'பீரியட்ஸ் அண்ணா வராருப்பா”' என்று பிரவீனைப் பார்த்துச் சிரிக்கிறார்கள் பள்ளிப் பிள்ளைகள். கிராமங்களில் பிரவீனைப் பார்த்தால், பெண்கள் ஓடிவிடாமல், நின்று பேசிவிட்டுத்தான் செல்கிறார்கள். ஆண்களும் இப்போது பிரவீனைப் பார்த்துக் கை ஓங்குவதில்லை. யார் இந்தப் பிரவீன்? பெயருக்கு முன்னால் ஏன் 'பீரியட்ஸ்' அடைமொழி?
பிரவீன் நிக்கான், மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள புனே நகரில் வசிக்கிறார். வயது 24. இந்தியா முழுவதும், பல கிராமங்களில் உள்ள பெண்களும், பள்ளிகளும் இவரைத் தேடுகின்றனர். இந்திய அரசு தொடங்கி ஐ.நா. அமைப்பு வரை இவர் பிரபலம்.
மாதவிடாய் பற்றிய மூடநம்பிக்கைகளால் பெண்கள் வாழ்க்கையில் ஏற்படும் தாக்கத்தைத் தடுக்க, 'ரோஷிணி' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை 18 வயதில் தொடங்கினார் பிரவீன். அதன் மூலம், பெண்களுக்குச் சுகாதாரப் பயிற்சி, மாதவிடாய் குறித்த அறிவியல் ரீதியான விழிப்புணர்வு கொடுப்பது, பள்ளிகளில் பயிற்சி அளிப்பது என 24 மணிநேரம் போதாமல் அலைந்து கொண்டிருக்கும் இளைஞர். சட்டம் இறுதியாண்டு படித்து வரும் இவருக்கு, 2016ம் ஆண்டு, 'தேசிய இளைஞர் விருது' கிடைத்திருக்கிறது. அவருடைய நேர்காணலிலிருந்து:
ரோஷிணி எப்படி பிறந்தாள்?
இப்படி ஒருத்தி என் வாழ்க்கையில வருவான்னு நினைச்சே பார்க்கல. நான் புனேயில் வளர்ந்த நகரத்துப் பையன். என்னைச் சுத்தி இருக்கிற சமூகப் பிரச்னைகள் பத்தின விழிப்புணர்வு உண்டு. அப்பப்ப நண்பர்களுடன் சேர்ந்து மேடை நாடகங்கள், தெருக்கூத்து போடுவோம்.
ஒருமுறை நண்பர்களோட அசாம் மாநிலத்துக்கு படிப்பு விஷயமா போயிருந்தோம். அங்க இருக்கிற ஒரு சின்னப் பொண்னைப் பார்த்து, “இன்னிக்கு நீ ஸ்கூலுக்கு போகலியா? என்ன ஸ்கூல் படிக்கிற?” அப்படின்னு கேட்டேன்.
“கடவுள் எனக்கு தண்டனை கொடுத்துட்டாரு, அதனால நான் ஸ்கூலுக்கு போகல”ன்னு சொன்னா. ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன். அவ சொன்னது எனக்குப் புரியலன்னு அவளோட அப்பாகிட்ட கேட்டேன். அவரும் அதேதான் சொன்னாரு. அப்பதான் ஓர் உண்மை புரிஞ்சுது. அந்த ஊர்ல பெண் குழந்தைங்க வயசுக்கு வந்த பின்னர், பள்ளிக்கு அனுப்ப மாட்டாங்களாம். அவளைப் பள்ளிக்கு அனுப்பி வைக்க நிறைய முயற்சி செய்தேன். ஆனா மக்களை மாத்தறது அவ்வளவு எளிதானதல்ல.
