ஓவிய நவக்கிரகங்கள்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
ஓவிய நவக்கிரகங்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 டிச
2017
00:00

கோவில்களில் தனி மண்டபம் கட்டி, நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்வது வழக்கம். ஆனால், புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் உள்ள அரங்குளநாதர் கோவிலில், மண்டபத்தின் உச்சியில், ஓவிய வடிவில், 12 ராசிகளை வரைந்துள்ளனர்.
ஒரு காலத்தில், காட்டுப் பகுதியாக இருந்தது, திருவரங்குளம். இங்கு, தன் மனைவியுடன் வசித்து வந்தான், வேடன் ஒருவன். ஒருமுறை உணவு தேடி சென்ற வேடனின் மனைவி, நீண்டதுாரம் சென்றும் உணவு கிடைக்காததுடன், திரும்பும் வழியை அறியாமல் தவித்தாள். அவ்வழியே வந்த முனிவர் ஒருவர், அவளை அழைத்து வந்து வேடனிடம் ஒப்படைத்த போது, அவர்களது வறுமையைக் கண்டு, அவர்கள் அறியாமல், ஒரு பனை மரத்தை படைத்து விட்டு சென்றார். அம்மரத்திலிருந்து தினமும் ஒரு தங்கப் பனம்பழம் கீழே விழுந்தது. அதை எடுத்து ஊருக்குள் சென்று, ஒரு வணிகனிடம் கொடுப்பான், வேடன். அதன் உண்மை மதிப்பை அறியாத அவனிடம், சிறிதளவு தானியத்தை மட்டும் கொடுப்பான், வணிகன். அதை உண்டு, காலத்தை ஓட்டி வந்தனர், வேடன் தம்பதி.
இப்படியே, 4,420 பழங்களை விற்று விட்டான், வேடன். பெரும் பணக்காரனாகி விட்டான், வணிகன். அவனது அபரிமிதமான வளர்ச்சி கண்ட வேடனுக்கு, சந்தேகம் ஏற்பட்டு சிலரிடம் விசாரிக்க, பல்லாயிரம் ரூபாய் மதிப்புள்ள பழங்களை, வெறும் தானியத்திற்கு விற்றதை அறிந்து, வருந்தி, தனக்குரிய பங்கை வணிகனிடம் கேட்டான்; அவன் மறுத்து விட்டான்.
மன்னரிடம் புகார் செய்தான், வேடன். பொற்பனை பற்றி கேள்விப்பட்ட மன்னன், தன் ஏவலர்களை அனுப்பி, அம்மரத்தை பார்த்து வர ஆணையிட்டான். ஆனால், அங்கோ, மரமில்லை. அதற்கு பதிலாக, ஒரு லிங்கம் காணப்பட்டது. அங்கு கோவில் கட்ட தீர்மானித்தான், மன்னன். இதைக் கேள்விப்பட்ட வணிகனுக்கு, இறைவனால் இப்பொருள் வேடனுக்கு அருளப்பட்டுள்ளது என்பதையறிந்து, அவனிடமிருந்து பெற்ற பொற்பனம் பழங்களை விற்று, கோவில் எழுப்ப உதவினான்.
மூலவர் அரங்குளநாதர் எனப்படுகிறார்; இவ்வூரைச் சேர்ந்த பெரியநாயகி என்ற பக்தை, அரங்குளநாதர் மீது அதீத அன்பு பூண்டிருந்தார். ஒருமுறை, தன் பெற்றோருடன் கோவிலுக்கு வந்தவர், மறைந்து விட, அவர் சிவனுடன் ஐக்கியமாகி விட்டதாக அசரீரி ஒலித்தது. நகரத்தார் சமுதாயத்தினர் அவரை அம்மனாகக் கருதி, 'பிரகதாம்பாள்' என பெயர் சூட்டி, தனி சன்னதி எழுப்பினர்.
இக்கோவில் நடராஜர் சிலையின் படிமம், டில்லியிலுள்ள தேசிய மியூசியத்தில் உள்ளது.
பிரகாரத்திலுள்ள தட்சிணாமூர்த்தியின் கையில் வீணை இருக்கிறது; பிரகாரத்தை நுாற்றுக்கால் மண்டபம் என்கின்றனர். ஒரு குதிரை வீரனின் சிற்பம், கல் பலகை ஒன்றில் வடிக்கப்பட்டுள்ளது. இது, இப்பகுதியில் வாழ்ந்த வீரனாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. 12 ராசிகளும் அதற்குரிய அதிதேவதைகளுடன் மூலிகை ஓவியமாக வசந்த மண்டபத்தின் உச்சியில் வரையப்பட்டுள்ளது.
அனைத்து ராசியினரின் பரிகார தலமாக விளங்கும் இக்கோவில், புதுக்கோட்டை - ஆலங்குடி சாலையில், 7 கி.மீ., தொலைவில் உள்ளது.
- தி. செல்லப்பா

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X