அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2017
00:00

'திருடத் தெரிஞ்சாலும் தெத்தத் தெரியணும்; சில அபிஷ்ட்டுகளுக்கு அந்த சாமர்த்தியம் போதாது...' என்ற குப்பண்ணா, 'முன்பு, 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பத்திரிகையில், ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கைச் சரித்திரம் என்ற தொடர் வெளியாகியிருந்தது...' என்று கூறும் போதே, 'யார்... நேதாஜியுடையதா?' என்று கேட்டார், லென்ஸ் மாமா.
'இல்ல; இவர் சாதாரண சிப்பாய் தான். ஆனால், ஜெர்மானியரிடம் அகப்பட்டு அனுபவித்த சித்ரவதைகளும், தப்பி வந்த வீரச் செயல்களும் அவருக்கு நேர்ந்த மாதிரி யாருக்கும் நேர்ந்ததில்லை. இரண்டாம் உலகப் போரின் போது, எதிரிகள் பிரதேசத்தில், பாராசூட் மூலம் குதித்து, அகப்பட்டுக் கொண்டாராம். அவருடைய வாயைப் பலவந்தமாகத் திறந்து, கொதிக்கக் கொதிக்க வெந்நீர் ஊற்றினராம் நாஜிகள். இப்படி, அவரைப் பற்றி பல செய்திகள் மக்களிடையே பரவி, அவருடைய அனுபவங்கள் பத்திரிகைகளில் வெளியாகி, அமெரிக்காவில் அவருக்கு நிகரான வீரர் கிடையாதென்று ஆகி விட்டது...'
'அடடே... அதை வாசிக்க வேண்டுமே...' என்றார், லென்ஸ் மாமா.
'முழுவதையும் கேளும் ஓய்... அவருடைய வாழ்க்கை வரலாறு புத்தகமாக வந்து, அதன் சுருக்கம், 'டைஜஸ்ட்' பத்திரிகையில் வெளி வந்த போது தான், குட்டும் வெளி வந்தது...- ஆசாமி, பலே, 'சரடு பார்ட்டி' என்று!'
'அடப்பாவி... எப்படி அது யாருக்குமே தெரியாமலிருந்தது?'
'அது தான் ஆச்சர்யம்! ஆசாமி, 5 கி.மீ., துாரத்துக்கு அந்தண்டை கூட அடி எடுத்து வைத்ததில்லையாம். ஆனால், ஒரு சமயம், யுத்தத்தில் தான் சேர்ந்தது போலவும், தமக்கு நேர்ந்த அனுபவங்கள் போலவும் கற்பனையாக நண்பர்களிடம் என்னவோ சொல்லப் போக, அது மற்றவர்களுக்குப் பரவ, கேட்கிறவர்களிடமெல்லாம் தன் கற்பனையை விரித்துக் கொண்டே போய் விட்டார். அப்புறம், அவராலேயே தப்ப முடியாத அளவுக்கு பிரபலமாகி விட்டார்...'
'பாவம் ரீடர்ஸ் டைஜஸ்ட்காரனுக்கு ஒரே அவமானமாகப் போயிருக்குமே...'
'அவன் கெட்டிக்காரன்; கட்டுரையை நிறுத்த முடியாத அளவுக்கு காலம் கடந்து விடவே, 'நீங்களே வாசித்துப் பாருங்கள்; இவ்வளவும் பொய் என்று யாராவது சொல்ல முடியுமா... அவ்வளவும் உண்மை போல் இருக்கிறது...' என்று ஒரு குறிப்புடன் கட்டுரையின் இறுதி அத்தியாயத்தை வெளியிட்டு விட்டான்...' என்றார் குப்பண்ணா.
— இது எப்படி இருக்கு!
கடந்த, 1970களில் அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்திய புத்தகம், 'பிரீடம் அட் மிட் நைட்' -- 'நள்ளிரவில் சுதந்திரம்' என்ற புத்தகம். இந்திய அரசியல் தலைவர்களின் குணங்களையும், நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்திய இந்த நுாலில், சுதந்திரத்துக்கு முன், சமஸ்தான மன்னர்கள் வாழ்ந்த விதங்களைப் பற்றி விவரிப்பதற்காக, ஒரு தனி அத்தியாயமே ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிலிருந்து சில:
டைனிங் ஹாலில் அமர்ந்து, ஒரு பட்டனை தட்டுவார், குவாலியர் அரசர். உடனே, சமையலறையிலிருந்து அறுசுவை உணவு வகைகளை ஏற்றி, ஒரு மினி ரயில் வண்டி ஓடி வரும். இதற்காக, 250 அடி நீளத்துக்கு வெள்ளி தண்டவாளத்தை சமையலறையிலிருந்து டைனிங் டேபிள் வரை பொருத்தி இருந்தார், குவாலியர் அரசர்.
