குதிரை வண்டி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2017
00:00

சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷன் -
பிரதான நடைமேடையில் காத்திருந்தேன். இரவு, 8:15 மணிக்கு, செந்துார் விரைவு ரயில் வந்து சேர்ந்தது. எனக்கான பெட்டியில் ஏறி, என் இருக்கையை தேடி, பக்கவாட்டு கீழ் படுக்கையில் போய் அமர்ந்தேன். எப்போது ரயில் பயணம் என்றாலும், பக்கவாட்டு கீழ் படுக்கையை முன்பதிவு செய்வது வழக்கம். காரணம், சரிவாய் அமர்ந்து குளிர் காற்று முகத்தில் அறைய, இரவு வானத்தை ரசிப்பேன். சக பயணியரின் நடை, உடை பாவனை, பேச்சுகளை ஆராய்வேன்.
டிக்கெட் பரிசோதகர் வந்தார்; பயணச் சீட்டையும், ஆதார் அட்டையையும் ஒரு சேர நீட்டினேன். பயணம் செய்வோர் பட்டியலில் என் பெயரை, 'டிக்' செய்து, ஆதார் எண்ணை எழுதி, பயணச் சீட்டை என்னிடம் கொடுத்துவிட்டு அடுத்த பயணியிடம் நகர்ந்தார்.
இருக்கையில் சரிந்து படுத்தேன்.
பல்கலை பணியிலிருந்து ஓய்வுபெற இன்னும் சில மாதங்களே உள்ளன; மீதி வாழ்நாளில் நான் செய்ய விரும்பும் பத்து காரியங்களை பட்டியலிட்டு இருந்தேன்.
அதில் ஒன்று, நான் பிறந்து, வளர்ந்த மதுரைக்கு சென்று, நகர் முழுக்க குதிரை வண்டி சவாரி செய்ய வேண்டும் என்பதே!
நான் பிறந்தது மதுரையில் உள்ள கோரிப்பாளையத்தில். அங்குள்ள, பெண்கள் உயர்நிலை பள்ளிக்கு அருகிலிருந்த ஆங்கில பள்ளியில் என்னை சேர்த்தார், என் தந்தை.
தினமும் பள்ளிக்கு குதிரை வண்டியில் போய் வருவேன். குதிரை வண்டியில் ஆறு பேர் அமர்ந்திருப்போம். வண்டிக்காரர் மீது கொள்ளு மற்றும் பச்சை புல் வாசனை அடிக்கும். வண்டியின் முன் கட்டையில் அமர்ந்திருக்கும் அவர், குதிரையின் வாலுக்கு அடியில் கைவிட்டு குதிரையை நிமிண்டி விடுவார். சாட்டையை, 'ஸ்க்டா' என, ஒலி எழுப்பி சுழற்றுவார்.
கோரிப்பாளையம் குதிரை வண்டி நிறுத்தத்தில், வரிசையாக குதிரைகள் இளைப்பாறுவது கண்கொள்ளா காட்சி. தோல் பையில் பச்சை புல் நிறைத்து, குதிரையின் முகத்தில் தொங்கவிட்டிருப்பர்; புல்லை மென்றபடி இருக்கும், குதிரைகள்.
மதுரை வந்து சேர்ந்தது, செந்துார் எக்ஸ்பிரஸ். என்னை அழைத்துப் போக வந்திருந்தார், சகலை அகமது ஷரீப். ரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.
''வகிதா நல்லாயிருக்காளா?'' என்று என் மனைவியை பற்றியும், மகன், மகளைப் பற்றியும் விசாரித்தபடி, என்னை ஸ்கூட்டரில் ஏற்றி வீட்டுக்கு அழைத்து வந்தார்.
குளித்து, புத்தாடை உடுத்தி வந்த எனக்கு, தலைக்கறி கலந்த தக்கிடி பரிமாறினார், அவரது மனைவி. சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னை நெருங்கி அமர்ந்த சகலை, ''தம்பி... என்ன விஷயமா வந்திருக்கீங்க... சொன்னீங்கன்னா உதவ தயாரா இருக்கேன்,'' என்றார்.
