சிறந்த சிறுவர் படங்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2017
00:00

இந்திய சிறுவர் திரைப்படக் கழகம் (Children's film society of India), ஹைதராபாத்தில் நடத்திய 20வது சர்வதேச சிறுவர் திரைப்படவிழா, கடந்த நவம்பர் 14 அன்று கோலாகலமான கொண்டாட்டங்களுடன் நிறைவு பெற்றது.
கடந்த நவம்பர் 8 முதல் 14ம் தேதி வரை, நடைபெற்ற இந்தத் திரைப்பட விழாவில், 1) மொட்டு இயக்குனர்கள் (Little Directors) திரைப்படம், 2) இன்டர்நேஷனல் லைவ் ஆக்-ஷன் [நடிகர்கள் நடித்தவை] முழு நீள திரைப்படம், 3) இன்டர் நேஷனல் லைவ் ஆக்-ஷன் குறும்படம், 4) அனிமேஷன் முழு நீள திரைப்படம், 5) அனிமேஷன் குறும்படம், 6) ஆசிய பனோரமா முழு நீள திரைப்படம் [ஆசிய பகுதித் திரைப்படம்], 7) ஆசிய பனோரமா குறும்படம் என, 7 பிரிவுகளின் கீழ், மொத்தம் 317 சிறுவர் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
நிறைவு விழாவில், ஒவ்வொரு பிரிவின் கீழும், குறைந்தது 3 விருதுகள் வீதம், மொத்தம் 39 விருதுகள் வழங்கப்பட்டன. விருதுக்குரிய திரைப்படங்களை, சர்வதேச திரைப்பட வல்லுனர்கள் அடங்கிய தேர்வுக் குழுக்கள் தேர்வு செய்தன. மொட்டு இயக்குனர்கள் பிரிவைத் தவிர்த்து, மற்ற 6 பிரிவுகளில், ஒவ்வொரு பிரிவிலும் ஒரு சிறந்த படத்தை சிறுவர்கள் அடங்கிய 'சிறுவர் தேர்வுக் குழுக்கள்' (Children Jury) தேர்வு செய்தன. அந்தப் படங்களுக்கு 'சிறுவர் தேர்வு விருது' என்ற பெயரில் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

'ஸ்டாம்பு ஆல்பம்' தமிழ்க் குறும்படத்துக்கு விருது
ஆசிய பனோரமா பிரிவில் சிறந்த குறும்படத்துக்கான விருதை, தமிழக இயக்குனர் பி. சிவக்குமார் இயக்கிய, 'ஸ்டாம்பு ஆல்பம்' குறும்படம் பெற்றது. பெரியவர் தேர்வு (Adult Jury) விருது, சிறுவர் தேர்வு விருது, என இரண்டு விருதுகளையும் இந்தப் படம் தட்டிச்சென்றது.
அஞ்சல் தலைகளைச் சேகரிக்கும் ஒரு மாணவனைப் பார்த்து, அவனது சக மாணவர்களுக்கும் அஞ்சல் தலைகள் சேர்க்கும் ஆர்வம் தொற்றிக் கொள்கிறது. அந்த மாணவனின் நண்பன் ஒருவனுக்கு ஒரு ஸ்டாம்பு ஆல்பம் கிடைக்கிறது. 'தன்னை மிஞ்ச வேறு ஆளே இல்லை' என்ற பெருமையில் இருந்த அந்த மாணவன் எரிச்சல் அடைந்து, பொறாமையால் என்ன செய்தான் என்பதே இந்தக் குறும்படத்தின் கதை. எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் புகழ்பெற்ற சிறுகதையான ஸ்டாம்பு ஆல்பத்தைக் குறும்படமாக இயக்கியுள்ளார் சிவக்குமார்.

தண்ணீர் பஞ்சம் பற்றிய ஈரான் படத்துக்கு விருது
எண்ணெய் வளங்கள் அதிகம் கொண்ட ஈரானில் குடிதண்ணீர் அரிதாகி வருவதைப் பற்றிய படம் ஹூரா (Houra). இது, ஆசிய பனோரமா முழுநீள திரைப்படப் பிரிவில், பெரியவர் தேர்வின் கீழ் சிறந்த திரைப்படத்துக்கான விருதைப் பெற்றது. இந்தப் படத்தின் இயக்குனர் கொல்ம்ரெசா சகார்ச்சியன் (Golmreza sagharchiyan). தனது மூன்றாண்டு சம்பாத்தியத்தை வைத்து, இந்தத் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

பெண் குழந்தைகளை ஆதரிப்போம்!
பிறந்த தருணத்தில் இருந்து, ஒரு பெண் குழந்தை சந்திக்கும் பாலின பேதம் அடிப்படையிலான துன்பங்களை மையப்படுத்திய அனிமேஷன் குறும் படம், 'எனது வாழ்க்கை எனக்கு வேண்டாம்' (My life I don't want). தைவான் நாட்டைச் சேர்ந்த ந்யான் கியால் சே (Nyan Kyal say) இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
பெரியவர் மற்றும் சிறுவர் தேர்வுக் குழுக்களின் விருதுகளை வென்றுள்ளது.

