மழைக்கு மாரி, விசும்பு, கார், வான் போன்ற பெயர்கள் உள்ளன. ஏர்த் தொழிலுக்காக ஏற்பட்ட நீர் நிலைகளை, ஏரி என்று குறிப்பிட்டார்கள். குளிப்பதற்காக அமைந்தது குளம். கோவிலுக்கு அருகே அமைந்திருப்பது தெப்பக்குளம். குடிப்பதற்கான நீர் நிலைகளை ஊருணி என்பார்கள். ஊரார் பயன்படுத்தக்கூடிய ஊருணியில், யாரும் துவைக்கவோ, குளிக்கவோ மாட்டார்கள்.
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு என்பது திருக்குறள். அறிவாளியிடம் அமைந்த செல்வம், ஊருணியில் நிறைந்த நீர் போன்று எல்லோருக்கும் பயன்படும் என்பது இந்தக் குறளின் கருத்து. ஆழமான நீர் நிலை, மடு என்றும், கயம் என்றும் கூறப்படுகிறது.