வல்லரசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2017
00:00

மனைவி மாதங்கியின் பயம், என்னை கலவரமடையச் செய்தது.
தறிகெட்டு வளர்ந்துவிட்ட, சமூக ஊடகத்தின் பலம் இவ்வளவு விரைவாக, என்னை பதம் பார்க்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.
''மதன்... வெளியே, 'கேட்' முன், நுாத்துக்கும் மேற்பட்ட ஆட்கள் நின்னு, உங்கள ரொம்ப கேவலமா பேசறாங்க; காதுல வாங்க முடியல. செக்யூரிட்டி அண்ணாவ போட்டு அடிக்கிறாங்க; எனக்கு ரொம்ப பயமா இருக்கு,'' என்று பதறினாள், மாதங்கி.
ஐபோனின் துல்லியம், நியூயார்க்கில் இருக்கும் எனக்கு, அக்கலவர சூழ்நிலையை உணர்த்தியது.
என் மற்றொரு மொபைல் போனில், போலீஸ் கமிஷனருக்கு முயற்சித்தபடி,''மாதங்கி, ப்ளீஸ்... பயப்படாதே... வாசல் கதவை எக்காரணம் கொண்டும் திறக்காதே... ஜன்னல் கதவை எல்லாம் மூடி வை. ஸ்கூலுக்கு போன் பண்ணி, நம்ம மகள ஸ்கூல் வேன்ல அனுப்ப வேணாம்ன்னு சொல்லு... நான் என் தம்பிகிட்ட சொல்லி, அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போகச் சொல்றேன்,'' என்றேன்.
அதற்குள், போலீஸ் கமிஷனர் லைனில் கிடைத்தார்.
''சார்... நான், மதன் சைலேஷ்; பாதுகாப்புத்துறை, ஆராய்ச்சிக்கூட துணைத் தலைவர்; உங்ககிட்ட ஒரு உதவி வேண்டி...'' பேசி முடிக்கும் முன், ''தெரியும் மிஸ்டர் மதன். நானே உங்கள கூப்பிட நினைச்சேன்; நீங்க முந்திக்கிட்டீங்க. இப்போ, உங்க வீட்டுக்குதான் போயிட்டு இருக்கேன்... வீட்டுல யாரெல்லாம் இருக்காங்க?'' என்று கேட்டார்.
''என் மனைவி மாதங்கி மட்டும் தான் இருக்கா. பொண்ணு ஸ்கூலுக்கு போயிருக்கா. அவள என் தம்பி, அவனோட அழைச்சுட்டு போயிடுவான். மாதங்கி தான் ரொம்ப பயந்து போயிருக்கா,'' என்றேன்.
''கவலைப்படாதீங்க... இந்நேரம் போலீஸ் போயிருப்பாங்க,'' என்றார்.
''நன்றி சார்...''
''நீங்க எப்போ இந்தியா வர்றீங்க?''
''இன்னும் நாலு நாள் விருந்தினரா அமெரிக்காவ சுற்றிப் பாக்க திட்டமிருந்தது. ஆனா, இப்போ ஏர்போர்ட் போயிட்டிருக்கேன். நாளை, மறுநாள் அங்க இருப்பேன். அதுவரை...''
என்னை இடைமறித்த கமிஷனர், ''கவலைப்படாதீங்க... உங்க குடும்பமும், வீடும் பத்திரமா இருக்கும்,'' என்று கூறி, இணைப்பை துண்டித்தார்.
மீண்டும் மாதங்கியை மொபைல் போனில் அழைத்து, ''மாதங்கி, கமிஷனர் வந்துட்டிருக்கார்... கவலைப்படாத... நான் கிளம்பிட்டேன்; நாளை மறுநாள், உன் பக்கத்துல இருப்பேன். ரெண்டு நாளைக்கு பெரியம்மா வீட்டுல தங்கிக்கோ...'' என்றேன்.
என் காதலில், மாதங்கியின் பயம் கரைந்ததாய் உணர்ந்தாலும், அவளின் பயம், எனக்குள் இறங்கிக் கொண்டதாகவே இருந்தது.