சிறுவர்களுக்கான குறும்படங்களை இயக்குவது ஏன்? - இயக்குனர் சிவக்குமார் கருத்து
வெகுஜன திரைப்படங்களை இயக்கும் நோக்கில் உதவி இயக்குனராகப் பணியாற்றி வந்தேன். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர், எழுத்தாளர் ஆயிஷா இரா. நடராசன் எழுதிய 'ஆயிஷா' குறுநாவலைப் படித்ததும், அதைத் திரைப்படமாக இயக்க விரும்பினேன். அந்தக் கதையை, முழு நீள திரைப்படமாக எடுத்தால், கதை நீர்த்துப்போய்விடும் என்பதால், குறும்படமாக இயக்கினேன். குறும்படங்களுக்குப் பெரிய வாய்ப்புகள் இல்லாத காலம் அது. மாற்று சினிமா இயக்குனர்களை ஆதரித்து, வழிகாட்டி வரும் திரைப்பட எடிட்டர் பி. லெனின், எனது ஆயிஷா குறும்படத்தை, 2001ம் ஆண்டு மும்பை திரைப்பட விழாவின் குறும்படப் பிரிவிற்கு அனுப்ப உதவினார். அங்கு அந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றதும், அதே ஆண்டில் ஹைதராபாத்தில் நடந்த சர்வதேச சிறுவர் திரைப்பட விழாவிற்கும் அனுப்பினேன். அங்கு சிறுவர்கள் மத்தியில் அந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனால், சிறுவர் படங்களைத் தொடர்ந்து எடுக்க வேண்டும் என்று ஊக்கம் கிடைத்தது. அடுத்ததாக, சுற்றுச்சூழலை மையப்படுத்தி 'உருமாற்றம்' என்ற சிறுவர்களுக்கான குறும்படத்தை இயக்கினேன். இந்தப் படம் தேசிய விருதைப் பெற்றது. அடுத்து, 'The power of silence' என்ற அனிமேஷன் குறும்படத்தையும் இயக்கினேன். இந்தப் படம், இயற்கை மீது, மனித நாகரிக வளர்ச்சி ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றியது. இப்படியாக, தொடர்ந்து குழந்தைகளுக்காகக் குறும்படங்கள் இயக்கி வருகிறேன்.
குழந்தைகளுடன் பழகுவது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். ஒளிவு மறைவு இன்றி அவர்கள் பழகுவது உற்சாகம் அளிக்கக்கூடியது. குழந்தைகளுக்கு நம்பிக்கை ஊட்டும் படங்களைத் தொடர்ந்து இயக்க விரும்புகிறேன். ஒரு வகையில் நான் இயக்கும் சிறுவர் குறும்படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு, என்னைத் தொடர்ந்து இந்தத் துறையில் கட்டிப்போட்டு வருகிறது என்று கருதுகிறேன். எனது முதல் முழுநீள திரைப்படமும், குழந்தைகள் பற்றியதாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
இவ்வாறு இயக்குனர் சிவக்குமார் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இருந்து அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
"ஏய் நான் பாத்த படம் நல்லா இருந்துச்சு! நீ பாத்த படம் நல்லா இருந்துச்சா?" என இந்த மாணவர்கள் தமிழில் பேசிக்கொண்டிருந்தார்கள். திருச்சி மாவட்டம் திருமலைசமுத்திரம், கரூர் மாவட்டம் பரமத்தி, நாமக்கல் மாவட்டம் ஊத்துபுலிக்காடு, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, கோயம்புத்தூர் மாவட்டம் காலம்பாளையம், திருவண்ணாமலை மாவட்டம் கணேசபுரம் ஆகிய ஊர்களின் பஞ்சாயத்து யூனியன் பள்ளிகளில் இருந்தும், தஞ்சை மாவட்டம் மெலட்டூர், ஈரோடு மாவட்டம் நல்லாம்பட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் அஸ்தினாபுரம் ஆகிய ஊர்களின் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் இருந்தும் மொத்தம் 10 மாணவர்கள் இந்தத் திரைப்படவிழாவில் பங்கேற்றார்கள்.
ஒரு வாரம் தொடர்ச்சியாக சிறுவர்கள் பற்றிய படம் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று இந்த மாணவர்கள் தெரிவித்தார்கள். சிறந்த ஆசிய பனோரமா திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்த சிறுவர் தேர்வுக் குழுவில், அஸ்தினாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஹரிணி இடம்பெற்றிருந்தார். “சிறுவர் தேர்வுக் குழுவில் பங்குபெற்றதைப் பெருமையாகக் கருதுகிறேன். நல்ல திரைப்படங்கள் பற்றிய பார்வையை மேம்படுத்திக்கொள்ள முடிந்தது” என்றார் ஹரிணி.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X