இசை விழா முடிந்த கையோடு, அதைத் தொடர்ந்து நாட்டிய விழாவும் நாடக விழா, பொங்கல் நாதஸ்வர இசை விழா என்று விழாக் கோலம் கண்டு வருகிறது. இவ்வருடம் பிரம்ம கான சபா மிக வித்தியாசமாக பல தலைப்புகளில் பல இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து சிறப்பித்துள்ளது. அந்த வகையில், பன்முக நடனக் கலைஞர் திவ்யா கஸ்தூரி தனது புதிய நாட்டிய படைப்பான "பாதமும் பாதுகையும்' என்ற தலைப்பில் மிக வித்தியாசமானதொரு படைப்பை கொடுத்தார். இதற்கு அவர் தனது உடைத் தேர்விலிருந்து ஒப்பனை, அலங்காரம் என அனைத்தையும் மிக வித்தியாசமாக வடிவமைத்திருந்தார். எளிமையாக பருத்தி ஆடையில் வடிவமைத்து பார்வையாளர்களை கவர்ந்தது. திவ்யா, "பாதமும் பாதுகையும்' என்ற தலைப்பில் திருமாலின் பாதச் சிறப்புகளையும், திருப்பாத சேவையும் ஒன்றிணைத்து கொடுத்தார்.
இதில் அவர் எடுத்துக் கொண்ட இசை வடிவம் மல்லாரி. இறைவனை எடுத்துச் செல்லும் (உற்சவ மூர்த்தி) பல்லக்கின் தாங்கியை தன் ஒரு தோளில் ஏற்றிப் பிடித்து, இறைமூர்த்தத்தை பாடலுக்கு ஏற்ப பல்லக்கை அசைத்து ஆட்டி திருநடன சேவையாக பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பழைய இசை வடிவத்தில் தன் கருத்துக்களை திவ்யா பாதமும் என்ற திருப்பாத சேவைக்கு சுவாமி தேசிகன் தியான நிலையில் அமர்ந்து ரங்கநாதரின் மேல் சென்று கவிதைகளை எழுத தொடங்கியதாக அமைத்து, பின் மல்லாரி, அதைத் தொடர்ந்து விருத்தமாக கேசாதிபாதம் திருவரங்கனின் தலை முதல் கால் வரை வர்ணித்து அமைத்திருந்தார். பொற்றாமரை பாதங்களையும் அதன் மகிமையை சொல்லி ஒரு அழகான பல்லவி. அதில் "ஒரு போதும் உன்னிரு பாதம் துணை நிற்க உருகாதோ மனம் திருமாலே' என்று அழகு வரிகளுக்கு சஞ்சாரியில் வாமன அவதார கதை, காளிங்கனின் கொட்டத்தை அடக்கி நடனம் செய்த பாத மகிமை என வர்ணித்தது அழகு. குரு உடுப்பி லட்சுமி நாராயணா நட்டுவாங்கத்தில் குரு உடுப்பி மற்றும் மதுமதி குரலில் பாலமுரளியின் சீடர் வீரராகவன், மிருதங்கத்தில் ராமகிருஷ்ணன், வருணனையில் பவானி பிரசாத் குழலில், நடராஜ் அனைவரும் இணைந்து ஒருங்கிணைத்து கொடுத்தது அற்புதம்.
பாதத்திலிருந்து பாதுகை சேவைக்கு திவ்யா ஒன்பது சுலோகங்களை பாதுகா ஸஹஸ்ரம் என்ற தொகுப்பிலிருந்து எடுத்துக் கொண்டது சிறப்பு. நம்மை பக்தி பரவசத்தில் ஆழ்த்திவிட்டார். மறுபடியும் மல்லாரிக்கு வந்து இறைமூர்த்தத்தை இறக்கி வைப்பது வரை கொடுத்து, தில்லானாவில் முடிப்பது போல் நாதஸ்வராளி ராகத்தில் ஸ்வரத்திற்கு ஆடி பாதுகையின் சேவையே பரமனின் சேவை என்று புகழ்ந்து கூறி முடித்தார்.
திவ்யாவின் இந்த மாறுபட்ட படைப்பு கண்டிப்பாக இனி பேசப்படும். - ரசிகப்ரியா.