ஓட்டுக்கு துட்டு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 டிச
2017
00:00

பூஜையை முடித்து, சற்று ஓய்வாக திண்ணையில் வந்து அமர்ந்தார், சங்கரலிங்கம். அவரால் அமைதியாக ஓய்வெடுக்க முடியவில்லை. இன்னும், 20 நாட்களில், சட்டசபை தேர்தல் வர இருப்பதால், தெரு முனையில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளில், தலைவர்களின் பேச்சுகளும், திரைப்பட பாடல்களும் ஒலிக்கும் சத்தம், காதை பதம் பார்த்தது.
ஒலிபெருக்கியின் சத்தத்தை குறைக்கச் சொல்லலாம் என்று கிளம்பினார், சங்கரலிங்கம்.
''எங்கே கிளம்பிட்டீங்க... ஊர் பிரச்னைய தீர்க்கவா... நமக்கெதுக்குங்க இந்த வேண்டாத வேலையெல்லாம்...'' என்றாள், அவரது மனைவி.
''இங்க பாரு... எல்லாருமே, நமக்கெதுக்கு வம்புன்னு ஒதுங்கிட்டா, தவறு செய்றவங்களுக்கு துளிர் விட்டு போயிடும். நம்மள கேட்க ஆளில்லன்னு நினைச்சு, மேலும் மேலும் தப்பு செய்வாங்க. நான் ராணுவத்துல அதிகாரியா இருந்தவன்; என்னோட நோக்கம் நல்லதா இருக்கும்போது, நான் ஏன் பயப்படணும்... ஊர்ல நல்ல பேரும், மதிப்பும் உள்ளவங்க தான் அதைப் பயன்படுத்தி, நிறைய நல்ல காரியங்கள செய்ய முடியும். இவ்வளவு சத்தமாக ஸ்பீக்கரை போட்டா, படிக்கிற பிள்ளைங்க, இதய நோயாளிங்க சிரமப்பட மாட்டாங்களா...'' என்றார்.
இந்திய ராணுவத்தில், 25 ஆண்டுகள் அதிகாரியாக பணியாற்றிய சங்கரலிங்கம், பணி ஓய்வுக்கு பின், தன் சொந்த ஊரான அத்திப்பட்டு கிராமத்தில் வந்து, 'செட்டில்' ஆனார். பஞ்சாயத்து தலைவரை அடிக்கடி சந்தித்து, பல நல்ல காரியங்களை செய்ய வைத்தார். இதனால், ஊரில் அவருக்கு நல்ல பெயர் இருந்தது.
அத்துடன், குளத்தை ஆழப்படுத்துவது, ஏரியை ஆக்கிரமிப்புகளிலிருந்து காப்பாற்ற, அதிகாரிகளுடன் இணைந்து, உள்ளுர் அரசியல்வாதிகளிடம் போராடி தடுத்து நிறுத்தினார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த, நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஒருவர், வீட்டுக்கு வந்து, 300 ரூபாய் கொடுத்து, அவர் சார்ந்த கட்சிக்கு ஓட்டளிக்கும்படி கேட்டுக் கொண்ட போது, ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் அரசியல்வாதிகளையும், அதற்கு பலியாகும் மக்களையும் பார்த்து வேதனைப்பட்ட சங்கரலிங்கம், 'என்னால, இந்த நாட்டைத் திருத்த முடியுதோ இல்லயோ, குறைந்தபட்சம், இந்த ஊரில் மட்டுமாவது, 'ஓட்டுக்கு துட்டு'ங்கிற அசிங்கத்தை ஒழிக்கணும்...' என்று நினைத்தார்.
இதோ, அவர் எதிர்பார்த்த சட்டசபைக்கான தேர்தல் வந்து விட்டது.
'மனிதர்களாக பார்த்து திருந்தா விட்டால், இத்தகைய சீர்கேடுகளை தடுக்கவே முடியாது...' என நினைத்தவர், ஒரு வெள்ளைத் தாளை எடுத்து, தன் செயல் திட்டத்திற்கான செலவினங்கள் மற்றும், 'ஓட்டுக்கு துட்டு' எனும் ஜனநாயக சீரழிவிலிருந்து தன் கிராமத்தை காக்கும் அந்த வாசகங்களையும் எழுதத் துவங்கினார்...
