வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள, 'தமிழ்ச் சான்றோர்கள்' நுாலில், சர்.ஏ.ராமசாமி முதலியார் எழுதியது: அப்போது, சென்னை கிறிஸ்துவ கல்லுாரியில், பி.ஏ., படித்துக் கொண்டிருந்தேன். அக்காலத்தில், சென்னை நகருக்குள் இருந்தது, அக்கல்லுாரி. பின்னர் தான் தாம்பரத்திற்கு இடம் பெயர்ந்தது. அச்சமயம், பஞ்சாப்பை சேர்ந்த, லாலா லஜபதிராய், மராட்டியத்தை சேர்ந்த பாலகங்காதர திலகர், வங்காளத்தை சேர்ந்த விபின் சந்திரபால் போன்றோர், இந்திய விடுதலை போரை முன்னின்று நடத்தினர்.
இந்நிலையில், விபின் சென்னை வருவதாக இருந்தது. புரட்சிக் கனல் தெறிக்கும் அவருடைய சொற்பொழிவுகள், பிரிட்டிஷ் ஆட்சியாளரை நடுங்கச் செய்தன. கோழைகளும் வீறு கொள்ளும் வண்ணம், ஆவேசத்துடன் பேசுவார்.
அவருடைய வருகையை பொதுமக்களுக்கு அறிவிக்க, விடுதி மாடியில், மாணவர்களுடைய கிழிந்த துணிகளை எல்லாம் குவித்து, தீ வைத்துக் கொளுத்தி, சொக்கப்பனை எரிய விட்டோம். கட்டடத்தின் உச்சியில் தீப்பற்றி எரிந்ததால், என்னவோ ஏதோ என்று கூடி விட்டனர், மக்கள்.
அவர்களிடம், மறுநாள் கடற்கரையில், விபின் சந்திரபால் பேச இருப்பதை அறிவித்தோம். பிரின்சிபால் ஒரு ஆங்கிலேயர்; மாணவர் விடுதியில் தீ வளர்த்ததற்காக எங்களை கடிந்து கொண்டார். இருப்பினும், மாணவர்களின் உணர்வுகளை புரிந்து, அத்தோடு விட்டு விட்டார்.
மறுநாள் காலை, பேசின் பிரிட்ஜ் சந்திப்பில், விபின் சந்திரபாலை எதிர்கொண்டு அழைத்து, ஒரு காரில் அமர்த்தி, அதை தேர் மாதிரி ஊர்வலமாக இழுத்துச் சென்றோம். வழியெல்லாம் திரளாக கலந்து கொண்டனர், மக்கள். மாலையில், மெரினா கடற்கரையில் கூடிய பிரமாண்ட கூட்டத்தில், ஆவேச உரை நிகழ்த்தினார், விபின் சந்திரபால். அன்றிலிருந்து தான், தமிழகத்தில் சுதந்திர உணர்வு என்னும் தீ பரவலாயிற்று.
நாடு சுதந்திரமடைந்த பின், ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்து, அக்கட்சியின் நாளேடான, 'ஜஸ்டிஸ்' பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தேன். விபின் சந்திரபாலை பற்றி குறிப்பிட்டேனே... அந்த தேச பக்தர், பிற்காலத்தில் கவனிப்பாரின்றி, மிகவும் சிரமப்பட்டார். இதை அறிந்து, 'ஜஸ்டிஸ்' பத்திரிகையின், 'கரெஸ்பாண்டென்ட்' ஆக அவரை நியமித்து, மாதம், 400 ரூபாய் சம்பளம் வழங்கச் செய்தேன்!
டி.கே.சி., என அழைக்கப்படும், சிதம்பரம் முதலியார், 'கம்ப ராமாயண பாடல்களில் நிறைய இடைச்செருகல்கள் உள்ளன; அவற்றை நீக்கி, புதிய கம்ப ராமாயணப் பதிப்பு கொண்டு வரவேண்டும்...' என்ற கருத்தை வலியுறுத்தினார். உடனே, அதற்கு கம்ப ராமாயண அன்பர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். டி.கே.சி.,யின் நண்பரான ராஜாஜி, 1945ல், 'பாரதியார் பாடல்களை மாற்றி அமைக்கலாம்...' என்று ஒரு யோசனையை வெளியிட்டார். கிளம்பியது புயல்; பாரதியின் அன்பர்கள் பலர், ராஜாஜியின் கருத்தை எதிர்த்து எழுதினர். அந்நாளைய பிரபல எழுத்தாளர் சங்கு கணேசன், 'அனுமன்' பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இது:
எட்டயபுரத்தில் பாரதி மண்டபத்திற்கு அஸ்திவாரக் கல் நடும்போது, 'கம்ப ராமாயணத்தை, டி.கே.சி., மாற்றியமைத்திருப்பது போல, பாரதி பாடல்களையும் எங்கு அவசியமோ அங்கே மாற்றி அமைக்கலாம்...' என்று தாராளமாக அனுமதி கொடுத்து விட்டார், ராஜாஜி.
'பாரதி பாட்டுகளை ஏன் மாற்ற வேண்டும்...' என்று சிலர் கேட்கக் கூடும் என்பதை எதிர்பார்த்தே, கம்ப ராமாயணத்தை, டி.கே.சி., மாற்றி அமைத்திருப்பதை மேற்கோளாகக் காட்டுகிறார்.
பாரதி பாடல்களை மாற்றியமைத்தால், அவற்றை பாரதி பாடல்கள் என்று எப்படி சொல்ல முடியும்?
ராஜாஜி நுண்ணறிவாளர்; எனவே, டி.கே.சி., கம்ப ராமாயணத்தை திருத்தி விட்டார் என்று சொல்லாமல். மாற்றியமைத்தார் என்று சொல்கிறார். பாரதி பாடல்களையும் திருத்திக் கொள்ளுங்கள் என்று உத்தரவு கொடுக்கவில்லை; மாற்றிக்கொள்ளுங்கள் என்றுதான் அனுமதி கொடுக்கிறார். ஆனால், இந்த தயாள குணம் அவசியம் தானா... ஏன், எப்படி, எதற்காக மாற்றியமைக்க வேண்டும்... பாரதி பாட்டில், எந்தப் பகுதி பிடிக்கவில்லையோ, அதை, மாற்றக் கூடியவர்கள், புதிதாகவே பாடி பரவசப் படலாமே... இவர்கள் தங்கள் நுண்ணறிவையும், சிருஷ்டி சக்தியையும் கொண்டு பாரதிக்கும், கம்பனுக்கும் பெருமை கொடுப்பானேன்...
தங்களையே மகா கவியாகவும், கவிச் சக்கரவர்த்திகளாகவும் முடிசூட்டிக் கொண்டால் போகிறது! - என்று எழுதியுள்ளார்.
நடுத்தெரு நாராயணன்