புகை நடுவே!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2017
00:00

பாட்டுக் கேட்டுக்கொண்டே வேலை செய்வது என் பழக்கம். ஹோம் ஒர்க்காயிருந்தாலும், வேறு ஏதாவது புத்தகம் படிப்பதாக இருந்தாலும், என் குட்டி வானொலி கூடவே ஒலித்துக் கொண்டிருக்கும்.
“ஹலோ மாலு” என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்த பாலு, சட்டென்று வானொலியை நிறுத்தினான். “இன்னிக்கு நீ எந்தப் பாட்டும் கேட்கக்கூடாது. நோ மியூசிக் டே” என்றான்.
“என்ன அசட்டுத்தனமா இருக்கு. இசையே இல்லாமல் ஏன் ஒரு நாளைக் கழிக்க வேண்டும்?” என்றேன். “எந்த விஷயமும் அளவுக்கு மேல் போய்விட்டால், அதைச் சமன் செய்ய இப்படி ஒரு விரதம் தேவைப்படும்” என்றார் ஞாநி மாமா. “வாரத்தில் ஒரு நாள் வழக்கமான உணவை நிறுத்திவிட்டு, முழுக்க நீராகாரம் மட்டும் சாப்பிடும் விரதம் மாதிரி.” என்றார். “பில் டிரம்மான்ட் என்ற இசைக் கலைஞர்தான் இந்த 'நோ மியூசிக் டே'வை அறிமுகப்படுத்தினார். ஒருநாள் முழுக்க எந்த இசையையும் கேட்காமல் இருந்தால்தான், நமக்கு எந்த இசை நிஜமாகவே தேவைப்படுகிறது என்பதை உணரமுடியும் என்பது அவர் கருத்து.”
உண்மைதான். வெறும் பழக்கத்தினாலேயே பல விஷயங்களை நாம் செய்கிறோம். பல வீடுகளில் தொலைக்காட்சி அப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. “ஒரு பொருள் நம் வீட்டில் இருக்கிறது என்பதற்காக, அதை நாம் மணிக்கணக்கில் பயன்படுத்திக் கொண்டே இருக்கவேண்டிய அவசியம் இல்லை. எல்லார் வீட்டிலும் கழிப்பறை இருக்கிறது. தேவைப்படும்போதுதான் அதைப் பயன்படுத்துகிறோம். அது இருக்கிறது என்பதற்காக எப்போதும் அங்கே போய் உட்கார்ந்துகொள்வோமா என்ன? அந்த மாதிரிதான் தொலைக்காட்சிப் பெட்டியையும் தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தும் பழக்கம் வரவேண்டும்.” என்றார் மாமா.
ஆச்சரியம் என்னவென்றால், உலகத் தொலைக்காட்சி தினமும், நோ மியூசிக் டேவும் ஒரே நாள்தான். நவம்பர் 21. எனக்கு என்னவோ 'நோ 'டிவி' டே' என்று ஒன்றைக் கொண்டாடவேண்டும் என்று தோன்றுகிறது. மாதத்தில் முதல் ஞாயிறு அல்லது கடைசி ஞாயிறு 'நோ 'டிவி' சண்டே' என்று வைத்துக்கொள்ளலாம். அப்படிச் செய்தால் எவ்வளவு நேரம் மிச்சமாகும்? வீட்டில் ஒவ்வொருத்தரும் இன்னொருத்தருடன் பேசுவார்கள்.
“நவம்பர் 21தான் 'உலக ஹலோ தின'மும். அதனால்தான் வந்ததும் உன்னிடம் முதலில் 'ஹலோ' என்று சொன்னேன். நீ கவனிக்கவில்லை.” என்றான் பாலு. எதற்கு ஹலோ தினம்? “ஒவ்வொரு மனிதரும் இன்னொரு மனிதரிடம் ஹலோ என்று பேச ஆரம்பித்தால், பேச்சின் மூலமே எல்லா பிரச்னைகளையும் தீர்த்துக்கொள்ளலாம். எனவே ஹலோ தினத்தன்று ஒருத்தர் பத்து பேருக்கு ஹலோ சொல்லி நல்லுறவை வளர்க்க வேண்டுமாம். இரண்டு அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் இதை 45 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பித்திருக்கிறார்கள்.” என்றது வாலு.
“சில பேர் பேசினால் அமைதிக்கு பதில் சண்டை வந்துவிடும். அப்போது என்ன செய்வது?” என்றான் பாலு. “அவர்களுடன் மௌன விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.” என்றேன். “ஒரு கை தட்டினால் ஓசை வராது. இரு கை தட்டினால்தான் வரும். நாம் பதிலுக்கு சண்டையே போடவில்லை என்றால் அவர்களுக்கே அலுப்பாகிவிடும்.” என்றார் மாமா.
“எதற்கும் யாரோடும் சண்டை போடுவதில் அர்த்தமே இல்லை. ஏழை பணக்காரன், ஆண், பெண், மேல் சாதி, கீழ் சாதி, உன் மதம், என் மதம் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் எல்லாரையும் அழித்துக் கட்ட இயற்கை வேகமாக வேலை செய்கிறது. டில்லி வரை வந்துவிட்டது.” என்றான் பாலு.