ரோஷிணி என் மனசை ரொம்ப பாதிச்சுட்டா. முட்டாள் தனமான நம்பிக்கையால அவ வாழ்க்கை பாதிச்சதை என்னால ஏத்துக்க முடியல. புனே வந்தேன். இதுக்காக ஏதாவது செய்ய நினைச்சேன். என் மனசுல பதிஞ்ச ரோஷிணிக்கு முழு உயிர் கொடுக்க நினைச்சேன். ரோஷிணிங்கிற பெயரிலேயே ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினேன்.
கிராமங்களில் போய் மாதவிடாய் பத்தி, ஓர் ஆண் பேசறதை மக்கள் எப்படி ஏத்துக்கிட்டாங்க?
நிறையப்பேர் எதிர்ப்பைத் தெரிவிச்சாங்க. இதைப் பத்தி பேசினாலே கூச்சப்படுவாங்க. ஆண்களுக்கு கோபம் வரும். ஆனா, மாதவிடாய் குறித்து பேசணும், மக்களோட சுகாதாரத்தை மாத்தணும் என்று முடிவு செஞ்சதுக்குப் பின்னாடி, மாதவிடாய் சுகாதாரம் பத்தின படிப்பைப் படிச்சேன். உலகம் முழுவதும் இருக்கிற பெண்கள் சுகாதாரப் பிரச்னைகள் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். நேரடிப் பயிற்சி வகுப்புகள் நடத்துவாங்க. படிப்படியா எனக்கு நம்பிக்கை வந்தது. நாங்க இப்ப நிறைய பயிற்சிகள் கொடுத்துக்கிட்டு இருக்கோம். அதுக்கு பெண்கள் வருவாங்க. எடுத்ததும் மாதவிடாய் பத்தி பேசாம, நம்பிக்கைகளை ஏற்படுத்தும் பயிற்சிகள் கொடுப்போம். அப்புறம் மெதுவா இதைப் பத்தி பேசுவோம். அவங்களுக்கு எங்க நோக்கம் புரிஞ்சிடும், தைரியமா பேச ஆரம்பிச்சிடுவாங்க.
மாதவிடாய் பத்தின மூடநம்பிக்கைகள் இன்னும் இருக்கா?
ஒவ்வொரு இடத்துலேயும், ஒவ்வொரு மாதிரி. இது கடவுள் கொடுத்த சாபம், வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது, யாரையும் பார்க்கக்கூடாது, மாதவிடாய் இரத்தப்போக்கைத் தடுக்கக் கூடாதுன்னு நிறைய தேவையில்லாத நம்பிக்கைகள் பல ஆண்டுகளா இருக்கு. இதை மாத்தறது சாதாரண விஷயம் கிடையாது.
இந்தப் பணியில் வெற்றி, நிறைவு எது கிடைக்கும்?
வெற்றின்னு சொன்னா எண்கள் தான் நினைவுக்கு வருது. பள்ளியில படிக்கும்போது, நல்ல மதிப்பெண்கள் எடுப்பேன். எண்கள்தான் வெற்றியை நிர்ணயம் செய்யும்னு நினைச்சேன். இப்ப கேட்டீங்கன்னா, நான் செய்யற இந்த விஷயம், உடனடியா எந்த மாற்றத்தையும் தராது. பல ஆண்டுகளா கிராமங்களில் மாதவிடாய்னா ஒரு பேய்னு நினைச்சுட்டு இருந்திருக்காங்க. மாதவிடாய் என்பது, உடலில் ஏற்படும் மாற்றம். இந்தச் சமயத்துல சுகாதாரமா இருக்கணும், காட்டன் துணிகளைப் பயன்படுத்தணும் சொல்லிக்கொடுத்து புரிய வெச்சிருக்கேன். இதை வெற்றின்னு சொல்லலாமா?
நான் செய்யும் இந்த வேலை மனநிறைவைக் கொடுக்குது. உண்மையா இதிலிருந்து எனக்குப் பண உதவி எதுவும் இல்ல. பெண்களோட வளர்ச்சியில மாதவிடாய் ஒரு தடையாக இருக்கக்கூடாதுன்னு என்னோட மனசு சொல்றதை கேட்டுப் பண்றேன்.