“மீரு பாக உன்னாரா?” என்று ஞாநி மாமாவைப் பார்த்துக் கேட்டபடி பாலு வந்தான்.
“என்ன ஆச்சு உனக்கு? புதுசா ஏதாவது தெலுங்கு சிநேகிதம் பிடித்திருக்கிறாயா?” என்றார் மாமா.
“எனக்கு ஏற்கெனவே நாலஞ்சு தெலுங்கு நண்பர்கள் உண்டு. இது அதற்காக இல்லை. நான் ஆகஸ்ட் 29ந் தேதி தெலுங்கு மொழி தினம் கொண்டாடப் போகிறேன். அதற்காக ஏழெட்டு தெலுங்கு வாக்கியங்களைப் பேசக் கற்றுக்கொள்கிறேன்.” என்றான் பாலு.
“சால சந்தோஷமு” என்றேன்.
ஆந்திரத்தில் தெலுங்கு மொழிக்கென்று ஒரு தினம் கொண்டாடப்படுவது போல வேறு மாநிலங்களில் கொண்டாடப்படுவதாகத் தெரியவில்லை. கர்நாடகத்தில் மாநிலம் உருவான நாளை 'ராஜ்யோத்சவா' என்று கொண்டாடுகிறார்கள். கேரளத்தில் அநேகமாக 'விஷு' ஒரு மலையாள தேசிய தினம் மாதிரிதான் இருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழுக்கென்று ஒரு மொழி தினம் இல்லை. உ.வே.சா, பாரதி, பாரதிதாசன், கம்பன், இளங்கோ இப்படி யாராவது ஒருத்தரின் பிறந்த தினத்தை தமிழ் மொழி தினமாகக் கொண்டாடலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.
ஒரு தெலுங்கு எழுத்தாளரின், அறிஞரின் பிறந்த நாள்தான் 'தெலுங்கு மொழி தின'மாகக் கொண்டாடப்படுகிறது என்றார் மாமா. கிடுகு வெங்கட ராமமூர்த்தி என்ற எழுத்தாளர் 1863 ஆகஸ்ட் 29 அன்று பிறந்தவர். எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்க, இவர் பிறந்தநாளை ஏன் 'தெலுங்கு மொழி தின'மாக அறிவித்தார்கள் என்று கேட்டேன். “இவர்தான் பள்ளிக் கூடங்களில் தெலுங்கு எப்படி கற்பிக்கப்படவேண்டும் என்பதை நிர்ணயிக்கப் போராடியவர்” என்றார் மாமா. பேச்சு மொழி ஒரு மாதிரியாகவும் எழுத்து மொழி ஒரு மாதிரியாகவும் இருக்கும்போது பாடங்களில் இலக்கிய மொழியைப் பின்பற்றுவதை எதிர்த்துப் போராடியிருக்கிறார் கிடுகு. அன்றாட வாழ்க்கைக்கான மொழியோடு இயைந்ததாக பாடமொழி இருக்க வேண்டும் என்பதற்காகப் பல வருடம் கிடுகு போராடி நூல்கள் எல்லாம் எழுதிக் காட்டியிருக்கிறார். கடைசியில் 1930களில் அவர் கருத்தை அரசாங்கங்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றன.
“இப்போது தமிழ்நாட்டில் கல்வியில் நிறைய மாற்றங்கள் செய்கிறார்களே. அவர்கள் இதை கவனிக்கவேண்டும்” என்றான் பாலு. “பலரை தமிழ் ஒழுங்காகப் படிக்க விடாமல் செய்வதே தமிழ்ப் பாடப் புத்தகம்தான்” என்று அவன் சொன்னதும் மாமா சொன்னார். “6 முதல் 9 வரை ஆரம்ப வகுப்புப் பாட நூல்களை எளிமையாக எழுத வேண்டும். வகுப்பு வாரியாக படிப்படியாக புதுச் சொற்கள், சற்று கடினமான சொற்களை அறிமுகம் செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் எந்த மொழியிலும் நல்ல தேர்ச்சி அடைய முடியும்.”
“பாடப் புத்தகம் மட்டும் படித்தால் மொழித் தேர்ச்சியோ அறிவு வளர்ச்சியோ வந்துவிடாது என்கிறார்களே? பொதுப் புத்தகங்கள் நிறையப் படிக்க வேண்டும் என்கிறார்களே” என்றேன். “உண்மைதான். வாழ்க்கையைப் புரிந்துகொள்ள இலக்கியமும் இலக்கியமல்லாத நூல்களும் நிறையப் படிக்க வேண்டும். அதற்குத்தான் நூலகங்கள்.” என்றார் மாமா.
“அச்சடித்தலைக் கண்டுபிடித்த பிறகுதானே நூலகங்கள் உருவாகியிருக்க முடியும்? ஒரே புத்தகத்தை நிறைய ஊர் நூலகங்களில் வைப்பதற்கு அச்சடித்தால்தானே முடியும்?” என்று கேட்டான் பாலு. “இல்லை. 4600 வருடங்களுக்கு முன்னால் சுமேரிய நாகரிகத்திலேயே நூலகம் இருந்திருக்கிறது. களிமண் பலகைகளில் எழுதினார்கள். அந்தப் பலகைகளை தொகுத்து ஓர் இடத்தில் வைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. பின்னர் நம் நாட்டிலும் நாளந்தா பல்கலைக்கழகத்தில் பிரும்மாண்டமான நூலகம் இருந்திருக்கிறது. அச்சு வருவதற்கு முன்னால் ஓலைச்சுவடி காலத்திலேயே நூலகங்கள் வந்துவிட்டன. இன்று டிஜிட்டல் நூலகங்கள் வந்தபின்னரும் கூட, நூல்களைத் தொகுக்கும் முறையாக ஒரு தமிழர் உருவாக்கிய முறையைத்தான் நாடு முழுக்க பின்பற்றுகிறோம்.” என்றார் மாமா.