நியூயார்க், ஜான் எப் கென்னடி பன்னாட்டு விமான நிலையம் -
செக்யூரிட்டி செக் முடிந்து, காத்திருந்தேன்.
மனம் நொடியில், நியூயார்க்கிலிருந்து சென்னைக்கு சென்று வந்தது. 'இவ்வளவு கலவரத்திற்கு அப்படி என்ன தவறு செய்தேன்... ஒருவேளை, இப்படி பேசியிருக்கக் கூடாதோ... ஆனால், அப்படி ஒன்றும் தவறான கருத்துகளை பதிவு செய்யவில்லையே... இந்த புரிதல் பிழை எனக்கா, இந்த சமூகத்திற்கா...' மனம், கொஞ்சம் கொஞ்சமாய் பின்னோக்கி சென்றது.
கீழாம்பூர் கோவில் திருவிழா -
ஒருவாரம் நடக்கும் இத்திருவிழா, கடைசி நான்கு நாட்களில் மட்டும் வழக்கத்தை விட, பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அந்நாட்களில், எங்கள் வீட்டில் ஆள் வைத்து சமைப்பர். நுாறுக்கும் மேற்பட்ட உறவுகள் கூடி இருப்பர். படுக்க இடமின்றி, கையை தலையணையாக்கி ஒருவருக்கு ஒருவர் ஒட்டியபடி படுத்திருப்போம். போதுமான அளவு மின் விசிறி கூட இருக்காது. ஆனாலும், வெட்கையின்றி துாங்க முடியும்.
இந்தாண்டு திருவிழாவில், வழக்கத்திற்கு மாறாக, வீட்டில் இஸ்லாமிய வாடை இருக்கவே, வீடு, அந்நியமாகப்பட்டது. அத்தை தான் விவரித்தாள்...
'மதனு... என்ன அப்படி பாக்குறே... எல்லாம் நம்ம சொந்தந்தான்; ஒன் பூட்டனாரு கூடப் பிறந்தவரு குளத்து ராசா; அந்தக் காலத்துல, நம்ம பக்கத்து தெருவில, ஹோமியோபதி டாக்டராக இருந்த மொஹையதீன் பாட்ஷாவோட மகள காதலிச்சு, ஜாதி, ஜனம்ன்னு, ஒட்டுமொத்த ஊர் எதிர்ப்பையும் மீறி, கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.
'அவரோட அப்பா, குளத்து ராஜாவ தலை முழுகிட்டேன்னு சொல்லிட்டாரு. ஆனா, டாக்டரு, 'வாடா ராசா, நீ யாரா இருந்தா என்ன... நீதாண்டே எம் மருமவன்'னு வீட்டுக்குள்ள கூப்பிட்டுகிட்டாரு... அதுக்கப்புறம், நம்ம பக்கத்து மனுஷங்க யாரும் அவரு கூட பேச்சு வார்த்த வெச்சுக்கல. அதுலயே மனசு ஒடைஞ்சு, முஸ்லிமாவே மாறிட்டாரு குளத்து ராசா தாத்தா...
'அந்த தலைமுறை வரை பேச்சுவார்த்தை இல்லாட்டியும், எங்கியாச்சும் பாத்தா கண்ணால பேசிக்கிட்டு இருந்திருக்காங்க. அடுத்தடுத்த தலைமுறைகள்ல அப்படியே பிரிஞ்சுபோயி, நீ யாரோ, நான் யாரோன்னு மாறிப் போச்சு.
'இப்ப, நம்ம ரெண்டு குடும்பத்து பிள்ளைகளும் ஒரே காலேஜூல படிக்காங்கல்லா... ஒருத்தருக்கொருத்தர் பேசிப்பேசி, யாரு என்னன்னு கேட்டுத் தெரிஞ்சு, அவங்களுக்குள்ள சினேகம் வளந்து, அதத்தொட்டு, பெருசுங்களும் பேசி சிரிக்க, போன நாலு மாசமா போக வர ஆரம்பிச்சாச்சு...
