துணிச்சலுக்கு மறுபெயர் சோ!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 டிச
2017
00:00

டிச., 7, சோ நினைவு நாள்

சோவின் நண்பரும், அவரது நாடகங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியுமாக இருந்தவரும், எல்.ஐ.சி.,யில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான, எஸ்.வி.சங்கரன், சோவுடன், 60 ஆண்டுகள் நெருங்கி பழகிய, தன் இனிமையான அனுபவங்களை, நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:
சிறந்த பேச்சாளர், நல்ல எழுத்தாளர், சட்ட ஆலோசகர், நாடகம் மற்றும் சினிமா நடிகர், கதை வசன கர்த்தா, நாடக, திரைப்பட இயக்குனர், அரசியல் விமர்சகர், ராஜ்யசபா அங்கத்தினர், பல லட்சக்கணக்கான வாசகர்களை கொண்ட, 'துக்ளக்' பத்திரிகையின் நிறுவனர் மற்றும் ஆசிரியர், அசாத்திய தைரியசாலி என்று பல முகங்களை கொண்டவர், சோ. இவரது இயற்பெயர்: சீ.ராமசாமி, அப்பா பெயர்: சீனிவாச ஐயர், அம்மா பெயர்: ராஜம்மாள். அக்., 5, 1934ல் பிறந்தவர்.
ஒற்றை எழுத்தால் உலகம் முழுவதும் அறியப்பட்ட சோவுடன், நீண்டகாலம் நெருக்கமாக பழகியதும், அவரது அளவற்ற பாசத்துக்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமானதும், இறைவன் எனக்கு அளித்த வரம்.
நாடகத்தின் கரு உருவானதும், என்னிடம் சொல்வார். உடனே, மயிலாப்பூர், உட்லண்ட்ஸ் ஓட்டலில் அவருக்கு ஒரு அறை, 'புக்' செய்யப்படும். சென்னை, மயிலாப்பூரில், சித்திரகுளம் அருகே உள்ள காளத்தி கடையில், இரண்டு பெரிய நோட்டு புத்தகங்கள், பச்சை கலர் இங்க் பாட்டில் வாங்குவார். கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து, சுவாமியின் பாதங்களில் அந்த நோட்டு புத்தகங்களை வைத்து வணங்கியதும், காட்டேஜுக்கு வருவார். முழு நாடகத்தையும் இரண்டே நாளில் எழுதி முடித்து விடுவார்.
அவர் நாடகம் எழுதுகிறார் என்று தெரிந்ததும், நான் உட்பட, சோவின் நெருங்கிய நண்பர்கள், ஆபீசுக்கு லீவு போட்டு அங்கு சென்று விடுவோம்.
நாடகத்தில் எந்த பாத்திரத்தில், எந்த நடிகர் நடிக்க வேண்டும் என்பதை, நானும், சோவும் முடிவு செய்வோம்.
மயிலாப்பூரில், வி.எம்., தெருவில் உள்ள, 'சில்ட்ரன்ஸ் கிளப்' என்ற இடத்தில், நாடகத்திற்கு பூஜையும், ஸ்கிரிப்ட் ரீடிங்கும் நடக்கும். 'விவேகா பைன் ஆர்ட்ஸ் கிளப்'பின் எல்லா அங்கத்தினரும் அங்கு சேருவோம். நாடகத்தின் முழு வசனத்தையும் ஏற்ற இறக்கத்தோடு படிப்பார், சோ. அப்போதுதான் எல்லா நடிகர்களுக்கும் என்ன கதை, என்ன பாத்திரம் என்பதெல்லாம் புரியும். ஒரு மாதம், நாடகத்திற்கு ஒத்திகை நடக்கும்.
எப்போதும், தன் நாடகங்களை, மயிலாப்பூர், 'பைன் ஆர்ட்ஸ் கிளப்'பின் அரங்கத்தில் தான் அரங்கேற்றம் செய்வார், சோ.