''ரொம்ப முக்கியமானது எதுவும் இல்ல; இன்னைக்கி முழுக்க குதிரை வண்டியில மதுரையை சுத்தணும்; அதுக்குத்தான் வந்திருக்கேன்,''என்றதும், நெற்றி சுருக்கினார், சகலை.
''இப்ப எவன் குதிரை வண்டியில போறான்... பஸ், மினி பஸ், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கால் டாக்சியில பறக்கிறான். தேடித்தான் பாக்கணும்,'' என்றாலும், ''பாத்திருவோம் பாய்...''என்று கூறி, ஸ்கூட்டரில் என்னை ஏற்றி, ஒவ்வொரு ஏரியாவாக பறந்தார்.
ஒரு குதிரை வண்டிக்காரர், 'பத்து வருஷத்துக்கு முன் என் குதிரை செத்துப் போச்சு; வண்டிய அடுப்பெரிக்க போட்டுட்டோம்...' என்றார்.
இன்னொருவரோ, 'நாற்பது வருஷத்துக்கு முன், படிக்காத முஸ்லிம்கள், குதிரை வண்டி ஓட்டினாங்க. ஓரளவு படிச்சவங்க, ரயில்வேல பணிபுரிஞ்சாங்க. நல்லா படிச்சவங்க, அரசு பணிக்கு போனாங்க. அடுத்த தலைமுறை படிக்காத முஸ்லிம்கள், குதிரை வண்டி ஓட்டறதை விட்டுட்டு வேற சில்லரை வேலைகளுக்கு போயிட்டாங்க. இப்ப, நீங்க குதிரை வண்டிய பாக்கணும்ன்னா மியூசியத்துக்குதான் போகணும்...' என்றார்.
மற்றொருவரோ, 'முன்னாடியெல்லாம் கல்யாணங்கள்ல, மாப்பிள்ளை குதிரை சவாரி போவார்; இப்ப, எவன் போறான்...' என்றார்.
இரண்டு மணி நேரம் அலைந்த பின், மஹபூப்பாளையம் போனோம்; ஒரு ஓட்டு வீட்டின் முன் நின்று, 'பாய்... பாய்...' என கூவினார், சகலை. 50 வயது மதிக்கத்தக்க, ஆறு அடி உயர மனிதர் ஒருவர் வெளியே வந்தார். தலையில் துருக்கியர் அணியும் தொப்பியும், கணுக்கால் தெரியும் லுங்கியும், முழங்காலுக்கு கீழ் இறங்கிய ஜிப்பாவும் அணிந்திருந்தார்.
சுருட்டு பிடித்தபடி, ''யார் நீங்க... என்ன வேணும்?'' என்று கேட்டார்.
''நீங்கதான் பிச்சையப்பா ராவுத்தரா?''
''ஆமாம்.''
''நீங்க குதிரை வண்டி வச்சிருக்கிறதா சொன்னாங்க.''
''விலைக்கு வாங்கும் எண்ணத்தோட வந்திருக்கீங்களா?'' என்று கேட்டார்.
''இல்ல; இவர் என் தம்பி. குதிரை வண்டி சவாரி செய்ய விரும்புறார்; நீங்க கேட்கிற பணத்தை குடுத்துடுவார்,'' என்றார், சகலை.
என்னை ஆழமாக பார்த்த பிச்சையப்பா, ஒரு பனை ஓலை மறைப்பை இழுத்தார். உள்ளே குதிரை வண்டி இருந்தது.
''அரே இம்ரான்... ஆஜா...'' என்று, சீழ்கையடித்தார், பிச்சையப்பா.
நோஞ்சானாக ஒரு குதிரை வந்து நின்றது.
''பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானை எனக்கு ரொம்ப பிடிக்கும்; அதனால், குதிரைக்கு அவர் பெயரை வச்சுருக்கேன்,'' என்றார்.
''பாய்... தினமும் குதிரை வண்டி சவாரி போவீங்களா...'' என்று கேட்டேன்.