* தாங்கள் ஐந்து ஆண்டுகள் ஆள்வதற்கு, அரசியல்வாதிகள் உங்களுக்கு தரும் லஞ்சம், 300 ரூபாய்; அதாவது, ஒரு நாளைக்கு, 16 காசு. எத்தனையோ சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்கள் இன்னுயிரை கொடுத்து பெற்ற ஜனநாயக உரிமையை, கேவலம், 16 காசுக்கா விற்க போகிறீர்கள்? இதுதான், உங்களுக்காக ரத்தம் சிந்திய அந்த தலைவர்களுக்கு நீங்கள் செய்யும் மரியாதையா, நாட்டுப் பற்றா...
*நம்மிடம் சம்பாதித்த காசு தானே நமக்கு திரும்பி வருகிறது என்கிறீர்களே... நேர்மையான முறையில் சம்பாதித்திருந்தால், பணத்தை இப்படி தண்ணீராய் செலவு செய்ய முடியுமா... லஞ்சம், கமிஷன் என்று அப்பாவி மக்களை ஏமாற்றி சம்பாதித்த அந்த பாவப் பணத்தை பெறுவதன் மூலம், அவர்கள் செய்த பாவத்தின் பலனை உங்களுக்கு பகிர்ந்து அளித்து, தங்கள் பாவத்தை குறைக்கின்றனர் என்பதை மறந்து விட்டீர்களா...
*ஒருவர் நேரடியாக செய்தால் தான் பாவம் என்றில்லை; பிறருடைய பாவத்தின் லாபத்தை ஏற்றாலும், அந்த பாவத்தில் நீங்களும் பங்கேற்கிறீர்கள். அறிந்தும், அறியாமலும் ஏற்கனவே செய்த பாவங்களுக்காக, நாம் இப்பிறவியில் அனுபவிக்கும் சிரமங்கள் போதாதா... இதில், மற்றவர்களின் பாவத்தையும் சுமக்கத் தான் வேண்டுமா?
*உங்கள் ஓட்டுக்காக இன்று காசு வாங்கிவிட்டால், எதிர்காலத்தில், நீங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதி செய்யும் தவறுகளை பற்றி பேசவோ அல்லது உரிமையோடு தட்டிக் கேட்கவோ உங்களால் முடியுமா... 'காசு வாங்கித்தானே ஓட்டு போட்டாய்...' என்று அவர்கள் திருப்பிக் கேட்டால், முகத்தை எங்கே கொண்டு போய் வைப்பீர்கள்?
* தினசரி நாம் சம்பாதிக்கும் வருமானத்தையும், செலவினங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள்... ஓட்டுக்காக நீங்கள் வாங்கும் இந்த, 16 காசு, அவற்றை விட உங்களுக்கு பெரிய தொகையாக தெரிகிறதா... இதற்காகவா, உங்கள் கவுரவத்தை அவர்களிடம் அடகு வைக்க நினைக்கிறீர்கள்?
* உண்மையிலேயே நல்லது செய்ய விரும்புவர் யார் என்பதை ஒப்பிட்டு பார்த்து அவருக்கு ஓட்டளியுங்கள். அப்போது தான், நாய்க்கு எலும்புத்துண்டு வீசுவது போல், பணத்தை வீசி, அதன் மூலம் பதவிக்கு வரும் அவலத்தை தடுக்க முடியும். நேர்மையும், தகுதியும் உள்ளவர்கள் தேர்தல்களில் தைரியமாக போட்டியிட ஊக்குவிக்க முடியும்.
* யாராவது பணம் கொடுக்க வீட்டுக்கு வந்தாலும், உங்கள் வீட்டினுள் பணக் கவரை போட்டுச் சென்றாலும், அதை, அக்கட்சியின் பகுதி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று, அவர்கள் முன் போட்டு விட்டு வாருங்கள். இதன்மூலம் உங்கள் கவுரவத்தையும், தனித்தன்மையையும் காப்பாற்றியவர்கள் ஆவீர்கள்.
*நம் கிராமத்தை, 'ஓட்டுக்கு துட்டு' என்கிற லஞ்சமற்ற மாதிரி கிராமமாக மாற்றுவோம். ஜெய்ஹிந்த்!
- என்று எழுதி முடித்தார்.
அத்துடன் நில்லாமல், விளம்பர தட்டிகளில், 'இந்த தெருவுக்குள் ஓட்டுக்காக பணம் கொடுக்க தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த நோக்கத்துடன் யாரும் தெருவினுள் நுழைய வேண்டாம்; மீறி கொடுக்க முயல்வோரின் கட்சிக்கு, ஓட்டு போட மாட்டோம். இங்ஙனம், தெருவில் உள்ள அனைத்து வாக்காளர்கள்...' என்று கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது.