யார் அந்தத் தமிழர் என்று கேட்டேன். மாமா சொன்னதுப் பிரமிப்பாக இருந்தது.
சீர்காழியில் 1863 ஆகஸ்ட் 12 அன்று பிறந்த எஸ்.ஆர். ரங்கநாதனின் பிறந்த நாள் தான் இந்தியாவில் 'தேசிய நூலக தின'மாகக் கொண்டாடப்படுகிறது. ஒரு நூலகம் அமைக்க ஐந்து விதிகள் என்று அவர் உருவாக்கியவைதான் இன்றும் பின்பற்றப்படுகின்றன. நூல்களை ஆசிரியர் வாரியாகப் பிரிப்பதா, சப்ஜெக்ட் வாரியாகப் பிரிப்பதா, எப்படிப் பிரிப்பது என்பதற்கு எல்லாவற்றையும் உள்ளடக்கி அவர் உருவாக்கிய 'கோலன் முறை'தான் இப்போதும் பயன்படுகிறது. சென்னைப் பல்கலைக்கழகம், காசி பல்கலைக்கழகம் இரண்டிலும் அவர்தான் நூலகங்களை உருவாக்கி செம்மைப்படுத்தியிருக்கிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர் அடிப்படையில் கணித ஆசிரியர். நூலகத்துக்கென்று அவர் உருவாக்கிய கோலன் முறை இன்று உயிரியல், இதழியல், கணினி என்று பல துறைகளிலும் பயன்படுகிறதாம்.
“நான் பெரியவனான பிறகு..” என்று பாலு ஆரம்பித்தான். “நூலகர் ஆகப் போகிறாய் இல்லையா?” என்று எல்லாரும் சிரித்தோம்.
“இல்லை. கிடுகு, ரங்கநாதன் இரண்டு பேர் செய்ததையும் சேர்த்து செய்யப் போகிறேன். எல்லா சப்ஜெக்டையும் எளிமையான மொழியில் நூல்களாக்குவேன். அந்த நூல்களைக் கொண்டு ஒரு நூலகம் அமைப்பேன்.” என்றான். “அதை இப்போதே செய்யலாமே” என்றார் மாமா. “எளிமையாக எழுதப்பட்ட நூல்கள் இப்போதும் இருக்கின்றன. அவற்றைத் திரட்டி ஒரு நூலகம் வை.” என்றார். “ அது சின்னதாகத்தானே இருக்கும்” என்றான் பாலு.
“பெரிதாக இருப்பதைவிட சின்னதாக இருந்து அதிகம் சாதிக்கலாம். சான் மரினோ என்று ஒரு குட்டி நாடு இருக்கிறது தெரியுமா?” என்றார் மாமா. “உலகத்திலேயே பழைய குடியரசு இதுதான். 1700 ஆண்டுகளுக்கு முன்னால் உருவான குடியரசு. இத்தாலி அருகே இருக்கும் இந்த மலை நாட்டில் மொத்த மக்கள்தொகை 33 ஆயிரம் பேர். பரப்பளவு வெறும் 61 சதுர கிலோமீட்டர். இந்த நாட்டுக்கு கடன் எதுவும் இல்லை. செலவை விட வரவு அதிகமான பட்ஜெட். 97 சதவீத மக்கள் படித்தவர்கள். வேலையின்மை என்ற பிரச்னையே இல்லை. ஆயுட்காலம் 80க்கு மேல். ஆயிரம் பேருக்கு ஆறு மருத்துவர்கள் என்ற விகிதத்தில் டாக்டர்கள் இருக்கிறார்கள். தேர்தல் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடந்தாலும், ஆட்சித் தலைவர்களை இரண்டு வருடத்துக்கொரு முறை மாற்றுகிறார்கள். ஒரு தலைவர் கிடையாது. இரண்டு பேர். ஒவ்வொரு கட்சியும் வாங்கும் வாக்குக்கேற்ப அதற்குப் பிரதிநிதி உண்டு. ஆட்சித் தலைவர்களாகப் பெண்கள் அதிகம் இருந்த உலக நாடு இதுதான். 15 முறை இருந்திருக்கிறார்கள். இந்த நாட்டில் எய்ட்ஸ் நோயே கிடையாது. எனவே சின்னதில் நிறைய சாதிக்க முடியும்.” என்றார் மாமா.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சான் மரினோவுக்குப் போய்ப் பார்ப்பது என்று எல்லாரும் முடிவு செய்தோம்.
வாலுபீடியா 1: 2700 வருடம் முந்தைய மெசபடோமிய நாகரிகத்தில் இருந்த நூலகத்தில் 30 ஆயிரம் களிமண் பலகை நூல்கள் இருந்தது கண்டறியப்பட்டிருக்கிறது.
வாலுபீடியா 2: சான் மரினோ நாடு உருவான நாள் செப்டம்பர் 3, கி.பி.301ம் ஆண்டு.