சென்னைக்குத் தெற்கே 550 கி.மீ. தொலைவில் உள்ளது இராமேஸ்வரம் என்னும் கடற்கரை நகரம், ஒரு சிறிய தீவு நகரம். இராமாயண இதிகாச காலத்தில் ஸ்ரீராமர் பூசித்து வழிபட்ட ராமநாதஸ்வாமி என்னும் சிவலிங்கம் எழுந்தருளியுள்ள சைவக் கலாசாரத் தலம்.
இந்த ஆலய நகரில்தான் ஆவுல் என்று குழந்தைப் பருவத்தில் பாசமாய் அழைக்கப்பட்ட ஆவுல்பக்கிரி ஜெய்னுலாய்தீன் அப்துல்கலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று அவதரித்தார். அவருடைய தந்தை ஜெயனுலாப்தீன் மரைக்காயர் ஒரு படகுக் கட்டுமானக் கலைஞராய் விளங்கினார். கட்டுமரங்கள் எனப்படும் சிறு மீன்பிடி படகுகளைத் தயார் செய்வதில் வல்லவர். அந்தக் கட்டுமரங்களை உள்ளூர் மீனவர்களுக்கு வாடகைக்கு விட்டு வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தியவர். அத்துடன் வீட்டுக்கு வீடு செய்தித்தாள்களை விநியோகம் செய்யும் வேலையையும் செய்து வந்தார். எனினும் கைக்கும் வாய்க்கும் எட்டாமல் தவித்த இஸ்லாமிய வறுமைக் குடும்பந்தான்.
பக்கிரி ஜெய்னு அடிக்கடி ஆவுலைத் தம்முடன் வேலைக்காக அழைத்துச் சென்றார். கடற்கரை மணலில் விளையாடினான் சிறுவன் ஆவுல். அங்கு நிலவிய இயற்கைச் சூழல்கள் சிறுவனின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன். கடற்கரை ஈரமணலில் ஓடியபோது தன் காலடிச் சுவடுகள் மணலில் தெளிவாக பதிந்திருப்பதைப் பார்த்துக் குதூகலித்தான். அல்லும் பகலும் ஓயாது கரைக்கு வந்து மோதித் திரும்பிச் சென்ற அலைகள் அவனது எண்ணங்களை அலைக் கழித்தன. கடற்கரைக்கு மிக அருகில் அலைகள் தொட்டுத் தழுவும் தொலைவில் நின்ற ஆவுல் அலைபகளை விரல்களால் அளாவினான். கடலில் மிதந்த கட்டுமரங்கள் அவனுக்கு விளையாட்டுக் காட்டின. காற்று ஓசையுடன் அலைகள் மீது தவழ்ந்து சென்று மணல் துகள் மீது நடனமாடி அந்தக் கரை மணலில் வண்ணக் கோலங்களை வரைந்தது. கடற்கரையில் நின்ற சிறுவன் ஆவுலின் செவிகளில் பல சப்தங்கள் வந்து மோதின. கோயில் மணி ஓசை, நாதஸ்வர ஓசை, தென்னை மரங்களும் பனை மரங்களும் தலை விரித்தாடும் ஒலி எல்லாமாகச் சேர்ந்து சிறுவனின் செவிகளுக்கு விருந்தளித்தன.
ஆவுல் தன் குழந்தைப் பருவத்தைக் கழித்த இடம் ஆதலால் இராமேஸ்வரம்தான் அவனுக்குச் சுவர்க்க உலகம். ஆவுலின் தந்தை ஜெய்னு முஸ்லீமாக இருந்தாலும் மத வெறியர் அல்லர். எம்மதமும் சம்மதமே என்னும் கொள்கை உடையவர். ஒருவனே தேவன் என்று முழுமையாக நம்பினார். அவர் மட்டுமின்றி இராமேஸ்வரவாசிகள் அனைவருமே தத்தமச் மதங்களை பின்பற்றியவாறே ராமநாத ஸ்வாமியையும் தங்களுடைய இஷ்ட தெய்வமாக கருதினார்கள்.
எனவே, ஜெய்னு கோவில் வாசலுக்கு வர நேரும் போதெல்லாம் கண்களை மூடி நின்று எல்லாருக்கும் நன்மையே உண்டாகட்டும் என்று மனமுருகப் பிரார்த்திவிட்டு நகர்வது வழக்கம். ஆவுலுக்குத் தனது சூழலில் உருவான ஒரு மானிட ஒற்றுமை உணர்வு சமய ஒருமைபாட்டுணர்வு உள்ளத்தில் உறையக் காரணமாயிற்று.
