்ந்தார், பெரியவர்.
''பாடாதீங்க தாத்தா; நாங்க படிக்கணும்,'' என்றான், சூர்யா.
''படிங்க; யார் வேணாம்ன்னு சொன்னது. ஆனா, நான் கேட்குற கேள்விக்கு, சரியா பதில் சொல்லிட்டு போய் படிங்க... தாத்தா இப்ப பாடினது என்ன ராகம்... ரெண்டு வருஷமா, 'மியூசிக்' கத்துக்குறீங்கல்ல...''
''அரபி...'' கண்ணாடியை தூக்கி விட்டபடி சுசித்ரா சொல்ல, 'க்ளுக்'கென சிரித்தான், சூர்யா.
''ஏய் லூசு... அரபினா, லாங்வேஜ்; ஆரபி தான் ராகம்.''
''அப்படி சொல்லுடா என் செல்லக்குட்டி... என்னை மாதிரியே, உனக்கு இசை ஞானம் இருக்கு; ஆனா, நான் பாடினது ஆரபி இல்ல; தேவ காந்தாரி,'' என்றார், குழந்தைகளிடம்!
''தாத்தா... நேத்து நீங்க கேட்டீங்கள்ல, சண்முகப்ரியா ராகத்துல, ஒரு சினிமாப் பாட்டு... நான் பாடவா...'' என்று சூர்யா கேட்க, அவர் தலையசைத்ததும், 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன...' என, இருவரும் சேர்ந்து பாட, வெத்தலைப் பெட்டியில், தாளம் போட ஆரம்பித்தார், பெரியவர்.
குழம்பு கரண்டியால், தன் தலையில் அடித்துக் கொண்டாள், வீணா.
'வேலிக்கு சாட்சி சொல்ல, ஓணானை கூப்பிட்ட கதையாய், அந்த பெரிசை திருத்த, இந்த சிறுசுகளை கூப்பிட, 'உள்ளதும் போச்சு; நொள்ள கண்ணா...' என்பது போல, மூணு பேரும் சேர்ந்து, பாட்டுங்கிற பேர்ல கூச்சல் போடுகின்றனரே...' என, நொந்து போனாள்.
பொழுது விடிஞ்சு, பொழுது சாய்வதற்குள், பிள்ளைப்பூச்சியை, மடியில் கட்டிய இம்சை போன்றிருந்தது, மாமனார் வீட்டில் இருப்பது!
திருமணமாகி, ஐந்து ஆண்டுகள் வரை, வீணாவுக்கு, வாழ்க்கை நிம்மதியாய் தான் போனது. அழகாய், இரண்டு குழந்தைகள் பிறந்தனர். ஏதோ வருஷத்துக்கு ஒன்றிரண்டு தடவை, மாயவரத்தில் இருக்கும் மாமனார், ராஜரத்தினம் வீட்டுக்கு போய் வருவதோடு சரி. நாலு வருஷத்துக்கு முன், மாமியார் கண்ணை மூட, அங்கிருந்து, பெட்டி, படுக்கையுடன் இங்கு வந்து விட்டார், ராஜரத்தினம்.
இட வலமாய், எட்டு, 'ப்ளாட்' கொண்ட குடியிருப்பு... நடுப்புறம் உள்ள வெற்றிடத்தில் அமர்ந்து, வருவோர், போவோரை வம்பளப்பது, யார் என்ன பேசினாலும், நடுவில் புகுந்து, குறுக்குசால் ஓட்டுவது தான் அவரது பிரதான வேலை.
மகன் விவேக்கிற்கு, அப்பா என்றால் அத்தனை பிரியம். அம்மா உயிருடன் இருக்கும் போதே பெற்றவர்களை உடன் வைத்து, பார்த்துக் கொள்ளவில்லையே என்ற ஆதங்கம், மனசுக்குள் இருந்ததால், இப்போது, அப்பாவை கவனித்துக் கொள்வதன் மூலம், அதை ஈடுகட்ட நினைத்தான்.
