ஜே.ஆர்.டி. டாடா
29.7.1904 - 29.11.1993
பாரீஸ், பிரான்ஸ்
விண்ணில் பறக்க வேண்டுமென்ற அவருடைய நீண்ட நாள் கனவும், ஆசையும் 1929ல் நிறைவேறியது. அதுமட்டுமில்லாமல் இந்தியாவின் முதல் விமானி என்ற பெருமையும் ஜே.ஆர்.டி. டாடாவுக்குக் கிடைத்தது.
டாடாவின் தந்தை இந்தியர், தாய் பிரெஞ்சுக்காரர். அதனால் அவர் பிரான்சில் பிறந்து, வளர்ந்து அந்த நாட்டின் ராணுவத்தில் சிறிது காலம் பணியாற்றினார். ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா (Jehangir Ratanji Dadabhoy Tata )என்பதுதான் ஜே.ஆர்.டி. டாடா வின் முழுப்பெயர். ரத்தன்ஜி அவரது தந்தையின் பெயர்.கேம்பிரிட்ஜில் பொறியியல் படிக்க லண்டன் சென்ற டாடாவை, அவரது தந்தை இந்தியாவுக்கு அழைத்தார். டாடா ஸ்டீல் நிறுவனத்தில், சம்பளம் பெறாத தொழிலாளியாக, 21ம் வயதில் சேர்ந்தார். தொழில் நுணுக்கங்கள் அனைத்தையும் வேகமாகக் கற்றுக்கொண்டு, டாடா ஸ்டீல் குழுமத்தின் தலைவராக 34வது வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்த பின்பு அவர் 1932ல் உருவாக்கிய டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம் 1953ல் 'ஏர் இந்தியா' வாக மாற்றமடைந்தது. திறமையான இளைஞர்களைக் கண்டுபிடித்து, அவர்களை தன் நிறுவனத்துக்கு அழைத்துவந்து, முக்கியப் பொறுப்புகளை ஒப்படைத்தார். இதுதான் அவரது தொழில் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, உள்நாட்டு உற்பத்திக்கான தேவை அதிகரித்தது. அதனால், அப்போதைய பிரதமர் நேருவுடன் இணைந்து தன் நிறுவனத்தின் உதவியுடன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தார். 53 ஆண்டுகள் தலைமைப் பொறுப்பில் இருந்து நிறுவனத்தை வழிநடத்தினார். அவர் பொறுப்பேற்றபோது 14 நிறுவனங்களைக் கொண்டிருந்த டாடா குழுமம், 50 ஆண்டுகளில் 97 நிறுவனங்களாகக் கிளை பரப்பி பெரிய விருட்சமாக நின்றது.
தொழிலதிபர்களையோ, தொழில் நிறுவனங்களையோ பற்றிப் பேச நினைத்தால் உடனே நினைவுக்கு வருவது 'டாடா'. அந்த அளவுக்கு முன்னணி நிறுவனமாக மாற்றிக் காட்டினார். ஏர் இந்தியா, டி.சி.எஸ், டைட்டன், டாடா மோட்டார்ஸ் என இவரது ஒவ்வொரு கனவும் பெரும் வெற்றியுடன் நனவானது.
எளிமையான வாழ்வு, சமூக நலனில் அக்கறை, கடின உழைப்பு, விடாமுயற்சி என, எல்லாவற்றுக்கும் உதாரணமாக இருந்தார்.
இந்திய தொழில் துறை வளர்ச்சியில் பங்களித்தமைக்காக, 1992ம் ஆண்டு டாடாவுக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற முதல் தொழில் அதிபர் டாடாதான்.