ஆவுலின் தந்தையார் பள்ளி சென்று படித்ததில்லை. ஆனால் போதிய பொது அறிவுடையவராய் வாழ்ந்தார். தன் மகனின் வருங்காலம் பற்றி யோசித்துத் தம் நண்பர் நீலகண்ட சாஸ்திரியுடன் கலந்து பேசினார். அவர்தான் ஆவுலைத் துவக்கப்பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்கச் சொல்லி, ஆலோசனை வழங்கினார். நன்றாகப் படித்தால், உயர்நிலைப் பள்ளி, பின்னர் கல்லூரி, கல்விக்குக் கரை ஏது வானமே எல்லை அல்லது வானந்தான் எல்லையா
துவக்கப்பள்ளியில் சிவசுப்பிரமணிய ஐயர் என்பவர் ஆசிரியராய் இருந்தார். அவர் ஆவுலுக்கு இதிகாசப் புராணக் கதைகளையும் சொல்லி பாடம் கற்றபித்தார். அன்பாய் இரு, உண்மையே பேசு, மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தாதே, கடினமாக உழை, நல்லதே செய் என்று உள்ளத்தில் உருவேற்றினார். ஆவுல் என்ற அப்துல்கலாம் இவற்றைத் தம் வாழ்க்கையில் தவறாது பின்பற்றினார்.
கலாம் தம் தந்தையார் செய்தித்தாள்கள் விற்பனை செய்வதைப் பார்த்தார். அவ்வாறு செய்வது தமக்கும் ஒரு விளையாட்டாக இருக்கும் என்று எண்ணினார். ஒரு கட்டுச் செய்தித்தாள்களை ரயில் நிலையத்திற்குக் கொண்டு சென்று ஒவ்வொரு தாளின் பெயரையும் உரக்கக் கூவி விற்பனை செய்தார். அத்துடன் கல்வி கற்பதும் அவருக்குக் களிப்பூட்டுவதாகவே அமைந்தது.க்ஷ
இராமநாதபுரம் உயர்நிலைப்பள்ளியில் கலாம் படித்தபோது, கலாம் தன் ஆசிரியர் அயட்ரா சாலமன் அவர்களின் மனங்கவர்ந்த மாணவராய் விளங்கினார். அவருக்கு இயற்கையிலேயே நல்ல ஞாபக சக்தியும் படிப்பில் ஆர்வமும் சூட்டிகையும் அமைந்திருந்தன. கலாம் தன் ஆசிரியர் சாலமனிடம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அவர் பொறுமையாகப் பதிலளித்தார்.
உயர்நிலைப் பள்ளிக்குப் பின் கலாம் திருச்சியிலுள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்து, உயர்கல்வியைத் தொடர்ந்தார். கல்லூரி படிப்பு முடிந்தபின் ஆசிரியர்கள் கலாமிடம் எம்.ஐ.ஐ.டி. எனப்படும் சென்னை தொழில் நுட்பக் கழகத்தில் சேர்ந்து பயிலுமாறு ஆலோசனை வழங்கினர். அங்கே பொறியியல் துறையில் இரண்டாம் ஆண்டு பயின்றபோது ஒரு பிரபல தொழில்நுட்ப இயல் பேராசிரியர் கே.வி. பனட்டாலே என்பவர் சென்னை தொழில் நுட்ப கழகத்தில் ஏரோநாட்டிகல் என்ஜினியரில் என்ற தலைப்பில் ஒரு விளக்கவுரையாற்றினார். அந்தப் பேருரை கலாமை மிகவும் கவர்ந்தது.
சிறு வயதில் கனவு கண்டது போல் ஏரோநாட்டிகல் என்ஜினியரிங் துறையில் தான் பயின்று சிறந்தால் விண்ணில் பறக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்று நினைத்தார் கலாம். அதனால் அந்த விண்ணூர்த்தி பொறியியல் துறையிலேயே தன்னைப் பதிய செய்து கொண்டு ஊன்றிக் கற்றார் கலாம். அவருடைய அறிவுத் தேடல் பசிக்கப் போதிய உணவளித்தது நூலகமே. அந்தக் கற்றல் நிறைவடைந்ததும், இந்திய வான்படை அதிகாரியாகச் சேர விண்ணப்பித்தார் அவர். அவர் தகுதிபெறவில்லை. அதற்காக அவர் சோர்வடைந்து விடவில்லை. நம்பிக்கையை இழந்துவிடவில்லை.
