பிரம்மாக்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 டிச
2017
00:00

பேருந்தை விட்டு இறங்கியதும், லேசாக, துாறல் ஆரம்பித்தது. மழை பிடிக்கும் முன், பள்ளிக்கு சென்று விட வேண்டும் என நினைத்து, வேகமாக அடியெடுத்து வைத்தேன். என் அவசரம் புரியாமல் செருப்பு அறுந்து தொலைத்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன்; செருப்புக் கடை எதுவும் கண்ணில் தென்படவில்லை. சிறிது துாரம் சாலையோரம், குடைக்கு கீழ், அறுந்த செருப்புகளை தைத்துக் கொண்டிருந்தான், ஒருவன்.
அவன் அருகில் சென்று, ''இந்த செருப்பை கொஞ்சம் தைச்சிடுப்பா... ஸ்கூலுக்கு நேரமாகுது...'' என்று கூறி, கால்களில் இருந்து கழற்றினேன்.
நிமிர்ந்து பார்த்தவன், சட்டென்று எழுந்து நின்று, ''கண்ணன் சார்... என்னை தெரியலயா... நான்தான் உங்க மாணவன் செங்கோடன்...'' என்றான்.
''அட, செங்கோடனா... பாத்து ரொம்ப நாளாச்சுல்ல... அதான், அடையாளமே தெரியல. ஆமா, இங்க எப்படி,'' என்று கேட்டாலும், நினைவுகள் ஆறு ஆண்டுகளுக்கு முன் சென்றது.
ஆசிரியரான என் அப்பாவிடம் படித்த மாணவர்கள், அவ்வப்போது வீட்டிற்கு வந்து, 'நான் இன்னவாக இருக்கிறேன்...' என்று பெருமையாக சொல்லி இனிப்பு தந்து, ஆசிர்வாதம் வாங்குவர்.
அதை பார்க்கும்போதெல்லாம், நானும் ஆசிரியராக வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அதன்படி, ஆசிரிய பயிற்சி முடித்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்து அரசு பள்ளியில், பணிக்கு சேர்ந்தேன்.
அரசு பள்ளி என்றாலே, அது ஏழைப் பிள்ளைகள் படிக்கும் இடமாகி விட்ட நிலையில், அவ்வூரிலிருந்து தனியார் பள்ளிகள் தொலைவில் இருந்ததால், ஓரளவு வசதியுள்ள பிள்ளைகளும் அப்பள்ளியில் படித்தனர்.
அதனால், எல்லா வகுப்பிலுமே, ஏழை மாணவர்களை தீண்டத்தகாதவர்களை போல் ஒதுக்கி வைத்திருந்தனர்.
முதல் நாள் வகுப்பில், மாணவர்களின் பெயரை கேட்டு, நட்பாக கை குலுக்கி வாழ்த்துகளை சொல்லிக் கொண்டிருந்தேன்.
அழுக்கு சட்டை, வறண்ட தலைமுடியுடன் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த அந்த மாணவன் மட்டும் என்னிடம் வரத் தயங்கினான்.
முன்னால் அமர்ந்திருந்த மாணவர்கள், 'சார்... அவனுக்கு கை கொடுக்காதீங்க... அவன் குளிச்சே இருக்க மாட்டான்...' என்றனர்.
அதை, காதில் வாங்காமல், புன்னகைத்து, 'இங்க வாப்பா... உன் பேர் என்ன...' என்றேன்.
'செங்கோடன் சார்...' என்றான்.
அவன் கையை பிடித்து குலுக்கி, 'குட்... நல்லா படிக்கணும்; பாடம் புரியலன்னா எப்ப வேணா எங்கிட்ட சந்தேகம் கேட்கலாம்; வகுப்பு முடிஞ்சதும் என்னை வந்து பாரு...' என்றேன்; தலையாட்டினான்.
வகுப்பு முடிந்ததும், ஓய்வு அறையில் இருந்த என்னிடம் வந்தான்.
'செங்கோடா... பள்ளிக்கு வரும்போது தினமும் குளிக்கணும்; குளிச்சாதான் சுகாதாரமா இருக்க முடியும் என்ன...'