'கல்கி' இதழில், பகீரதன் எழுதிய 'தேன் மொழியாள்' என்ற தொடர் கதையை, வானொலி புகழ் கூத்தபிரான் நாடகமாக்கினார். 'எனக்கும் இந்த நாடகத்தில் ஒரு பாத்திரம் கொடுக்கணும்; இல்லன்னா ஒவ்வொரு சீனிலும் உள்ளே வந்து ஏதாவது பேசுவேன்...' என, அடம்பிடித்தார், சோ. வீட்டில் உள்ள செகரட்டரி சீன் அவருக்கு கொடுக்கப்பட்டது. அந்த கேரக்டருக்கு, 'சோ' என்று பெயர் வைத்தனர். இப்பாத்திரத்தில் நடித்ததனாலேயே, அவர் பெயர், 'சோ' என்று ஆகவில்லை. ஏற்கனவே, வீட்டில் அவருக்கு இருந்த செல்லப் பெயரே, 'சோ' தான்! அதுதான் அந்த பாத்திரத்தின் பெயரானது; அப்பெயரே அவருக்கு நிலைத்து விட்டது.
முதன் முதலாக, 1958ல், நாமே ஒரு நாடகம் எழுதினால் என்ன என்ற எண்ணம் சோவிற்கு வர, அவர் எழுதிய முதல் நாடகம், 'இப் ஐ கெட் இட்!'
இந்நாடகம், 50 தடவைக்கு மேல் மேடை ஏறியது. அந்த கால சூழலில், 50 தடவை என்பது மிகப் பெரிய வெற்றி!
பின், முதன் முறையாக, 1963ல், 'கோ வாடிஸ்' என்ற அரசியல் நையாண்டி நாடகத்தை எழுதினார், சோ. அந்நாடகத்தில், கல்லுாரி மாணவனாக நடித்தார். அதைத் தொடர்ந்து, 1964ல் அரசியல் நையாண்டி சற்று அதிகம் உள்ள, 'சம்பவாமி யுகே யுகே' என்ற நாடகத்தை, எழுதினார். அப்போதெல்லாம் நாடகத்தை அரங்கேற்றுவதற்கு முன், போலீசிடமிருந்து லைசென்ஸ் வாங்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது. இந்நாடகத்திற்கு, போலீஸ், 'க்ளியரன்ஸ்' வரவில்லை. போலீஸ் துறையில், உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து, தான் கோர்ட்டில் வழக்கு போடப் போவதாக சொல்லி, 'நாடகத்தில் எந்தெந்த பகுதிகளை நீங்கள் அனுமதிக்க மறுக்கிறீர்களோ, அந்த பகுதிகளை கோர்ட்டில் வாசித்து காட்டுவேன்... அவை பத்திரிகைகளிலும் வெளிவரும்... பின், உங்களால் என்ன செய்ய முடியும்...' என்று வாதிட்டார். சில நாட்களிலேயே, போலீஸ் அனுமதி கிடைத்து விட்டது. அத்துடன், அடுத்து, சோ எழுதிய எல்லா நாடகங்களுக்கும், 'ஸ்கிரிப்டை' கொடுத்த ஓரிரு தினங்களில் நாடகம் போட அனுமதி கிடைத்தது.
'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்ற நாடகம், மதுரை தமுக்கம் மைதானத்தில், திறந்த வெளி அரங்கில் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. 'நாடகத்தை நடத்த விடமாட்டோம்...' என்று தடங்கல் செய்தார், மதுரை முத்து என்ற அரசியல்வாதி. எதிர்ப்பை மீறி நாடகம் நடத்தினால், வன்முறையால் எங்கள் குழுவினருக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற நிலைமை. ஆனாலும், தயங்கவில்லை, சோ. மேடையின் மேலிருந்து ஆடியன்சை நோக்கி இரண்டு ராட்சத விளக்குகளை பொருத்த சொன்னார்.
மேடையில் காட்சி முடிந்து, 'லைட்ஸ் ஆப்' ஆகும் அதே வினாடி, ராட்சத விளக்குகள் எரிய துவங்கும். மீண்டும் நாடகம் துவங்கும் வரை அவை எரிந்து கொண்டே இருக்கும்; இருட்டே இருக்காது. ஆடியன்ஸ் மீது முழு வெளிச்சம் இருந்ததால், வன்முறையில் ஈடுபட நினைத்தவர்கள், தாங்கள் யார் என்று தெரிந்துவிடும் என்ற அச்சத்தில், செய்வதறியாது சும்மா இருந்தனர். எந்த அசம்பாவிதமும் இன்றி சிறப்பாக அரங்கேறியது, நாடகம்.