'ஏதோ கொஞ்சம் சங்கீதம் தெரிவதால், சங்கீத, 'சாம்ராட்' போல், தன்னை பாவித்து, எல்லா இடத்திலும், நுரை நாட்டியம் ஆடுவார்; சங்கீதம் கற்ற அளவுக்கு, அவருக்கு இங்கிதம் இல்லை...' என்பாள், வீணா.
அப்படித்தான் ஒருமுறை, உறவினர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு செல்வதற்காக, கணவன், குழந்தைகளுடன் கிளம்பிக் கொண்டிருந்தாள், வீணா. விசேஷத்திற்கு உடுத்துவதற்கு என, மெஜந்தா கலர் சுடிதாரை எடுத்து வைத்திருக்க, தூரத்தில் இருந்து, அதைப் பார்த்த ராஜரத்தினத்திற்கு மூக்கு வேர்த்து விட்டது.
'வீணாம்மா... என்ன மாமா இப்படி சொல்றேன்னு, தப்பா நினைக்க வேணாம்; பெண்களுக்கு, சுடிதார் போடுறது, சவுகரியமாக தான் இருக்கும்; ஆனா, புடவை கட்டினா தான், சவுந்தர்யமா இருக்கும். அதுவும், இதுமாதிரி மங்களகரமான விசேஷத்துக்கு போகும் போது, புடவை தான் கட்டணும்... அப்பத்தான், நம்ப மேல மரியாதை வரும்; நம்ப கலாசாரத்த காப்பாத்த முடியும்...' என்று சொல்லி, தன், 'தன்னன்னே...' கச்சேரியை ஆரம்பித்தார்.
வேறு வழி... அன்று, புடவையை கட்டி போக வேண்டியதாயிற்று. புடவையில் நன்றாக இருப்பதாக, அங்கு பலர் சொன்னது வேறு விஷயம் என்றாலும், உடை விஷயத்தில் கூட, அவருடைய தலையீடு, எரிச்சலை தந்தது.
இது தான் தொலையுது என்றால், மாதவரத்தில், நண்பர் ஒருவர், 'ப்ளாட்' விற்பதாக கேள்விப்பட்டு, 'சல்லிசாய் வாங்கிப் போட்டுடலாம்...' என்று, உற்சாகமாய் கூறியபடி இருந்தான், விவேக். ஹாலில் அமர்ந்து, அத்தனையும் செவி மடுத்த ராஜரத்தினம், மகனை அழைத்து, 'தம்பி... என்ன தகவல், என்கிட்ட சொல்லக் கூடாதா...' என்றார்.
விபரத்தை சொன்னதும், 'நல்ல விஷயந்தான்... வீடு, வாசல் வாங்கணும்ன்னு நினைக்கிறது சந்தோஷம்; ஆனா, அதுக்காக ஏன் மாதவரத்துக்கு போற... உனக்கு, வேலை இங்க; நீ போய்ட்டு வர, ஏதுவான இடத்துல வாங்கணும் இல்லயா...'
அவர் போட்ட முட்டுக்கட்டையால், பொங்கிய பாலுக்கு, நீர் தெளித்தது போல், அந்த யோசனை, அன்றுடன் அடங்கிப் போனது.
கார் வாங்கலாம் என்றால், 'முதல்ல
கார் ஓட்டக் கத்துக்கங்க...' என்று,
யோசனை சொன்னார்.
இவருடைய இம்சையில் இருந்து, எப்படி தற்காத்துக் கொள்வது என்று தெரியாமல் தவித்து, விவேக்கிடம் முறையிட்டாள். பலநேரம் மவுனம் மட்டும் தான், பரிசாக கிடைத்தது; சிலநேரம் இவளிடமே, 'வள்' என விழுவான்.