'சார், குளிச்சிட்டு தான் வர்றேன்; சோப்பு போட்டு குளிக்காததால் அப்படி தெரியுது. அம்மாகிட்ட சோப்புக் கேட்டா, திட்டுவாங்க...' என்றான்.
'உங்க அப்பா என்ன வேலை செய்றார்?' என்று கேட்டேன்.
'எங்கப்பா ரோட்டோரம் செருப்பு தைப்பார்; லீவு நாள்ல நானும் செய்வேன். அம்மா காலையில தோட்டத்துக்கு பூ பறிக்கும் வேலைக்கு போகும் போது, என்னையும், தம்பியையும் கூடவே அழைச்சுகிட்டு போவாங்க; நாங்க பூப்பறிச்சாத்தான், ஆயா கடையில இட்லி, தோசை வாங்கி தந்து, ஸ்கூலுக்கு அனுப்புவாங்க...' என்றான்.
'சரி சரி... நல்லா படிச்சு, உத்தியோகத்துக்கு போய், உங்கப்பா, அம்மா கஷ்டத்த போக்கணும், என்ன...' என்றதும், 'நான், நல்லாத்தான் சார் படிக்கிறேன்... எங்கம்மா காலையில பூப்பறிக்க கூட்டிகிட்டு போகாம இருந்தா, இன்னும் நல்லா படிச்சு முதல் ரேங்க் வாங்குவேன்...' என்றான்.
அவன் ரேங்க் கார்டை எடுத்து பார்த்தேன். எல்லா தேர்வுகளிலும் முதல் ஐந்து ரேங்குக்குள் பெற்றிருந்தான்.
மறுநாள், இரண்டு குளியல் மற்றும் துணி துவைக்கும் சோப்புகளையும், எண்ணெய், பவுடர் டப்பாவையும் வாங்கி வந்து, 'இனிமே, துணிய நல்லா துவைச்சு உடுத்திட்டு வரணும்... நான், உங்க அம்மாகிட்ட பேசுறேன்; நீ படிப்பில் மட்டும் கவனத்த செலுத்து...' என்று கூறி, நான் வாங்கி வந்த பொருட்களை அவனிடம் கொடுத்தேன்.
கண்கள் கலங்க,'ரொம்ப நன்றி சார்...' என்றான்.
சக ஆசிரியர் ஒருவர், 'என்ன சார் இதுங்ககிட்ட எல்லாம் வெச்சுகிட்டு... ஒண்ணுத்துக்கும் படிப்பு ஏறாது. 'யூஸ்லெஸ்' பசங்க; கிளாஸ்ல பேனும் இல்ல, இவனுங்க குளிக்காம வர்ற ஸ்மெல்... இது எல்லாம் சகிச்சுட்டு, இந்த கிராமத்துல வேலை பாக்கிறதே பெரிய விஷயம். டிரான்ஸ்பருக்கு, முயற்சி செய்துட்டு இருக்கேன்...' என்று, என்னமோ தர்மத்துக்கு வேலை செய்வது போல் கூறினார்.
இவரைப் போன்று தான், இங்கிருக்கும் பெரும்பாலான ஆசிரியர்கள், பெற்றோர் எதுவும் கேட்பதில்லை என்பதால், வகுப்பில் ஒன்றுமே நடத்தாமல், காலத்தை போக்கி கொண்டிருந்தனர். ஆனால், நான், மாணவர்களை புத்தகங்களை படிக்கும் இயந்திரங்களாக மட்டும் ஆக்காமல், நல்ல மனித சமுதாயமாக வளர, என் வகுப்பை பயன்படுத்திக் கொண்டேன்.
என் வகுப்பில், ஒரு உண்டியல் வைத்தேன்.
'மாணவர்களே... உங்களால முடிஞ்சத இந்த உண்டியல்ல போடுங்க; ஒரு மாதம் சேர்ந்ததும், அதில் இருக்கிற காசுக்கு நீங்களே கடைக்கு போய், பிஸ்கெட், எண்ணெய், பவுடர் வாங்கி ஷெல்பில் வைச்சுடுங்க. அதை, ஏழை மாணவர்கள் எடுத்து பயன்படுத்திக்கட்டும்...' என்றேன்.