அரசியல் பத்திரிகை ஆரம்பிக்க விரும்பினார், சோ. அவரது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் சிலர் வரவேற்றாலும், இன்னும் சிலர், 'வேண்டாம் இந்த விஷப் பரீட்சை...' என்று கூறினர். அதனால், 'வாசகர்களான தமிழக மக்களிடமே இதுபற்றி கருத்து கேட்கலாம்...' என்று நினைத்து, 'தி ஹிந்து' ஆங்கில பத்திரிகையில், தமிழில் ஒரு விளம்பரம் வெளியிட்டு, 'தபால் கார்டில் உங்கள் கருத்துகளை எழுதி அனுப்புங்கள்...' என்று கேட்டுக் கொண்டார். வாசகர்களிடமிருந்து எக்கச்சக்க வரவேற்பு!
'ஆனந்த விகடன்' இதழ் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன், 'துக்ளக்' பத்திரிகையை எடுத்து நடத்த முன் வந்தார். 'ஆனந்த விகடன்' அலுவலக வளாகத்திலேயே, 'துக்ளக்' ஆபீஸ் இயங்கியது. தன் எழுத்து சுதந்திரத்தில் கொஞ்சமும் தலையிடக் கூடாது என்ற சோவின் கண்டிஷனை, ஒப்புக்கொண்டார், 'ஆனந்த விகடன்' ஆசிரியர். ஜனவரி 14, 1970ல், 'துக்ளக்' பத்திரிகையின் முதல் இதழ் வெளியானது. மற்ற பத்திரிகைகள் வியக்கும்படி, 'துக்ளக்'கின் சர்குலேஷன் கிடுகிடுவென்று உயர்ந்தது.
'துக்ளக்' ஆண்டு விழாவை, வாசகர்களை சந்திக்கும் விழாவாக நடத்தினார், சோ. அதற்கும் பெரிய வரவேற்பு கிடைத்தது. விழாவில், அன்றைய அரசியலை பற்றி, முதலில் பேசுவார், சோ. பின், நேரத்தை பொறுத்து வாசகர்களின் கேள்விகளுக்கு, விளக்கங்கள் கூறுவார். நடிகர் ரஜினிகாந்த்,
அரசியல் தலைவர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, தற்போது, 'துக்ளக்' ஆசிரியராக இருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி போன்ற பலர், 'துக்ளக்' ஆண்டு விழாக்களுக்கு வந்திருக்கின்றனர்.
உடல்நலம் சரியில்லை என்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் கூட, 'துக்ளக்' ஆண்டு விழாவை தவிர்க்க, அவருக்கு மனம் வரவில்லை. டாக்டர்களுடன் பேசி, விழாவிற்கு செல்ல ஒப்புதல் பெற்றார். ஆம்புலன்சில் செல்ல டாக்டர்கள் வலியுறுத்தியும் மறுத்து, தன் காரிலேயே விழா அரங்கிற்கு வந்தார். அவர் காரை தொடர்ந்து, ஆம்புலன்சில், இரு டாக்டர்கள், நர்ஸ்கள் வந்தனர். விழாவில், கஷ்டப்பட்டு பேசினார். தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாது வந்த சோவிற்கு, வாசகர்கள், கரகோஷம் செய்து, நன்றி கூறினர்.
எங்கள் குழு ஆரம்பித்து, 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, சென்னை, 'நாரத கான சபா'வில், தான் எழுதிய, 10 நாடகங்களை, தொடர்ந்து, 10 நாட்கள் நடத்தினார். பின்,'எங்கள் எல்லாருக்கும் வயதாகிறது; வெற்றிகரமாக, 6,000 மேடை காட்சிகள் நடத்தி விட்டோம். இத்துடன், நாடகங்கள் போடுவதை நிறுத்திக் கொள்கிறோம். உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி...' என்று அறிவித்தார். 'தொடர்ந்து நாடகங்கள் போடுங்கள்...' என்று பலர் கேட்டபோதும், 'போதும்...' என்று சொல்லி விட்டார். அதன்பின் நாங்கள் நாடகம் போடவில்லை.