'அவருக்கு வயசு, அறுபதுக்கு மேல ஆகுது; கொஞ்சம், கலகலப்பான பேர்வழி. அவரால, 'உம்'முன்னு, ஒரு இடத்துல உட்கார முடியாது. அவர், நமக்கு நல்லது தான் நினைப்பாரு; அதை புரிஞ்சுக்க, மூளை தேவை இல்ல; இதயம் வேணும்... ஒரு மகனோட வளர்ச்சிக்கு, தடை போடுற தகப்பனை, ஆண்டவன் படைச்சதேயில்ல... அவரை கரிச்சு கொட்டுறத விட்டுட்டு, போய் வேலைய பாரு...'
இதற்கு மேல் அவனிடம் வாதாடினால், பிரச்னையாகும் என்று, அமைதியாய் இருந்து விட்டாள்.
ஆனால், எப்போதுமே, ஹாலில் உட்கார்ந்து, 'தன்னன்னே... தன்னன்னே...' என்று, பிணாத்தி, சதா வாய் ஓயாமல், வம்பளத்தபடி இருக்கும் இவரை பார்த்துக் கொள்வது தான், தன் வேலையா என, எரிச்சல் பட்டாள், வீணா.
தெரிந்த இடத்தில், வேலை காலியாக இருப்பதாகவும், அங்கு போனால், பாதி பொழுது, மாமனாரின் இம்சையில் இருந்து தப்பிக்கலாம் என்று, மார்க்கெட்டில் பார்த்த தோழி, யோசனை கூறினாள். 'சரி'யென்று படவே, விவேக்கிடம், தன் விருப்பத்தை சொன்னாள். அவள் யூகித்தது போலவே, மாமனார் கிழத்துக்கு சரியாய் மூக்கு வேர்த்தது.
விவேக் முடிவெடுக்கும் முன், முந்திக் கொண்டு, 'வீணாம்மா... பெண்கள் வேலைக்கு போறது, ரொம்ப நல்ல விஷயம் தான். ஆனாலும், இங்கயிருந்து, தினமும் பெருங்களத்தூர் போயிட்டு வர்றது ரொம்ப கஷ்டம். நீ ஒண்ணும், வரும்படிக்காக வேலைக்கு போகல; அதனால, நமக்கு சவுகரியமான வேலை, பக்கத்துல எதுவும் கிடைக்குதான்னு பாக்குறது தான், நல்லதுன்னு எனக்கு தோணுது...' என்றார்.
இது போதாதா... 'பக்கத்தில் வேலை கிடைக்குமான்னு முயற்சி செய்...' என்று சொல்லி விட்டான், விவேக். வீணாவின் கொந்தளிப்பு, அன்றுமுழுதும் அடங்கவில்லை.
அதுவரை, அவரை பற்றி அதிர்ந்து பேசாதவள், அதற்குபின், பொத்தாம் பொதுவாக, வார்த்தைகளை வீசத் துவங்கினாள்; அது அவருக்கும் புரிந்தது.
அக்கம், பக்கத்தில் இருப்பவர்கள் கூட, 'வீணா நல்ல மனுஷி; மாமனாரை, மரியாதையாகத் தான் பார்த்துக்கிட்டா; அந்த இங்கிதமில்லா மனுஷன் தான், அதை கெடுத்துக்கிட்டார்...' என்று, பரிகசித்தனர்.
எந்த செயலையும் செய்ய விடாமல் தடுக்கும் அவருக்கு, வீணா வைத்த பெயர், 'முட்டுக்கட்டை!' சமயத்தில், குழந்தைகளை திட்டுவது போல், 'முட்டுக்கட்டை... இங்கிதம் தெரியாத சங்கீதம்...' என்பாள். அது, அவருக்கு புரிந்தாலும், கண்டுகொள்ளமாட்டார்.
குழந்தைகளுடன் கோவிலுக்கு சென்று, வீணா வீடு திரும்பிய போது, வழக்கம் போல், 'தன்னன்னா...' பாடிக் கொண்டிருந்த ராஜரத்தினம், ''இப்பத்தானே கோவிலுக்கு போனீங்க... அதுக்குள்ள வந்துட்டீங்களே,'' என்றார், 'தன்னன்னா'வுக்கு நடுவே!