குழந்தைகளுக்கு வழி நடத்த ஆள் இருந்தால் போதும்; இந்த உலகையே புரட்டி போட்டு விடுவர். மாதந்தோறும் பிஸ்கெட், எண்ணெய், பவுடர் வாங்கி வைத்தனர். அது ஏழை மாணவர்களுக்கு பயன்பட்டது. அத்துடன், தாங்களாகவே, காலையில், பள்ளிக்கு வந்ததும், யாராவது ஒருவர் வகுப்பை துாய்மை செய்து, கரும்பலகையில், தினமும் ஒரு குறளை எழுதி வைத்தனர்.
அவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக, சுதந்திர போராட்ட தலைவர்களின் பிறந்த நாட்களில், அவர்களின் பெயரைச் சொல்லி, ஒரு மரக்கன்றை நட செய்து, அம்மரத்திற்கு அருகில், ஒரு பலகையில் அத்தலைவரின் பெயரை, பெயிண்டால் எழுதச் சொன்னேன். ஒவ்வொரு மரத்திற்கும், ஒரு குரூப் தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும், என்று வலியுறுத்தினேன்.
ஆறு மாதங்களுக்குள், நந்தவனமானது, பள்ளி. வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கினான், செங்கோடன். சக மாணவர்களும் வேற்றுமை மறந்து அவனுடன் நட்பு பாராட்டியும், சந்தேகங்களை கேட்டும், படித்தனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம், 100 சதவீதமாய் ஆனதில், பெரிதும் மகிழ்ந்தார், தலைமையாசிரியர்.
என் பிறந்த நாளை தலைமையாசிரியரிடம் கேட்டு தெரிந்து கொண்ட மாணவர்கள், என் பிறந்த நாள் அன்று, ஒரு வேப்பங்கன்றை நட்டு, 'கண்ணன் சார், பல்லாண்டு வாழ்க...' என்று எழுதி வைத்தனர்.
மதியம், ஆசிரியர் ஓய்வு அறைக்குள் வந்த செங்கோடன், தயங்கியபடி, 'சார், தப்பா நினைச்சுக்காதீங்க... என்னால் முடிஞ்சது...' என்று ஒரு பார்சலை கொடுத்தான்.
குழப்பத்துடன் வாங்கி பிரித்தேன்; புத்தம் புதிய ஒரு ஜோடி செருப்பு!
'எங்கப்பா தைச்சது சார்...' என்றான்.
அவனை பரிவாக கட்டியணைத்து, 'செங்கோடா... நான் இதை மறுக்கிறேன்னு வருத்தப்படக் கூடாது; இதை வித்தா, 100 ரூபாயாவது கிடைக்கும். அது, உங்க குடும்பத்துக்கு பயன்படும். இதை, உன் அப்பாகிட்டயே தந்துடு... நீ படிச்சு, வேலைக்கு போன பின், உன் உழைப்பில் எது வாங்கித் தந்தாலும் வாங்கிக்கிறேன் சரியா...' என்றேன்.
கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தாலும், 'சரி சார்... நான் நல்லா படிச்சு, டாக்டராகி, நீங்க எங்க இருந்தாலும் தேடி வந்து பாப்பேன்...' கண்களில் உறுதியோடு சொன்னவனை, சாதனை சுடராய் பார்த்தேன்.
மூன்று ஆண்டுகளுக்கு பின், பணி உயர்வில், அங்கிருந்து என்னை வேறு ஊருக்கு மாற்றினர். அப்போது, ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான், செங்கோடன். அன்று கடைசி வகுப்பில், பிரிய மனமில்லாமல் கலங்கி அழுதான். அவனுக்குள் நம்பிக்கையை விதைத்து கிளம்பினேன்.
ஆறு ஆண்டுகளுக்கு பின், மறுபடியும் அதே பள்ளிக்கு மாறுதல்...
