பிப்.,1962ல் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில், அரங்கண்ணலுக்காகத் தேர்தல் பணிகள் செய்தார், சந்திரபாபு. ஏனென்றால், கீழ்த்தட்டு மக்களிடம் எளிதாக நுழைய முடிந்த திராவிட முன்னேற்றக் கழகத்தால், மேல்தட்டு மக்களிடம் சென்றடைய முடியவில்லை.
எல்லா தரப்பு மக்களையும் கவர்ந்த நடிகர், சந்திரபாபு என்பதால், தேர்தல் பணி செய்ய, அவரை நாடினார், அரங்கண்ணல். சந்திரபாபுவும் சந்தோஷமாக செய்தார்.
தி.மு.க., உறுப்பினராக இல்லாவிட்டாலும், அரங்கண்ணலுக்கு செய்யும் நன்றி கடனாக, தி.மு.க.,வினருடன், ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில், பங்களா பங்களாவாகச் சென்று அவருக்கு ஓட்டு சேகரித்தார், சந்திரபாபு.
சந்திரபாபுவின் நடை, உடை, தோரணை, ஆங்கிலம் பேசும் லாவகம் இவை எல்லாம், மேல்தட்டு மக்களிடம் அவருக்கு செல்வாக்கைப் பெற்றுத் தந்தது. அதேபோல், அப்பகுதியைச் சேர்ந்த குடிசைவாசிகளிடமும் நேசத்துக்கு உரியவராக விளங்கினார்.
கடந்த, 1964ல், சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள பீமண்ண முதலி கார்டன் தெருவில், சந்திரபாபு குடியிருந்தபோது, அதன் அருகில் இருந்த கன்னிக்கோவில் பள்ளம் என்ற குடிசைகள் நிறைந்த பகுதியில், தீ விபத்து ஏற்பட்டது. பல குடிசைகள் எரிந்து சாம்பலாயின. அப்போது, அரங்கண்ணல், அ.செல்வராசன் மற்றும் திருநாவுக்கரசு போன்ற, தி.மு.க.,வினர் மீண்டும் குடிசைகளைக் கட்டித் தர நிதி திரட்டினர். அவர்களுக்கு நிதி உதவி செய்த சந்திரபாபு, பலரிடம் நிதி திரட்டிக் கொடுத்து உதவ, 1965ல் புதிதாக, 250 குடிசைகளுடன், புதிய குடியிருப்பு உண்டாக்கப்பட்டது.
அதன் திறப்பு விழா, அண்ணாதுரை தலைமையில், செயின்ட் மேரீஸ் மைதானத்தில் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளைக் கவனித்த சந்திரபாபு, விழாவில் பேசவும் செய்தார். அந்த பேச்சால் சர்ச்சை உருவானது.
விழாவில், 'மன்னிக்கத்தக்க, அண்ணா அவர்களே...' என, பேசத் துவங்கினார், சந்திரபாபு. அதன் அர்த்தத்தை தவறாகப் புரிந்து கொண்ட தி.மு.க.,வைச் சேர்ந்த சிலரிடம் சலசலப்பு ஏற்பட்டது. விழா முடிந்ததும், சந்திரபாபுவிடம், 'அதெப்படி, அண்ணாதுரைய, தவறாகப் பேசலாம்...' என சண்டை போடத் துவங்கி விட்டார், சங்கொலி திருநாவுக்கரசு.
பதில் ஏதும் பேசாமல், சந்திரபாபு புன்னகையோடு நின்றிருக்க, அரங்கண்ணல் வந்து, 'அதுல தப்பு ஒண்ணும் இல்லப்பா... உனக்குத் தான் அர்த்தம் புரியல. 'மன்னிக்கத்தக்க மாண்புடைய, அண்ணாதுரை அவர்களே...' என்பது தான் அதனோட அர்த்தம். இது புரியாம நீ சண்டை போட்டுக்கிட்டிருக்க...' என, திருநாவுக்கரசுவுக்கு புரிய வைத்தார். அப்போதும், அதே புன்னகையுடன் நின்றிருந்தார், சந்திரபாபு.
வெளி வேலைகள் ஏதும் இல்லாததால், வீட்டில், ஹாயாக காலை நீட்டி அமர்ந்து, ரேடியோகிராமின் இசையில் மூழ்கி இருந்தார், சந்திரபாபு.
அச்சமயம், வெளியில் கார் ஒன்று வந்து நின்ற சத்தமும், கதவைத் திறந்து மூடும் சத்தமும் கேட்டது.
சந்திரபாபுவின் நெருங்கிய நண்பரும், அவர் மகளும் தான் வந்திருந்தனர்.
'பாபு... உங்களால ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கு...' என்றார், நண்பர்.
'சொல்லுங்க; முடியுமானால் செய்றேன்...'
'என் மகளுக்கு காலேஜில், 'அட்மிஷன்' வேணும்; உங்களால் முடியும்ன்னு நம்பி வந்திருக்கேன்...' என்றார்.
'எந்த காலேஜ்ன்னு சொல்லுங்க; அட்மிஷன் வாங்கித் தர்றேன்...' என்று கூறவும், உடனே, இருவரும் அவருடன் அந்தக் கல்லுாரிக்குக் கிளம்பினர்.