அன்றைய விழாவில், நாடக குழுவினர் அனைவருக்கும், 'பாவை விளக்கு' சிலையை நினைவு பரிசாக அளித்தார்.

தமிழ் நாடக உலகில், பல சாதனைகள் செய்திருக்கிறார், சோ. சென்னை மியூசிக்  அகாடமியில், காலை, 10:00 மணி, மாலை, 3:00 மற்றும் 6:30 மணி, இரவு, 9:30 மணி என்று ஒரே நாளில், தனித்தனியே நான்கு நாடகங்களை மேடையேற்றியுள்ளார். நான்கு காட்சிகளும் அரங்கு நிறைந்த காட்சிகள்.

சோ உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, சென்னையில் அவர் வீட்டுக்கு சென்று, அவரை நலம் விசாரித்தவர், பிரதமர் நரேந்திர மோடி. சோவை பெரிதும் மதித்த மோடி, அவரை, 'ராஜகுரு' என்றே குறிப்பிடுவார்.

சோ, 23 நாடகங்கள் எழுதி, இயக்கி, நடித்திருக்கிறார்.
அனைத்தும் சூப்பர் ஹிட்! 200 படங்களில் நடத்திருக்கிறார். பல படங்களுக்கு கதை, வசனம் எழுதியிருக்கிறார். இவர் நாடகமாக போட்டு பின் இவரது கதை, வசனம், டைரக் ஷனில் திரைப்படமாக உருவாகி, சூப்பர் ஹிட் ஆன படங்கள், முகம்மது பின் துக்ளக், உண்மையே உன் விலை என்ன? யாருக்கும் வெட்கமில்லை. போன்ற படங்கள்.
யாருக்கும் வெட்கமில்லை படத்தில், சோ, ராவுத்தராகவும், ஜெயலலிதா கதாநாயகியாகவும் நடித்திருப்பர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நியமித்து, 1999 முதல், 2005 வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார், சோ.
மயிலாப்பூரை சேர்ந்த ஒரு டாக்டர், தவறான சிகிச்சை அளித்ததில், சோவின் தலையில் இருந்த முடியெல்லாம் கொட்டி விட்டது. சில நாட்கள் வருத்தப்பட்டாலும், பின், மொட்டைத் தலையே, 'டிரேட் மார்க்' ஆக ஆக்கிக் கொண்டார்.

பெருந்தலைவர் காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., போன்ற தலைவர்கள், சோவின் மேடை நாடகங்களை அரங்கிற்கு வந்து பார்த்துள்ளனர். சோ தன்னுடைய நல்ல நண்பர் என்று சொன்னாலும், நேரில் வந்து நாடகத்தை பார்க்காதவர், ஜெயலலிதா.

சோ எழுதிய கடைசி நாடகம், 'நேர்மை உறங்கும் நேரம்!'

