பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக நமது பாடத்திட்டம் ஆரம்பம் முதல் பல மாற்றங்களைக் கண்டுள்ளது. பெரும் பிரிவுகளுக்கு உள்ளடக்கப்பட்டு பள்ளியில் வழக்கமாகப் படிக்கிற பாடங்களாக தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகியவை உள்ளன. இவை தற்காலக் கல்விக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? கல்வியில் நவீன மாற்றங்களுக்கு ஏற்ப என்னென்ன பாடங்கள் சேர்க்கலாம் என்பது குறித்து, சென்னை, பம்மல், ஸ்ரீ சங்கரா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களிடம் உரையாடினோம். கற்றலை இனிமையாக்குதல், மொழிப்பாடங்கள், புதிய துறைப் பாடங்கள் என என்னென்ன விதமான மாற்றங்களைச் செய்யலாம் என்பது பற்றி, மாணவர்கள் விரிவாக, தெளிவான கருத்துகளை முன்வைத்து உரையாடினர்.
ர.யுகஸ்ரீ - 10ம் வகுப்பு: பாடத்திட்டத்தில் தற்போது உள்ள முறைப்படி எல்லாமே தேர்வை ஒட்டிய பாடங்களாக உள்ளன. அப்படிப் படிக்கிறபோது அந்தந்த ஆண்டுப் பாடங்களைப் படித்து, அடுத்த ஆண்டில் மறந்துவிடுகிறோம். புதிய பாடங்களைச் சேர்ப்பதைவிட ஏற்கெனவே உள்ள பாடங்களைப் புரிந்துகொண்டு படிக்கும் விதமாக மாற்றலாம். தேர்வு, மதிப்பெண் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், கற்றுக்கொள்வதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்.
சு.சாய் துர்கா - 10ம் வகுப்பு: திரும்பத் திரும்ப ஒரே பாடத்தையே படித்துக்கொண்டிருக்கிறோம். பல ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டம். தற்போதைய நிலவரங்கள், புள்ளிவிவரங்கள், முன்னேற்றங்களை அறிய முடியவில்லை. ஒவ்வோராண்டும் பாடங்களை அப்டேட் செய்யவேண்டும். புதிய விஷயங்களைச் சேர்க்கவேண்டும். துணைப்பாட நூல்களில் பல ஆண்டுகளாக ஒரே கவிதைகள், சிறுகதைகள் தான். தற்கால எழுத்தாளர்களின் படைப்புகள் சேர்க்கப்பட வேண்டும்.
சு.ஜெயஸ்ரீ - 11ம் வகுப்பு: புதிய பாடத்திட்டத்தைவிட, நாடு முழுக்க ஒரே பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தினாலே போதும். சி.பி.எஸ்.இ., மெட்ரிக் என பாடங்களில் வேறுபாடுகள் உள்ளதால் சமச்சீரான கல்வி கிடைப்பதில்லை. புள்ளியியல், சூழலியல் போன்ற துறைகளை மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே அறிமுகம் செய்யலாம். மனப்பாடப் பகுதிகளில் மாற்றமே இல்லை. இவற்றையாவது, ஒவ்வோராண்டும் மாற்றித் தந்தாலே போதும்.
ர.சங்கர விஸ்வநாதன் - 10ம் வகுப்பு: இப்போதுள்ள பாடத்திட்டத்திலேயே எல்லா துறைகளும் வந்துவிட்டன. அறிவியல் என்றால், இயற்பியல், புவியியல், வேதியியல் இருக்கிறது. சமூக அறிவியலில் வரலாறு, புவியியல், குடிமையியல் போன்றவை இருக்கின்றன. இவையெல்லாம் இன்னும் விரிவாக இருக்கலாம். கல்லூரிகளில் இருப்பது போல், எந்தப் பாடங்கள் பிடிக்கிறதோ, அவற்றைத் தேர்வு செய்து படித்துக்கொள்ளும் சுதந்திரம் மாணவர்களுக்கு வழங்கப்படலாம். அப்படிச் செய்யும்போது, மாணவர்கள் மகிழ்ச்சியோடு படிப்பார்கள்.
சி.பால விக்னேஷ் - 10ம் வகுப்பு: எனக்கு விவசாயம் வேண்டும்; கைத்தொழில்கள் வேண்டும். மோட்டார் சைக்கிள், கார் ரிப்பேர் செய்யும் பயிற்சிகள் வேண்டும். இவற்றில் பல பாடங்கள், வொகேஷனல் கோர்ஸ் என்று பிளஸ் 1, பிளஸ் 2வில் தான் வைத்திருக்கிறார்கள். ஏன், இன்னும் சின்ன வயதிலேயே வைக்கக்கூடாது?
ஜே.சந்தீப் - 10ம் வகுப்பு: தர்க்கம், தத்துவம், வெளிநாட்டு மொழிகள் ஆகிய பாடங்களை எல்லாம் சின்ன வயசிலேயே வைக்கலாமே? சிங்கப்பூரில் எலக்ட்ரானிக்ஸ், நாடகம், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு மருத்துவம், ஸ்மார்ட் மின்சாரத் தொழில்நுட்பம் போன்ற பாடங்கள் எல்லாம் பள்ளிகளேயே வைக்கப்பட்டுள்ளதாம். எதிர்காலத்துக்குத் தேவைப்படும் துறைகளை மனத்தில் வைத்து, புதிய பாடங்களை அறிமுகப்படுத்தலாமே?