''பரம்பரை பரம்பரையா எங்க குடும்பம் குதிரை வண்டி ஓட்டுது. எங்கத்தாவின் நினைவாக இந்த குதிரை வண்டியை பராமரிச்சுட்டு வர்றேன். திடீர்னு தோணிச்சுன்னா, வீட்ல இருக்கிறவங்க எல்லாரையும் கூட்டிக்கிட்டு சவாரி போவேன். இன்னைக்கு எங்கத்தாவோட நினைவு நாள்; அதனால, இன்னைக்கி யாராவது வாடிக்கையாளர் வந்தா, இலவசமாகவே சவாரி கூட்டிட்டு போக நினைச்சிருந்தேன். அல்லாஹ்... உங்கள என்கிட்ட அனுப்பி வச்சிருக்கான். எங்கத்தாவின் நினைவை போற்றின மாதிரியும், உங்க ஆசைய நிறைவேத்துன மாதிரியும் இருக்கும்; வாங்க போகலாம்,'' என்றார்.
''தம்பி... குதிரை சவாரி போயிட்டு வந்த பின், எனக்கு போன் செய்யுங்க; நான் வந்து உங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்,'' என்றார், சகலை.
தலையாட்டினேன்.
குதிரையை வண்டியில் பூட்டினார், பிச்சையப்பா ராவுத்தர். வண்டியின் உள்ளே பச்சை புல் பரத்தி, ஜமுக்காளம் விரித்தார்.
பூட்டப்பட்ட சேணத்தின் ஊடே குதிரை என்னை பார்த்தது. 'வா பாய்... குதிரை வண்டி சவாரி ஜமாய்ச்சிடலாம்...' என்கிற அர்த்தம் அதில் தொனித்தது.
பின்னால் கம்பி இணைந்த செவ்வக பலகையில், கால் வைத்து ஏறி, உள்ளே அமர்ந்தேன். குதிரை வண்டி புறப்பட்டது. ''பாய்... மொதல்ல எங்க போகணும்?'' என்று கேட்டார்.
''கோரிப்பாளையம் போங்க; பின், நேரு ஆங்கில பள்ளி போங்க,'' என்றேன்.
கோரிப்பாளையம் பள்ளிவாசல், பட்டரைக்கார தெரு பார்த்த பின், நேரு ஆங்கில பள்ளிக்கு போனோம். நான் படித்த வகுப்பில் சிறிது நேரம் அமர்ந்தேன். எனக்கு மிகவும் பிடித்த பத்மாவதி டீச்சரை பற்றி விசாரித்தேன்; யாருக்கும் தெரியவில்லை.
''அடுத்து?''
''சிந்தாமணி தியேட்டர், அம்சவல்லி ஓட்டல் பாக்கணும்.''
''அம்சவல்லி ஓட்டல் இப்ப இல்ல; சிந்தாமணி தியேட்டரை இடிச்சுட்டு ராஜ்மஹால் ஷோரூம் கட்டிட்டு இருக்காங்க,'' என்றார், பிச்சையப்பா.
''சரி, மதுரையின் அனைத்து பகுதிகளுக்கும் ஒரு ரவுண்டு போங்க...'' என்றதும், போக்குவரத்து நிரம்பிய சாலையில், 'டகடா டகடா' என ஓடியது, குதிரை வண்டி. ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் வழிமறித்து, ''எந்த காலத்துலயா இருக்கீங்க... போக்குவரத்துக்கு இடைஞ்சல் பண்றீங்களேப்பா...'' என்றார்.
என் ஆசையை விவரித்தேன். ''சரி சரி... போங்க,'' என்றார்.
இரவு எட்டு மணி வரை, சுப்ரமணியபுரம், அண்ணாநகர், மேலமாசிவீதி, தல்லாகுளம், நரிமேடு, மாட்டுத்தாவணி என, மதுரையை வலம் வந்தோம். டவுன்ஹாலில் ஜிகர்தண்டா குடித்தோம்; சிம்மக்கல்லில் பருத்தி பால் அருந்தினோம்.