பாட்டியாலா அரசரிடம் விசித்திரமான பழக்கம் ஒன்று உண்டு... ஆண்டுக்கு ஒருமுறை, 1,001 வைரக் கற்கள் பொருத்தப்பட்ட தங்கக் கவசம் ஒன்றை மார்பில் அணிந்து, பிறந்த மேனியோடு, கம்பீர நடை போடுவார். இருபுறமும் பிரஜைகள் நின்று, கை தட்டி மரியாதை செலுத்தியே தீர வேண்டும்.
பனாரஸ் மகாராஜா, காலையில் எழுந்தவுடன், பசுவின் முகத்தில் கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, தோட்டத்திலிருந்து ஒரு கிரேனில் பசுவை உயரத் துாக்கி, அதை, மாடி ஜன்னல் வழியாக, மகாராஜா எழுந்து பார்க்கும் வரை தொங்க விட்டிருப்பர்!
உலகிலேயே மிக பெரும் செல்வந்தர்களுள் ஒருவராகக் கருதப்பட்ட நிஜாம் மன்னர், தன் செருப்புகளை பிளாட்பாரத்தில் வாங்குவது வழக்கம். ஆனால், அவர் பேப்பர் வெயிட்டுகளாக உபயோகித்தவையோ, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரக் கற்கள்!
- இப்படி பல மன்னர் களைப் பற்றி சுவையான விஷயங்களைச் சொல்லியுள்ளது, இந்நுால்!

ஆபீசில், பெண் உதவி ஆசிரியை ஒருவர், எப்போதும் என்னிடம் ஒரு கேள்வி கேட்பதுண்டு. அந்தக் கேள்வியை என்னிடம் கேட்கச் சொன்னது அவரது கணவராம்... அது, 'உங்க அந்துமணிய, அடிக்கடி பீச்சுல பாக்கறேன்... மனுஷன் தன் வயசு ஆட்களோட சேராம, கிழக் கும்பலோட சுத்திக்கிட்டு இருக்காரே என்ன காரணம்... அப்படி அவங்களோட என்ன தான் பேசிகிட்டு இருப்பார்'ன்னு கேட்டுச் சொல்...' என்பாராம்!
இக்கேள்விக்கு, மழுப்பலான சிரிப்பு தான் என் பதிலாக இருக்கும்!
வயதில் மூத்தவர்கள், அனுபவப் பட்டவர்களிடம் பேசும் போது கிடைக்கும் தகவல்களும், ஞானமும், பழகிப் பார்த்தவர்களாலேயே உணர முடியும்.
அந்தப் பெரிசுகள் கோஷ்டியில் ஒருவருக்கு, சின்ன வயதில் இருந்தே சர்க்கரை
வியாதி... நாக்கைக்கட்டுப்படுத்தி, நோயை சமாளித்து வருகிறார்.
அன்று, 'பீச் மீட்டிங்'கில் சர்க்கரை வியாதிக்கு ஒரு புதிய மருந்தை எடுத்து விட்டார், பெரியசாமி அண்ணாச்சி...
'பழைய தமிழ் ஏட்டுச் சுவடிகள்ல, பல அரிய வைத்திய முறைகள எழுதி வச்சிருக்காவல்லா... அவையள தொகுத்து, தஞ்ச சரசுவதி மகால் நுாலகம், ஒரு நுால வெளியிட்டு இருக்குல்லா... அந்த பொஸ்தவத்தை படிச்சேன்... அதுல, மூனே நாளுல இந்த நோய் தீரும்ன்னு ஒரு வைத்யக் குறிப்பு கொடுத்திருக்காவ வே...
'அது என்னான்னா... கோளிமுட்டை மூனோட வெள்ளைக் கரு... நல்லெண்ண, 1 பலம்... மூணு எலுமிச்சம்பள சாறு... இத ஒண்ணு சேத்துக் குடிக்கணுமாம்... நீரிழிவு ஓடிப் போயிருமாமுல்லா...
'உப்பு, புளிப்பு சேக்கப்படாதாம்... புகையிலையையும் தள்ளணுமாம்... இந்த மருந்த மூணு நாள் சாப்பிட்டா, நீரிழிவு ஓடிப் போயிரும்ன்னு போட்டு இருக்காங்கய்யா...' என்றார்.