''சாமி பாத்தாச்சு; திரும்பி வந்தாச்சு... இதுல கூட குறையா,'' என்றாள், 'வெடுக்'கென்று!
''சிவன் கோவிலுக்கு போனா, சித்தநேரம் உட்கார்ந்துட்டு வரணும்; அதுதான் ஐதீகம்...''
அவருடைய விளக்கத்தை கேட்க விரும்பாமல், 'விருட்'டென உள்ளே போனாள்.
''இந்த முறையெல்லாம், ரொம்ப சரியா சொல்வாரு; குடும்பத்துல எப்படி இருக்கணும்கிற முறைய மட்டும் தெரிஞ்சுக்க மாட்டாரு; முட்டுக்கட்டை...'' என்று முனங்கியபடியே பாத்திரங்களை, 'ணங்' என்று வைத்தாள்.
அவள் பேசியது, அவருக்கு நன்றாகவே கேட்டது. குழந்தைகளை இழுத்து, பக்கத்தில் அமர்த்தியவர், ''சூர்யா... நீ சொல்லேன் முட்டுக்கட்டைன்னா என்ன...'' என்று, பெரியவர் கேட்கவும், அதிர்ந்து, காதுகளை தீட்டினாள், வீணா.
''முட்டுக்கட்டையா... அது, நீங்க தான் தாத்தா...'' என்றான், சூர்யா.
உடனே, சுசித்ரா, ''அம்மா எல்லார்கிட்டையும் அப்படித் தான் தாத்தா சொல்வாங்க... அதுசரி, முட்டுக்கட்டைன்னா என்ன தாத்தா?'' என்று கேட்கவும், வீணாவுக்கு அவமானத்தில் மூக்குடைந்து போனது.
ஆனால், வழக்கம் போல், இதற்கும் அலட்டிக் கொள்ளாமல், 'பக பக' வென, சங்கீத சிரிப்பு சிரித்த பெரியவர், ''சுசி குட்டி... எங்கவூர்ல, அம்பலத்தார் கோவில்ல தேரோட்டம் நடக்கும். தங்க தேர், வெள்ளி தேர் ஓட்டமெல்லாம், சன்னிதிக்குள்ள மட்டும் தான்; ஆனா, கட்ட தேரை தான், ஊரைச் சுத்தி இழுத்துட்டு வருவாங்க... ஓடுற தேரை நிறுத்த, அங்கங்க போடுறது தான் முட்டுக்கட்டை. அப்படி முட்டுக்கட்டை போட்டாத்தான், தேரை விரும்பின பக்கம், திருப்ப முடியும்; வேண்டின இடத்துல நிறுத்தவும் முடியும்.
''முட்டுக்கட்டை போடுறதை, தடைன்னு நினைக்கிறவன், அறிவு முதிர்ச்சி இல்லாதவன்; அது, வேற நல்ல திருப்பத்திற்கான வழிங்கறது தான், உண்மையில் அர்த்தம். இது புரியிறவங்களுக்கு புரியும்,'' என்றதும், வீணாவுக்கு, 'சுரீ'ரென்றது.
அர்ச்சனை கூடையில் இருந்த வாழைப்பழத்தை எடுத்து உரித்து, தாத்தாவிற்கு ஊட்டியபடியே, தன் மழலைக் குரலில், ''அப்ப, அம்மா, உங்கள முட்டுக்கட்டைன்னு சொன்னது நல்லதா தாத்தா...'' என்று
சுசித்ரா கேட்க, அவமானத்தில் உறைந்து போனாள் வீணா.
சில நொடிகள் அமைதியாக இருந்த ராஜரத்தினம், பின், ''சுசிமா... அம்மா உனக்கு நிறைய நல்லது சொல்லி குடுத்திருக்காங்க; அது, நல்ல விஷயம். பொய் பேசக் கூடாதுன்னு சொல்லிக் குடுத்த அம்மா, குழந்தைங்க முன், பெரியவங்கள, தப்பா பேசி, அப்படி பேசறது தப்பில்லங்கற மனோபாவத்தை, அவங்களுக்கு மறைமுகமா கத்து தர்றாங்கறத புரிஞ்சுக்க முடியல பாத்தியா... இதுமாதிரி அறியாமைக்கு தான், தாத்தா முட்டுக்கட்டை போடுறேன்.