“இயற்கை அழிக்காது. நாம்தான் இயற்கையை அழிக்கிறோம். டில்லியில் என்ன ஆயிற்று?” என்றேன்.
“பாலு 'ஸ்மாக்' என்கிற புகைப்படலத்தைக் குறிப்பிடுகிறான் என்று நினைக்கிறேன். டில்லி தெருக்களில் நடந்துபோகக் கூடக் கண் தெரியாத அளவுக்கு தூசுப் படலம் கவிந்து இருந்தது. நெடுஞ்சாலைகளில் வண்டிகள் முன்னால் போகும் வண்டிகள் மீது போய் மோதிக்கொண்டன. மூன்று நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை. 'அலுவலக வேலையை வீட்டிலிருந்தே செய்யுங்கள்' என்று அரசு கேட்டுக் கொண்டது. இந்த ஆண்டு தீபாவளிக்கு டில்லியில் பட்டாசுகள் விற்கக் கூடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எவ்வளவு குழந்தைகள், முதியவர்கள் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டார்கள் என்று இன்னும் கணக்கெடுக்கவில்லை.” என்றார் மாமா.
இதற்கு என்ன காரணம்? அவரவர் வீட்டு அருகே இருக்கும் இலைக் குப்பைகளை குளிருக்காக எரிப்பதில் தொடங்கி, டீசல் பெட்ரோல் புகையை விடும் லட்சக்கணக்கான வண்டிகள், நிலக்கரியை எரிக்கும் பெரிய தொழிற்சாலைகள் என்று அடுக்கடுக்கான காரணங்கள் இருக்கின்றன. இன்று டில்லிக்கு வந்தது நாளை சென்னைக்கு வராது என்று எந்த உத்தரவாதமும் இல்லை.
“ஏற்கெனவே வந்துவிட்டது. வடசென்னைக்குப் போய்ப் பார். தெரியும். அடுத்து கடலூருக்கு வரும்.” என்றார் மாமா.
நமக்கு 50, 60 ஆண்டுகள் முன்கூட்டியே பெரும் தொழில் வளர்ச்சியை அடைந்துவிட்ட மேலை நாடுகளில் இந்தப் பிரச்னை இல்லையா என்று மாமாவிடம் கேட்டேன்.
“லண்டனில் 1952 டிசம்பரில் நான்கு நாட்கள் இப்படிப் புகைப்படலம் கவிந்தது. அதில் மொத்தம் 12 ஆயிரம் பேர் பாதிப்பால் இறந்தார்கள். ஒரு லட்சம் பேருக்கு மேல் உடல்நலம் கெட்டது. நியூயார்க்கில் 1966 நவம்பர் 24ம் நாள் புகைப்படலத்தில் 400 பேர் இறந்தார்கள். இதிலிருந்தெல்லாம் அவர்கள் கற்றுக்கொண்டு காற்றை, வானத்தை மாசுபடுத்துவதை வெகுவாகக் குறைத்துக் கொண்டார்கள். நாமும் சீனாவும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளாமல், நாமே பட்டு அனுபவித்து அப்புறம்தான் இதைப் பற்றியெல்லாம் யோசிப்போம் என்று இருக்கிறோம்.” என்றார் மாமா.
“இங்கேயும் மாசு கட்டுப்பாட்டுக்கு ஏராளமான நிதி ஒதுக்கப்படுகிறது. கடுமையான விதிகள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் எதிலும் லஞ்சம், ஊழல் என்று நிர்வாகம் ஆகிவிட்டதால், எல்லா விதிகளும் மீறப்படுகின்றன. எல்லா நிதியும் சூறையாடப்படுகிறது. ரெய்டுக்குப் போனால் பொது வாழ்க்கையில் இல்லாத யார் யார் வீட்டிலோ கிலோ கணக்கில் தங்கமும், கோடிக்கணக்கில் சொத்தும் அகப்படுகின்றன.” என்றார் மாமா.
“நம்மை சூழ்ந்திருக்கிற முக்கியமான புகைப் படலம் லஞ்சமும் ஊழலும்தான். அதை விலக்கினால் மீதி பிரச்னைகள் எல்லாம் விலகிவிடும். இல்லையா?” என்றேன்.
ஆம் என்று மூவரும் தலையாட்டினார்கள்.

வாலுபீடியா 1:
நவம்பர் 24 : பரிணாமக் கோட்பாடு தினம்
நவம்பர் 25 : பெண்கள் மீதான வன்முறை பற்றிய விழிப்புணர்வு நாள்.
நவம்பர் 26 : இந்திய அரசியல் சட்ட தினம்.

வாலுபீடியா 2: புயல் தெரியும். எதிர்ப்புயல் தெரியுமா? ஆன்டி சைக்ளோன் (anti cyclone) என்பது ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் மட்டும் உயர் அழுத்தத்தில் ஏராளமான காற்று வீசுவதாகும். இப்படி வீசும் காற்று, நகரத்தில் எழும் தூசி, புகை, அனைத்தையும் கலையவிடாமல் மேலிருந்து அழுத்துவதாலும் ஸ்மாக் எனும் புகைப்படலம் ஏற்படும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X