அவன் பெயர் அனிருத்! (1)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2017
00:00

கிரிக்கெட் விளையாடி முடித்து, ஸ்போர்ட்ஸ் சைக்கிளிலில் வீடு திரும்பினான் இளவேனில்.
வயது, 12; வயதுக்கு மீறிய உயரம்; ஏழாம் வகுப்பு படிப்பவன். டேக்வான்டோ கராத்தேயில் விற்பன்னன்; ஓய்வுநேரங்களில், கீ போர்டு வாசிப்பான். கணினி கையாள்வதில் நிபுணன்.
வீட்டின் உள் வரண்டாவில் சைக்கிளை நிறுத்தினான். அவன் அம்மா கனகவல்லி, சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்து, ''விராட் கோலி, 'வேர்ல்டு கப்' மேட்ச் விளையாடிட்டு வந்திருக்காரு போல,'' என கிண்டல் செய்தாள்.
''நானும் முயற்சி செய்தா, இன்னொரு விராட் கோலி ஆக முடியும். நம்பிக்கையும், கடின உழைப்பும், சிறிதளவு அதிர்ஷ்டமும் இருந்தா போதும்மா!''
''கைகால், முகம் கழுவிட்டு, டிபன் சாப்பிட வா!'' என்றாள் கனகவல்லி.
சிறிது நேரத்தில், குளியலறையிலிருந்து வெளிப்பட்டான் இளவேனில்.
''நீ சாப்பிட்டியாம்மா?''
''நீயும், அப்பாவும் சாப்பிடாம நானெப்படி சாப்பிடுவேன்?''
''அப்பா வந்துட்டாரா...''
அப்பா ராஜதுரைக்கு வயது, 42; பிரபல நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக பணிபுரிகிறார்.
சாப்பிட்டு முடித்தவனின் முதுகின் மேல், ஊர்ந்தோடியது ஒரு அணில். அதை லாவகமாக பிடித்து, கொஞ்சினான்.
''என் செல்ல பியூ எப்படி இருக்கா... இந்தா... பாதாம் பருப்பு, கொறி,'' என்று கொடுத்தான்.
அதன்பின், திறந்திருந்த கூண்டுக்குள் அணிலை விட்டான்.
பாட புத்தகங்களை எடுத்து, அன்று நடத்தப்பட்ட பாடங்களை படித்தான்; வீட்டுப்பாடங்களை அழகான கையெழுத்தில் எழுதினான்.
ஒருமணி நேரத்திற்கு பின், 'டிவி'யை உயிர்பித்து செய்திகள் கேட்டான். அதன்பின், கணினியை உயிர்ப்பித்தான். புதிதாக வந்த மின்னஞ்சல்களை சோதித்தான்.
பல முக்கியத்துவமில்லாதவைக்கு மத்தியில், ஒரு அர்த்தபூர்வமான மின்னஞ்சல் வந்திருந்தது. வகுப்பு தோழி, சாகித்யா அனுப்பியது.
அது -
ஹாய் வேனில்! இன்று கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால், நன்றாக விளையாடி இருப்பாய். நாளை, டிசம்பர், 26 எங்கள் குடும்பத்தினருக்கு, ஒரு முக்கியமான நாள்; மறக்க முடியாத நாள். என் அம்மாவின் தங்கைக்கு, அனிருத் என்ற பெயரில், ஒரு மகன் இருந்தான். அவன் நம் பள்ளியில் தான், எல்.கே.ஜி., படித்தான். எட்டு ஆண்டுகளுக்கு முன், பெற்றோருடன் அனிருத் நாகையில் உள்ள வேளாங்கன்னிக்கு, 'டூர்' சென்றான். டிச., 26ம் தேதி அன்று நாகை கடற்கரையோரம் சுனாமி சுழன்றடித்தது. அந்த சுனாமி அலையில், சித்தி, சித்தப்பா தப்பித்து கொண்டனர். அனிருத் மாட்டிக் கொண்டான்.
சுனாமியில் சிறுவன் அனிருத் இறந்து போனதாகவே காவல்துறை கருதுகிறது.
அனிருத் உயிரோடு இருந்திருந்தால், நம்மோடு ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பான். அனிருத்துடன், எல்.கே.ஜி., படித்த மாணவ மாணவியர் நாளை மாலை, 6:30 மணிக்கு அனிருத்தின் புகைப்படத்தின் முன், மெழுகுவர்த்திகள் பொருத்தி, எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப் போகின்றனர்.
நாளை நீயும் வந்து அனிருத்தின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறு. எட்டு ஆண்டுகளாய் மகனை பிரிந்த துயரில் கண்ணீர் விடும் ஒரு தாயை சமாதானப்படுத்துவோம். உன்னை எதிர்பார்த்து ஆவலாய் காத்திருப்பேன் நண்பா!
உணர்ச்சி பூர்வமான மின்னஞ்சல், லட்சம் வெட்டுக்கிளி படையெடுப்பாய் இளவேனில் இதயத்தை தாக்கியது. ஒரு கணம் அனிருத்தின் அம்மாவாக மாறி பார்த்தான். டன் கணக்கில் துக்கம் தொண்டையை அடைத்தது; கண்களில் கண்ணீர் ஜீவநதியாய் பெருக்கெடுத்தது.
'ஹேய் அனிருத்... காணாமல் போன நீ உயிருடன் இருக்கிறாயா அல்லது கடல் மாதாவின் வயிற்றில் சங்கமமாகி மீன்களுக்கு இரையாகி போனாயா!' இளவேனிலின் மனம் கூவியது.
கணினியை ஆப் செய்து, படுத்தான்; தூக்கத்தில் கனவு பூத்தது.