''நீங்க நாலு பேரும், அம்பலத்தார் கோவில் தேர் மாதிரி! உங்கள நிறுத்த வேண்டிய இடத்துல நிறுத்தி, போக வேண்டிய திசைய, சரியாக்கி விடற முட்டுக்கட்டை தான் தாத்தா,'' என்று ராஜரத்தினம் முடிக்க, தாத்தாவை கட்டிக் கொண்டனர் குழந்தைகள்.
சிலிர்த்து போய் நின்றாள், வீணா. குழந்தைக்கு சொல்வது போல், மருமகளையும், குழந்தையாய் பாவித்து, அவர் தந்த அறிவுரையில், நெகிழ்ந்து போனாள். அவருடைய இதயம், இவர்களுக்காக துடிக்கும் போது, இவள் எதற்காக, அவர் மீது குற்றம் சுமத்த துடிக்க வேண்டும்!
தாழ்ந்த தலையுடன், அவருக்காக காபி கலந்து எடுத்து வந்தாள். அவளுடைய கலங்கிய கண்களும், வாடிய முகமும், இவரை, அவள் புரிந்து கொண்டதை, சொல்லாமல் சொன்னது.
''மருமகளே... காபியா குடு... குடிச்சா தான், காபி ராகத்துல, ஒரு பாட்டை, 'ஸ்ட்ராங்'கா பாட முடியும்.''
அவர் மறுபடியும், 'தரரீனா...' பாட ஆரம்பித்தார். இப்போது, அது, அவளுக்கு சுகமான ராகமாய் இருந்தது.

எஸ்.பர்வின் பானு

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Stalin - Kovilpatti,இந்தியா
10-ஜூலை-201711:31:00 IST Report Abuse
Stalin நல்ல கதை சுருக்கம் அருமை
Rate this:
Share this comment
Cancel
k.venkat -  ( Posted via: Dinamalar Android App )
09-ஜூலை-201715:41:59 IST Report Abuse
k.venkat excellent story needed moral
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
09-ஜூலை-201710:17:17 IST Report Abuse
Manian ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் நேற்றய தினமலரில் அறிவியல் ஆயிரம் பகுதியில் ஆனி மாதம் (?)பற்றிய சில பழ மொழிகளை கண்டேன். அது போன்ற "தமிழ் பழ மொழிகளும் அவற்றின் ஆங்கில மொழி பெயர்ப்பும்" என்று பேராயர் பெர்ஸிவால் என்பவரால் சுமார் 6000 பழமொழிகள் 1874ல் மைலாப்பூரில் இருந்து (கூகிளில் தேடுங்கள்) வெளியிடப்பட்டது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழ மொழி உள்ளது. இது இப்போது ரோபாட்டுகளால் உணரச் செய்யும் மென்பொருளாக மாற்றப்பட்டுள்ளது. ஆகவே, மாதங்கள். பயிர்கள் போன்ற விவசாயம் சம்பந்தமான பழமொழிகளை (அவை 90% அனுபவ பாடச்சுருக்கமே - ஜோதிடம் போன்றவை விளக்கமே) ஏன் செயற்கை அறிவு சார்ந்த மென் பொருளாக மாற்றி விவசாயிகள் வாழ்வை வளமாக்கலாமே ஆனால் கோட்டாக்கள் இருக்கும் வரை இது நடக்காதே என்ற வருத்தமே அதிகமாகிறது. 1 கோடி சம்பளம் என்றால், அரசியல், அரசாங்க வியாதிகள் தங்கள் வாரீசை அல்லவா பணியில் அமர்த்துவார்கள் ஆனால் முதுகில் சவாரி செய்ய தூக்கிகளை எப்போதோ நாட்டை விட்டு விட்டார்களே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X