உதவி கேட்டு வருவோருக்கு இல்லை என்று சொல்லாமல் தன்னால் முடிந்ததை செய்து கொடுக்கும் சுபாவம் சந்திரபாபுவுக்கு இருந்தது. அதனாலேயே, கல்லுாரியில், 'சீட்' வாங்கித் தரும்படி, சிபாரிசு கேட்டு பலரும், சந்திரபாபுவை நாடுவது உண்டு.
மேலும், அந்நாட்களில், பள்ளிக்கூடம், கல்லுாரி, ஆஸ்பத்திரி மற்றும் மடங்கள் கட்ட என, நன்கொடை திரட்டும் நிகழ்ச்சிகள் பலவற்றில், எம்.எஸ்.விஸ்வநாதனுடன் கலந்து கொள்வார், சந்திரபாபு.
மூவரும் அந்தக் கல்லுாரியை அடைந்தனர்; அட்மிஷன் பற்றி கேட்டபோது, 'எல்லாம் முடிஞ்சு போச்சு; சீட் இல்லை...' என்று கூற, ஏமாற்றத்துடன் திரும்பினர், மூவரும்!
ஆனால், சந்திரபாபுவால் அந்த ஏமாற்றத்தை தாங்க முடியவில்லை. காரணம், அந்தக் கல்லுாரிக்காக, எம்.எஸ்.விஸ்வநாதனுடன் சேர்ந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தி, 75 ஆயிரம் ரூபாய் வசூல் செய்து கொடுத்திருந்தார்.
மறுநாள், தன் நண்பர் மற்றும் அவர் மகளுடன் அதே கல்லுாரிக்குச் சென்றார், சந்திரபாபு. இம்முறை நேராக கல்லுாரி முதல்வரை சந்தித்து, எல்லாவற்றையும் விளக்கமாக கூறிய சந்திரபாபு, 'உங்கள் கல்லுாரிக்காக, 75 ஆயிரம் ரூபாய் வசூலித்துத் தந்தும், ஒரு சீட் தர மாட்டேன் என்கிறீர்களே...' என்றார்.
அவர் சொன்னது உண்மையா என்று அறிய, பழைய ரெக்கார்டுகளைப் பார்க்கச் சொன்னார், முதல்வர். அது உண்மை என்று தெரிந்த உடன், 'சீட்' தர சம்மதித்தார்.
'இதற்காக, உங்களுக்கு நான் நன்றி சொல்லப் போவதில்லை...' என்றார் சந்திரபாபு.
'ஏன்?' என, புரியாமல் கேட்டார், முதல்வர்.
'இந்த அட்மிஷன், நன்கொடை தந்ததற்காகத் தான்; எனக்கு என்ன மதிப்பு தந்தீர்கள்...' என்று பட்டென்று சொல்லி, கிளம்பி விட்டார்.
சிவாஜி கணேசனின் மகனும், பிரபுவின் அண்ணனுமான, தளபதி ராம்குமார் மீது சந்திரபாபுவுக்குத் தனி பிரியம் உண்டு. பெங்களூரில் படித்துக் கொண்டிருந்த தளபதி, விடுமுறைக்கு வரும்போதெல்லாம், சந்திரபாபுவுடன் தான் பெரும்பாலும் பொழுதைக் கழிப்பார். தளபதியின் கல்லுாரி அட்மிஷனுக்காகவும் ஒரு கல்லுாரி முதல்வரிடம் பேசினார், சந்திரபாபு. ஆனால், இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து, மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லுாரியில் சேர்ந்தார், தளபதி. இவ்விஷயம் பற்றி, சந்திரபாபு கூறும்போது, 'விளம்பரம் இல்லாமல் எவ்வளவோ நன்கொடைகள் செய்திருப்பதுடன், நிதி உதவிக்காக பல நாடகங்களை சிபாரிசு செய்திருக்கிறார், சிவாஜி கணேசன். ஆனால், அவர் மகனுக்குக் கல்லுாரியில் இடம் இல்லை. இப்படி எழுதித்தான், நான் என் மனக்குறையைப் போக்கிக் கொள்ள முடிகிறது...' என்று கூறியிருந்தார்.
நடிப்பில், பாடலில் தனக்கென ஒரு தனித் தன்மையை உருவாக்கியிருந்த, சந்திரபாபு, பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுப்பதிலும், வித்தியாசம் காட்டினார். பல நேரங்களில் அவர் மனதில் உள்ளதை வெளிப்படையாகக் கூறி, வெளிவந்த பேட்டிகள் கடும் விமர்சனத்துக்கும் உள்ளாகின. 'பேசும் படம்' பத்திரிகையில், சந்திரபாபு தன்னைப் பற்றி, தானே விளக்கிய சுயசித்திரம் இது.
பெயர்: சந்திரபாபு
செய்யும் தொழில்: நடிப்பு
தெரிந்த வேறு தொழில்: செல்ப் ஷேவிங்
சினிமாவை விட்டால்: நானும் அதை விட மாட்டேன்; அதுவும், என்னை விடாது.
— தொடரும்.
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் சென்னை.
முகில்