- எஸ்.ரஜத்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
08-டிச-201711:51:49 IST Report Abuse
Sridhar பெரும்பாலும் தான் எடுத்துக்கொண்ட முயற்சியில் நேர்மையாகவே சென்ற சோ அவர்களுக்கும் அடி சறுக்கிய தருணங்கள் உண்டு. உதாரணத்திற்கு, ராஜீவ் காந்தியை என்ன காரணத்தினாலோ பிடித்துவிட்டது. அதனால், உலகமே எழுதிய போபோர்ஸ் ஊழலை பற்றி ஒரு வார்த்தை துக்ளக்கில் வராமல் பார்த்துக்கொண்டார். ராஜீவை எதிர்த்து ஊழலை வெளிக்கொண்டு வந்ததால்தானோ என்னவோ VP Singh மீது அளவுக்கு மீறிய காழ்ப்புணர்ச்சி. ஒருவேளை அவர் மண்டல் கொண்டு வந்ததாலும் இருக்கலாம் என்று நினைக்க இடமில்லாதபடி அவர் ஆட்சிக்கு வரும் முன்பிலிருந்தே எதிர்த்து கொண்டிருந்தார். சோவின் ஒருதலைப்பட்சமான இந்த போக்கிற்கு மகுடம் வைத்தது போல், 2005 வருடம் கோபோர்ஸ் கேஸை டெல்லி ஹை கோர்ட் தள்ளுபடி செய்த பொது, அது சோனியாவின் தந்திரத்தால் அரசு தரப்பு சரியாக கேஸை நடத்தாததால் தான் என்று தெரிந்தும் கூட, ராஜீவ் காந்தி உத்தமர் என்பது இப்பொழுது தெளிவாகிவிட்டது, போலி குற்றசாட்டுகளினால் அவர் பெயருக்கு களங்கம் விளைவித்து விட்டார்கள் என்று கூசாமல் கூறினார். அப்போதிருந்த அரசு CBI ஐ அந்த தீர்ப்புக்கு எதிராக அப்பீல் செய்யவே விடவில்லை 12 வருடம் கடந்து இப்பொழுதுதான் செய்கிறார்கள். காஞ்சி சங்கரர் வழக்கிலும் அவரது சொந்த நம்பிக்கைகள் அவரது பத்திரிகை தர்மத்தில் குறுக்கிட்டன. அழகிரி வழக்கில் அவர் விடுதலை ஆனபோது, கிருட்டிணன் தன்னை தானே மண்டையில் அடித்துகொண்டா செத்தார் என கேள்வி எழுப்பிய சோ அவர்கள், அதே கேள்வியை ஜெயேந்திரர் விடுதலை ஆகும் போது சங்கரராமன் தானே தற்கொலை செய்து கொண்டாரா என்று கேட்கவில்லை ஒவ்வொரு மனிதனுக்கும் எதோ ஒரு குறைபாடு இருக்கும் யாரும் நூறு சதவிகிதம் நேர்மையாக இருக்க முடியாது என்ற விதத்தில் பார்த்தோமேயானால், திராவிட கட்சிகளின் பழைய அவலங்களை தோலுரித்து அவர்களில் பலருடைய உண்மையான முகத்தை உலகிற்கு காண்பித்து அவர்களுடைய பல ஊழல்களை வெளிக்கொணர்ந்து, உண்மையான காங்கிரஸ் ஆன காமராஜ் காங்கிரஸ் பக்கம் நின்று ஆதரவளித்ததோடு இல்லாமல், என்னை போன்ற ஒரு தலைமுறையினருக்கு அரசியலில் ஆர்வத்தை ஏற்படுத்திய ஒரு பெரும் பங்களிப்பு அவரை சேர்ந்தது.
Rate this:
Share this comment
Cancel
G.Krishnan - chennai,இந்தியா
06-டிச-201711:22:00 IST Report Abuse
G.Krishnan அரசியலில் பெரிய தலைவர்களிடம் நெருங்கிய தொடர்புக்கு இருந்தபோதிலும் . . . . கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைக்கத்தெரியாதவர். . . இப்பொழுதுள்ள அரசியல்வாதிகளின் வார்த்தைகளில் சரியாக சொல்லவேண்டுமானால் பிழைக்க தெரியாத மனுஷர் . . .. . அதனால் தான் மக்களிடம் நேர்மையானவராக பார்க்கப்படுகிறார் . . . ..அவரது வழியை பின்பற்றி தன்நலம் கருதாமல் பொதுநலம் கருதி இப்பொழுதுள்ள அரசியல் வாதிகள் செயல்பட்டால் . . . .நம் நாடு நல்ல முன்னேற்றம் பெரும் என்பதில் ஐயமில்லை.
Rate this:
Share this comment
Cancel
Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்
06-டிச-201701:08:14 IST Report Abuse
Sambasivam Chinnakkannu சோ நல்ல அறிவுரை சொல்லி சசிகலாவை ஜெ இடம் இருந்து விலக்கி வைத்தார், சனியன் யாரை விட்டது, மறுபடியும் வலிய சசிகலா என்ற பாம்பை ஜெ தனது கழுத்தில் சுற்றிக்கொண்டார், முடிவு ,,??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X