நெஞ்சை அள்ளும் தஞ்சை ஓவியம் - விரல்களில் விளையாடும் விராலிமலை சுதாகர் | பொங்கல் மலர் | Pongalmalar | tamil weekly supplements
நெஞ்சை அள்ளும் தஞ்சை ஓவியம் - விரல்களில் விளையாடும் விராலிமலை சுதாகர்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஜன
2018
00:00

'காவியமா நெஞ்சின் ஓவியமா... தெய்வீக காதல் சின்னமா'... ஆம், ஓவியங்கள் எல்லாம் ஒரு காவியம் தான்... அந்த ஓவியங்களுடன் ஒட்டி உறவாடும் ஓவியர்கள் எல்லாம் காதல் சின்னங்கள் தான்...
விரல்களில் விளையாடும் துாரிகை, கண்களில் தெறிக்கும் கற்பனை, எண்ணங்களில் வழியும் வண்ணங்கள்... என, நெஞ்சை அள்ளும் தஞ்சை ஓவியங்களுடன் உறவாடும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஓவியக் காதலர் சுதாகரன் தன் ஓவியப் பயணம் குறித்து பேசுகிறார்...
என் தாத்தா ஓவியர். அப்பாவுக்கும் கொஞ்சம் வரையத் தெரியும். அவர்களை பார்த்து தான் எனக்கும் ஓவியம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது. ஓவியத்தின் மேல் தீராத காதல் கொண்ட நான் பள்ளி பருவத்திலயே ஓவியர்கள் நடராஜன், செந்தில்குமாரிடம் தஞ்சாவூர் ஓவியம் வரைய கற்றுக் கொண்டேன். என் 15 ஆண்டு கால கலை பயணத்தில் இதுவரை 10 ஆயிரம் ஓவியங்கள் வரைந்து உள்ளேன்.
இன்றைய கம்ப்யூட்டர் உலகில் ஓவியங்களில் பல புதுமைகள் புகுந்து விட்டன. ஆனால், தஞ்சாவூர் ஓவியம் மட்டும் நம் தமிழர்களின் பாரம்பரிய பெருமைகளை இன்றும் பேசிக் கொண்டு இருக்கிறது. அதற்கு உயிர் கொடுக்கும் வகையில் பழமை மாறாத ஓவியங்களை நான் வரைந்து வருகிறேன். தண்ணீர் ஒட்டாத மரப்பலகையில், புளியங் கொட்டை பசை தடவி, காடா துணியை ஒட்டி, அதற்கு மேல் விரும்பும் சுவாமியின் உருவத்தை படமாக வரைகிறேன்.
பின், அந்த உருவத்தில் தேவையான இடங்களில் 'சாக் பவுடர்' பூசி 'எம்போஸ்' செய்கிறேன்.
அடுத்தாக சுவாமி படத்தில் ஆங்காங்கே சிகப்பு, வெள்ளை, பச்சை கலர் ஜெய்பூர் கற்களை வைத்து அலங்கரித்து, ஆபரணங்களையும் வரைந்து அதில் 'கோல்டு பாயில் பேப்பர்' ஒட்டிவிடுவேன். இந்த பணிகள் முடிந்த பின் தேவையான வண்ணங்களை தீட்டி படத்திற்கு முழு வடிவம் கொடுக்கிறேன்.
இப்படி 10க்கு 8 அளவுள்ள படத்தை வரைய குறைந்தது 2 நாட்கள் ஆகும்.
என் மனைவி சத்யபாமா உட்பட குடும்ப உறுப்பினர்கள் எனக்கு உதவி செய்கிறார்கள்.
முருகன், வெண்ணை தாழி கிருஷ்ணன், கஜலட்சுமி, வாஸ்து லட்சுமி, தர்பார் கிருஷ்ணன், மீனாட்சி கல்யாணம் படங்களை ஓவிய பிரியர்கள் விரும்பி வரையச் சொல்கிறார்கள். சிலர் தங்கள் நண்பர்கள், உறவினர்களின் 'போட்டோ'வை கொடுத்து தஞ்சாவூர் ஓவியமாக வரைந்து வாங்கிச் சென்று அவர்களுக்கு பரிசாக கொடுக்கிறார்கள்.
நாகரீக ஓட்டத்தில் பழமையான தஞ்சாவூர் ஓவியங்கள் அழிந்து விடக் கூடாது என்பதற்காக, நான் கற்ற இந்த கலையை ஆர்வம் உள்ளவர்களுக்கு கற்றுக் தருகிறேன்'' என்று, கூறியபடி விநாயகர் படத்திற்கு தன் துாரிகையால் கண் திறந்தார். பலவித நிறங்களை கையாளும் இவருக்கு மட்டும் வறுமையின் நிறம் சிகப்பாக தான் இருக்கிறது... இருந்தாலும் திறமை என்ற அழியாத சொத்து இவருக்கு துணை நிற்கிறது.
இவரை வாழ்த்த 96267 80290க்கு பேசலாம்.

Advertisement

 

மேலும் பொங்கல் மலர் செய்திகள்:We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X