நடமாடும் கோவில் நம்பர்க்கு ஒன்று; ஈயில் படமாடும் கோவில் பகவற்கு அதாமே... எனும் திருமூலர் வாக்கிற்கிணங்க, நடந்த அற்புத வரலாறு இது:
மலைகள் சூழ்ந்த, அடர்ந்த காட்டில், தவம் செய்து வந்தார், பெரியவர் ஒருவர். அவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகில், நீர் நிலைகள் இல்லாததால், தொலைவில் இருந்த மலையருவிக்கு சென்று, நீராடி, அபிஷேகத்திற்கு நீர் கொண்டு வருவார்.
ஒருநாள், வழக்கப்படி மலையருவிக்கு சென்று, தண்ணீர் எடுத்து, தன் இருப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார்; அப்போது, அவர் எதிரில் வந்த வேடன் ஒருவன், 'தாகத்தினால் தொண்டை வறள்கிறது; குடிக்க கொஞ்சம் தண்ணீர் தாருங்கள்...' என்று கேட்டான்.
'இவ்வேடனின் தாகத்துக்கு தண்ணீர் தந்தால், தண்ணீரின் துாய்மை கெட்டு, பூஜைக்கு பயன்படாதே... மறுபடியும் மலையருவிக்கு போய் கொண்டு வரலாம் என்றால், நீண்ட துாரமாயிற்றே என்ன செய்வது...' என, யோசித்தார், பெரியவர். ஆனாலும், தண்ணீருக்காக கை நீட்டி நின்ற வேடனின் கைகளில், தண்ணீரை வார்த்தார், பெரியவர். வேடனும், தாகம் தீரக் குடித்தான். பின், பெரியவரின் இருப்பிடத்தையும், அவர் நீர் கொண்டு வரும் மலையருவிக்கும் உள்ள துாரத்தை பார்த்தான். அடுத்த வினாடி, தன் வில்லில் அம்பை தொடுத்து, மலையை நோக்கி எய்தான்; அம்பு துளைத்த இடத்தில் இருந்து அருவி ஒன்று வெளிப்பட்டு, பொங்கி வழிந்தது. பெரியவரின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன.
'இனிமேல், நீங்கள் நீருக்காக நீண்டதுாரம் போக வேண்டாம்; உங்கள் இருப்பிடத்தின் அருகிலேயே வரும் இந்த மலையருவி நீரை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்...' என்று சொல்லி, சட்டென அங்கிருந்து மறைந்தான், வேடன்.
'தம்முடைய இரக்க குணத்தை சோதிக்க, இறைவனே வேடன் வடிவில் வந்துள்ளான்...' என்பதை உணர்ந்து, நன்றியில் இறைவனை வணங்கினார், பெரியவர்.
தர்மம் ஒருபோதும் வீண் போகாது; நம்மிடம் உதவியை நாடி வரும் அனைவருமே தெய்வத்தின் குழந்தைகளாக கருதி, உதவி புரிந்தால், நம்மை தேடி வந்து அருள்வார், இறைவன்!
பி.என்.பரசுராமன்
தெரிந்ததும் தெரியாததும்!
காயத்ரி மற்றும் இஷ்ட தெய்வ மந்திர ஜெபத்தின் பலன் என்ன?
வீட்டில் இருந்தபடியே, காயத்ரி மந்திர ஜெபம் செய்தால், ஒரு பங்கு பலன்; புண்ணிய நதி தீர்த்தத்தில் ஜெபம் செய்தால், இரு பங்கு பலன்; ஹோமம் செய்யுமிடத்தில் ஜெபித்தால் ஆயிரம் மடங்கு பலன்; தேவாலயங்களிலும், ஷேத்திரங்களிலும் ஜெபித்தால், நுாறாயிரம் மடங்கு பலன் ஏற்படும்.
இஷ்ட தெய்வ மந்திர ஜெபத்தை விட, காயத்ரி ஜெபம் சிறந்தது. தன் ஆசை காரணமாக, தன் எல்லா ஜெபத்தையும், கொஞ்சம் கொஞ்சம் செய்வதை விட, ஒரு குறிப்பிட்ட காயத்ரி மந்திரத்தை, பல முறை ஜெபம் செய்வது, நற்பலனை வாரி வழங்கும்.