'அங்க இருந்து பிரியாணி வருது; இங்கேர்ந்து சர்க்கரை பொங்கல், சுண்டல் போகுது. நம்ம வீட்டு பிள்ளைக, இப்போ, சர்தானி அத்தை செய்ற மட்டன் குழம்பு மாதிரி இல்லன்னு சாப்பிட மாட்டேங்குதுங்கன்னா பாத்துக்கயேன்...'
எப்பவோ நடந்ததை, நேரில் பார்த்தது போல, சொல்லி முடித்தாள், அத்தை. எனக்கும் அந்த மதமாற்ற காதல் நிகழ்வு தெரியும்; சிறு வயதில் என் தாத்தா சொல்லியிருக்கிறார். ஆனால், நினைவில் தொலைந்து போயிருந்த ஒன்று, இப்படி துளிர்க்கும் என்று நினைக்கவில்லை.
நொடி முள் நகர்வின் வேகத்தில் முடிந்தது, திருவிழா; ஆனால், ஆண்டுக்கணக்கிலான நிகழ்வுகளை மனம் அனுபவித்திருந்தது.
என் பிள்ளைக்கு சர்தானி அத்தை பிசைந்து கொடுத்த பருப்பு சாதம் இனித்திருந்தது. என் மனைவி மாதங்கியிடம், 'தங்கச்சிய மாதிரி எனக்கும் தலை சீவி வுடுங்க சித்தி...' என்றது, சர்தானி அத்தையின் பேத்தி. அதை பெருமையோடு பார்த்தாள் எனக்கு தங்கை முறையான, சாயிரா.
'ஏய் மதனு... நான் ஒனக்கு மச்சான் மொறைடே... நீ மிலிட்டரிலியா இருக்க... சரக்கு எதுவும் கொண்டு வந்தியாடே...' என, வெள்ளந்தியாய் கேட்டான், மாமன் மகன், ஜாகீர்.
அவனை செல்லமாக அதட்டினாள், பெரமாச்சி ஆச்சி.
'அத்தான்... நான் தான் ஒங்க மொறைப் பொண்ணு; நீங்க, என்ன விட்டுட்டு இந்த மாதங்கிய போய் கட்டிக்கிட்டீகளே... மாதங்கிய விட நான் எவ்வளவு கலரா இருக்கேன் பாத்தீயளா...' என்று, என்னையும், மாதங்கியையும் ஒருசேர வம்புக்கிழுத்தாள், இன்னொரு அத்தை பெண் நஸ் ரீன்.
'ஏட்டி, ச்சும்மாருக்க மாட்டியாட்டி... மாதங்கிய பாரு, பாவம், கன்னம் செவந்து போச்சு...' என்று நஸ் ரீனை கண்டித்தாள், ஜீனத் சித்தி. மாதங்கியின் இடுப்பில் இருந்தவாறே துாங்கிப்போன நஸ் ரீன் மகளை வாங்கி, தொட்டிலில் போடச் சென்றாள், என் அம்மா.
முதல் மூன்று நாட்களும், பழங்களும், சந்தனமும், பூக்களுமாக கோவில் வாசம் இருந்த வீட்டில், நான்காவது நாள் காலையிலிருந்தே கவுச்சி வாடை ஆளைத் துாக்கியது. ஒருசில சைவர்களுக்கு மட்டும் போனால் போகிறதென்று ரசமும், தயிரும், முதல் நாள் மீதமானவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சுண்டக்கறியும் பரிமாறப்பட்டது. மற்றவர்களுக்கு, கால் முதல், மூளை வரை, ரகம் ரகமாய் இலையிலிருந்து, இரைப்பைக்கு பயணமாயின.
ரம்ஜானைப் போல், அருகாமை வீடுகளுக்கும் அசைவம் கொடுத்தனுப் பப்பட்டது. கொண்டாட்டமாய் உணர்ந்தோம்.
சென்னை புறப்படும் முன், அவர்களின் வீடுகளுக்கு சென்றிருந்தோம்.