திருப்தி முகத்துடன், குதிரை வண்டியிலிருந்து இறங்கினேன். ''நன்றி பாய்... எவ்வளவு பணம் வேணும்ன்னு சொல்லுங்க...'' என்றேன்.
''நான் தான் இலவசம்ன்னு சொன்னேனே...''
அரைமணி நேரம் வாதாடி, ''எதாவது உங்களுக்கு செய்ய விரும்புறேன்; தயங்காம கேளுங்க,'' என்றேன்.
''நீங்க குதிரை வண்டி சவாரி போக ஆசைப்பட்ட மாதிரி, எனக்கும், விமானத்துல பறக்கணும்ன்னு ஆசை. நிறைவேற்றுவீங்களா பாய்...'' என்றார்.
மதுரை - சென்னை, சென்னை - மதுரை ஜெட் ஏர்வேஸ் டிக்கெட், ஆன்லைனில் புக் செய்தேன்.
பிரின்ட் அவுட் எடுத்து கொடுத்தேன், ''நன்றி பாய்,'' என்றார், உணர்ச்சிப் பெருக்குடன்!
குதிரையை நெருங்கினேன். 'என் வண்டியில் சவாரி செய்து, என்னை கண்ணியப்படுத்தி விட்டீர்கள் மிக்க நன்றி...' எனும் அர்த்தத்தில், 'ழீயேய்...' என்றது, குதிரை.
எல்லாரின் நியாயமான ஆசைகளையும் நிறைவேற்றத்தானே வேண்டும்... இக்கதையை படிக்கும் உங்களின் இறுதி விருப்ப பட்டியல் என்ன, 'ப்ரோ?'

ஆர்னிகா நாசர்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ansarmohamed Rafi - fujairah,ஐக்கிய அரபு நாடுகள்
12-டிச-201711:11:58 IST Report Abuse
Ansarmohamed Rafi குதிரை வண்டி சவாரி என்பது பெரிய சுகம். 1980 நான் சிறு வயதில் ஆவடியில் என் மாமா உடைய நண்பர் ஒருவர் குதிரை வண்டி வைத்து இருந்தார் மாமா வீட்டிட்கு போகும் போது எல்லாம். பக்கத்து வீட்டில் அந்த குதிரை வண்டி நிற்கும். குதிரை சாப்பிட்டு கொண்டு இருக்கும். சில நேரங்களில் அவர் எங்களை சவாரி கொண்டு ஒரு ரௌண்டு வருவார். அப்போது கிடைத்த மகிழ்ச்சி இப்போது காரில் சென்றாலும் கிடைப்பது இல்லை. இயறகை காற்றை அனுபவித்து கொண்டு செய்யும் பயணம் ஒரு தனி சுகம் தான்.
Rate this:
Cancel
mdn - Pondicherry,இந்தியா
11-டிச-201712:31:10 IST Report Abuse
mdn 70 வயதுகளில் நெல்லையில் அப்பாவுடன் குடும்பத்தோடு மாத சாமான் குதிரை வண்டியில் வாங்கி வந்ததும் எனக்கு மட்டும் தனியாக 50 கிராம் அல்வா. குதிரை வண்டி ஓட்டுபவர் அந்த சாட்டை காம்பை சக்கரத்தில் விட்டு எழுப்பும் சத்தம் நன்றாக இருக்கும். பின்னர் ஈரோடு வந்த பின்னர் கொஞ்சம் வண்டிகள் இருந்தன ஆனால் அனைத்தும் காலப்போக்கில் காணாமல் போய் விட்டன. ஆனால் அவை மீண்டு வேறு ரூபத்தில் வரும்.
Rate this:
Cancel
Shah Jahan - Colombo,இலங்கை
10-டிச-201719:31:10 IST Report Abuse
Shah Jahan நானும் குதிரை வண்டியின் ரசிகன். மதுரையின் நேசன். வித்தியாசமான கதை. பாராட்டுக்கள். ஜஹான். காயல்பட்டணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X