நோட்டீஸ் மற்றும் தட்டிகளின் மாதிரிகளோடு, அவ்வூர் இளைஞர் மன்ற நிர்வாகிகளையும், மகளிர் சுய உதவிக் குழுக்களின் நிர்வாகிகளையும் சந்தித்தார். நோட்டீசில் இருந்த விபரங்களை காட்டி அவர்களிடம் விளக்கினார்.
'நீங்களெல்லாம் என்னோடு ஒத்துழைச்சீங்கன்னா, நிச்சயமா நம்ம ஊர், நாட்டுக்கே முன் மாதிரியா ஆகிடும். அதற்கு உங்க எல்லாரோட உதவியும் தேவை. சுதந்திரம் கிடைச்சு, 70 வருஷமாகியும், எத்தனை காலத்துக்குதான், இந்த கேவலமான தவறுக்கு மக்கள் துணை போவது... நாம நினைச்சா, இதற்கு முடிவு கட்ட முடியும்...' என்று கூறியதும், அவர்கள் அனைவரும் மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டனர்.
அடுத்ததாக, மளமளவென்று காரியங்கள் நடந்தேறியது; ஊரில் அதிகம் பேசப்படும் விஷயமாகிப் போனது, நோட்டிஸ் விவகாரம். ஓட்டுக்கு பணம் வாங்குவதன் எதிர்மறை விளைவுகளை, அனைவருமே உணர்ந்தனர்.
சிலருக்கு, பணம் வாங்க வேண்டும் என்ற நப்பாசை இருந்தாலும், பாவ புண்ணியத்தை நினைத்து தயங்கினர். அதனால், பெரிய அரசியல் கட்சியினரின் பிரதிநிதிகள், தங்கள் அடிப்பொடிகளுடன் சங்கரலிங்கத்தை மிரட்ட, அவர் வீட்டுக்கு வந்தனர். ஆனால், வீட்டு வாசலில், இளைஞர் மன்றத்தை சேர்ந்த இளைஞர்கள், கையில் கேமரா மொபைல் போனுடன் காவலுக்கு இருப்பதை பார்த்து, முறைத்துக் கொண்டே திரும்பினர்.
மேலும், சங்கரலிங்கத்தின் ஏற்பாட்டின் படி, ஒவ்வொரு தெரு முனையிலும், இளைஞர் மன்றத்தை சேர்ந்தவர்கள், ஷிப்ட் முறையில், 24 மணி நேரமும் கையில், கேமரா மொபைல் போனுடன் காவலாக நின்றனர். கூரியர் பணியாளர்களும், பால்காரர்களும் கண்காணிக்கப்பட்டனர்.
இரவு நேரங்களில், வீடுகளுக்கு தேவையின்றி ஆட்கள் செல்வதும், பொது இடங்கள் மற்றும் கட்சி அலுவலகங்களுக்கு செல்லும் மக்களின் நடமாட்டமும் கண்காணிக்கப்பட்டது.
இத்தனை ஏற்பாடுகளையும் மீறி, சில கட்சி நிர்வாகிகள் பணம் தர முயன்ற போது, இளைஞர் மன்ற காவலாளிகள், 'நீங்க பணம் கொடுத்தீங்கன்னா, மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு சொல்லிடுவோம்...' என்றனர். அதையும் மீறி கட்சிக்காரர் ஒருவர் மிரட்ட, அவரைப் பற்றி, தேர்தல் அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்து விசாரணை நடத்தி, எச்சரித்து, சென்றார்.
அத்துடன் நில்லாமல், சங்கரலிங்கத்தின் முயற்சியால் அங்கு எடுக்கப்பட்டிருந்த சிறப்பான நடவடிக்கைகள் பற்றி, தன் மேல் அதிகாரிகளிடம் தெரிவிக்க, அதை அறிந்த பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சி நிருபர்களும் அத்திப்பட்டு கிராமத்தில் குவிந்தனர். அனைத்து ஊடகங்களிலும், இந்த செய்தி வெளியானது.
ஒரே நாளில், அத்திப்பட்டு கிராமம் நாடு முழுதும் பிரபலம் ஆனது. இதை அறிந்த மேலும் பல ஊர்களைச் சேர்ந்த இளைஞர்கள், ஓட்டுக்கு துட்டு தருவதை தடுக்க முயன்றனர்.