குளத்து ராசா - ஜெகரா பீவி தம்பதியரின் போட்டோ எதுவும் இல்லை. அதற்கடுத்த இரு தலைமுறையினரின் போட்டோக்கள், கறுப்பு, வெள்ளையில் சிரித்தன. தற்போது, குடும்பத்தின் மூத்தவராக இருந்த யாஸ்மின் பாட்டிக்கு, என்னைப் பற்றி தெரிந்திருந்தது. தன் தகப்பனார் சுதந்திரப் போராட்ட தியாகி என்றார் பெருமிதத்தோடு!
யாஸ்மின் பாட்டியின் காலில் விழுந்து ஆசி கோரிய போது, தன் பேரனை அழைத்து, பக்கத்து வீட்டிலிருந்து விபூதி வரவழைத்து, என் நெற்றியில் தன் நான்கு விரல்களால் பூசினார். என் குழந்தையை முத்தமிட்டு, சுருக்கு பையிலிருந்து, 100 ரூபாய் எடுத்து கொடுத்தார். என் மனைவியிடம், 'குங்குமம் இல்ல தாயி... அடுத்த மொறை வாங்கி வைக்கேன்..' என்று வாஞ்சையுடன் அவள் கன்னம் தடவினார்.
நான்கு நாள் மகிழ்வை, என் துறைத் தலைவரிடம் பகிர்ந்து கொண்டதுடன், அதுகுறித்து சில விஷயங்களை விவாதித்தோம். அந்த விவாதத்தில் முடிவானது தான், நியூயார்க் பயணம்.
ஐக்கிய நாடுகள் சபையின், உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட மிக முக்கிய மாநாடு.
உலக நாடுகளின் நல்லுறவுக்காக, 'போரில்லா உலகம்' செய்வோம், என்ற தலைப்பையொட்டி, 12 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், தங்கள் நாட்டின் கருத்துகளை பதிவு செய்கிற மிக முக்கிய மாநாடு அது.
இந்தியா சார்பாக பேசுவதற்கு, என் துறை தலைவரின் பரிந்துரையில், இந்த மாநாட்டிற்கு வந்திருந்தேன்.
'மிஸ்டர் மதன் சைலேஷ், ப்ரம் இந்தியா...' என்று அழைக்கப்பட்டதும், என் இருக்கையிலிருந்து எழுந்து போடியம் இருந்த மேடையை நோக்கி நடந்தேன். எனக்கு எதிரில், நானுாறுக்கும் மேற்பட்டோர்.
வந்தே மாதரத்துடன் துவங்கி, எனக்கு கொடுக்கப்பட்ட, 20 நிமிடங்களில், 17 நிமிடங்கள் போரினால் ஏற்படும் அழிவுகளை பற்றி பேசிய பின், 'கடந்த, 1947ற்கு முன், இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பாகிஸ்தான், இன்று தனி நாடாக, அண்டை நாடாக, எல்லையில் எங்களோடு தகராறில் நிற்பது கவலையளிக்கிறது. இதைப் பயன்படுத்தி, தீவிரவாதம் மற்றும் மதவாத கும்பல்கள் இரு நாடுகளுக்கும் இடையே எண்ணற்ற பிரச்னைகளை உருவாக்கி, குளிர் காய்கின்றன. ஆனால், உண்மை நிலை என்ன-?
'இந்தியா மற்றும் பாகிஸ்தானில் வசிக்கும், 99 சதவீத சாதாரண மக்கள், தங்களுக்குள் எவ்வித வேறுபட்ட எண்ணங்களும், மத துவேஷமும் இல்லாமல், தங்களுக்கான வாழ்க்கையை மிக அமைதியாக, சிறப்பாக வாழவேண்டும் என்ற கருத்தொற்றுமையுடன் தான் உள்ளனர்.