ஆழ்கடலுக்குள் அனிருத் மூழ்குகிறான். ஒரு ராட்சச மீன் அவனை விழுங்குகிறது. கையில் கூரிய கத்தியுடன் அனிருத்தை விழுங்கிய மீனை துரத்துகிறான் இளவேனில். மீனின் வாயை கிழித்து, அதன் தொண்டைக்குள் புகுகிறான். அனிருத் மயங்கி கிடக்கிறான். அவனை தூக்கியபடி மீனின் வயிற்றை கிழித்து வெளியேறுகிறான் இளவேனில். நூற்றுக்கணக்கான மீன்கள் துரத்துகின்றன. அனிருத்துடன் கடலின் மேல் மட்டம் வந்த இளவேனில், பெரிது பெரிதாய் மூச்சு விடுகிறான்.
கனவு கலைந்தது; எழுந்து சுவர் கடிகாரத்தை பார்த்தான்; விடியற்காலை, 4:30 மணி.
மறுநாள்-
வகுப்பறை வாசலில்,''ஹாய் சாகித்யா!'' என்றான் இளவேனில்.
''ஹாய் வேனில்! என்னுடைய இ-மெயில் படிச்சியா?''
''ஓ...படிச்சேன்... இன்று மாலை அனிருத்தின் வீட்டுக்கு செல்வோம்!''
மாலை நேரம் -
அனிருத்தின் வீட்டுக்கு விரைந்தனர். அம்மா ஜோதிலட்மியின் முகம் அழுதழுது வீங்கியிருந்தது; நாசித்துவாரங்கள் கன்றி சிவந்திருந்தன; அனிருத்தின் படம் வைக்கப்பட்டிருந்தது. பெரிய அகன்ற நெற்றி; சிரிக்கும் கவர்ச்சி கண்கள்; கடவுளின் உள்ளங்கை மெதுமெதுப்பில் மூக்கு; தேன் சொட்டும் உதடுகள்; அழகிய கச்சித காதுகள்.
அருகே, கை கட்டி நின்றிருந்தார் அனிருத்தின் அப்பா ஈஸ்வர். எட்டு ஆண்டு இடைவிடாத துக்கம் அவரது முகத்தில் முதுமை கோடுகளை வரைந்து விட்டு போயிருந்தது.
அனிருத்துடன், எல்.கே.ஜி., படித்த மாணவர்கள், மெழுகுவர்த்தி ஏற்றி படத்தின் முன் நிறுத்தினர்.
எரியும் மெழுகுவர்த்திகளை பார்த்தபடியே இருந்த அனிருத்தின் அம்மா, திடீரென கத்தினாள்.
''உயிரோடு இருக்கிற என் மகனுக்கு ஏன் மெழுகுவர்த்தி பொருத்தி அஞ்சலி செலுத்திறீங்க,'' என்று பாய்ந்து வந்து மெழுகுவர்த்திகளை தட்டி விட்டாள்.
''உணர்ச்சி வசப்படாதீங்க சித்தி,'' என்று கட்டிக் கொண்டாள் சாகித்யா.
''அழாதீங்கம்மா... என்னை உங்க மகனா நினைச்சிகுங்க... அனிருத் உயிரோடு இருந்தா கட்டாயம் உங்களை சந்திக்க வருவான்,'' என்றான் இளவேனில்.
''கட்டாயம் வருவானாப்பா...''
''கட்டாயம் வருவான்!''
''அருள் வாக்கு கூறுகிறாயே... நீ யாரப்பா?''
''சாகித்யாவின் வகுப்புத் தோழன் நான்; உங்க மகன் படித்த பள்ளியில் தான் படிக்கிறேன்; என் பெயர் இளவேனில்,'' என்றான்.
''விடலை பையன் என்று இளவேனிலை எடை போடாதீங்க சித்தி... இளவேனிலிடம், 'சைக்கிக் பவர்' உள்ளது. தொலைந்த பொருட்களை, ஆளை கண்டுபிடித்து கொடுப்பான். போலீசே இளவேனிலிடம் பல புகார்களை கொடுத்து, துப்பறிந்திருக்கிறது!''
''அப்படியாப்பா!''
''ஆமாம்மா... அனிருத் பற்றிய ஏ-டு-இசட் தகவல்களை எனக்கு தெரிவியுங்கள். நான் உங்களுக்கு உதவுவேன்!''
ஒரு தனியறைக்கு அழைத்து சென்றாள். அனிருத்தின் ஆடைகள், விளையாட்டு பொருட்கள், புகைப்படங்கள், வீடியோ மற்றும் அனைத்தையும் இருவரிடமும் கொடுத்தாள்.
''அம்மா... உங்க மகனின் சகலத்தையும் சேகரித்து வைத்துள்ள உங்களை, அவன் நினைவுகள் வேட்டையாடத்தான் செய்யும். நாங்களே இவற்றை பார்த்து நிலைகுலைந்துதான் போயுள்ளோம்!''
விசும்பி விசும்பி அழுதாள்.
''அம்மா... ஒரு சிறு காரியம் செய்யுங்கள்; அனிருத் எப்படி தொலைந்தான்... அவனை எந்தெந்த வழிகளில் தேடி தோற்றீர்கள் என்பதை விரிவாக கூறுங்கள்!''
அவள் சொல்லப்பேகும், 'பிளாஷ்பேக்' இளவேனிலின் வாழ்க்கையை, எப்படி தலைகீழாய் புரட்டிப்போட போகிறது என்பதை அப்போது அவன் சிறிதும் அறிந்தானில்லை..
- தொடரும்...

ஆர்னிகா நாசர்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X