சென்னை இசை விழா ஜனவரி மாதம் முடிந்தாலும் தொடர்கிறது இசை நிகழ்ச்சிகள் . மிக வித்தியாசமான இசை நிகழ்ச்சிகள் நடக்கும்போது, நம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தானே. அதுபோன்ற ஒரு நிகழ்ச்சி தான், கடம் சுரேஷின் ஜாஸ் இசை நிகழ்ச்சி.
"க்ளே அண்ட் டிரம் இந்தியா' என்ற அவர் குழுவினர் மூலம் கொடுத்த ஒரு அழகான கலப்பு இசை (ப்யுஷன்) அருமை. கடம் சுரேஷ், தமது வாத்தியத்தின் மூலம், உலகம் முழுதும் ஒரு வலை அமைப்பை ஏற்படுத்தி, உலகளவில் பல மாணாக்கர்களை உருவாக்கியும், பல நாட்டுக் கலைஞர்களுடன் இணைந்தும் நிகழ்ச்சியை கொடுத்து வருகிறார்.உலகளவில் நடக்கும் ஜாஸ் கொண்டாட்டம், டிரம்ஸ் நிகழ்ச்சிகளில், கடம் சுரேஷின் பங்களிப்பு சிறப்பானது. லயமேதை ஹரிஹர சர்மாவின் சீடரான கடம் சுரேஷ், விக்குவிடமும் பயின்று, பின் (விக்கு விநாயகராமின் தந்தை) உமையாள்புரம் நாராயண சுவாமி அவர்களின் கடைசி காலத்தில், அவரின் மிக வித்யாசமான கட வாசிப்பு கற்றுக்கொண்டு, இவருக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார். பெரும்பாலும், கை விரல்களை அதிகம் பயன்படுத்தி வாசிப்பார். குமுக்கி வாசிக்கும் போது தான் வித்யாசமாக இருக்கும். ஆனால், இவர் கைவிரல்கள், விரல் நகங்கள், விரல் மூட்டுக்கள் என, இவரது வாசிப்பு கொஞ்சம் அலாதியானதுதான். தன் இந்திய, மேற்கத்திய ஜாஸ் இசை நிகழ்ச்சியில், கிருஷ்ண கான சபையில், மேடை முழுக்க நிறைந்திருந்தது. கடத்தில் இவருடன் சோம்நாத்ராய் ப்ரசன்னா, பாலச்சந்திரன் மிருதங்கத்தில் ராஜசேகர் செங்கண்ணசேரி கிருஷ்ணகுமார். ஜெர்மனி புகழ் திருமதி கரோலாக்ரே டிரம்ஸ் மற்றும் குரலிலும் பிஜீபாலோஸ் - கீபோர்ட், ப்ரசாந்த் ராதா கிருஷ்ணன் சாக்ச போனிலும் கைகோர்த்தனர்.
குரலிசைக்காக, சிறப்பு பாடகர்களாக ஸ்ரீராம் பார்த்தசாரதி மற்றும் பின்னி, கிருஷ்ணகுமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். முதல் துவக்க இசையாக மல்லாரியை கீபோர்டிலும், குழலிலும் கம்பீர் நாட்டையில் கொடுக்க கடம் சுரேஷ் தவில் வாத்தியத்தை மிக வித்தியாசமாக கையிலெடுத்து வாசித்து, ஆரம்பத்திலேயே களை கட்ட வைத்துவிட்டார். ஸ்ரீராம் பார்த்தசாரதி, தெய்வீகக் குரலில், "வாரணவா பதம் பணிந்தோம்' என்று துவங்கி, இசை லயத்தை, மூல மந்திரத்துடன், தேவகானமாய் கொடுத்து முடித்தார். அடுத்து, சோலோ மெலடிக் ப்யூஷன் மாயமாளவ கௌளை ராகத்தை எடுத்துக்கொண்டு, அதை பின்னியும், கிருஷ்ணகுமாரும், ராகஸ்வரூபத்தை, அதன் அழகு சஞ்சாரங்களில் தொட்டு, ஒரு கோர்வை வைத்து முன்னிறுத்தி, அதை சாக்சில் வாங்கி வாசித்து, ஒரு சுற்று கொடுத்து, மீண்டும் ஸ்வர கோர்வை பல்லவிக்கு வந்து முடித்தனர்.
"மாயாமாளவ' கௌளை ராகம் உலகளவில் உள்ளது. அதுவும்,ருமேனியா நாட்டில் சர்வ சாதாரணமாய் கேட்கலாம். அதை நன்கு புரிந்து, சுரேஷ் கொடுத்திருந்தார். அடுத்து மிருத்திகா வைபவம். மிருத்திகா என்றால், மண், மண்ணால் செய்யப்பட்ட இசைக் கருவியின் புகழை தனி ஆவர்த்தனமாக அமைத்து, சுரேஷ் அதில் என்னென்ன லய வேலைப்பாடுகள் செய்ய முடியுமோ, அனைத்தையும் திரட்டிக் கொடுத்தார் . மிச்ரசாபுதாளத்தில் அமைந்த ஒரு ஸ்வர பல்லவி கொடுத்து, அதற்கு சுரேஷ், பேஸ் கிடாரில் ஆலாப் ராஜீ, டிரம்சில் கரோலா, சாக்சில் மைசூர் சாந்தகுமார் சவுடய்யாவின் பேரன் அனைவரும் சேர்ந்து, ஒரு சுற்று கொடுத்து முடித்தனர். அடுத்து, பாரதியாரின் பாடலை, மோகன ராகத்தில் பின்னியும், கிருஷ்ணகுமாரும், தோம் தனதன என்று அழகாய் ஆரம்பித்து, நாட்டுப் புறப்பாடல் மெட்டில் பாட்டமைப்போம் என்று பாட, கரோலா டிரம்சில் தனி ஆவர்த்தனம் கொடுத்து, அரங்கமே அதிர்ந்து கரகோஷமளித்தது.
அடுத்து ஹைவே, ப்ரீவே என்ற அமைப்பிற்கு கீபோர்டில் துவங்கி, தவிலில் கொடுத்து இந்திய இசைக்கும், ஜாஸ் இசைக்கும் உள்ள ஒற்றுமையான விஷயங்களை ஒன்றிணைத்துக் கொடுத்தனர். மேட்டர் லெஸ் என்ற இசைத் தொகுப்பில் யுனிவர்ஸ் ஸ்கேல் எனப்படும் கரஹரப்ரியா ஆலாபனையை பின்னியும், க்ருஷ்ணகுமாரும் கொடுக்க குழலில், பின் தொடர்ந்து கரைந்து போன ரசிகர்கள் ஜாஸ் இசையில் கரோலா பாட ஆஹா என்று கும்மாளமிட்டது மனது. சென்னை ரசிகர்களுக்கு கிடைத்த புத்தாண்டு பரிசு போல் இருந்தது, கடம் சுரேஷின் இந்த கலப்பு இசை நிகழ்ச்சி என்றால், அது மிகையில்லை. - ரசிகப்ரியா