'ஆனால், இம்மக்களை முட்டாளாக்கி, இரு நாடுகளின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளை சில தீய சக்திகள் எடுத்து வருகின்றன. இவற்றிற்கு ஒரே தீர்வு. மீண்டும் இந்தியாவுடன் இணைய வேண்டும், பாகிஸ்தான். தன்னை இந்தியாவின் ஒரு மாநிலமாக பிரகடனப்படுத்தி, இந்த இணைப்பு ஏற்படுத்த வேண்டும். இவ்விரு நாடுகளிலும் மக்களின் கருத்துகளைப் பெற, ஓட்டெடுப்பு நடத்தப்பட வேண்டும். இது சாத்தியமே!
'பெரும்பான்மை மக்களின் விருப்பப்படி இந்த இணைப்பு நடந்தால், எல்லைப் பிரச்னை தீருவதுடன், அவ்வப்போது ஏற்படும் இரு நாடுகளுக்குமான போர்கள் தவிர்க்கப்பட்டு, வளர்ச்சிப் பணிகள் சிறப்புறும். ஒருங்கிணைந்த அந்த இந்தியா, நிச்சயம் வல்லரசாகும்.
'இதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் நடைமுறைகளை இவ்விரு நாடுகளும் ஆராய்ந்து, மக்கள் விருப்பத்தின் படி முடிவெடுக்க வேண்டும். குறைந்தபட்ச சாத்தியங்கள் குறித்த விரிவான அறிக்கையை இந்த சபையில் சமர்ப்பிக்கிறேன்.
'சில கசப்பான விஷயங்களை இனிப்பாக்கும் சூட்சுமம் நம் கையில் தான் உள்ளது. அதனால், உலக மக்களே... பிரிவினைவாத தலைவர்களை புறந்தள்ளி யோசியுங்கள்; நல்லது நடக்கும். ஜெய்ஹிந்த்!' என்று பேசி முடித்தேன்.
என் இருக்கைக்கு வந்து அமரும் வரை கைத்தட்டல்கள் தொடர்ந்தன. பெருமையாகவும், கர்வமாகவும் இருந்தது. யாஸ்மின் பாட்டி குடும்பமும், என் ஊர் திருவிழாவும் கண்முன் வந்து போனது.
என் மீதான கண்டனங்களுக்கும், தாக்குதல்களுக்கும் இந்த உரை தான் காரணம் என்று உணர முடிந்தது.
காலம் கடந்தது. 2030ம் ஆண்டு - ராஜஸ்தான் போன்று பாகிஸ்தானும், இந்தியாவின் ஒரு மாநிலமாகி இருந்தது. மற்ற உலக நாடுகள், வல்லரசான இந்தியாவின் ஒவ்வொரு உத்தரவுக்காகவும் காத்திருந்தன.
அது, 2035ம் ஆண்டு -
பங்களாதேஷின் ஜாட்டியா பார்லிமென்டில், 'ஒரு காலத்தில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த நாம், நாட்டின் வளர்ச்சியையும், மக்கள் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு, இந்தியாவின் ஒரு மாநிலமாக நம்மை இணைத்துக் கொள்ளவும், அதற்காக, இந்தியாவுக்கு கோரிக்கை வைக்கவும் ஜாட்டியா பார்லிமென்ட் ஏகமனதாக ஒப்புதல் தருகிறது...' என்று தீர்மானம் நிறைவேற்றியது!
உலகின் அசைக்க முடியாத, வல்லரசு நாடாக மிளிர்ந்தது, இந்தியா!

கீ.வே.முத்துசாமி
வயது: 47.
சொந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழாம்பூர்; தற்சமயம், திருப்பூரில் வசிக்கிறார். தொழில்: விளம்பர ஏஜென்சி. கல்வித் தகுதி: இளங்கலை பட்டம். ரோட்டரி கிளப்புடன் இணைந்து, சமூகசேவை செய்வதில் ஈடுபாடு உள்ளவர். டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில், முதல் பரிசு பெறுவது, இவரது லட்சியம். தன் இறுதி காலத்திற்குள், இந்தியாவில் நதிநீர் இணைப்பை காணவேண்டும் என்பது இவரது ஆசை!

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X