கூட்டுக் குடும்பமா - பணமா?
அமெரிக்காவில் வேலை பார்க்கும் நான், அங்கேயே காதல், கல்யாணம், குடும்பம், குழந்தை என செட்டிலாகி விட்டேன். தமிழ் தெரியாததால், மனைவியும், குழந்தைகளும் அமெரிக்காவை விட்டு வர விரும்புவதில்லை. கிராமத்தை விட்டு, என் பெற்றோரும் வர மறுத்து விட்டதால், ஆண்டிற்கு ஒரு முறை ஊருக்கு வந்து, அவர்களை பார்த்து, திரும்புவேன். சமீபத்தில், அவ்வாறு ஊருக்கு வந்த போது, வழியில், ஓர் ஓட்டலில் சாப்பிடச் சென்றேன். அங்கே, சப்ளையராக இருந்தான், பள்ளிக் காலத்து, நண்பன்.
அவனின் வற்புறுத்தலை அடுத்து, இரண்டு நாட்கள் அவன் வீட்டில் தங்கியிருந்தேன். அவன், வீட்டிற்கு ஒரே பையன்; அவனது மனைவியும் ஒரே பெண். எவ்வித மன வேறுபாடுமின்றி இருவரும் அவரவர் பெற்றோரை பேணி காப்பாற்றுகின்றனர். நண்பரின் இரண்டு குழந்தைகள், தாத்தா, பாட்டி, மாமனார், மாமியார், கணவன் - மனைவி என்று ஒற்றுமையுடன் சந்தோஷமாக, கூட்டுக் குடும்பமாக வாழ்வதை பார்த்த போது, கொஞ்சம் பொறாமையாக இருந்தது. வெளிநாட்டு மோகம் என்னை தனிமைப்படுத்தியிருப்பதை உணர்ந்தேன்.
வறுமையிலும் செம்மையாக வாழும் அவன் எங்கே... டாலர்களை மட்டும் சம்பாதிக்கும் நான் எங்கே?
அவன் வீட்டிலிருந்த இரண்டு நாட்களும் மன நிறைவோடு இருந்தேன்; உறவுகள் பிரிந்திருப்பது தப்பானது என்பதும் புரிந்தது.
— சிவராமகிருஷ்ணன், சென்னை.
முதியோருக்கு சில வார்த்தைகள்...
சமீபத்தில், மூத்த குடிமக்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொள்ள நேரிட்டது. அங்கு, பேச்சாளர் ஒருவர் பகிர்ந்த கருத்துகள் சிலவற்றை, வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
*ஓய்வூதியம் மற்றும் வங்கி டிபாசிட்களிலிருந்து வரும் வட்டியில் வாழ்க்கை நடத்தலாம். கூடிய வரை சொந்த வீட்டில் வசிப்பது நலம்; வயதான காலத்தில் அடிக்கடி வாடகை வீட்டை மாற்றுவது சிரமம்.
* தானும், தன் மனைவியும் உயிரோடு இருக்கும் வரை, வாரிசுகளின் பெயரில் சொத்து மாற்றம் செய்வதை தவிர்க்கவும். நமக்கு தேவைப்படும்போது, அது கிடைக்காமல் போகலாம். ஆனால், உயில் எழுதி வைப்பது அவசியம்.
* உடம்பில் தெம்பு இருக்கும்போதே, புண்ணிய தலங்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் சென்று வருவது நலம்.
* உடல் நலத்தை நன்றாக பேண வேண்டும்; அவ்வப்போது மருத்துவ ஆலோசனை, ஹெல்த் செக்கப் செய்வது, அவசியம்.
* வாழ்க்கையின் முடிக்கு வந்து விட்டோம் என்று விரக்தியடையாமல், வாழும் நாட்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வது வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும். நிறைய படிப்பது, ஆன்மிகத்தில் ஈடுபாடு கொள்வது, தொலைக்காட்சியில் நல்ல நிகழ்ச்சிகளை பார்ப்பது ஆகியவை மகிழ்ச்சி தரும் விஷயங்கள்.
* சம வயது மூத்தவர்களின் நட்பை பெறுவது நல்லது; பரஸ்பரம் கருத்துகளை பரிமாறிக் கொள்ளவும், ஆலோசனை பெறவும் இந்த தோழமை உதவியாக இருக்கும்.
* தான் பெற்ற பிள்ளையாகவே இருந்தாலும், அனாவசிய அறிவுரை தருவதை தவிர்க்கவும். நம்மை விட அவர்கள் விபரமானவர்கள், தற்போதைய நடப்பை அறிந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ளவும். அதேபோன்று, அவர்களிடம் எதையும் எதிர்பார்ப்பதையும் தவிர்க்கவும்!
அருமையான அறிவுரைகள் தானே!
— ஆர்.ரகோத்தமன், பெங்களூரு.
கவுரவம் கிடைக்குமே!
கடந்த வாரம், மாலையில் கடைவீதிக்கு சென்ற போது, ஒரு கடையில், வாசலைப் பெருக்கி, தண்ணீர் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருந்தார், ஒரு திருநங்கை.
அவரைப் பற்றி, அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது, 'தினமும் கடை கடையா ஏறி, இறங்கி காசு வசூல் செய்வார். 'ஏதாவது வேலை பார்த்து கவுரவமாக பிழைக்கலாமே...' என்று நாங்கள் சொன்னபோது, 'யாரும் வேலை தர மாட்டேங்கிறாங்க...' என்றார் வருத்தத்துடன்!
'அதனால், வியாபாரிகள் சங்கத்தில் இணைந்திருக்கும் கடைகளின் வாசலை பெருக்கி சுத்தம் செய்யும் வேலையை கொடுத்தோம். இதை பார்த்த சிலர், தங்கள் வீடுகளில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுதல், கார் கழுவுதல், வீட்டை பராமரித்தல், கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருதல் போன்ற வேலைகளுக்கு அழைத்து, சம்பளம் கொடுக்கின்றனர்...' என்றார்.
திருநங்கைகள் கவுரவமாக பிழைக்க வழிவகை செய்த வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் அப்பகுதி மக்களை பாராட்டினேன்.
— ஜெ.ஆர்.ஜான்சி, சென்னை.