கர்நாடக கலாஸ்ரீ குரு ரேவதி நரசிம் மன் வழுவூர் பாணியில் தலைசிறந்த குருவாக நாட்டிய கேசரி வழுவூர் ராமையா பிள்ளையின் அக்கறையான பயிற்சியில் வழுவூர் நாட்டிய நுணுக்கங்களையும் மரபு மீறாத தன் சொந்த கற்பனைகளையும் இணைத்து நடன வடிவமைப்பை மிக அருமையாக செய்து வரும் சேவை பாராட்டுக்குரியது.
குறிப்பாக பெங்களூரில் கலா நிகேதன் நாட்டியப் பள்ளி மூலம் நிறைய மாணவ - மாணவியரை சிறப்பான பயிற்சியுடன் இவர் உருவாக்கி வருகிறார். சென்னை தியாகப்ரும்ம கான சபையின் நிறைவு நாளாக, தியாகராயநகர் வாணி மகால் ஓபல் ரெட்டி அரங்கத்தில் நடைபெற்றது ஷ்ரேயா பாலாஜியின் நடனம். நிகழ்ச்சியின் இனிய துவக்கமாக பத்மஸ்ரீ மதுரை கிருஷ்ணனின் கம்பீர நாட்டை புஷ்பாஞ்சலியை ஒரு புஷ்பமாக ஷ்ரேயா மலர்ந்து ஆடிய மென்மையான - நளினமான அசைவுகள் வசீகரித்தன. ஸ்ரீ புரந்தரதாசருடைய கஜவதனா பேடுகே (அம்சத்வனி) பாடலுக்கு பொருத்தமான அபிநயத்துடன் ஒவ்வொரு முத்திரைகளும், அருதி நிலைகளும் சிறப்பாக இருந்தன. ஸ்வரங்களுக்கு பாத வேலைகள் பள்ளிச்சென்று பார்க்க அழகாக இருந்தன. லால்குடியின் தேவர் முனிவர் தொழும் பாதன் (சண்முகப்பிரியா - ஆதி) வர்ணத்தை எவ்வளவுதரம் பார்த்தாலும் அலுப்பு தட்டுவதில்லை. அவ்வளவு நயமான சொல் அலங்காரம் மெட்டமைப்பு - ஸ்வரங்களுடன் திருமலையப்பனின் கோலாகலங்களை பட்டியல் போடும் அருமையான வர்ணம் இது. ஷ்ரேயா இந்த வர்ணத்தை படு அக்கறையுடன் ஆடியது சிறப்பாக இருந்தது. லயம் பிறழாமல் அக்கறையுடன் ஆடியது, பார்க்க மனம் மகிழ்ந்தது.
குரு ரேவதி நரசிம்மனின் ஜதிகளின் ஒலி மென்மையாக கேட்பினும், உள்ளே நிறைய பொடிகள் இருக்கும். அதை ஆடுவதற்கும் நல்ல லய ஞானமும், உழைப்பும் வேண்டும். அடுத்ததாக தொடர்ந்த திருப்பனந்தாள் பட்டாபிராமய்யா ஜாவளியான நீ மாடலே மாயநுரா (பூர்வி கல்யாணி) ஜாவளியை ஷ்ரேயா ஆடியது முதல் தர அபிநயமாக இருந்தது என்றால் மிகையல்ல. காரணம் ஷ்ரேயாவின் நயனங்கள் கதை பேசின. ஷ்ரேயாவிற்கு பால்வடியும் முகம் இயற்கையிலேயே இருப்பதால், அவர் ஆடிய ஊத்துக்காடு பால் வடியும் முகம் (நாடகுறிஞ்சி) பதத்திலும், அபிநயமும், அசைவுகளும் அழகாக அமைந்து விட்டன. நிகழ்ச்சியின் நிறைவாக சென்னை மேடைகளில் பார்க்க முடியாத ஒரு தில்லானா, (சுமனேச ரஞ்சனி - இயற்றியவர்கள் நாகவல்லி நாகராஜ் மற்றும் சதாவதானி கணேஷ்) ஷ்ரேயாவிற்கு குரு ரேவதியின் சிறந்த லய கோர்வைகள் எடுப்பாக இருந்ததோடு, ஆடுவதற்கு பாதங்களும் கடும் வேலையும் வைத்தது. நிருத்த வேலைகள் படு அழகாக அமைந்திருந்தன.
இளம் ஷ்ரேயா பத்மநாப நகர், பெங்களூரில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவி. நாட்டியம், படிப்பு, ஓவியம் மற்றும் லீடர் க்வாலிட்டி ளுடன் நல்ல பெயர் சம்பாதித்து கொண்டிருப்பதோடு, நாட்டியத்திலும் நிறைய விருதுகளை வாங்கி குவித்திருப்பதும் கூடுதல் சிறப்பாக உள்ளது. பாரதி வேணுகோபாலுடைய பாட்டு நிகழ்ச்சிக்கு மிக நன்றாக அனுசரணையாக இருந்தது. நடராஜமூர்த்தி வயலின், குறிப்பாக கே.எஸ்.ஜெயராம் புல்லாங்குழல் நிகழ்ச்சியில் மிகச் சிறப்பான வாசிப்புடன் இருந்தது.