'நீர் வேற... நான் சைவம் ஓய்...' என்றார் அந்தப் பெரிசு.
இதற்கு, இந்தக் கால டாக்டர்களின் விளக்கம் என்னவோ!

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வழிப்போக்கன் - Somerville, MA,யூ.எஸ்.ஏ
10-டிச-201702:35:38 IST Report Abuse
வழிப்போக்கன் சர்க்கரை குறைபாடு என்பதும் சர்க்கரை வியாதி, தீர்க்கமுடியாத ஒன்று .. இது புரியாது பலர் இதனை தீர்க்க அது, இது என்று போராடுகிறார்கள். முதுமை போல எல்லோருக்கும் இது வரும் (ஒரு சிலரே தப்பிக்க முடியும் ..) .. இன்சுலின் உற்பத்தி ஆகாமலே இருப்பது ஒருவகை - அதனை நிவர்த்தி செய்யவே முடியாது .. ஆனால் உடல்பருமன், சில வைரஸ் தாக்குதல்களால் இன்சுலின் உற்பத்தி செய்யும் திசுக்களை 'மாற்று திசுக்கள்' என்று எண்ணி நமது உடலே அழிக்கும் தன்மை, இன்சுலின் எதிர்ப்பு என்று சர்க்கரையை கிரகிக்கும் திறனை இழக்கும் திசுக்கள் என்று பலவகைகளில் சர்க்கரை குறைபாடு வெளிப்படும்.. முதலில் இங்கிலாந்தில் இதனை சோதித்து வருகிறார்கள் .. குறைவான கார்போ (சக்கரை சக்தி - அரிசி, சப்பாத்தி போன்ற உணவுகள்) உணவை உண்டால் கணையத்தை சுற்றி இருக்கும் கொழுப்பு கரைந்து மீண்டும் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும்.. அது மட்டும் அல்லாது, உடற்பயிற்சி உதவும் மிக மிக உதவும்.. வெறும் நடைப்பயிற்சியை போதும்.. இதுவும் அன்றி சில உணவு பழக்கம் (அகத்தி கீரை. வில்வ இலைகள், நாகப்பழம், வெறும் அரிசிஉணவுடன் (கைக்குத்தல் அரிசி போல) கொழுப்பு சேர்த்து உண்ணுதல் - செரிமானம் மெதுவாக இருக்கும், பாலிஷ் அரிசி பயன்படுத்தாமல் இருத்தல்) உதவும். ஆனால் இங்கு, இந்த கட்டுரையில் சொல்லப்பட்டு இருப்பது போல, அது முற்றிலும் தீர்க்கப்படமுடியாது.. அது மட்டும் அல்ல, அந்த மூன்றுநாள் வைத்தியம் ஒன்றும் செய்யாது... நம்மூரில், சில நேரங்களில் சக்கரை அளவை குறைவாக காட்ட சில வித்தைகளை செய்வார்கள், ஈயம் அதிகம் உள்ள உணவு (ஈயம் மிக மிக கெடுதல் தரும் ஒரு பொருள் - சிறுநீரகத்தை காலி செய்துவிடும்) உண்டால் ரத்தத்தின் சக்கரை அளவு குறைவாக தெரியும். அன்று, ரத்தசோதனை செய்யாது, சக்கரை அளவை சிறுநீரை கொண்டு அலைந்தார்கள். ஆகையால் சிறுநீரில் சக்கரை வெளிப்பாட்டை குறைத்தால் சக்கரை நோய் காணாமல் போனது என்று அர்த்தம் அல்ல.. ரத்தத்தில் இருக்கும் சக்கரை (அதனை திசுக்கள் சேகரிக்காதபொழுது, சிறுநீரகம் அதனை மீட்கும் - அதனை இந்த முறை இன்னமும் தீவிரப்படுத்தி இருக்கலாம் - அவ்வளவே). ஆனால் அது கெடுதல் ஏனெனில் அது ரத்தத்தில் சக்கரை அளவை அதிகரிக்க அதன் மூலம் உள்ளுறுப்புகள் பாதிப்புக்கு உள்ளாகும். கண் பார்வை முதல், அல்ஸைமர்ஸ் வரை .. அதனால்தான் இன்று சக்கரையை சிறுநீரகம் மீட்க வேண்டாம் என்று அதிக சக்கரையை சிறுநீரில் கழித்துவிட்டு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன .. இது நீங்கள் கட்டுரையில் சொன்னதற்கு நேரெதிர் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X