மக்களிடம் ஏற்பட்டிருந்த மாற்றத்தை உணர்ந்த கட்சி நிர்வாகிகள், தாமாகவே பணம் கொடுக்கும் முயற்சியை நிறுத்திக் கொண்டனர்.
அன்று தேர்தல் -
மக்கள் சாரை சாரையாகச் சென்று ஓட்டளித்தனர். வழக்கத்தை விடவும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. அவர்களது முகங்களில், ஜனநாயக அசிங்கத்தை தடுத்து விட்ட பெருமிதமும், தவறு செய்யாததால் ஏற்பட்ட கம்பீரமும் தெரிந்தது.
தேர்தல் ஆணையர் அத்திப்பட்டு கிராமத்துக்கு வருகை தந்து, அக்கிராம மக்களுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.
அடுத்து வந்த காலங்களில், மத்திய அரசால், மாதிரி கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டது, அத்திப்பட்டு கிராமம். அரசின் அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன. வீடுகளுக்கு கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டன; தெருக்கள் சிமென்ட் சாலைகளாயின. ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு தரப்பட்டது. தகுதியான இளைஞர்களுக்கு, தொழில் துவங்க சிறப்பு கடன் வழங்கப்பட்டது. அக்கிராமத்தில் உணவு பதப்படுத்தும் ஆலை அமைக்கப்பட்டு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது.
இப்போதெல்லாம் சங்கரலிங்கத்தின் மனைவி, அவர் பொது காரியங்களுக்காக கிளம்பும்போது தடுப்பதில்லை!

எஸ்.நாகராஜன்
திருச்சியில் சொந்தமாக கல்வி நிறுவனம் மற்றும் மன நல ஆலோசனை தரும் இணையதளம் ஒன்றை நடத்தி வருகிறார். தினமலர் நாளிதழின், 30 ஆண்டு கால வாசகர். இவரது சிறுகதை, டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது, மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிடுகிறார்.
சட்ட மற்றும் சமூக விரோத செயல்களையும், சில மூட நம்பிக்கைகளையும் விளக்கி, அதற்கான தீர்வுகளை பற்றி தொடர்ந்து எழுத வேண்டும் என்பது இவரது ஆசை.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N. Santhi - kalpakkam,இந்தியா
28-டிச-201714:17:27 IST Report Abuse
N. Santhi நல்ல கதை. தமிழகம் எப்போது அத்திப்பட்டியாக மாறும்.
Rate this:
Cancel
Poornakumar - Bangalore,இந்தியா
26-டிச-201709:40:00 IST Report Abuse
Poornakumar எல்லாத்தையும் முடியாது ....நடக்குதுன்னு... சொல்லியே பழகிட்டோம்ல இப்படி சுதந்திரத்துக்கு போராடுனவுங்க யோசிச்சிருந்தால்....இன்னைக்கி நாம நிலைமை என்ன ... நீங்களும் நானும் இப்படி சுதந்திரமா கருத்துக்களை சொல்ல முடியுமா? மாற்றத்தை நம்மகிட்ட இருந்து கொண்டுவருவோம் நண்பர்களே...சிறு துளி தான் பெரு வெள்ளம்...தமிழன் என்று சொல்லுவோம்...தலை நிமிந்து நிற்போம்..... இதை படிப்பதோடு நிறுத்தாமல் செயல் படுத்துவோம் ....
Rate this:
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
25-டிச-201704:27:18 IST Report Abuse
கதிரழகன், SSLC கடைசி வரி விட்டு போச்சு போல இருக்கே. "சட்டென்று சங்கரலிங்கத்தின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவர் மனைவி, "மத்தியான வேலையில என்ன தூக்கம்? தோசைக்கு நனைச்சு வெச்சுருக்கேன், சீக்கிரம் மாவாட்டி கொடு, என்று சொன்னால். அட சீ கனவா? என்றபடியே சங்கரலிங்கம் மாவட்ட கிளம்பினார்" இதையும் சேத்து போடுங்க.
Rate this:
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
25-டிச-201713:36:51 IST Report Abuse
M Selvaraaj Prabuஉண்மை. சினிமா பார்த்தும், கதையை படித்தும் யாரும், குறிப்பாக தமிழன், திருந்தியதாகவோ வரலாறு இல்லை. ஆர் கே நகரே இதற்கு சாட்சி....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X