மொட்டு இயக்குனர்கள்: நடுவர் சிறப்பு பாராட்டு விருது
Feeding Diversity
பல்வேறு மாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து, மும்பை நகரில் வசிக்கும், மக்களின் உணவுத் தேவைகள் என்ன? அவை எப்படிப் பூர்த்தியாகின்றன என்பதை ஆவணப்படுத்தியுள்ள படம், 'Feeding diversity' (பன்முகத்தன்மைக்கு உணவளித்தல்). மும்பை நகரின் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 21 குழந்தைகள் இந்த ஆவணப் படத்தை இயக்கியுள்ளார்கள்.
குறும்படம் இயக்குவதற்கான பயிற்சியை, குழந்தைகளுக்கு வழங்கிவரும் 'போம்கிரானேட் வொர்க்ஷாப்' என்ற தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. நியூயார்க் நகர மேயர் அலுவலகத்தின் கல்வி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சிக்காக இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியின் தலைப்பான, 'நீடித்து நிலைத்திருக்கும் நகரங்கள்', 'பன்முக சமூகத்துக்கு உணவளித்தல்' ஆகிய கருத்துகள் பற்றி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, இந்த ஆவணப் படம் எடுப்பதற்கான பயிற்சியை அவர்களுக்கு போம்கிரானேட் வொர்க்ஷாப் நிறுவனம் வழங்கியது.
மாதுங்கா கிழக்குப் பகுதியைப் பற்றி ஆவணப்படுத்த வேண்டும் என்று குழந்தைகள் முடிவெடுத்ததும், பயிற்றுனர்கள் அந்தப் பகுதியைப் பற்றியும், அதன் பல்வேறு தரப்பட்ட மக்களைப் பற்றியும், அவர்களது உணவுப் பழக்கங்கள் பற்றியும், உணவு விடுதிகள், மளிகைக் கடைகள், சந்தைகள் பற்றியும் குழந்தைகள் தெரிந்துகொள்ள உதவி இருக்கிறார்கள். பிறகு யார் யாரிடம் நேர்காணல் செய்வது? என்னென்ன கேள்விகள் கேட்பது எனக் குழந்தைகள் முடிவு செய்துள்ளார்கள். கேமராவை எப்படிக் கையாள்வது, வெளிப்புறப் படப்பிடிப்பில் சுற்றுப்புற ஒலியின் மீது எப்படிக் கவனமாக இருப்பது? போன்ற அடிப்படைப் பயிற்சிகளை மாணவர்கள் பெற்றார்கள். பிறகு 7 மாணவர்கள் அடங்கிய மூன்று குழுக்களாகப் பிரிந்து, ஒவ்வொரு குழுவும் 3 மணிநேரம் ஒளிப்பதிவு செய்தன. மாணவர்கள் தயாரித்த படத்தொகுப்பு முடிவு பட்டியல்படி, இந்த ஆவணப் படம் தொகுக்கப்பட்டுள்ளது.
மொட்டு இயக்குனர்கள்: சிறந்த படம்
கனவுக் கடை (The grocery store of dreams)
ஓர் ஊரில் ஒரு தாத்தா, மளிகைக் கடை வைத்திருப்பார். அந்த ஊர்க் குழந்தைகளுக்கு வரும் கனவுகளுக்கு அவர்தான் பாதுகாவலர். தனது கடையில் சிறுசிறு இழுப்பறைகள் (Drawers) கொண்ட ஓர் அலமாரியைத் தாத்தா வைத்திருப்பார். ஊரில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும், ஒவ்வொரு இழுப்பறை உண்டு. ஏதாவது ஒரு குழந்தைக்குக் கனவு வந்தால், அந்தக் குழந்தைக்குரிய இழுப்பறை முன்னோக்கி லேசாகத் திறக்கும். மகிழ்ச்சியான கனவாக இருந்தால் அந்த அறையில், பிங்க் நிற விளக்கு எரியும். தாத்தா கவலைப்பட மாட்டார். நீல நிற விளக்கு எரிந்தால், கனவு காணும் குழந்தை பயப்படுகிறது எனத் தாத்தாவுக்குப் புரிந்துவிடும். தாத்தா குழந்தைக்கு உதவுவார். குழந்தை நீரில் அடித்துச் செல்லப்படுவதாகக் கனவு இருந்தால், ஒரு காகிதக் கப்பல் செய்து அதைத் தாத்தா இழுப்பறையில் வைத்துவிடுவார்.
தைவான் நாட்டின் டைப்பே (Taipei) நகரில் உள்ள, ஒரு நகராட்சி ஆரம்பப் பள்ளியைச் சேர்ந்த சிறுவர்கள், இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார்கள். தைவான் சர்வதேச சிறுவர் திரைப்பட விழா அமைப்பு, சிறுவர்களுக்கு நடத்தும் திரைப்பட இயக்கப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று, இந்தச் சிறுவர்கள் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார்கள்.
மொட்டு இயக்குனர்கள்: இரண்டாவது சிறந்த படம்
அன்புள்ள அப்பா (cher papa)
முதல் உலகப்போர் சமயத்தில், போர் பிரதேசத்தில் வசிக்கும் ஒரு பெண் குழந்தையும், கட்டாய ராணுவ சேவைக்குச் சென்றுள்ள அவளது அப்பாவும், தங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களைக் கடிதம் வாயிலாக, ஒருவருக்கொருவர் தெரியப்படுத்திக் கொள்வதுதான் கதை.
"அப்பா! இன்றைக்கு நம் ஊரில், காலையிலேயே குண்டுவீச்சு தொடங்கிவிட்டது. நான், தம்பி, அம்மா, பாட்டி எல்லோரும் சுரங்க அறையில் போய் ஒளிந்துகொண்டோம். வெளியேவர நான்கு மணிநேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. எல்லோருக்கும் ஒரே பசி. பாட்டிக்கு ஏறத்தாழ மயக்கம் வந்துவிட்டது.'' இப்படி எல்லாம் ஒரு குட்டிப் பெண் தனது அப்பாவுக்குக் கடிதம் எழுதுவாள்.
''மகளே! நான் இருக்கும் இடத்திலும் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நாங்கள் இருக்கும் பகுதியில், திடீரென விஷ வாயு தாக்குதல் நடத்தப்பட்டது. நல்ல வேளையாக, என்னிடம் தகுந்த சுவாசக் கவசம் இருந்ததால், உயிர் பிழைத்தேன். காலில் அடிபட்ட நாய் ஒன்றை நான் தத்தெடுத்தேன். கடுமையான சூழலில் எங்கள் படையினருக்கு அது உற்சாகம் தருகிறது.'' இப்படி, அப்பாவிடம் இருந்து மகளுக்கு பதில் போகும்.
5 நிமிடம் ஓடக்கூடிய இந்த அனிமேஷன் படத்தை, பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த
13 பிரெஞ்சுக் குழந்தைகள் இயக்கியிருக்கிறார்கள். பெல்ஜியத்தைச் சேர்ந்த, கேமரா எட்சட்ரா (Camera etc) என்ற அனிமேஷன் பயிற்றுவிப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனம், இந்தக் குழந்தைகளுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தி, இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.