கடுமையாக முயன்று டி.ஆர்.டி.ஓ. எனப்படும் டிஃபென்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் ஆர்கனைசேஷன் என்கிற பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் 1958ம் ஆண்டு சீனியர் சயின்ட்டிஃபிக் அசிஸ்டென்ட்டாக வேலைக்கு சேர்ந்தார்.
கலாமும் அவருடைய குழுவினரும் இந்தியாவின் முதலாவது ஹோவர் கிராஃப்ட் என்னும் விண்ணூர்த்தியை வடிவமைத்துத் தயாரித்து, ஐந்தாண்டுகள் கடின உழைப்புக்கு பின் சோதனைப் பறப்பாக வானில் ஏவப்பெற்று பெரும் வெற்றி பெற்றது.
கலாம் ஒருநாள் தம் அலுவலக அறையில் வீற்றிருந்தபோது அவரைப் பார்க்க வந்தார் டாக்டர் எம்.ஜி.கே. மேனன் என்ற வானியல் ஆறிஞர். அவர் கலாமுடன் உரையாடி, ஹோவர் கிராஃப்ட்டில் பறந்து அவரிடம் பல கேள்விகள் கேட்டுச் சரியான விடைகளையும் பெற்றபின் அவரை இந்திய விண்வெளி ஆராயச்சிக் கழகத்தில் பணியாற்ற விரும்புகிறீர்களா? என்று கேட்டார்.
கலாமுக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல் ஆயிற்று. தம் காதுகளையே நம்ப முடியவில்லை அவரால். மேனனுக்குக் கோடானுகோடி நன்றிகளைத் தெரிவித்துவிட்டு உடனே ஒப்புக் கொண்டார் கலாம்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டிருந்தது. கலாம் தம்முடன் இளம் விஞ்ஞானிகளைக் கொண்ட குழு ஒன்றை இணைத்துக் கொண்டார். அக்குழு ஸ்பேஸ் லாஞ்ச் வெஹிகிள், எஸ்.எல்.வி.மிமிமி என்கிற விண்கலம் ஏவு வாகனத்தை நிறுவி. அதன் மூலம் ரோகிணி என்ற விண்கலத்தை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது.
அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து செயற்கைக் கோள்கள் உருவாக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டன. அவை தகவல் தொடர்புச் சாதனைங்களைச் சுமந்து கொண்டு பூமியைச் சுறறி வட்டமடித்தன. நில அமைப்பைப் படமெடுக்கும் கேமராக்கள் எல்லையில் எதிரி நடமாட்டம் பற்றிய எச்சரிக்கை குறிப்புகளையும் பூமிக்கு அனுப்பின.
இந்தியாவுக்குச் சொந்தமான ராக்கெட்டுகளும், மிஸைல்களும் வேண்டும் என்று விரும்பிய கலாம் அந்த யோசனையை அரசுக்குத் தெரிவித்தார். அரசும் அவரது யோசனையை ஏற்றுக் கொண்டது. கலாம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு தயாரித்த பிருத்வி, அக்னி ஆகிய ஏவுகணைகள் வெற்றிகரமாகப் பயணித்ததைக் கண்ட கலாம். உலக உருண்டையின் உச்சியிலே நிற்பதாக உவகையுற்றார். இந்தியாவில் ராஜஸ்தானில் உள்ள போக்ரான் என்னுமிடத்தில் பூமிக்க அடியில் அணுகுண்டு சோதனை நடத்துவதிலும், கலாம் பெரும்பங்கு வகித்தார்.
பல விருதுகளும் கௌரவங்களும் அவரை நாடி வந்தன. நம் நாடும் அவரது மகத்தான சேவைகளை கருத்தில் கொண்டு 1997ம் ஆண்டு அவருக்கு பாரதரத்னா என்னும் ஒப்பற்ற விருதை வழஙகி கௌரவித்தது. பின்னர் அப்துல்கலாம் 2002ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு முடிய ஐந்தாண்டுகள் இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார். இறுதியாக 2015ம் ஆண்டு ஜூலை 27 அன்று ஒரு கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது திடீர் மாரடைப்பால் அவரும் விண்ணுலகுக்குப் பறந்தார்.
- ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி