எட்வின் ஹப்பிள்: 20.11.1889 28.9.1953
மார்ஷ்ஃபீல்டு, அமெரிக்கா
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த பெருவெடிப்புக்குப் (Big Bang) பின்னரே நாம் வாழும் பூமி தோன்றியது எனக் கருதப்படும் கருத்தை ஹப்பிள் விதி (Hubble's Rule) நிரூபித்தது. அதைக் கண்டறிந்து சொன்னவர் எட்வின் ஹப்பிள்.
இதுவரை கண்டறியப்பட்டுள்ள நெபுலா (சூரிய மண்டலத்துக்கு அப்பால் மேகம் போன்று தோற்றமளிக்கும் விண்மீன் கூட்டம்) கூட்டத்துக்கு தந்தை எனப் புகழப்படும் ஹப்பிள், ஆரம்ப காலத்தில் படிப்பில் கவனமில்லாதவராக இருந்தார். ஆனாலும், இவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக பல்வேறு அறிவியல் நூல்களைப் படித்துத் தேர்ந்தார்.
12 வயதில் செவ்வாய்க் கோள் பற்றி இவர் எழுதிய கட்டுரை ஒரு பத்திரிகையில் வெளிவந்து, பலரது வரவேற்பைப் பெற்றது. அவரது திறமையைக் கண்ட சிகாகோ பல்கலைக்கழகம் மாணவனாகச் சேர்த்துக்கொண்டது. அங்கு வானவியல் ஆய்வுப் படிப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு, இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
அமெரிக்காவில் இருந்தபடி, உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியான 'ஹூக்கர்' உதவியுடன், 'வானின் அனைத்து திசைகளிலும், தொலைவில் உள்ள அண்டங்கள் ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்கின்றன' என்று சொன்னார். இவரது ஆய்வின் பயனாக அன்றுவரை கண்களுக்குப் புலப்படாத விண்மீன் மண்டலம், நெபுலா கூட்டம், பால்வெளி மண்டலங்கள் எல்லாம் தெரிய வந்தன. இன்று நாம் பள்ளிகளில் படித்துக்கொண்டு இருக்கும் நெபுலா பற்றிய தகவல்கள்கூட இவரது ஆராய்ச்சிகளே!
தனி அறிவியல் பிரிவாக இல்லாமல் வானியலும் இயற்பியலின் ஓர் அங்கமாக வேண்டும் என்பதற்காகப் பல முயற்சிகளை மேற்கொண்டார். மற்ற துறைகள்போல வானியலுக்கும் நோபல் பரிசு வழங்கவேண்டும் என்பது இவருடைய கோரிக்கையாக இருந்தது. வாழ்நாள் முழுக்க வானியல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட இவருக்கு மரியாதை செலுத்தும்விதமாக, நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி அமைப்புகள் இணைந்து உருவாக்கிய நவீன விண்வெளித் தொலைநோக்கிக்கு 'ஹப்பிள்' பெயரைச் சூட்டின.
ஹப்பிள் விதி
விண்மீன் திரள்கள் நம்மை விட்டும், தம்முள் ஒன்றையொன்று விட்டு விலகியும் செல்கின்றன. அவ்வாறு செல்லும்போது அவற்றின் வேகங்கள், இடைத் தூரங்களுக்கு ஏற்ப நேர் தகவில் அதிகரிக்கும்.