''ஐயா, நான் டாக்டராகி, உங்கள எங்கிருந்தாலும் பாப்பேன்னு அன்னைக்கு சொன்னேன்; ஆனா, திடீர்ன்னு எங்கப்பா செத்துப் போயிட்டார்... எனக்கு வேற வழி தெரியல. அம்மாவையும், தம்பியையும் நான் தான் பாத்துக்கணும். தம்பிய மட்டும் ஸ்கூல விட்டு நிறுத்தாம, படிக்க வெச்சுட்டிருக்கேன்; எப்பாடு பட்டாவது அவனை நல்ல நிலைக்கு கொண்டு வந்துருவேன்...'' என்றான் செங்கோடன்.
மரமாகி விழுது பரப்பும் என்று நினைத்திருந்த சில கன்றுகள், முளையிலேயே சிதைந்து போன காலத்தின் கொடுமையை நினைத்த போது, கண் கலங்கியது.
அதைக் கண்ணுற்று, ''எனக்கு இதுகூட பிடிச்சுதான் இருக்கு ஐயா... தம்பி படிச்சிட்டான்னா, ஒரு கடை திறந்திடுவேன்...'' என்றான், கண்ணில் வழிந்த நீரை துடைத்தபடி!
ஒரு இளம் தளிரின் ஆசையை, லட்சியத்தை தகர்த்து, மீண்டும் ஆரம்பப் புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது, வறுமை.
''உழைத்து பிழைக்கும் எந்த வேலையும் குறைவு இல்லப்பா... உன் தம்பி நிச்சயம் உன் கனவுகளை நிறைவேத்துவான்...'' என்றேன், நுாறு ரூபாயை நீட்டியபடி!
''பதினைந்து ரூபாதான் சார் ஆச்சு...'' என்று கூறி, பாக்கிப் பணத்தை தந்தான். வாங்க மனதில்லை என்றாலும், அவன் தன்மானத்திற்கு பங்கம் வரக்கூடாதென்று வாங்கிக் கொண்டேன்.
''சார், ஒரு நிமிஷம்...'' என்று, புத்தம் புதிய ஒரு ஜோடி செருப்பை கவரில் போட்டு,''இது, என் உழைப்பில் கொடுக்கிறது தான் சார்... ஆசையா கொடுக்கிறேன்... எனக்காக வாங்கிக்கணும்...''
இந்த முறை என்னால் மறுக்க முடியவில்லை; வாங்கிக் கொண்டு கிளம்பினேன். இரண்டடி நடந்ததும், திரும்பிப் பார்த்தேன். என்னையே பார்த்துக் கொண்டிருந்தவன், கையெடுத்து கும்பிட்டு, தலையாட்டினான்.
பள்ளிக்குள் நுழைந்தேன்; காந்தி, பாரதியார், காமராஜ் பெயர் கொண்ட மரங்கள், நெடிதாக வளர்ந்திருந்தன.
'இன்னொரு செங்கோடனின் கனவுகள், இந்த பூமியில் சிதையக் கூடாது இறைவா...' என்று மனதில் இறைவனை வேண்டியபடி வகுப்பிற்குள் நுழைந்தேன்.

- வேல் முருகன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N. Santhi - kalpakkam,இந்தியா
28-டிச-201714:02:50 IST Report Abuse
N. Santhi பிடித்திருந்தது
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
28-டிச-201711:58:35 IST Report Abuse
Cheran Perumal இது கதையல்ல, எதார்த்தம். எத்தனையோ ஏழைகளின் கனவுகள் கருகிக்கொண்டுதான் இருக்கின்றன.வாழ்வில் உயர்ந்தவர்கள் குடும்பங்கள் மட்டும் அரசு சலுகைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி மேலும் உயர்ந்துகொண்டிருக்கின்றன. நாட்டின் வளங்கள் எல்லோருக்கும் பொது என்னும்போது குறிப்பிட்ட சிலர் மட்டும் துன்பங்களையே அனுபவிப்பது முறையல்ல.
Rate this:
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
28-டிச-201706:18:14 IST Report Abuse
Rangiem N Annamalai ஆர்ப்பாட்டம் இல்லாத கதை. உண்மை நிதர்சனம் ஒத்து கொண்டு வாழ்வதே நலம் என தெளிவு படுத்தி உள்ளார்.நன்றி .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X