நாம் பிறரோடு உரையாடும்போது, நம் கருத்துகளை வலிமையாகவும் மற்றவர்க்கு எளிதில் விளங்கும்படியாகவும் கூற வேண்டும். அவ்வாறு கூறினால், எதிரில் உள்ளவர்க்கு நம்முடைய கருத்துகள் இன்னும் தெளிவாகப் புரியும். அதற்குத் துணை செய்கின்றவை பழமொழிகள்.
முற்காலத்தில் அனுபவப் பாடத்தின் மூலம் ஒவ்வொன்றாய்க் கற்றுக்கொண்ட நம் முன்னோர்கள், அவற்றை எளிய சொற்றொடர்களாக்கிப் பயன்படுத்தி வந்தனர். அவை அறிவுரையாகவும், குழப்பங்களைத் தீர்க்கும் விளக்கவுரையாகவும், மனம் தளரும்போது, தட்டி எழுப்புகின்ற ஆறுதல் உரையாகவும் அமைந்தன. அவற்றிலிருந்து தங்கள் மனத்தை ஆற்றுப்படுத்திக் கொண்டனர். தங்களை மேம்படுத்திக் கொண்டனர்.
“எதுக்கு இப்படி அரக்கப் பரக்க ஒரு வேலையைச் செய்யறே? அவசரத்தில கையை விட்டால் அண்டாக்குள்ளகூட போகாது…” என்பார்கள். வாயகன்ற பாத்திரமே ஆனாலும் நாம் பதற்றத்தில் கையை நுழைத்தால் விளிம்பில்தான் இடித்துக்கொள்வோமே தவிர, அண்டாவுக்குள் கையை நுழைத்துவிட முடியாது. அதுபோல் எளிய செயலையே செய்தாலும் அவசரமாகவும் பதற்றமாகவும் செய்தால், தவறாகத்தான் போகும் என்பது அப்பழமொழியின் சாரம். இதையே இன்னொரு பழமொழியாகவும் சொல்வார்கள். “பதறாத காரியம் சிதறாது” என்பார்கள். அதற்கும் அதே பொருள்தான்.
“எதையும் நின்னு நிதானமாகச் சாப்புடு… நொறுங்கத் தின்னா நூறு வயசு…” என்பர். நாம் உண்பனவற்றை நன்கு மென்று தின்றால்தான் செரிமானமாகும். அப்போதுதான் உண்ட பொருளில் இருந்த சத்துகள் உடலில் சேரும். பற்களால் நன்கு அரைத்து நொறுக்கித் தின்பதால், நூறு வயதுவரை நலமாக வாழலாம் என்பதைத்தான் அப்படிச் சொல்லிச் சென்றார்கள்.
ஒரு பணியைச் செய்கையில், அதன் மீதே நம் முழுக்கவனமும் இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட செயலில் ஈடுபட்டால் எல்லாச் செயல்களுமே கெட்டுப்போய்விடும். “ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைக்காதே” என்பார்கள். ஒரு நேரத்தில் ஒரு செயலைச் செய். இரண்டிலும் ஈடுபடாதே என்பது அதன் பொருள்.
உரிய நேரத்தில் ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதை விளக்க, “பருவத்தே பயிர்செய்” என்பார்கள். இப்படி எந்தப் பொருளை எடுத்துக்கொண்டாலும் அதில் நிறைவான அனுபவ முதிர்ச்சியோடு உயர்ந்த பொருள்களால் நிரம்பிய சொற்றொடர்களை நம் முன்னோர்கள் வழங்கிச் சென்றுள்ளார்கள். அவற்றை நாமும் கற்றுக்கொள்ள வேண்டும்.
நம் தாத்தா பாட்டிகளுக்கு எண்ணற்ற பழமொழிகள் தெரியும். அவற்றைக் கூறச் சொல்லிக் கேட்கவேண்டும். அதன் பொருள் என்ன என்று அவர்களிடமே கேட்டறிந்து கொள்ளலாம். நாமும் நம்முடைய அன்றாட வாழ்வில் பேசும்போதும், எழுதும்போதும் பல்வேறு பழமொழிகளைப் பயன்படுத்தலாம். அது நாம் நல்லறிவோடு விளங்குகிறோம் என்பதை உணர்த்தும் உரைகல்லாகும்.
- மகுடேசுவரன்